SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2022-02-15@ 13:14:35

16-2-2022 - புதன்கிழமை -பிள்ளை உறங்காவில்லி  தாசர் ஜெயந்தி

ராமானுஜருடைய பல்வேறு சீடர்களில்  அற்புதமான ஒரு சீடர் வில்லி தாசர். “தனுர்தாசர்” என்றும் பெயர். இவருடைய மனைவியின் பெயர் பொன்னாச்சியார் குருபக்தியில் தலைசிறந்தவர்.உறையூர் மன்னனுக்கு பாதுகாவலனாக விளங்கிய மல்யுத்த வீரன் இவர். இவரை ராமானுஜர் திருத்தி தம் அடியாராக்கிய முக்கிய கதை சுவாரஸ்யமானது.ஒருமுறை, ராமானுஜர் தம்முடைய திருமடத்தில் அமர்ந்திருந்தபோது, தனுர்தாசர் தன்னுடைய மனைவிக்கு நடை பாவாடை விரித்து, குடை பிடித்துக் கொண்டு சென்றதைக்  கண்டார். அழைத்து விசாரிக்கும் பொழுது, ‘‘என்னுடைய மனைவியின் கண்களை நான் நேசிக்கிறேன். அந்த கண்கள் வெயில் பட்டால் துன்பப்படும் என்பதால் நான் குடை பிடித்து நடக்கிறேன்” என்று சொல்ல, ராமானுஜர் கேட்டார். ‘‘உன்னுடைய மனைவியின் கண்ணழகில் நீ கொண்ட ஈடுபாடு எனக்குத்  தெரிகிறது. இதைவிட சிறந்த ஒரு கண்ணழகைக் காட்டினால் என்ன செய்வாய்?'' என்று கேட்க, ‘‘அப்படி ஒரு கண்ணழகு இருக்க முடியாது. இருந்தால், அந்த கண்ணழகுக்கு  நான் அடிமையாவேன்” என்று சொல்ல, அவனை மடை மாற்றம் செய்ய எண்ணிய ராமானுஜர் கைபிடியாக அழைத்துச் சென்று, அரங்கன் முன்னால் நிறுத்தினார். அவருடைய திருக்கண் களைக் காட்டி பிரார்த்தனை செய்தார்.

அரங்கனே, உன்னுடைய கண் அழகை எல்லாம் இந்த வில்லிதாசனுக்குக்   காட்டி ஆட்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பிக்க,அரங்கனும்   கரியவாகிப் புடை பரந்து செவ்வரி ஓடிய பெரியவாய கண்
களைக்  காட்டி  வில்லி தாசரை ஆட்கொண்டான்.வில்லிதாசரும், அவர்  மனைவி பொன்னாச்சியும்  ராமானுஜரின் சீடர்களாகி  வைணவத்தைப்  பரப்பி வந்தார்கள்.ராமானுஜர் ஒவ்வொருநாளும் காலை காவேரி நதியில் நீராடச் செல்வார். அப்படி நீராடச் செல்லும் பொழுது தாசரதி என்று சொல்லப்படுகின்ற தன்னுடைய உறவினரான முதலியாண்டான் தோளில் கைவைத்துச் செல்வார். ஆனால், நீராடிவிட்டு திரும்புகின்ற பொழுது, பிராமண குலம் அல்லாத வில்லிதாசரின்  தோள் மீது கை வைத்தபடி தன்னுடைய மடத்துக்குத் திரும்புவார். காரணம், வில்லிதாசரின் பகவத் பக்தியும், பாகவத பக்தியும் ஆசாரிய அபிமானமும் ஆகும்.

உறங்காவில்லிதாசருக்கு  திருவரங்கம் திருக்கோயிலின் கருவறை மற்றும் கோயில் நகைகளை காக்கும் பணியையும், பகவான் ஊர்வலம் வருகின்ற பொழுது, முன்னால் வாளேந்தி காவல் செய்கின்ற பணியையும் ராமானுஜர் தந்தார். அந்த வில்லிதாசரின் அவதார தினம் இன்று. (திருநட்சித்ரம்: மாசி, ஆயில்யம்)

16-2-2022 - புதன்கிழமை - பௌர்ணமி பூஜை மற்றும் லலிதா ஜெயந்தி

லலிதா என்பது சக்தியின் ஒரு அம்சம். பஞ்ச பூதங்களின் இணைவிலும், இயக்கத்திலும் இருப்பவள். பஞ்சபூத சொரூபிணி என்று சொல்லுவார்கள். வடநாட்டில் லலிதா ஜெயந்தி பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.அன்று லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.

