SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்

2022-03-17@ 14:44:50

?என் தாயாரின் குடும்ப ஓய்வூதிய பணத்தில் நானும் என் மகனும் வாழ்ந்து வருகிறோம். மகன் பி.ஈ., முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் விருப்பம் இல்லாமல் அரசுப் பணியில்தான் விருப்பம் என்று அதற்காக தயாராகிவருகிறான். அவனுக்கு ஆஸ்துமா தொந்தரவும் உள்ளது. என் மகனுக்கு அரசுப்பணி கிடைக்கவும் உடல் ஆரோக்யம் பெறவும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- சாந்தி, பொள்ளாச்சி.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் 12ம் வீட்டில் வக்ரம் பெற்ற நிலையில் குரு மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் இணைந்துள்ளன. உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் 10ம் வீட்டில் ராகுவின் சாரம் பெற்ற சந்திரன் மட்டுமே தனித்து அமர்ந்துள்ளார். லக்னாதிபதி சுக்கிரன் மூன்றில் ராகுவுடன் இணைந்துள்ளார். இந்த கிரக அமைப்பு அரசுத்துறை சார்ந்த பணிகளுக்கோ அல்லது காவல்துறை சார்ந்த பணிகளுக்கோ துணைபுரியாது. உங்கள் மகன் தனியார் துறையில் வேலை தேடுவதே நல்லது. அரசுப்பணிதான் வேண்டும் என்று வீண் கால தாமதம் செய்யாமல், தற்காலமே தனியார்துறையில் வேலைக்கு முயற்சிப்பது நல்லது. கிடைக்கின்ற வேலையில் இரண்டு வருடங்கள் பணியாற்றினால் அந்த அனுபவத்தைக்கொண்டு அந்நிய தேசத்தில் வேலை பார்க்க இயலும். வெளிநாட்டில் வேலை பார்க்கும் அம்சம் என்பது நன்றாக உள்ளது. தினந்தோறும் இரண்டு துளசி இலைகளை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் உட்கொண்டுவருவதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும். காலம் பொன்போன்றது என்பதை மகனுக்கு அறிவுறுத்தி உடனடியாக வேலைக்கு முயற்சி செய்யச் சொல்லுங்கள். திங்கட்கிழமை தோறும் சிவாலயத்தில் உள்ள சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றிவைத்து வழிபட்டு வாருங்கள். 21.1.2024 முதல் மகனின் வாழ்வினில்
நல்லதொரு முன்னேற்றம் காண்பீர்கள்.

?நன்றாக இருந்த என் மகனுக்கு 11வது வயதில் மூளையில் சிறிது மாற்றம் ஏற்பட்டு வலது கை நடுக்கம் உண்டானது. அதிகப்படியாக கத்துவான், சிரிப்பான். ஆனால் நன்றாக பேசுவான். தற்போது 16வது வயதில் இடதுகையும் நடுக்கமாக உள்ளது. நடக்க சிரமப்படுகிறான். எல்லா டாக்டரிடமும் காண்பித்துவிட்டேன். எனது ஒரே மகன் குணமடைந்து நன்றாக இருக்க வழி காட்டுங்கள்.
- காஞ்சனா, சென்னை.

மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்துவருகிறது. அவருடைய ஜாதகத்தில் குரு மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் வக்ரம் பெற்றுள்ளன. அத்துடன் ஜென்ம லக்னத்தில் கேது இணைந்திருப்பதும் கடுமையான தோஷத்தினைத் தந்திருக்கிறது. பரம்பரையில் முன்னோர்கள் செய்த பாவம் குழந்தையை பாதித்திருக்கிறது. லக்னம் துவங்கும் புள்ளியும் கேது வந்து அமர்ந்திருக்கும் புள்ளியும் ஒன்றாக உள்ளது. லக்னம் துவங்கும் புள்ளியே மனிதனின் மூளையை செயல்பட வைக்கும். அந்தப் புள்ளியில் கேது இணைந்தால் மூளையில் விரும்பத்தகாத மாற்றங்கள் உண்டாகும். மருத்துவர்கள் இதனை கெமிக்கல் இம்பேலன்ஸ் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். உங்கள் மகனின் ஜாதக பலத்தின்படி இந்தப் பிரச்னையை உடனடியாக
சரிசெய்ய இயலாது. இறைசக்தியின் துணை இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அருகிலுள்ள ஆலயத்தில் அமைந்துள்ள அரசமரத்தடியில் நாகர்சிலை வாங்கி பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். சென்னை, திருவொற்றியூர், காந்திஜி நகரில் (சத்தியமூர்த்தி நகர் பேருந்து நிறுத்தம் எதிரில்) அமைந்துள்ள பஞ்சமுக நாகாத்தம்மன் ஆலயத்திற்கு ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் உங்கள் மகனை அழைத்துச் சென்று அம்மனுக்குப்பால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். முடிந்தால், சித்ராபௌர்ணமி நாளில் நடைபெறும் பால்குடம் மற்றும் தீ மிதி திருவிழாவிலும் மகனை பங்குபெறச் செய்யுங்கள். அம்பிகையின் சக்தியால் மட்டுமே உங்கள் மகனை குணப்படுத்த இயலும். நம்பிக்கையோடு அம்மனை துதித்து வாருங்கள். நல்லது நடக்கும்.

