SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2022-03-07@ 14:30:32

முருகன் கோயிலுக்குச் சென்று முருகனுக்கு தீபாரதனை காட்டும் சமயத்தில் வழிபட்டு, கோயிலில் 9 முறை பிரதட்சணம் வரவேண்டும்.  இப்படி ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்தன்றும் செய்துவந்தால், முருகப்பெருமானின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

10-3-2022 - வியாழக்கிழமை -துர்காஷ்டமி

அஷ்டமி என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கண்ணனுடைய திருஅவதாரம். அடுத்தது சைவத்தில் அது காலபைரவருக்கு உரிய திதி. மூன்றா
வதாக துர்க்கைக்கு உரிய திதி. கிருஷ்ணர் அவதரித்த அதே தினத்தில்தான், கோகுலத்தில் மாயா துர்கையின் அவதாரமும் நிகழ்ந்தது. எனவே, கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி திதி, துர்கை வழிபாட்டுக்கு உகந்த திதியாக அமைந்தது. ராகு - கேது முதலிய சர்ப்பதோஷங்கள் உள்ளவர்கள் அவசியம் இந்த துர்க்கா அஷ்டமியில் விரதமிருந்து துர்க்கையை வணங்க வேண்டும். துர்காஷ்டமி நாளில், ராகுகால வேளையில் ஆலயங்களில் உள்ள துர்கை அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

சமயநூல்களும் சாஸ்திரநூல்களும் போற்றும் அதியற்புதமான புண்ணிய தினங்களில் ஒன்று துர்காஷ்டமி. தேவிக்கு புனித பலியாக எலுமிச்சை, தேங்காய், பூசணிக்காய்கள் உடைத்து வழிபடுவார்கள்; துர்காதேவியின் அம்சமான 64 யோகினிகளும் பிராம்மி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, நரசிம்ஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சக்திகளும் ஒன்றிணைத்து செயலாற்றும் துடியான நாள். ஆகவே இந்தத் தினத்தில் அம்பாள் தரிசனமும் வழிபாடும் பன்மடங்கு பலனை அள்ளித் தரும்.

11-3-2022 - வெள்ளிக்கிழமை - திருக்கச்சி நம்பிகள்திருநட்சத்திரம்

ஸ்ரீராமானுஜருக்கு முன்பு இருந்த ஆசாரியர்களில் ஒருவர் திருக்கச்சி நம்பிகள். ராமானுஜருடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக விளங்கியவர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளிடம் நேரே பேசக்கூடிய வரத்தைப் பெற்றவர். வரதனுக்கு சதாசர்வகாலமும் திருவாலவட்ட கைங்கரியம் செய்தவர் திருக்கச்சி நம்பிகள். அவர் மாசி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். அவருடைய அவதார தினம் இன்று எல்லா வைணவத் திருக்கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் தங்கள் வீட்டிலும் ஆசாரிய ஜெயந்தியை அனுஷ்டிக்கிறார்கள். திருக்கச்சி நம்பிகள் இயற்பெயர் கஜேந்திரதாசர். இவர் சென்னைக்கு அருகே பூவிருந்தவல்லி என்ற ஊரில் வீரராகவர், கமலாயர் தம்பதிகளுக்கு நான்காவதாகப் அவதரித்தவர். சேனை முதலியார் அம்சமாக வைசிய குலத்தில் பிறந்தவர்.பூவிருந்தவல்லி பெருமாள் கோயிலில் இவருக்கு தனி உற்சவம் நடக்கிறது. அடக்கத்தின் எல்லை நிலமாக நின்றவர். மிகச்சிறந்த ஞானசீலர். முதலில் இவர் திருவல்லிக் கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார். பிறகு காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கக் கூடிய வரதராஜ பெருமாளுக்கு பூ மாலைகள் கட்டிக் கொண்டுபோய் சேர்க்கும் பணியை மேற்கொண்டார்.

