SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறளும் கண்ணீரும்!

2022-05-06@ 15:57:08

குறளின் குரல்

கண்ணீர் என்பது சோகத்தை மட்டும் தாங்கியதல்ல, ஆனந்தத்திலும் ஆனந்தக் கண்ணீர் வருவதுண்டு, பக்திப் பரவசத்தில் அடியவர்கள் கண்ணீர் பெருக்குவதுண்டு. பிரிவுத் துயரால் கண்ணீர் பெருகுவதும் இயல்புதான். இவை ஒருபுறம் இருக்க போலிக் கண்ணீர் பெருக்கி காரியத்தை சாதித்துக் கொள்பவர்களும் உலகில் உண்டு. எண்ணற்ற செய்திகளைத் தம் திருக்குறளில் பதிவு செய்யும் திருவள்ளுவர் மனிதர்களின் பலவகைப்பட்ட கண்ணீர் பற்றியும் பேசுகிறார்.

`அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்
 ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும்.’
(அதிகாரம்: அன்புடைமை,  குறள் எண்:71)

அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? கிடையாது. அன்புடையவர்களின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும். வள்ளுவர் இந்தக் குறளில் சொல்வது அன்பால் வெளிப்படும் அன்புக் கண்ணீர்.

`அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை’
(அதிகாரம்:கொடுங்கோன்மை,
குறள் எண்: 555)
ஒருவனுடைய செல்வத்தைத் தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால் துன்பப்பட்ட பலர் அந்தத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அல்லவா எனக்கேட்கிறார் வள்ளுவர். செல்வந்தர்களால் துன்பப்படும் ஏழைகளின் கண்ணீர் அந்தச் செல்வந்தர்களின் செல்வ வளத்தை அழிக்கும் என்கிறது வள்ளுவம். இங்கே வள்ளுவர் குறிப்பிடுவது துன்பக் கண்ணீர்.
`இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்.’
(அதிகாரம்: புலவி நுணுக்கம்,
குறள் எண்: 1315)
`இப்பிறப்பில் யாம்
பிரியமாட்டோம்’ என்று நான் சொன்னவுடன் `அப்படியானால் மறு பிறப்பில் என்னைப் பிரிவேன் என்று கூறுகிறாயா?’ எனக் கேட்டுக் கண்கலங்கினாள் என் காதலி என்கிறான் தலைவன்.
இங்கே வள்ளுவம் குறிப்பிடுவது பிரிவுக் கண்ணீர்.
`உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்’
(அதிகாரம்:படர்மெலிந்திரங்கல்,
குறள் எண்: 1170)

என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடிந்தால் அவை இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தாமல் இருக்கும் என்கிறாள் தலைவி, இங்கேயும் வள்ளுவம் குறிப்பிடுவது பிரிவுத்துயரால் விளைந்த கண்ணீரைத்தான்.
`தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து.’
(அதிகாரம்: கூடா நட்பு, குறள் எண்: 828)

பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருக்கக் கூடும், பகைவர் கண்ணீர் விடுவதும் அதுபோன்றதுதான் என்று சொல்லும் குறளில் வள்ளுவம் விவரிப்பது போலிக் கண்ணீர். காலம் காலமாக கண்ணீரில்தான் எத்தனை வகை என வியக்க வைக்கிறது வள்ளுவம்.நமது இதிகாசங்களும் புராணங்களும் இலக்கியங்களும் கூட கண்ணீர்க் காட்சிகள் பலவற்றை விவரிக்கின்றன, ராமன் வனவாசத்திற்குப் புறப்பட்டபோது மனிதர்கள் அழுதது மட்டுமல்ல, விலங்குகளும் பறவைகளும் கூட அழுதன என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

கிள்ளையொடு பூவை யழுத; கிளர்மாடத்து
உள்ளுறையும் பூசை யழுத உருவறியாப்
பிள்ளை யழுத; பெரியோரை யென்சொல்ல
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்
ஆவும் அழுத; அதன் கன்று அழுத
அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள் அழுத

கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத
கால் வயப் போர்
மாவும் அழுதன; அம் மன்னவனை
மானவே.

