SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நன்மை தரும். நரசிம்மர் வழிபாடு

2022-02-18@ 12:38:52

?பூர்வீக வீடு சரியில்லை என்று வேறு ஊரில் இடம் வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறேன். இரவு பகல் என்று பாராமல் அமானுஷ்ய உருவங்கள் தென்படுகிறது. சர்ப்பம் தொடர்ந்து காற்றில் மிதந்து வருவது நன்றாக தெரிகிறது. இரவில் தூக்கம் இல்லை. இதனால் என் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது. 30 வயதாகும் என் மகனும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறான். உரிய பரிகாரம் கூறி வழிகாட்டுங்கள்.
- நந்தகுமாரி, அரக்கோணம்.

அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரன் நீசம் பெற்ற நிலையில் சந்திர தசையை எதிர்கொண்டு வருகிறீர்கள். இது மனநிலையில் கடுமையான பாதிப்பினைத் தந்திருக்கிறது. அத்துடன் ஜென்ம லக்னத்தில் ராகு அமர்ந்திருப்பதும் லக்னாதிபதி புதன் எட்டாம் வீட்டில் செவ்வாய் மற்றும் சூரியனுடன் இணைந்து அமர்ந்திருப்பதும் ஆன்ம பலத்தினைக் குறைத்துக் காட்டுகிறது. பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் உள்ள கிரஹ அமைப்புகள் பரம்பரையில் உண்டாகியிருக்கும் குறைகளைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. உங்கள் குடும்ப புரோஹிதரின் துணைகொண்டு வீட்டினில் சர்ப்ப சாந்தி மற்றும் சுதர்ஸன ஹோமத்தினைச் செய்து வழிபடுங்கள். ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை நாளில் சோளிங்கர் திருத்தலத்திற்குச் சென்று யோகநரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அத்துடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதும் நல்லது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை உங்கள் மகனின் கரங்களால் அன்னதானம் செய்வதாக நரசிம்ம ஸ்வாமியிடம் பிரார்த்தனை செய்துகொள்வதும் நன்மை தரும். நரசிம்மர் வழிபாடு என்பது அமானுஷ்ய சக்திகளிடம் இருந்து நிச்சயம் உங்களை காக்கும். கவலை வேண்டாம்.

?நகைக் கடை ஒன்றில் பல வருடங்கள் பணியாற்றி சகல வசதிகளுடன் வாழ்ந்த நான் திருமணத்திற்குப் பிறகு சொந்தமாக நகைக் கடை சிறிய அளவில் வைத்தேன். துவக்கத்தில் சிறப்பாக இருந்தது. பிறகு பிரச்சினைகள் அதிகமாகி தொழிலிலும் வளர்ச்சி இன்றி போக அடகு தொழிலை துவக்கினேன். மந்தமான சூழலே உள்ளது. கட்டத் துவங்கிய சொந்த வீடும் பாதியிலேயே நிற்கிறது. பலவிதமான மனக்குழப்பத்தில் உள்ளேன். தகுந்த பரிகாரம் கூறவும்.
- அஸ்வத், தஞ்சாவூர்.

உத்திராடம் நட்சத்திரம், மகரராசி, மீன லக்னத்தில் (கும்ப லக்னம் என்று தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள்) பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகப்படி நீங்கள் நகைக் கடை முதலாளியாக இருக்க முடியாது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதக பலத்தினைக் கொண்டு அவர் பெயரில் வியாபாரத்தை நடத்தினாலும் பெரிய லாபத்தை எதிர்பார்க்க இயலாது. பெரிய நகைக் கடைகளில் முக்கியப் பொறுப்பினில் பணியாற்றுவது உங்களுக்கு நல்ல சம்பாத்தியத்தைத் தரும். முதலாளியாகத்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் வெள்ளிப் பொருட்களை மட்டும் வியாபாரம் செய்வது நல்ல பலனைத் தரும். உங்கள் ஜாதகத்தில் சுக்ரன் உச்ச பலத்துடன் இருப்பதாலும், உங்கள் மனைவியின் ஜாதகத்திலும் சுக்ரன் ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதாலும் வெள்ளி வியாபாரம் என்பது நல்ல லாபத்தினைத் தரும். அடகுக் கடை என்பதும் அத்தனை உசிதமாக இல்லை. தனிப்பட்ட முறையிலான உங்கள் ஜாதக அமைப்புதான் இதற்கு காரணமே தவிர, நீங்கள் கேட்டிருப்பது போல் வேறு எந்தவிதமான செய்வினை கோளாறு ஏதுமில்லை. உங்கள் ஜாதக பலத்தினைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் தொழிலை அமைத்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். வெள்ளிக்கிழமை தோறும் தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வாருங்கள். வருடம் ஒரு முறை உங்களால் இயன்ற திருப்பணியை அம்பிகைக்குச் செய்வதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். 09.09.2023ற்குப் பிறகு பாதியில் நிற்கும்
உங்கள் வீடு கட்டி முடிக்கப்பட்டு நல்லபடியாக க்ருஹப்ரவேசம் செய்வீர்கள்.

