SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2022-03-28@ 17:27:24

28-3-2022 - திங்கட்கிழமை - வெற்றி தரும் விஜயா ஏகாதசி   

சிவனை வழிபடுபவர்களுக்கு பிரதோஷமும், முருகனை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்களுக்கு சஷ்டியும், விநாயகரைத் தொழுது கொள்பவர்களுக்கு சதுர்த்தியையும் விசேஷ தினங்களாக வகுத்தனர். அதே போன்று விஷ்ணுவை வழிபட உகந்த தினம் ஏகாதசி. வளர்பிறை, தேய் பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் ஏற்படும் ஏகாதசி திதி தினத்தில் விஷ்ணுவை வழிபடத் துன்பங்கள் தீரும்.பங்குனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி மிகவும் புனிதமானது. எல்லாப் பாவங்களையும் போக்கக் கூடியது. விஜயா ஏகாதசி விரதம் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு எப்பொழுதும் வெற்றியே கிடைக்கும். இந்த ஏகாதசி விரதங்கள் எல்லாத் தடைகளையும் கடக்கச் செய்யும். ராமபிரான் அனுஷ்டித்த ஏகாதசி இது. ராமபிரான் தந்தையின் சொல் கேட்டு காட்டுக்குச் சென்றார். ராமனின் மனைவியும் பூமாதேவியின் அம்சமுமான சீதையை ராவணன் கவர்ந்து சென்றான். அவளை இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்தான். ராவணனை வென்று சீதையை மீட்க வேண்டிய ராமன், வானர சேனைகளுடன் கடற்கரையை அடைந்தார். நீண்ட கடலைப் பார்த்தவுடன் தன்னுடைய சேனைகளுடன் இந்த கடலை எப்படிக் கடந்து இலங்கை செல்வது என்று யோசனை செய்தார். அப்பொழுது லட்சுமணன்  சொன்னார்.

‘‘அண்ணா, இவ்விடத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் காட்டில் வக்தால்ப்யர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கிறார். அந்த முனிவரிடம் சென்று ஆலோசனை கேட்டால், அவர் இந்த கடலைத் தாண்டக்கூடிய யோசனையை நமக்குச் சொல்லுவார் என்று கேட்க, ராமன் அந்த ஆலோசனையை ஏற்றுக்
கொள்கின்றார்.கடவுளாக இருந்தாலும்கூட ரிஷிகளையும் முனிவர்களையும் வணங்கி அவர்களுடைய ஆலோசனையைக் கேட்பது நல்லது என்பதை இந்த சம்பவம் காட்டுகின்றது. கடவுள் மனிதனாகப் பிறந்தாலும்கூட மனிதர்கள் செய்ய வேண்டிய எந்தவிதமான நோன்புகளையும் உபவாசங்களையும்அனுசரித்து நமக்கு வழி காட்டுகின்றனர். ராமன் அந்த முனிவரைச் சந்தித்தபோது ஏகாதசி உபவாசத்தைப் பற்றி எடுத்துக் கூறுகின்றார்.

‘பங்குனி தேய்பிறையில் வரும்  இந்த ஏகாதசி உபவாசம் இருந்தால், நீ எளிதில் சமுத்திரத்தைக் கடக்கலாம். ராவணனையும் ராட்சசர்களையும் கொன்று சீதையை அடையலாம். அதோடு உனக்கு நல்ல கீர்த்தியும் கிடைக்கும். ஆகையினால் நீ ஒருமனப்பட்டு, வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், பகவான் ஸ்ரீ மன் நாராயணனை தியானித்து இந்த ஏகாதசி விரதம் இருக்க வேண்டும்” என்று  ஏகாதசி விரதத்தின் மகாத்மியத்தை முனிவர் சொல்லுகின்றார். தசமி அன்று தங்கம் வெள்ளி, தாமிரம் அல்லது மண்ணினால் செய்த ஒரு குடத்தை வைத்து அதில் பரிமளங்களுடன் கூடிய தீர்த்தத்தைச் சேர்க்க வேண்டும். அதன் கீழே கோதுமை முதலிய நவதானியங்களை பரப்ப வேண்டும். கும்பத்தின் மேல் சந்தனம் வைத்து, புஷ்பங்களைச் சுற்றி அலங்கரித்து, கும்பத்தில் உள்ள தீர்த்தத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண மூர்த்தியை ஆவாஹனம் செய்து உபசாரம் செய்ய வேண்டும். பதினாறு வகை உபசாரங்களுடன் பூஜிக்க வேண்டும்.