சகோதரர்கள் மூவரும் பொருளீட்டுவதில் விருப்பத்துடன் இருந்தார்கள். இருப்பினும் கஜேந்திரதாசர் காஞ்சியில் உறையும் பேரருளாள பெருமாளுக்கு (வரதராசப் பெருமாள்) திருவாலவட்ட கைங்கரியம் செய்வதிலேயே தன் வாழ்வினை கழித்ததால், இவரைச் சிறப்பிக்கும் வகையில் வைணவர்கள் இவரைத் திருக்கச்சிநம்பிகள் (கச்சி-காஞ்சி) என அழைக்கலாயினர். இதற்காக அந்தக் காலத்தில் அவர், பூவிருந்தவல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக காஞ்சிபுரம் செல்வார். அப்படி செல்லும் வழியில் தான் ராமானுஜர் குடும்பத்தின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. நம்பிகளுக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. முக்கியமாக குறிப்பிட வேண்டும் என்று சொன்னால், ஸ்ரீராமானுஜர் அன்பைப் பெற்றவர். ஸ்ரீராமானுஜருடைய குடும்பத்தில் பல பிரச்னைகள் வந்தபொழுதும், அவர் கல்வி கற்ற நிலையில் பலவிதமான இடர்ப்பாடுகளை எதிர்கொண்ட போதும், அவருக்கு ஆறுதலாக இருந்து வழி நடத்தியவர் திருக்கச்சி நம்பிகள்.திருக்கச்சி நம்பிகள் ஞானத்தை கண்டு அந்தணரான ஸ்ரீராமானுஜர், அவரு டைய சேஷத்தை (அதாவது அவர் உணவு அருந்திய பின், அவர் அருந்திய உணவில் ஒரு பாகத்தை) உண்டு ஞானம் பெற வேண்டும் என்று நினைத்தார் என்று சொன்னால், திருக்கச்சி நம்பிகள் ஏற்றத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீராமானுஜர் வாழ்வில் சில சங்கடங்கள் வந்தது.  மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டு, அடுத்து தான் எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் தவித்தபொழுது, ‘‘அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நான் அந்தப் பெருமாளிடம் உடனே கேட்டுச் சொல்லுகின்றேன்” என்று உறுதியளித்து, அன்றைய இரவே பெருமாளிடம் பேசி, அடுத்த நாள் காலையிலே அவர் அருளிய வார்த்தையாக ஆறு வார்த்தைகளைச் சொன்னார்.அதுதான் ராமானுஜரின் வாழ்க்கையை திசை திருப்பி, அவரை ‘‘அனைத் துலகும் வாழப்பிறந்த” மகானாக மாற்றியது. அந்த ஆறு வார்த்தைகள் இன்றைக்கும் வைணவ நெறி நின்ற எழுத்துக் களாகப் போற்றப்படுகின்றன. ஸ்ரீராமானுஜருக்கு சொன்ன அந்த ஆறு வார்த்தைகள் ஒவ்வொருவருக்குமான வார்த்தையாகக் கடைபிடிக்கின்றனர் அந்த ஆறு வார்த்தைகள்  இதுதான்.
1) நாமே பரம் பொருள்
2) ஆன்மா- பரமாத்மா வேறுபாடு உடையதே - சித்தாந்தம்
3) மோக்ஷத்திற்கு சிறந்த உபாயம் ,
ப்ரபத்தியே,
4) அந்திமஸ்ருதி வேண்டியதில்லை.
5) சரீர முடிவில் மோட்சம் உண்டு.
6) பெரிய நம்பிகளையே ஆச்சாரிய
னாகக் கொள்ளவும்.

