பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள் ..
2022-03-30@ 16:53:05

?என் மகனுக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகிறது. ஆனால் திருமணம் நடந்ததில் இருந்து இருவருக்கும் பிரச்சினை இருந்துகொண்டே வந்தது. பிறகு விவாகரத்து வாங்கி இருவரும் பிரிந்துவிட்டார்கள். மறுபடியும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். அந்தப் பெண்ணும் அவனுடன் வாழாமல் போய்விட்டது. இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?
- ஏழுமலை, சென்னை.
பூசம் நட்சத்திரம், கடக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்ர தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. முதல் மனைவியின் மூலமாகவோ அல்லது இரண்டாவது மனைவியின் மூலமாகவோ அவருக்கு வாரிசு ஏதேனும் உண்டா என்பதைப் பற்றி நீங்கள் கடிதத்தில் ஏதும் குறிப்பிடவில்லை. புத்ரபாக்யத்தைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேதுவும் புத்ர ஸ்தானாதிபதியும் புத்ர காரகனும் ஆகிய குருவின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரமும் இது குறித்த ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. அந்தப் பெண்களின் மீது மட்டும் குறை காணாமல் உங்கள் மகனின் மீது உள்ள குறைகளை அலசிப் பாருங்கள். நிதானமாக யோசித்தால் பிரச்சினைக்கான தீர்வு புலப்படும். சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் இவரிடம் அனுசரித்துச் செல்லும் குணம் என்பது இல்லாமல் போயிருக்கிறது. அத்துடன் மனோகாரகன் சந்திரனின் சாரமும் சிந்தனையைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேதுவும் தெளிவற்ற மனநிலையைத் தந்திருக்கிறார்கள். இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணை சந்தித்துப் பேசி அவரோடு இணைந்து வாழ முயற்சிக்கச் சொல்லுங்கள். இதற்கு மேல் அவருடைய ஜாதகத்தில் திருமண யோகம் என்பது அத்தனை சிறப்பாக இல்லை. ஞாயிற்றுக்கிழமை நாளில் சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்குச் சென்று தியாகராஜ ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள். இறைவனின் திருவருளால் உங்கள் மகனின் நல்வாழ்வு நல்லபடியாக மலரட்டும்.
?எனது இளைய மகன் மற்ற குழந்தைகளைப் போல நார்மல் ஆக இல்லை. மைல்டு ஆட்டிஸம் என்கிறார்கள். ஹைப்பர் ஆக்டிவ் என்றும் சொல்கிறார்கள். அவன் நடவடிக்கையைப் பார்க்கும்போது சரியாக யூகிக்க முடியவில்லை. பயமாக உள்ளது. அவன் சரியாவதற்கு ஏதாவது பரிகாரம் உள்ளதா?
- விஜயலெட்சுமி, திருச்சி.
பரணி நட்சத்திரம், மேஷ ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகபலத்தின்படி அவர் உடல்வலிமை அதிகம் கொண்டவர் என்பது தெரிய வருகிறது. அதே நேரத்தில் மனோகாரகன் சந்திரனுடன் கேது இணைந்திருப்பது மன நிலையில் பிரச்சினையைத் தருகிறது. தற்போது சந்திர தசையே நடந்து வருகிறது என்பதால் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து வருவீர்கள். ஜென்ம லக்னத்தில் வக்ரம் பெற்ற சனி உச்ச பலத்துடனும் ராகுவுடன் இணைந்தும் சஞ்சரிப்பது மேலும் அவரது மனநிலையில் ஸ்திரமற்ற தன்மையைத் தருகிறது. ஹைப்பர் ஆக்டிவ் தன்மையைத் தருவதற்கும் இந்த அமைப்பே காரணம் ஆகிறது. ஒன்பதாம் பாவகம் ஆகிய பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற புதனுடன் குருவும் சுக்கிரனும் இணைந்திருப்பது பொருளாதார ரீதியாக அவருக்கு சுகத்தினையே தரும். அவருடைய வாழ்விற்கு தேவையான அளவிற்கு வசதி வாய்ப்பு என்பது எப்போதும் இருக்கும். அவருடைய நடவடிக்கையில் நல்லதொரு மாற்றத்தை உண்டாக்குவது என்பது இறைவன் மனது வைத்தால் மட்டுமே நடக்கும். பிரதி மாதந்தோறும் வரும் பரணி நட்சத்திர நாளில் விராலிமலை சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்கு உங்கள் மகனை அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வையுங்கள். மாலை சாற்றி இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியை பிரசாதமாகப் பெற்று வந்து தினமும் மகன் உறங்கச் செல்வதற்கு முன்பு நெற்றியில் பூசிவிடுங்கள். இறைவனின் திருவருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்.
?எனது மகள் கடந்த நான்கு வருடங்களாக கரப்பான் என்ற தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். தற்போது ஒரு வருடமாக மிகவும் அதிகமாக உள்ளது. நாட்டு மருத்துவம், அலோபதி என எத்தனையோ மருத்துவரிடம் அழைத்துச் சென்றும் பலனில்லை. இதிலிருந்து எப்பொழுது குணமடைவாள்? எதிர்கால வாழ்வு நன்றாக உள்ளதா? உரிய வழி காட்டுங்கள்.