ஏகாதசியன்று காலையில் நீராடி, கும்பத்தில் ஆவாஹனம் செய்த பெருமாள் தாயாரை பல ஸ்தோத்ரங்களாலும், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் போன்ற ஸ்லோகங்களாலும், புருஷ சூக்தம் போன்ற வேத மந்திரங்களாலும் பூஜிக்க வேண்டும். தைத்திரீய உபநிஷத் போன்ற மந்திரங்களையும் சொல்லி பக்தியோடு பூஜிக்க வேண்டும். ஆழ்வார்களின் பாசுரங்களை பாராயணம் செய்ய வேண்டும். அப்படித் தொடர்ந்து இரவு பூராவும் செய்ய வேண்டும். இதிகாச புராண கதைகளையும் பஜனைகளையும் செய்யலாம். அடுத்தநாள் துவாதசி காலையில் பூஜையை நிறைவு செய்து கும்பத்தை நதிக்கரைக்கு அல்லது குளத்தின் கரைக்கு எடுத்துச் சென்று பூஜிக்க வேண்டும். வேதம் படித்த வைணவ அடியார்களுக்குத்  தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் வெற்றி அடையலாம்.
விஜய ஏகாதசி நாளில், விஷ்ணுவுக்கு பஞ்சாமிர்தத்தை அர்ப்பணித்து வணங்குதல் சிறப்பு என சாஸ்திரங்கள் கூறுகின்றன. பஞ்சாமிர்தம் இல்லாமல் விஷ்ணு வழிபாடு முழுமையடையாது என்பது ஆன்மிக நம்பிக்கை. விஜய ஏகாதசி நாளில், துளசியை வணங்குதல் சிறப்பு, விஷ்ணு துளசிக்கு வழிபட்டால் வெற்றி வந்த சேரும் என்ற வரத்தை பகவான் அளித்தார். இந்த நாளில் துளசியை வழிபடுதல், துளசியினால் விஷ்ணுவை பூஜித்தல் நன்மை பயக்கும்.

ராமனும் அவ்வாறே செய்தார். கடல் தாண்டி இலங்கை சென்று ராவணனை வென்று சீதையை அடைந்தார். எனவே, ராமர் அனுஷ்டித்த இந்த பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி விரதத்தை நாம் அனைவருமே அனுஷ்டித்தால், நம்முடைய வாழ்வில் பல வெற்றிகளை அடையலாம். வெற்றிகளைத் தருகின்ற ஏகாதசி என்பதால் விஜயா ஏகாதசி என்று இந்த ஏகாதசிக்கு பெயர் வந்தது.ராமர் கடலை தாண்டியது போல நாமும் பிறவிப் பெருங்கடலை தாண்டலாம்.

28-3-2022 - திங்கட்கிழமை -
சிரவண (திருவோண) விரதம்

மாதந்தோறும் திருவோண (சிரவண) நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம். சிரவண நட்சத்திரம் மகாவிஷ்ணுவுக்கு உகந்த நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை விஷ்ணு. துவாதசி தினமும் விஷ்ணுவுக்கு உகந்த தினம். இவை இரண்டும் கூடுவது சிரவண துவாதசி ஆகும்.
இத்தினத்தில் விரதம் இருந்து மகா விஷ்ணுவைப் பூஜித்தால் பாபங்கள் நீங்கி புண்ணியத்தை அடையலாம் என்று புராணங்கள் கூறு கின்றன. ஒப்பிலியப்பன் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு திருவோண நட்சத்திர தினமும் விழாக் கோலமாக இருக்கும். இதனால் ஒவ்வொரு ஏகாதசிக்கு அடுத்தநாள் வரும் துவாதசியன்றும் திருவோணத்தன்றும் மகா விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் நிகழ்ந்தது இந்த திருவோண நட்சத்திரத்தில் தான்.

திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயம் சென்று துளசி மாலை சாத்தி தரிசித்து வர வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மாலை, பெருமாள் கோயிலுக்கு சென்று வர வேண்டும். பொதுவாக ஏகாதசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் துவாதசி அன்று பாரணம் செய்ய வேண்டியிருப்பதால் அன்று உபவாசம் இருக்க வேண்டியதில்லை. ஆனால், சிரவண துவாதசி அன்று விசேஷ விதியாக உபவாசம் இருக்க வேண்டும். இதனால், நம் பாவங்கள் விலகி நம் குழந்தைகள் வாழ்க்கையில் உயர்வு பெற்று நலமாக வாழலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது. அமைதி இருக்கும்.

29-3-2022 - செவ்வாய் - நரசிம்ம துவாதசி மற்றும் ருண விமோசன பிரதோஷம்

விரதத்துக்குப் பெயர் பெற்றது ஏகாதசி என்றால், பாரணைக்குப் பெயர் பெற்றது துவாதசி. துவாதசியன்று, மகாவிஷ்ணுவை வழிபட்டால், பெரும்பேறு கிடைக்கும். பங்குனி துவாதசிக்கு ஜயா துவாதசி அல்லது நரசிம்ம துவாதசி என்று பெயர். அன்று நரசிம்மரை பூஜித்து விரதம் முடிக்க வேண்டும். இந்த திருவல்லிக்கேணி பாசுரம் பாராயணம் செய்யலாம்.பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்  வாயில் ஓர் ஆயிரம் நாமம் ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஒரு பொறுப்பு இலன் ஆகி பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண்புடைப்ப பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய் தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை  திருவல்லிக்கேணிக் கண்டேனேஇன்று ருண விமோசன பிரதோஷம் என்பதால், மாலை பெருமாள் கோயிலுக்கு பிரதோஷ வேளையில் சென்று நெய்தீபம் ஏற்றி துளசி சாற்றி வழிபடுவது நல்லது .கடன், பயம், எதிரிகள் தொல்லை, கவலை, ஆயுள் பயம், நோய் போன்ற உபாதைகள் நீங்கும். சிவன் கோயிலுக்குச் செல்பவர்கள் வழக்கம் போலச் சென்று வழிபட்டு வரலாம்.பிரதோஷ வழிபாடு பற்றி நாம் ஏற்கெனவே தந்திருக்கிறோம்.

31-3-2022 - வியாழக்கிழமை - அமாவாசை

இன்று குரு வாரம். குருவின் மீனராசியில் முழு பலத்தோடு சூரியன் இருக்கிறார். காலை 10.30 மணிக்குமேல் சூரியனும் சந்திரனும்உத்திரட்டாதியில் இணைகிறார்கள். கர்ம நட்சத்திரமான சனியின் நட்சத்திரத்தில் இணையும் சிறப்பு என்பதால் அவசியம் உச்சிப்பொழுதில் பிதுர்காலத்தில் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து பிதுர்  தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்று முக்கியமாக அசைவம் சாப்பிடக் கூடாது. வெங்காயம், பூண்டு சாப்பிடக் கூடாது. சமையலில் பூசணிக்காயும் வாழைக்காயும் சேர்த்து சமைக்க வேண்டும். நாம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம், செய்து, அவர்களுக்குப் பிடித்தமான படையல் போட்டு வழிபட்டால் அவர்கள் மன திருப்தி அடைந்து நல்லாசி புரிவார்கள் என்பது ஐதீகம். படையலிட்டு காகத்திற்கு வைக்கும்போது, சனியின் வாகனமான காகம் அதை சாப்பிடுவதால் சனிபகவான் வழிபாடும் பூர்த்தியாகின்றது. இதனால் சனி பகவானின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது முன்னோர்களின் கூற்று. முக்கியமாக காகத்துக்கு சாதம் வைத்து, பின்னரே அனைவரும் சாப்பிட வேண்டும். இதனால் முன்னோர்கள் ஆசி நமக்குக் கிடைக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்