SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்

2022-03-23@ 17:10:26

?கல்லூரியில் படிக்கும் என் மகன் படிப்பில் அக்கறை இன்றி இருக்கிறான். கால்பந்து விளையாடுவதிலும் வண்டி எடுத்துக்கொண்டு ஊர் சுற்றுவதிலும் தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும்தான் அவனது கவனம் இருக்கிறது. பெரியவர்களையும், பெற்றோரையும் மதிப்பதில்லை. சிறிதும் சம்பந்தமில்லாத பிரச்னைகளில் தேவையில்லாமல் தலையிடுகிறான். அவனுடைய எதிர்காலம் என்ன ஆகுமோ என்று பயமாக உள்ளது. நல்ல பதில் தாருங்கள்.
- மீனாகுமாரி, சென்னை.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிரதசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகபலத்தின்படி அவர் உடல் வலிமை அதிகம் கொண்டவர் என்பது தெரிய வருகிறது. மூன்றாம் இடமாகிய தைரிய ஸ்தானம் வலிமையாக இருப்பதால் அவருடைய வீரமும், தைரியமும் வாழ்வினில் என்றென்றும் அவருக்கு உறுதுணையாக இருக்கும். அவருடைய கல்விநிலையும் வெற்றிகரமாக அமையும். கல்லூரி படிப்போடு உடல்வலிமை சார்ந்த விளையாட்டு போட்டிகளில் அவர் ஈடுபாடு கொள்வது என்பதும் நல்லதுதான். கால்பந்து விளையாட்டில் ஈடுபாடு கொள்ளும் அவரை பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச் சண்டை போன்ற தோள்வலிமை சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுவதோடு கராத்தே, சிலம்பம் முதலான தற்காப்பு கலைகளிலும் பயிற்சி பெற அறிவுறுத்துங்கள். தன்னை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்துவது என்பது இந்த வயதிற்கே உரியது.

அசாத்தியமான தைரியம் படைத்தவர் என்பதால் பெரியவர்களை மதிக்காதது போல் உங்களுக்குத் தோன்றுகிறது. உண்மையில் உங்கள் மகன் மரியாதை கொடுப்பவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்வார். அதிகாரம் செய்து பேசுபவர்களை அலட்சியப்படுத்துவார். அவருடைய வேகமும் தைரியமும் ராணுவம், காவல்துறை சார்ந்த உத்யோகத்தில் அவரை அமர்த்தும். அவருடைய எதிர்காலம் என்பது சிறப்பாக உள்ளது. செவ்வாய்கிழமை தோறும் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள பெரம்பூர் பழனிஆண்டவர் ஆலயத்திற்குச் சென்று நான்கு நெய்விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். 23.7.2022 முதல் மகனின் நடவடிக்கைகளில் விவேகத்துடன் கூடிய வேகத்தினை உணர்வீர்கள்.

?என் கணவருக்கு கடந்த 20 வருடங்களாக மதுப்பழக்கம் இருக்கிறது. மது மறுவாழ்வு இல்லத்தில் ஒரு மாதம் இருக்கச் செய்தும் பலனில்லை. மனநல ஆலோசனைக்கு அழைத்துச் சென்றும் பெரிய மாற்றம் ஏதும் நிகழவில்லை. திருமண வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தும் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் செயல்படுகிறார். இவர் திருந்தி வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- கோமதி, திருநெல்வேலி.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகக் கணக்கின்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி முடிவிற்கு வரும் தருவாயில் உள்ளது. சந்திரன் அவருடைய ஜாதகத்தில் நீசம் பெற்றிருந்தாலும், ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் இந்த சந்திர தசையின் காலத்தில் அவரது மனதை மாற்ற இயலும். இவரது பரம்பரையில் உண்டாகியிருக்கும் பிரச்னை தற்போது வரை தொடர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. உங்கள் மாமியாரிடம் அதனைக் கேட்டறிந்து அதற்குரிய பிராயச்சித்தம் செய்ய முயற்சியுங்கள். உங்கள் கணவரின் தந்தையாரும் நாற்பத்தைந்து வயதிற்குள் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த தகவலும் பரம்பரையில் உள்ள பிரச்னையை உறுதி செய்கிறது. இவரது ஜாதகப்படி 16.5.2022 வாக்கில் பிரச்னையை தரக்கூடிய சம்பவம் ஒன்றினை எதிர்கொள்ள நேரிடும். சற்றுசிரமத்தைத் தரக்கூடிய அந்த நிகழ்வினைக் கண்டு நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அஞ்சத் தேவையில்லை.