- ரம்ஜான் பேகம், பரமக்குடி.
உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகக் கணக்கின்படி தற்போது செவ்வாய் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. செவ்வாய் தசை துவங்கிய காலத்தில் இருந்து உங்கள் மகளுக்கு இந்த வியாதி உண்டாகியிருப்பதை உங்கள் கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே செவ்வாய் அமர்ந்திருக்கிறார். உடன் உஷ்ணத்தைத் தரும் சூரியனும், நீசம் பெற்ற சுக்கிரனும் இணைந்திருக்கிறார்கள். அத்துடன் ரோக ஸ்தானம் ஆகிய ஆறாம் வீட்டில் தோல் வியாதியைத் தரும் ராகுவின் அமர்வும் உள்ளது. ரத்தத்தில் கலந்திருக்கும் ஒருவிதமான கிருமித்தொற்றின் காரணமாக அவர் அவதிக்கு ஆளாகியுள்ளார். அலோபதி மருந்தினால் இதனை முழுமையாக குணப்படுத்த இயலாது என்றாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதற்கான தீர்வு சொல்லப்பட்டுள்ளது. நன்கு கற்றறிந்த ஆயுர்வேத மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற முயற்சியுங்கள். அவருடைய ஜாதக பலத்தின்படி இன்னும் மூன்று ஆண்டு காலத்திற்குள்ளாக உங்கள் மகளை முழுமையாக குணப்படுத்திவிட இயலும். அவரது எதிர்காலம் என்பது சிறப்பாக உள்ளது. உங்கள் வீட்டு வாயிலிலோ அல்லது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலோ தண்ணீர் பந்தல் அமைத்து தெருவில் நடந்து செல்வோரின் தாகத்தினைத் தணிக்க உதவுங்கள். கடும் வெயிலினால் அவதிப்படுவோருக்கு நீர்மோர் அளித்து அவர்களது தாகத்தைத் தீர்ப்பதன் பலனாக உங்கள் மகளும் விரைவில் இந்த வியாதியில் இருந்து குணமடைந்துவிடுவார். கவலை வேண்டாம்.
?எனது இளைய மகனுக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிறது. இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. மூத்த மகனும் மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து வாழ்கிறான். இதனால் மிகவும் மனவேதனையில் உள்ளோம். இளைய மகனுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கவும் மூத்த மகன் தனது மனைவி, குழந்தையுடன் சேர்ந்து வாழவும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- மோகனா, சேலம்.
ரேவதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி என்பது துவங்கியுள்ளது. இருவர் ஜாதகங்களிலும் ஐந்தாம் இடமாகிய புத்ர ஸ்தானம் என்பது வலுப்பெற்றிருக்கிறது. அவர்கள் இருவர் ஜாதகங் களிலும் சூரியன் மற்றும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பும் சஞ்சார நிலையும் பித்ரு தோஷம் உள்ளதாக உரைக்கிறது. மனைவியைப் பிரிந்து வாழும் உங்கள் மூத்த மகனின் ஜாதகமும் பித்ரு தோஷம் உள்ளது என்பதை உறுதிப்படுத்து கிறது. உங்கள் குடும்ப புரோஹிதரின் துணைகொண்டு பித்ரு தோஷத்திற்கான சாந்தியை செய்து முடியுங்கள். அதனை முறையாக செய்து முடித்தபின் பசுவினை நல்லமுறையில் பராமரிக்கும் அந்தணர் ஒருவருக்கு கோதானம் செய்யுங்கள். பிரதி மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாளில் உங்கள் மூத்த மகன் தனது கரங்களால் இயன்ற அளவிற்கு அன்னதானத்தினை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருவதும் நல்லது. 2023ம் ஆண்டின் துவக்கத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து வாழ்வார். இளைய மகன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் முறையான மருத்துவ ஆலோசனையைப் பெற்று அதன்படி நடந்துகொள்ளச் சொல்லுங்கள். அவர்கள் இருவரையும் பிரதி ஞாயிறு தோறும் ராகு கால வேளையில் அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று நான்கு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி பரமேஸ்வரனை வழிபட்டு வரச் சொல்லுங்கள். இறைவனின் திருவருளால் 10.10.2022-ற்குள் உங்கள் மருமகள் கர்ப்பம் தரித்துவிடுவார். கவலை வேண்டாம்.
“சண்டவிநாசன ஸகலஜனப்ரிய மண்டலாதீச மஹேசசிவ
சத்ரகிரீட ஸூகுண்டல சோபித புத்ர ப்ரிய புவனேச சிவ
சாந்தி ஸ்வரூப ஜகத்ரய சின்மய காந்திமதி ப்ரிய கனக சிவ
ஷண்முக ஜனக ஸூரேந்த்ர முனிப்ரிய ஷாட்குண்யாதி ஸமேத சிவ”.
திருக்கோவிலூர்
ஹரிபிரசாத் சர்மா
மேலும் செய்திகள்
பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்..
பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்
எல்லா பிரச்னைகளுக்கும் எளிய பரிகாரம்!
பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள்-கோயில்கள்
பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள் கோயில்கள்
பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள், கோயில்கள்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்