SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறிஞரின் கேள்வியும் பதிலும்

2022-03-15@ 16:04:14

உலகப்புகழ் பெற்றவர் ‘டால்ஸ்டாய்’. அவர் வாழ்ந்த காலத்தில் முதல்தரமான சோம்பேறி ஒருவன் இருந்தான்;நல்ல பலசாலி; கட்டுமஸ்தான உடம்பைக் கொண்டவன்; ஆனால் ஒரு வேலையும் செய்ய அவனுக்கு விருப்பம் இல்லை; எதையாவது சொல்லி, அடுத்தவர்களிடம் கை நீட்டிக் காசு வாங்கியே பிழைப்பை ஓட்டினான்; அதற்காக அவன் என்ன பொய்கள் வேண்டுமானாலும் சொல்வான்; எதையாவது சொல்லி, தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.அவன் ஒருநாள் டால்ஸ்டாயிடம் வந்து, தன் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டான்; “ஐயா! என் தந்தைக்குக்கால் கிடையாது. எங்கள் குடும்பம் மிகவும் கஷ்டப்படுகி றது. கண்டிப்பாக நீங்கள் ஏதாவது உதவிசெய்ய வேண்டும்” என்றான்.

“சரி! உனக்கு என்ன உதவி வேண்டும்?” என டால்ஸ்டாய் கேட்க, “பணமாக உதவி செய்தால், அது பெரும் உதவியாக இருக்கும்” என்றான் சோம்பேறி. “தற்காலிக உதவி வேண்டுமா? நிரந்தர உதவி வேண்டு மா?” என்றார் டால்ஸ்டாய். “ஆகா! நிரந்தரமான உதவி செய்தால், மிகுந்த உதவியாக இருக்கும்” என்று மகிழ்ச்சியில் கூவினான் சோம்பேறி.
‘டால்ஸ்டாய் ஏதாவது பெரும் தொகையாகக் கொடுக்கப்போகிறார்’ என எண்ணினான் சோம்பேறி.டால்ஸ்டாய் தொடர்ந்தார்; “நிரந்தரமான உதவி வேண்டுமா? சரி! எனக்கு உன் வலது கையை வெட்டிக் கொடு! நான் உனக்கு ஐநூறு ரூபிள்(அந்த ஊர்க் கணக்கு) தருகிறேன்” என்றார்.

சோம்பேறி அவசரமாக மறுத்தான்; “என் வலது கையைக் கொடுக்க முடியாது. என்ன? என் வலது கை, ஐநூறு ரூபிள் தான் பெறுமா?” எனக்கேட்டான்.அடுத்த கேள்வி கேட்டார் டால்ஸ்டாய்; “சரி!அப்படியானால், உன் இரண்டு கண்களையும் எனக்குக் கொடு! உனக்கு ஆயிரம் ரூபிள்கள் தருகிறேன்” என்றார்.அதற்கும் மறுப்பு சொன்னான் சோம்பேறி “ஊஹும்!என் கண்கள் இரண்டும் ஆயிரம் ரூபிள்களுக்கும் அதிகமாகவே பெறும்” என்றான்.

டால்ஸ்டாய் மென்மையாகச் சிரித்தபடி, “சரி! போகட்டும்!  உன் உடம்பையே எனக்கு விற்று விடு! ஐயாயிரம் ரூபிள்கள் தருகிறேன்” என்றார்.“அதெல்லாம் முடியாது. என் உடம்பை இவ்வளவு மட்டமாக விலை போட்டு விட்டீர்களே!” என்றான் சோம்பேறி.டால்ஸ்டாய் முடித்தார்; “அதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா! என்னால் முடிந்ததைச் சொல்லி விட்டேன். அதற்குமேல் உன் விருப்பம்” என்றார்.சோம்பேறிக்குப் ‘பளிச்’சென்று உறைத்தது; ‘ஐயாயிரம் ரூபிளுக்கு மேல் மதிப்புள்ள என் உடம்பை வைத்துக் கொண்டு உழைத்தால், அதைவிட எவ்வளவோ மடங்கு
சம்பாதிக்கலாமே!’ என நினைத்தான்.

சோம்பேறி திருந்தினான்; டால்ஸ்டாயிடம், “ஐயா! தாங்கள் என் கண்களைத் திறந்து விட்டீர்கள். இனிமேல் நான் யாரையும் ஏமாற்றிப் பிச்சைகேட்க மாட்டேன். நானே உழைத்துச் சம்பாதிப்பேன்” என்றான்.அவனுக்கு வாழ்த்து சொல்லி விடை கொடுத்தார் டால்ஸ்டாய். உலகப்புகழ் பெற்ற நூல்களை எழுதிய இந்த டால்ஸ்டாயின் பக்தர்தான் ‘மகாத்மா காந்தி’. காந்திஜிக்கும் டால்ஸ்டாய்க்கும் கடிதப் போக்குவரத்தும் இருந்தது.

இருப்பதை வைத்துக்கொண்டு முன்னேற வேண்டும். நம்மிடம் இருப்பது நம் உடம்பு. அதைக்கொண்டு உழைத்து உயர்வடைய வேண்டும் - எனும் உழைப்பின் மேன்மையை விளக்கும் இந்நிகழ்வு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்தது.

V.R. சுந்தரி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

 • asaam_rain

  அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

 • tour-28

  ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

 • ukrainmaalll11

  உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்