?19 வயதாகும் என் மகளுக்கு ஆறுமாத காலமாக உடலில் அலர்ஜி ஏற்பட்டு உடம்பில் ஆங்காங்கே திட்டுதிட்டாக வட்ட வட்டமாக உள்ளது. அரிப்பினால் மிகவும் வேதனைப்படுகிறாள். மருத்துவரிடம் காண்பித்தும் பலன் இல்லை. ஏதாவது கிரகக்கோளாறா அல்லது உடல் பிணியா? கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவள் விரைவில்
குணமடைய பரிகாரம் கூறுங்கள்.
- ரவி, திருவாரூர்.

கிரகக் கோளாறின் காரணமாகத்தான் உடலில் பிணி உண்டாகியிருக்கிறது. சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனிபுக்தி நடந்துவருகிறது. அவரது ஜாதகத்தில் கஷ்டத்தைத் தரும் எட்டாம் வீட்டில் சனி மற்றும் ராகு ஆகிய இரண்டு அசுப கிரகங்களும் ஒரே புள்ளியில் இணைந்திருப்பது பிரச்னையைத் தந்திருக்கிறது. அதிலும், ராகு நீசபலம் பெற்றிருப்பதால் அரிப்பு என்பது அதிகமாக உள்ளது. சனிதசை துவங்கிய காலத்தில் இருந்துதான் பிரச்னையும் ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பிரச்னையை சாதாரணமாகக் கருதாமல் உடனடியாக சென்னை போன்ற பெருநகரத்தில் உள்ள சிறப்பு மருத்துவர்களிடம் காண்பித்து உரிய மருத்துவ ஆலோசனைபெற்று அதன்படி நடக்க முயற்சியுங்கள். லக்னாதிபதி சுக்கிரனின் பலம் கூடியிருப்பதால் அவரை நிச்சயமாக குணப்படுத்திவிட இயலும். ஏதேனும் ஒரு சனிக்கிழமை நாளில் திருநாகேஸ் வரம் திருத்தலத்திற்கு மகளுடன் சென்று ராகுவை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்வதோடு அருகிலுள்ள ஒப்பிலியப்பன் ஆலயத்திற்கும் சென்று பெருமாளையும் சேவித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மகளின் உடல்நிலை முற்றிலும் சரியானதும் முடி காணிக்கை செலுத்துவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். 9.2.2023ற்குள் மகள் முற்றிலுமாக குணமடைவார். கவலை வேண்டாம்.

?பட்டப்படிப்பு முடித்துள்ள எனது மூத்த மகள் கொஞ்சமும் பொருத்தமில்லாத உறவினர் பையனை விரும்புகிறாள். பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பை மீறி
திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறாள். எனது மகளின் திருமணம் பெற்றோர் விருப்பப்படி நடக்குமா? அவளது வாழ்க்கை நல்லபடியாக அமைய என்ன செய்ய வேண்டும்?
- மனோகரன், வேலூர்.