17-2-2022 - வியாழக்கிழமை - மாசி மகம்

மாசி மாதம் என்பது கும்ப மாதம் என்று வழங்கப்படும் மாதம் ஆகும். ஆத்ம காரகனாகிய  சூரியன் பதினோராம் ராசியான லாப ராசியில் இருந்து தனது ராசியான பூர்வபுண்ணிய ராசியை  பார்க்கும் மாதம்தான் மாசி மாதம். இந்த சிம்ம ராசியில் தான் மக நட்சத்திரம் இருக்கிறது. சந்திரன் மக நட் சத்திரத்தில் வரும்  பௌர்ணமி திருநாளில்   கொண்டாடப்படுகின்ற உன்னதமான விழா மாசி மக திருவிழாவாகும். ஒருவனுடைய குற்றங்கள் நீங்கி தூய்மை பெற வேண்டும் என்று சொன்னால்  நீராட வேண்டும். மன உறுதியோடும் பக்தியோடும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் உடல் தூய்மையோடு மனக் குற்றங்களும்  நீங்கும். “புறந்தூய்மை நீரால் அமையும், அகத்தூய்மை வாய்மையால் காணப்படும்” என்று வள்ளுவர் இதனைக்  குறிப்பிடுகின்றார்.  தண்ணீர் கடவுளான வருண பகவான், தன்  சாபம் (மாசு) தீர இறைவனை வழிபட்டார். இப்படிப்பட்ட மாசி மக நன்னாளில் அந்த இறைவனோடு சென்று வணங்கி வழிபட்டு நாமும் நன்மையை அடைவோம்.

17-2-2022 - வியாழக்கிழமை - மணக்கால் நம்பி ஜெயந்தி

வைணவ பரம்பரையில் நாதமுனிகளுக்குப் பிறகு அவருக்கு சீடராக உய்யக் கொண்டார் வருகின்றார். உய்யக்கொண்டாரின் சீடர்தான் மணக்கால் நம்பி. அரசனாக உலகியலில் காலம் கழித்துக் கொண்டிருந்த நாதமுனிகளின் பேரன் ஆளவந்தாரை,  திருத்திப் பணிக்கொண்டு வைணவ நெறிகுத் திருப்பியவர் மணக்கால் நம்பி. இவர் திருச்சிக்கு அருகே மணக்கால் என்னும் ஊரில் அவதரித்தவர். ராம மிச்ரர் என்பது இவருடைய பெயர். தாசரதி என்றும் சொல்வார்கள். நம்பி என்றால் குணபூர்த்தி உடையவர். நாதமுனிகளிடம் இருந்து பிரபந்தங் களைக் கற்றுக் கொண்ட உய்யக் கொண்டாரிடம் இருந்து மணக்கால் நம்பி கற்று, தாம் கற்றதை ஆளவந்தாருக்கு உபதேசித்து, குரு பரம்பரை வளர்ச்சியுறச் செய்தவர். மணக்கால் நம்பி. திருநட்சத்திரம் மாசி மாதம் மகம் நட்சத்திரம். இந்நாளில் வைணவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் இவருக்கு நடத்தப்படும்.

18-2-2022 - வெள்ளிக்கிழமை - திருவள்ளுவர் நாயனார்  குருபூஜை

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று தமிழ்நாட்டை சிறப்பித்துப் பாடுவார் பாரதி. 1330 குறட்பாக்களில், மனித சமுதாயம் அடையக்கூடிய அத்தனை செய்திகளையும் தந்தவர் திருவள்ளுவர். அவருக்கு மயிலையில் (மயிலாப்பூர்) ஒரு கோயில் உண்டு. சைவ ஆதீனங்களும்  இவருடைய குருபூஜையைக் கொண்டாடுகின்றனர். இவரைப் பற்றிய ஆதாரப்பூர்வமான செய்திகள் கிடைக்கவில்லை. என்றாலும் கூட, இவர் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்து, மாசி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் மறைந்ததாக ஒரு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவருடைய குருபூஜை தினம் கொண்டாடப்படுகிறது. எது எப்படியாயினும் இந்நாளில் அருங்குறளை  உலகுக்குத் தந்த திருவள்ளுவரின் நினைவைப் போற்ற வேண்டும். அவருடைய திருக்குறளை வாசித்துக்  கடைபிடிக்க வேண்டும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்