SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிர்த்த ஆண்டவரால் வல்லமை!

2022-05-02@ 13:18:29

இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததினால் தான் அவர் பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறது அல்லது திருச்சபை வாழ்ந்துகொண்டிருக்கிறது. உயிர்த்தெழுந்த இயேசு நாதரின் வல்லமையை பெற்றுக் கொண்டவர்கள் தான் கிறிஸ்தவ நம்பிக்கையை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக வல்லமை என்று சொல்லும்போது பெரும்பாலான நேரங்களில் அடுத்தவர்களை அடக்குவதற்கோ, ஒடுக்குவதற்கோ, தன்னை விட கீழான நிலையில் தள்ளி வைப்பதற்கோ தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உயிர்த்தெழுந்த இயேசு நாதரின் வல்லமையை பெற்றுக்கொண்டவர்கள் இதுபோன்று பிறரை மிரட்டி, அடக்கி, ஒடுக்கி, கிறிஸ்தவ நம்பிக்கையை வாழ வைக்கவில்லை. மாறாக எந்தவித மிரட்டலையும், அடக்குதலையும், ஒடுக்குதலையும் தாங்கிக்கொண்டு மரணத்தைக் கூட ஏற்கக்கூடிய வல்லமையினால்தான் கிறிஸ்தவ நம்பிக்கையை வாழவைத்தார்கள்.

இயேசுநாதரின் பின்னால் இருந்தவர்கள் சமூகத்தின் அடித்தள மக்கள். அதிகார எல்லைகளின் தூரத்தில் இருப்பவர்கள். ஆக, இயேசுவை ஒழித்து விட்ட அதிகாரவர்க்கம் அவர் பின்னால் இருந்த சீடர்கள் கூட்டத்தையும், இயேசுவின் இயக்கத்தையும் ஒடுக்க முற்பட்டனர். இவர்களுக்குத்தான் உயிர்த்தெழுந்த இயேசுவின் அருள் வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கிறது.  (திருத்தூதுவர் பணிகள் 1:8 ) `தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையை பெற்று எருசலேமிலும், யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.

எல்லா சீடர்களும் பல பல தேசங்களுக்கு சென்று கிறிஸ்தவ நம்பிக்கையை வளர்த்தார்கள். இப்பணியில் எல்லா அடக்கு, ஒடுக்குதல்களுக்கு ஆளாகினர். அனைத்து சீடர்களும் (யோவான் தவிர) கொல்லப்பட்டனர். ரோமப் பேரரசன் நீரோ, பேதுருவை ரோமிலே கொலை செய்கிறான். மேலும், ஏரோது அரசன் திருச்சபையை சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்து கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரனான யாக்கோபை வாளால் கொன்றான். (திருத்தூதர் பணிகள் 12:1,2 ) தூய. அந்திரேயா ரஷ்யாவின் அருகில் உள்ள கருங்கடல் பகுதியிலே பணி செய்தார் என்று சொல்லப்படுகிறது. இப்போதைய கிரீஸ் தேசத்தில் அகாயா பகுதியில் உள்ள பத்ராஸ் என்ற ஊரில் X வடிவ சிலுவையில் அடித்துக் கொல்லப்பட்டார். அன்று தூய தோமா அவர்கள் இந்தியாவில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார். ஆக உயிர்த்தெழுந்த ஆண்டவர் எப்பேர்ப்பட்ட வல்லமையை கொடுக்கிறார் என்றால் எவ்விதமான துன்பத்தையும், மரணத்தையும் தாங்கிக் கொள்ளக்கூடிய வல்லமையைத்தான் அவர் கொடுக்கிறார்.

இயேசு  உயிர்த்தெழுந்தார் என்று அதிகாலையில் கேள்விப்பட்ட உடனே பெண்கள் அதனை அறிவிக்க ஓட்டம் பிடித்தார்கள். அதிகாலையில் இருட்டோடே விரைவாய் ஓடுகிற அனுபவம் உயிர்த்தெழுந்த இயேசுநாதர் தருகிற வல்லமை ஆகும். உயிர்த்தெழுந்த நிகழ்விலே பயன்படுத்துகிற வார்த்தைகள் எதுவெனில் `அஞ்சாதீர்’ `உங்களுக்கு சமாதானம்’ என்பதாகும். இந்த இரண்டு வார்த்தைகளும் ரோம அதிகார வர்க்கத்திற்கும், யூத சமயத் தலைவர்களுக்கும் பயந்துபோன இயேசுவின் சீடர்களுக்கு அரிய மருந்து. பெரும் வல்லமையையும், ஆற்றலையும் கொடுக்கக்கூடிய அருள் வார்த்தைகள் இவைகள். ஆக உயிர்த்தெழுந்த இயேசு வல்லமையை தருகிறார்.

சமத்துவ சமுதாயத்தை (இறையரசை) உருவாக்குவதற்காகவே என் தந்தை (கடவுள்) என்னை இந்த உலகிற்கு அனுப்பி வைத்தார் என்று உரைத்ததுமன்றி அந்த சமத்துவ சமுதாயத்திற்கு, தான் உருவாக்கின இயக்கத்தின் மூலமாக உருக்கொடுத்து அதன் பலனாக மரணத்தை ஏற்றுக்கொண்ட இயேசுநாதர் உயிர்த்தெழுந்தார் என்ற உண்மை சமத்துவ சமுதாயம் படைக்க எண்ணும் போராளிகளுக்கு பெரும்ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்