கிருத்திகை நட்சத்திரம், ரிஷபராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது ராகுதசையில் குரு புக்தி நடந்துவருகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் உச்சபலம் பொருந்திய சந்திரனின் அமர்வும் ஏழாம் பாவக அதிபதி சுக்ரன் லக்னத்தில் சஞ்சரிப்பதும் அவரது நல்வாழ்வினை உறுதி செய்கிறது. அவரது விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்து நீங்களே முன்னின்று திருமணத்தை நடத்தி வையுங்கள். உங்கள் மகளின் ஜாதகத்தில் பெருத்த தோஷம் ஏதும் இல்லை. படிப்பு, அந்தஸ்து ஆகியவற்றை பெரிய தகுதி யாக எண்ணாமல் மகளின் விருப்பத்திற்கும் முக்கியத்துவம் அளித்து அவர் சொல்ல விரும்பும் கருத்துக்களையும் செவிகொடுத்து கேளுங்கள். நிதானமாக யோசித்து முடிவு செய்யுங்கள். அவரது ஜாதகப்படி தற்போது நடந்துவரும் நேரமே நன்றாக இருப்பதால் அதிகபட்சமாக வருகின்ற வைகாசி மாதத்திற்குள் அவரது திருமணத்தை நடத்துங்கள். விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் வைத்து அவரது திருமணத்தை நடத்துவதாக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். இறைவனின் திருவருளால் மகளுக்கு மனம்போல் மாங்கல்யம் கிடைப்பதோடு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசியுடன் எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்.

?29 வயதாகும் என் இளைய மகள் தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக்கழித்து வருகிறாள். எங்கள் மூத்த மகள் பிரசவத்தில் குழந்தையைப் பெற்றுவிட்டு இறந்துவிட்டாள். அக்காவின் மரணம் உண்டாக்கிய தாக்கம் இவள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக எண்ணுகிறோம். வயதான காலத்தில் எங்களுக்கு ஏன் இந்த சோதனை? அவள் மனம் மாறி திருமணத்திற்கு சம்மதிக்க என்ன செய்ய வேண்டும்?
- கோவிந்தராஜன், ஸ்ரீரங்கம்.

திருவோணம் நட்சத்திரம், மகரராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தை ஆராய்ந்ததில் அவரது மனதில் தனது அக்காளை இழந்து தவிக்கும் அக்காள்
கணவரைப் பற்றியும் அவரது குழந்தையைப் பற்றியும் ஆன கவலை இருப்பதாகத் தெரிய வருகிறது. உங்கள் மகளிடம் மனம் விட்டுப் பேசி அவரது மனக் குழப்பத்தினை தீர்க்க முயற்சியுங்கள். அவருடைய மனதிற்கு பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் மூத்த மாப்பிள்ளையையே நீங்கள் அவருக்குத் திருமணம் செய்துவைக்கலாம். இளம் வயதில் வாழ்க்கையை இழந்து தவிக்கும் ஒரு நல்ல மனிதருக்கும், தாயை இழந்து தத்தளிக்கும் குழந்தைக்கு தாயாக இருப்பதற்கும் ஒரு பெண்ணிற்கு மனப் பக்குவம் என்பது பன்மடங்கு தேவைப்படும். அவருக்கு தற்போது ஏழரைசனி நடந்து வந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உண்மையில் சனியின் தாக்கம் இருப்பவர்களால் மட்டுமே இதுபோன்ற வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.ஆகவே, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என்ன பேசுவார்களோ என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் மகளின் ஆசைப்படியே அவரது திருமணத்தை நடத்துங்கள். மாப்பிள்ளையிடம் குழந்தையின் எதிர்காலம் குறித்து பேசுங்கள். அவர் துரதிர்ஷ்டசாலி என்று எண்ணாமல் உங்கள் பேரக்குழந்தையின் நல்வாழ்வு கருதியும் மூத்த மகளின் ஆன்மா சாந்தியடையும் விதமாகவும், இளைய மகளை உங்கள் மாப்பிள்ளைக்கே மணம் முடித்து வையுங்கள். ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் இருவீட்டாரும் இணைந்து திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனை உச்சிகால பூஜையில் தரிசித்து பிரார்த்தனை செய்து அங்கேயே வைத்து சம்பந்தத்தை பேசி முடிவு செய்யுங்கள். அம்பிகையின் திருவருளால் உங்கள் மகளின் மணவாழ்வு மகிழ்ச்சிகரமாக அமையட்டும்.


மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • boat_medit

  மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!

 • nasa-project-artemis

  ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா

 • sea-18

  கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!

 • america_fire

  கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

 • mexico-mine-17

  மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்