SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குகை நமசிவாயர்

2022-05-05@ 10:41:01

நல்லது வந்தால், போற்றி வாழ்த்துவதும் கெட்டது வந்தால், தூற்றி ஏசுவதும் வாடிக்கை. முன்னால் போனால் முட்டும், பின்னால் வந்தால் உதைக்கும். பக்கவாட்டில் (சைடில்) போனால் இடிக்கும். கடவுளாக இருந்தாலும் விட்டு வைக்காது. அன்பாகச் சொல்பவர்களிடம் வம்பாக வாலாட்டுவதுதான், உலக இயல்பு. அப்படி வாலாட்டுபவர்களுக்கும் வாழ வழி காட்டுவது, மகான்களின் இயல்பு. அப்படிப்பட்ட மகான் ஒருவர், உற்றாரை மறந்துஉலகத்தைத் துறந்து, சிவ சிந்தனையுடன் புறப்பட்டார். ஊர் ஊராகச் சென்று  சிவ தரிசனம் செய்வதும், பசி வந்தால் எங்காவது பிச்சை எடுத்துச் சாப்பிடுவதும், அந்த மகானின் அன்றாடச் செயல்களாக இருந்தன.

ஒருநாள், கடும்பசி! தாங்க முடிய வில்லை. ஒரு வீட்டின் வாசலில் போய் நின்றார் மகான். குறிப்பறிந்த அந்த வீட்டுக்காரர்கள், ஆர்வத்தோடு மகானை உள்ளே அழைத்துப் போய், உணவிட்டு உபசரித்தார்கள். “நல்ல அன்பர்கள் இவர்கள்” என்று தீர்மானித்த மகான், உண்டு முடித்ததும் அந்த வீட்டில் இருந்த அனைவருக்கும் திருநீறு கொடுத்தார்.

அதே நேரத்தில், அந்த வீட்டுக்காரர்களின் அலட்சியத்தால், அவர்கள் வீட்டு அடுப்பில் இருந்த நெருப்பு தாவிப் பற்றிப்படர்ந்து, வீடே எரிந்து போய் விட்டது. கூடிய கும்பலில் இருந்த உணர்ச்சி வசப்பட்ட ஒருவன், “டேய்! எல்லாம் இந்தச்சாமியாரால வந்தது. சாப்பாடுபோட்ட வீட்டைச் சாம்பலா ஆக்கிட்டான். ஏய்! சாமியார்! என்ன மந்திரம்டா சொன்னாய்? சாம்பலை கொடுத்து, வீட்டையே சாம்பலாக்கிட்டியேடா...” என்று கத்தினான்.

உரக்கப்பேசி, உணர்ச்சியைத் தூண்டுபவர்கள் வாக்கு உடனே எடுபடும் என்பதற்கு இணங்க, கும்பல் முழுவதும் மகானின் பக்கம் திரும்பியது. எந்த விதமான கேள்வியும் இல்லாமல், எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல், அனைவருமாக அந்த மகானை அடித்தார்கள். அடித்து முடித்ததும் அவர்கள் மெல்லமெல்லக் களைய, மகான் அங்கிருந்து புறப்பட்டு ஊர்க்கோடியிலிருந்த சிவன் கோயிலில் போய் அமர்ந்தார். பிறகு மெல்ல எழுந்து போய்ச் சிவன் சந்நதிதிக்குப் போய்க் கண்களில் கண்ணீர் வழிய, “சிவபெருமானே!

அந்த வீடு பற்றி எரிந்ததற்கு நானா காரணம்? இது முறையா? முறையா தெய்வமே?” என்று கதறினார். அப்போதே சிவபெருமான் அருளால், எரிந்து போன வீடு எழுந்து நின்றது. `பளபள’ வென பழையபடியே பளபளத்தது. ஊரே ஆச்சரியப்பட்டது. “ஆகா! வீடு, பழையபடியே உருப்பெற்று விட்டது. அந்தத் துறவி நல்லவர் தான். நாம் தான் விவரம் தெரியாமல், அவரைப் போட்டு அடித்து விட்டோம்” என்று அனைவரும் ஊர்க்கோடியில் கோயிலில் இருந்த மகானின் திருவடிகளில் போய் விழுந்தார்கள்.