?இரண்டு பெண் குழந்தைகளின் தாய் ஆகிய எனக்கு உடல்நிலை சரியில்லை. நுரையீரலில் கட்டி இருப்பதாகக் கூறுகிறார்கள். அறுவை சிகிச்சை இன்றி குணம் அடைய விரும்புகிறேன். நான் பூரணமாக குணம் அடைய வழிகாட்டுங்கள்.
- அபிராமசுந்தரி, காஞ்சிபுரம்.

மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சுக்ர புக்தி நடந்து வருகிறது. உடல் ஆரோக்யத்தைப் பற்றிச் சொல்லும் ஆறாம் வீட்டில் கேதுவின் அமர்வும் ஜென்ம லக்னாதிபதி செவ்வாய் 12ம் வீட்டில் சுக்கிரன் மற்றும் ராகுவுடன் இணைவு பெற்றிருப்பதும் ஆரோக்யத்தில் சற்று சிரமத்தைத் தந்திருக்கிறது. அதிலும் தற்போது சனி தசையுடன் அஷ்டமத்துச் சனியும் இணைந்திருப்பதால் மனதளவில் மிகவும் வலுவிழந்து காணப்படுகிறீர்கள். முதலில் மன உறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்ற தைரியத்தோடு உங்கள் அன்றாட பணிகளை தொய்வின்றி செய்து வாருங்கள். உங்கள் எண்ணத்தின்படியே அறுவை சிகிச்சை இல்லாமல் பூரணமாக நலம் அடைய இயலும். மருத்துவர்களின் ஆலோசனைகளை தவறாமல் பின்பற்றி வாருங்கள். மிதமான சூட்டில் வெந்நீர் அருந்தி வாருங்கள். தினமும் காலையில் இரண்டு துளசி இலைகளை வெறும் வாயில் மென்று விழுங்குவதும் உடல்
நிலையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும், உங்களால் இயன்ற அளவிற்கு மரக்கன்றுகளை நடுவதாக சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். எண்ணிக்கை ஏதுமின்றி முடிந்த அளவிற்கு அதிக அளவிலான மரக்கன்றுகளை நடுவதன் மூலமாக வ்ருக்ஷ தோஷம் என்பது நீங்கி உங்கள் ஆரோக்யம் விரைவாக முன்னேற்றம் பெறுவதையும் கண்கூடாகக் காண்பீர்கள்.

? என் மகளுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது. 2020ல் அவள் ஒரு முறை கருவுற்றாள். கரு வளர்ச்சி இல்லை, துடிப்பு இல்லை என்று கூறிவிட்டனர். தற்போது இரண்டாவது முறை கருவுற்றாள் அதுவும் துடிப்பும் வளர்ச்சியும் இல்லை, பத்து நாட்கள் பார்க்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். என் மகளுக்கு குழந்தை நல்ல முறையில் பிறக்க உரிய பரிகாரம் கூறுங்கள்.
- சென்னை வாசகி.

பூசம் நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தின்படி 1.2.2022 முதல் சுக்ர தசையில் சுக்ர புக்தி என்பது தொடங்கி உள்ளது. இதுநாள் வரை அவருக்கு கேது தசை என்பது நடந்திருக்கிறது. தற்போது துவங்கி உள்ள நேரம் நன்றாக உள்ளது என்பதால் விரைவில் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுப்பார். உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சூரிய புக்தி என்பது நடந்து வருகிறது. உங்கள் மருமகன் மஹாளய அமாவாசை நாளில் பிறந்தவர். பிள்ளைப்பேற்றினைக் குறிக்கும் ஐந்தாம் பாவக அதிபதி சூரியன் ஆறாம் வீட்டில் சந்திரன் மற்றும் செவ்வாயுடன் இணைந்திருப்பதும் ஆறாம் பாவக அதிபதி புதன் ஐந்தில் அமர்ந்திருப்பதும் தோஷத்தினைத் தருகிறது. பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் முன்னிலை பெறுவதால் அதற்கான தீர்வினைக் காண வேண்டியது அவசியம். முன்னோர்கள் வழியில் ஒரு சில பிரச்னைகள் இருப்பதை அறிய முடிகிறது. உங்கள் மருமகப்பிள்ளையிடம் அவர்களது குடும்ப ஜோதிடரின் அறிவுரைப்படி உரிய பரிகாரங்களைச் செய்யச் சொல்லுங்கள். உங்கள் மகளை தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஆறு முறை சொல்லி வணங்கி வரச் சொல்லுங்கள். வம்சவிருத்தி என்பது நல்லபடியாக சாத்தியமாகக் காண்பீர்கள்.
“ஆதித்யா த்வாதசா ப்ரோக்தா ப்ரக்ருஹநீத்வம் பலிம் த்விமம்

 யஷ்மாகம் தேஜஸாம் வ்ருத்யா நித்யம் ரக்ஷதா கர்ப்பிணீம்,

திருக்கோவிலூர்
ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • boat_medit

  மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!

 • nasa-project-artemis

  ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா

 • sea-18

  கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!

 • america_fire

  கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

 • mexico-mine-17

  மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்