கம்பர் சீதாப்பிராட்டியின் துயர நிலை பற்றி சுந்தரகாண்டத்தில் நிறையப் பேசுகிறார். கண்ணீர் விட்டு அழுவதைத் தவிர வேறு எதையும் அவள் செய்யவில்லை என்றும் சீதையின் கண்ணீரால் நனைந்த ஆடை, அவள் பெருமூச்சு விடும்போது ஏற்பட்ட உஷ்ணத்தாலேயே உலர்ந்தது என்றும் சொல்கிறார். அந்தப் பாடல்கள் இதோ:

`விழுதல்,விம்முதல், மெய் உற வெதும் புதல், வெருவல்,
எழுதல்,ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்
தொழுதல்,சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்,
அழுதல், அன்றி, மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்.’
`துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு
ஒப்பினான்தனை நினைதொறும், நெடுங் கண்கள் உகுத்த
அப்பினால் நனைந்து, அருந் துயர் உயிர்ப்புடை யாக்கை
வெப்பினால் புலர்ந்து, ஒரு நிலை உறாத மென் துகிலாள்.’

சிவபெருமானின் கண்களிலிருந்து வெளிப்பட்ட கண்ணீர்தான் ருத்ராட்சமாக மாறியது என்பது புராணங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும் செய்தி. சங்க இலக்கியங்களில் கண்ணீர்க் காட்சிகள் நிறைய உண்டு, வையாவிக் கோப்பெரும் பேகன் என்ற மன்னன் தன் மனைவி கண்ணகியைத் துறந்து நல்லூர்ப் பரத்தையிடம் உறவு கொண்டிருந்தான். இதனைக் கண்ட கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் ஆகிய கவிஞர்கள் மன்னன் பேகனிடம் அவன் மனைவி கண்ணகியின் துயரத்தைப் பற்றிக்கூறுகின்றனர். அவளுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்துகின்றனர்.  

`நின்னும் நின் மலையும் பாட இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைப்ப விம்மிக்
குழல் இணைவதுபோல் அழுதனள் பெரிதே,’
(புறநானூறு-143 : 12-15)
``பேகனே! உன் ஊருக்கு வந்து உன்னையும் உன் மலையையும் பாடினேன்.அப்போது வேதனையுற்று வடித்த கண்ணீரை நிறுத்த முடியாமல், மார்பு நனைய விம்மிக் குழல் அழுவதுபோல் அழுதாள் ஒருத்தி” எனக்  கூறுகிறார் கபிலர். மன்னரின் இல்லற வாழ்வை ஒழுங்கு செய்யப் புலவர்கள் மேற்கொண்ட முயற்சி வியக்க வைக்கிறது. மன்னனிடம் பரிசில் வாங்க மட்டுமல்ல, தங்களை ஆதரிக்கும் மன்னன் மனைவியின் கண்ணீரைத் துடைக்கவும் அவர்கள்தங்கள் தமிழைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது எத்தகைய பெருமிதம் தரும் செய்தி! ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் கண்ணீர்க் காட்சிகள் பல உண்டு. கோவலன் கொலையுண்டது குறித்து நீதி கேட்க பாண்டிய மன்னன் அரசவைக்குச் சென்று அவனைச் சந்திக்கிறாள் கண்ணகி. கண்ணீர் வழிகிறதுஅவள் விழிகளிலிருந்து.

`நீர்வார் கண்ணை என்முன் வந்தோய்,
யாரையோ நீ மடக் கொடியோய்?’
என மன்னன் அவளை வினவுவதாக எழுதுகிறார் இளங்கோ அடிகள். அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத்  தேய்க்கும் என்றாரே வள்ளுவர்? கண்ணகியின் கண்ணீர் மதுரையின் செல்வத்தை மட்டுமல்ல, மதுரையையே எரித்து விடுவதைச் சொல்கிறது சிலப்பதிகாரம். தண்ணீர் விட்டு நெருப்பை அணைப்பார்கள். ஆனால் கண்ணீர் விட்டு நெருப்பை மூட்டினாள் கண்ணகி.

`மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் - வையைக்கோன்
கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.’

என்னும் அழகிய வெண்பா சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் உள்ள வழக்குரை காதையின் இறுதியில் இடம்பெற்றுள்ளது. பாண்டிய மன்னன் கண்ணகியின் விழிகளில் பெருகிய கண்ணீரைப் பார்த்ததுமே தன் உயிரைத் தோற்றுவிட்டான் என்கிறது சிலம்பு, கண்ணீர் உயிரையே பறிக்கும் வலிமை உடையது என்கிறார் இளங்கோ.

`காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே’
என்பது திருஞானசம்பந்தர் அருளிய நமசிவாயப் பதிகத்தில் உள்ள முதல் பாடல். காதலாகிக் கசிந்து பெருகும் பக்திக்கண்ணீரை விவரிக்கிறது இந்தப் பாடல்.

திருப்பூர் கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HOTDOGGG111

  ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

 • SYDNEYY111

  தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

 • Mexico_Mayor

  மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

 • manipurlandaa1

  தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்