தூற்றியவர்கள் போற்றினார்கள்.  “சுவாமி! நீங்கள் சிவம்தான்! சிவமே தான்! எங்களை மன்னியுங்கள்!” என வேண்டினார்கள். மகானுக்கு மனம் கசிந்தது. “அடி பட்ட புண்களால், உடம்பெல்லாம் வலிக்கிறது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நல்லவர்களைப் போற்றும் முறை இது தானா? என்ன உலகம்?” என்று வருந்தினார். ஒரு தீர்மானத்திற்கு வந்தார். அழைத்தவுடன் வீட்டிற்குள் போய் உட்கார்ந்து உணவு உண்டதால் தானே, இந்த இழிநிலை நமக்கு வந்தது. இனி மேல் வீதியில் நின்று பிச்சை கேட்போம். வாசல்படி தாண்டி வந்து பிச்சை போட்டால் உண்போம். இல்லாவிட்டால், தெய்வ சித்தம் எனத் தீர்மானித்தார் மகான். அந்தத் தீர்மானத்துடன் அங்கிருந்து புறப்பட்ட மகானை, யாருமே அறிந்து ஆதரிக்க வில்லை. ஆங்காங்கே மரங்களில் கிடைத்த காய், கனிகளால் தன் பசியைத் தணித்துக் கொண்டு மகான் நடந்து கொண்டிருந்தார்.

எதிரில் தெரிந்தது எடுப்பான அண்ணாமலை! அந்த மலை மீது, விறுவிறு வென ஏறினார் மகான். குகை ஒன்று குறுக்கிட்டது. “நல்ல இடம் இது நமக்கு” என்ற படியே  குகைக்குள் புகுந்தார் மகான். இதுவரை பெயர் குறிப்பிடப்படாத இவருக்கு, சீடர் ஒருவர் வந்து பெயர் சூட்டப்போகிறார். அதுவரை இவரை `மகான்’ என்ற பொதுப் பெயரிலேயே பார்க்கலாம். குகைக்குள் புகுந்த மகான் சதா சிவ சிந்தனையிலேயே இருந்தார்.

அனாவசியமாக வெளியே வருவது கிடையாது. பசி எடுத்தால் உதிர்ந்திருந்த சருகுகளை உண்டார். அதுவும் கிடைக்கவில்லை என்றால், அதற்காகத் தேடி அலைவது கிடையாது. காற்றை உண்டார். பல நாட்கள் தவமிருந்தும் பரமசிவன் தரிசனம் தர வில்லை. தவம் கடுமையானது. `சிவபெருமான் தரிசனம் தரும்வரை, அவரைக் கையெடுத்துக் கும்பிடுவதில்லை’ என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டார் மகான்.

அதிகாலையில், குகையில் இருந்து வெளியில் வருவார். “அருணாசலா! நீ சுகம் தானா ஐயா?” என்று மலையை நோக்கிக் கூவுவார். “சுகம்! சுகம்!” என்று மலையில் இருந்துஎதிரொலி கேட்கும். அதைக்கேட்ட மகான் சிரித்து விட்டு, குகைக்குள் போய் விடுவார். தவம் தொடரும். இப்படியே பல நாட்கள் நடந்து வந்தது. ஒரு நாள், மகான் தன் வழக்கப்படி குகையில் இருந்து வெளியில் வந்து, “இரக்கமற்ற சோணாசலா! நீ மட்டும் சுகமாக இரு!” எனக்கூவினார்.

உடனே,  “யாரது? ஆண்டவனை அப்படியா கேட்பது?” என்று ஒரு குரல் அதிர்ந்தது. திடுக்கிட்டுத் திரும்பிய மகானின் பார்வையில், சிவயோகி ஒருவர் தெரிந்தார். “நீங்கள் யார் சுவாமி?” எனக் கேட்டார் மகான். வந்தவரோ கோபத்தோடு, “என்னையா யார் என்று கேட்கிறாய்?” என்று கேட்டு விட்டுக் கையில் இருந்த பிரம்பால் நாலு சாத்து சாத்தினார் மகானை. அடி பட்ட மகான், “வேண்டும்! வேண்டும்! நெஞ்சே! இதுவரை நீ எடுத்த பிறவிகளில், எத்தனை எத்தனை தவறுகள் செய்தாயோ? அன்று ஊரார் அடித்தார்கள். இன்று இவர் அடிக்கிறார்.
இன்னும் எவ்வளவு அடி வாங்க வேண்டுமோ வாங்கு!” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, ஒரு பாடல் பாடினார்.