ஸ்ரீராமானுஜர் துறவறம்மேற்கொண்டு, காஞ்சி வரதனின் அனுமதி பெற்று, திருவரங்கம் செல்லும் பொழுது, அவரை வழியனுப்பி வைத்தவர் திருக்கச்சிநம்பிகளே. திருக்கச்சிநம்பிகளின் அவதார சிறப்புக்கு ஒரு சான்று; திருக்கச்சிநம்பிகள், ஒரு சமயம், தனக்கு பரமபதம் எப்பொழுது கிட்டும் என்று, தேவப்பெருமாளிடம் கேட்க, அவரோ ‘‘உமக்கு பரமபதம் கிடையாது” என்று கூற, அதைக் கேட்ட, நம்பிகள், எம்பெருமானிடம் ‘‘நாம் உமக்கு ஆல வட்டம் வீசி, கைங்கர்யம் செய்தேனே, ஏன் எனக்கு பரமபத ப்ராப்தி இல்லை? ” என்று  பெருமாளிடம் கேட்க, அவரும் ‘‘நீர், வீசினதற்கு, நாம் உம்மிடம் பேசினோம். ஆக, வீசியதற்கு, பேசியது சரியாகப் போய்விட்டது. மேலும் நீர், ஆச்சார்ய கைங்கர்யம் செய்யாத காரணத்தினால், உமக்கு பரமபத ப்ராப்தி கிடையாது. உமக்கு பரமபத ப்ராப்தி கிடைக்க வேண்டுமென்றால், முதலில் ஆச்சார்ய கைங்கர்யம் செய்து வாரும்” என்று சொல்லி அனுப்பினார்.

ஆச்சார்ய கைங்கர்யம் செய்தால்தான், பரமபதம் கிட்டும் என்ற நிலையில், திருக்கோட்டியூர் நம்பியிடம் சென்று, ஆச்சார்ய கைங்கர்யம் செய்ய முடிவெடுத்தார். ஆனால் தன் சுயஉருவில் சென்றால், அவரிடம் கைங்கர்ய ப்ராப்தி கிடைக்காது என்று எண்ணி, ஒரு மாடு மேய்ப்பவனாக வேட மிட்டுக்கொண்டு, அவரிடம் சேர்ந்து, ஆச்சார்ய கைங்கர்யம் செய்து வந்தார். காஞ்சி வரதராசப் பெருமாள் மீது “தேவராஜ அஷ்டகம்” எனும் வட மொழியில் அமைந்த நூலை இயற்றியவர் திருக்கச்சிநம்பிகள் ஆவார்.அதில் ஒரு அற்புதமான ஸ்லோகம்;ஸம்ஸார மருகாந்தாரே துர்வ்யாதி வயாக்ர பீஷணே|விஷய க்ஷுத்ர குல்மாட்யே த்ருஷாபாதபசாலினி||உலகியல், குடும்ப வாழ்க்கை என்பது ஒரு பாலைவனம், அந்த வனத்தில் புலிகள் போன்ற பயங்கரமான வியாதிகள், பாலைவனத்தில் முட்புதர்கள்போல் சிற்றின்பங்கள் நிறைந்திருக்கின்றன. ஆசை என்னும் மரங்கள், மக்கள், மனைவி, வீடு, நிலம் போன்ற விஷயங்கள் கானல் நீர் போல் நிறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட வனத்தில் செய்யவேண்டியவை, செய்யத்தகாதவை என்னும் பகுத்தறிவில்லாத குருடனாக நான் இருக்கிறேன். இங்கும் அங்கும் அலைந்து இடைவிடாது பேராசை உடையவனாக, மெலிந்து வாடி இருக்கிறேன். எப்போதும் மனதில் கவலை தான் இருக்கிறது. இப்படிப்பட்ட என்னை, தேவராஜனே! கருணைக்கடலே! தேவர்களுக்கு தேவனே! உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலைகளைப் போடுவதால் உண்டான திவலைகளால் கருணை என்னும் காற்றுடன் குளிர்ந்து கடாக்ஷிப்பாயாக. இப்படிப்பட்ட மகானாகிய திருக்கச்சிநம்பிகளை எண்ணி இன்றைய தினத் தில் அவருடைய பெருமையைப் போற்றுவதும்,  அவரை வணங்குவதும்  நமக்கு நற்பலன்களைச்  செய்யும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்