அந்த பிரச்னைக்குரிய நேரத்தில் அவருக்கு நேரடியாகச் சென்று உதவி செய்யாதீர்கள். சிரமப்பட்டாலும் பரவாயில்லை, அவராக முயற்சித்து அதிலிருந்து வெளியே வரட்டும் என்று விட்டுவிடுங்கள். அனுபவப் பாடத்தினால்தான் அவரைத் திருத்த இயலும். திங்கட்கிழமை தோறும் காலையில் ராகுகால வேளையில் அருகிலுள்ள மாரியம்மன் ஆலயத்திற்குச் சென்று எலுமிச்சம்பழத்தை கையில் வைத்துக்கொண்டு சந்நதியை 18முறை வலம் வந்து வணங்குங்கள். வீட்டிற்கு வந்ததும் அந்த எலுமிச்சம்பழத்தை சாறாகப் பிழிந்து உங்கள் கணவரை அருந்தச் செய்யுங்கள். இதே போல் தொடர்ந்து செய்துவர 18வது வாரம் முடிவதற்குள் அம்மனின் அருளால் உங்கள் கணவரின் மனநிலையில் மாற்றத்தை உணர்வீர்கள்.

?42 வயது ஆகும் என் அண்ணனுக்கு இதுவரை திருமணம் கூடி வரவில்லை. தாயார் இறந்து இரண்டு வருடம் ஆகிறது. 80 வயதாகும் தந்தையை வைத்துக்கொண்டு தனியாக சிரமப்பட்டு வருகிறார். பூர்வீக சொத்தையும் அவரால் விற்க முடியவில்லை. அவருக்குத் திருமணம் கூடி வருமா? உரிய பரிகாரம் சொல்லுங்கள்.
- மாலினி, கோயமுத்தூர்.

புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் அண்ணனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தின்படி அவர் தற்போது பூர்வீக சொத்தினை விற்க முயற்சிப்பது நல்லதல்ல. 2024ம் ஆண்டு ஜூலை மாத வாக்கில் சொத்தினை விற்றால் அதற்குரிய ஆதாயத்தினைப் பெற முடியும். தற்போது அந்தச் சொத்தினை விற்றால் அதற்குரிய பலனை இவரால் அனுபவிக்க இயலாமல் போய்விடும். அவசரப்படாமல் நிதானித்துச் செயல்படுவது நல்லது. தற்போதைய கிரஹ நிலையின்படி இவருக்கு தொழில் முறையில் நல்ல முன்னேற்றம் என்பது காணப்படுகிறது. அவர் செய்து வரும் சுயதொழிலில் பிரமாதமான முன்னேற்றத்தைக் காண்பார். பூர்வீக சொத்தினை மட்டும் நம்பியிருக்காமல் தன்னுடைய சொந்தக்காலில் நிற்கவே உங்கள் அண்ணன் விரும்புவார். தொழில்முறையில்தான் அவருடைய கவனம் செல்லுமே தவிர திருமண வாழ்வில் ஈடுபாடு என்பது பிரமாதமாக இல்லை.

அடுத்து வர உள்ள கேது தசை என்பது அவரை ஆன்மிக மார்க்கத்தில் பயணிக்க வைக்கும். தனது சகோதரியாகிய உங்கள் மகனையே தனது தொழிலுக்கான வாரிசாக எதிர்காலத்தில் நியமிப்பார். அவருடைய திருமணத்திற்காக நீங்கள் அநாவசியமாக முயற்சி செய்ய வேண்டாம். மாதந்தோறும் வருகின்ற திருவோண நட்சத்திர நாள் அன்று காரமடை ரங்கநாதப்பெருமாள் ஆலயத்திற்குச் சென்று கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை உச்சரித்துக்கொண்டு மூன்று முறை பிராகாரத்தை வலம் வந்து வணங்கி வரச் சொல்லுங்கள். ஆலயத்திற்கு வெளியே அமர்ந்திருக்கும் அடியார்களுக்கு இயன்ற தானத்தினைச் செய்யச் சொல்லுங்கள். தொழில்முறையில் உயர்வு காண்பதோடு அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் மனநிம்மதி காண்பார்.
“ஸசித்ரசாயீ புஜகேந்த்ரசாயீ நந்தாங்கசாயீ கமலாங்கசாயீ
க்ஷீராப்திசாயீ வடபத்ரசாயீ
ஸ்ரீரங்கசாயீ ரமதாம் மநோ மே.”

?பெண் பார்க்கப் போன இடத்தில் என் மகனுக்கு பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது. ஜாதகம் பார்த்தபோது அந்தப் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளது தெரிய வந்ததால், மறுத்துவிட்டோம். எனது மகன் அதே பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான். செவ்வாய்தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா? என் மகனின் நல்வாழ்விற்கு உரிய வழி காட்டுங்கள்.
- சுகுமார், பெங்களூரு.