நல்லருணை நாதன் நமை ஒறுத்தல் நெஞ்சமே!
சொல்லுகைக்கோ? பொல்லாக்குணம் போக்க - கல்லில்
மழுக்கு வாள் கூறைக்கு மாறுபட்டோ? வண்ணான்
அழுக்கை வாங்கைக்கே அவன்
- என்று பாடி முடித்தார்.

வந்த சிவயோகி சும்மா இருக்க வில்லை. அதட்டலைத்தொடர்ந்தார். “பாடினால் போதுமா? பரமன் சந்நதியில் விழுந்து வணங்கு! வினைவலி பறந்து போகும். அதுதான் விதிமுறை” என்றார் சிவயோகி. “அப்படியே செய்கிறேன் சுவாமி!” என்ற மகான், கோயில் இருந்த திசையை நோக்கிக் கீழே விழுந்து வணங்கினார். அவர் எழுந்து பார்த்தபோது, சிவயோகி அப்படியே மின்னல் மின்னியதைப் போல் மறைந்தார். மகான் பரவசமடைந்தார்.

“அண்ணாமலையானே! இந்த அடியேனை ஆட்கொள்வதற்காக நீயே வந்தாயா அப்பா?” என்று அழுது தொழுதார். அன்று முதல் கோயில் வழிபாடு தொடர்ந்தது. ஒரு நாள், அதிகாலை நேரத்தில் கோயிலில், வழிபாட்டுச் சங்கு ஒலித்தது. ஓம்...! ஓம்..! ஓம்.! என்று முழங்கி அடங்கியது. அப்போது பக்தர் ஒருவர்,  “அப்பா...! என்ன சத்தம்டா! காதை அடைக்கிறது. என்ன சம்பிரதாயமோ இது?” என்று கத்தி, படபடப்பாகப் பேசினார். அந்தப் போலி பக்தரைப் புரிந்து கொண்ட மகான்,
பக்தர்களை வா என்றும் பாவிகளைப் போ என்றும்
முக்தி வழி ஈது என்றும் மூதலிக்கும் - சத்தியமே
அன்ன வயல் சூழ் அருணை அண்ணாமலை நாதர்
சன்னிதியில் ஊது திருச்சங்கு
- என்று பாடினார்.

 வம்பு பேசிய பக்தர் வாயை மூடினார். திருவண்ணாமலையில் தேர்த் திருவிழா! ஏராளமான பக்தர்கள் இருந்தார்கள். ஆனாலும், தேர் புறப்படவில்லை. என்ன காரணம்?
“வியர்க்குமே! நல்ல பட்டு வேட்டி அழுக்காகி நாறும். அதுவுமில்லாமல், நாம் என்ன கூலி ஆட்களா?” என்று பேசியபடியே, அவரவர்கள் ஒதுங்கி நின்றார்கள். பார்த்தார் மகான். நிலைமையைப் புரிந்து கொண்டார். அவர் அறைகூவல் விடுத்தார்.

வீடு தரும் சோணகிரி வித்தகனார் சத்தியுடன்
நீடு தேர் ஏறி அவர் நிற்கின்றார் - ஓடி
வடம் பிடிக்க வாருங்கள்! வந்தவர்க்கு முத்தி
இடம் கிடைக்கும் பாருங்கள் இன்று
என்று எல்லோர் காதுகளிலும்
விழும்படியாகப் பாடினார்.

அதைக் கேட்டதும் அனைவரும் ஓடி வந்தார்கள். பக்தியால் அல்ல, இவர் ஏதாவது சாபம் கொடுத்து விடுவாரோ என்ற பயத்தால் ஓடி வந்தார்கள். தேர் உருண்டு நிலைக்கு வந்தது. வழக்கப்படி மகான் தவத்தைத் தொடர்ந்த போது, அண்ணாமலையாரின் அருள் ஔி, மகானின் உள்ளத்தில் பாய்ந்தது. உண்மை பலவற்றை அவருக்கு உணர்த்தியது. அண்ணாமலையாரின் அருளை முழுமையாகப் பெற்ற அவருக்கு, `குகை நமசிவாயர்’ எனத் திருநாமம் சூட்டினார் அவர் சீடர். அந்தச் சீடர் தான் `குரு நமசிவாயர்’. விரிவான வரலாற்றில் நாம் பார்த்தது ஒரு சில துளிகள் மட்டுமே!

- பி.என்.பரசுராமன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்