அவிட்டம் நட்சத்திரம், மகரராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாயும், மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரனும் ஒன்றாக இணைந்து 10ம் வீட்டில் அமர்ந்திருப்பது நல்ல பலமான
அம்சம் ஆகும். அவருக்கு அமைய உள்ள மனைவியால் அவரது எதிர்கால வாழ்வு சிறப்பானதாக அமையும். உங்கள் மகனுடைய உத்யோக ஸ்தானம் என்பதும் வலிமையாகஉள்ளது. கால தாமதம் செய்யாமல் அவரது மனதிற்கு பிடித்தமான அந்த பெண்ணையே பேசி முடிவு செய்யுங்கள். சதயம் நட்சத்திரம், கும்ப ராசியில் பிறந்திருக்கும் அந்தப் பெண்ணின் ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் என்பது இல்லை. ராசிஅதிபதி சனியின் பார்வை செவ்வாயின் மீது விழுவதால் நிச்சயமாக அந்தப் பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் என்பது கிடையாது.

உங்கள் மகனின் ஜாதகப்படி அவருக்கு வரவுள்ள மனைவியின் ஜாதகத்தில்
செவ்வாய் தோஷம் உட்பட எந்தவிதமான தோஷங்களும் இருக்காது. தோஷமுள்ள ஜாதகத்தை உடைய பெண்ணைப் பார்த்ததும் உங்கள் மகனுக்கும் பிடிக்காது. உங்கள் மகனின் ஜாதக பலத்தின் மீது நம்பிக்கை கொண்டு அவருக்கு பிடித்தமான அதே பெண்ணை நிச்சயம் செய்யுங்கள். அந்தப் பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் இருப்பதாக நீங்கள் நம்பினால் உங்கள் மகனின் திருமணத்தை ஏதேனும் ஒரு சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் வைத்து நடத்துங்கள். ஆண்டவனின் சந்நிதானத்தில் நடக்கும் திருமணம் நல்லவிதமாகவே அமையும். அநாவசியமாக கால தாமதம் செய்யாமல் மகனின் திருமணத்தை நல்லபடியாக நடத்துங்கள். திருமணத்திற்குப்பின் உங்கள் மகனின் உத்யோக பலம் என்பது நிச்சயமாக உயர்வடையும். மகனின் எதிர்கால வாழ்வு என்பது சிறப்பாகவே உள்ளது.

?காதல் திருமணம் செய்துகொண்ட என் இளைய மகள் தற்போது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்கிறாள். மூன்று வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது.
மருமகன் தனது பெற்றோர்தான் முக்கியம் என்றும் எங்களை வேண்டாம் என்றும் ஒதுக்குகிறார். எங்களை அவர் அலட்சியப்படுத்தியதால்தான் மகளுக்கு கோபம் வந்து சண்டை போட்டுக்கொண்டு வந்துவிட்டாள். என் மகளின் நல்வாழ்விற்கு நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.
- சுப்ரமணியன், திருச்சி.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடக்கிறது. பரணி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகனின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின் ஜாதகம் பலம் பொருந்தியது. தன்னுடைய கணவரைப் பிரிந்து வாழுகின்ற இந்த நிலை வெகு விரைவில் முடிவிற்கு வந்துவிடும். 30.5.2022ற்குப் பின் உத்யோக ரீதியாக உங்கள் மகளுக்கு உண்டாகின்ற இடமாற்றம், உங்கள் மருமகனை யோசிக்க வைக்கும். உத்யோகத்தில் இடமாற்றத்துடன் கிடைக்கின்ற பதவி உயர்வினை உங்கள் மகளை தைரியமாக ஏற்றுக்
கொள்ளச் சொல்லுங்கள். அந்த நேரத்தில் உண்டாகின்ற இடமாற்றம் அவருடைய எதிர்காலத்திற்கு புதிய திருப்புமுனையை உண்டாக்கும். உங்கள் மருமகனின் ஜாதகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் நேரம் அத்தனை சிறப்பாக இல்லை.

தனது குடும்பத்தினரையும் தனது மனைவியின் பிறந்தவீட்டாரையும் அனுசரித்து நடந்துகொள்ளும் கலையை அவர் புரிந்துகொள்ள இன்னும் சிறிது காலம் பிடிக்கும். பிரதி திங்கட்கிழமை தோறும் தெப்பக்குளம் அருகில் உள்ள நாகநாதர் ஆலயத்திற்குச் சென்று மூன்று நெய்விளக்குகள் ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி உங்கள் மகளை வழிபட்டு வரச் சொல்லுங்கள். பிரிந்த குடும்பம் விரைவில் ஒன்றிணையும்.
“சிவாய கௌரீ வதநாப்ஜ ப்ருந்த ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய
ஸ்ரீநீலகண்ட்டாய வ்ருஷபத் த்வஜாய தஸ்மை சிகாராய நம:சிவாய.

திருக்கோவிலூர்
ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்