SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2022-02-07@ 14:43:07

8.2.2022 - செவ்வாய்க்கிழமை

ரதசப்தமி : மங்களகரமான தை மாதத்தின் ஒவ்வொரு திதியும், ஒவ்வொரு சிறப்புத் தன்மையை கொண்டதாகவே அமைந்திருக்கிறது.  வசந்த பஞ்சமி, சஷ்டி, போலவே சப்தமி என்கின்ற ஏழாவது திதி சூரியனுக்கு உரிய நாளாக அமைந்திருக்கிறது. சூரிய பகவான் சப்தமி திதி அன்றுதான் காஷ்யபருக்கும், அதிதிக்கும் மகனாக அவதரித்ததாகச் சொல்கிறது புராணம். எனவே, தை அமாவாசை முடிந்த ஏழாவது நாள், வளர்பிறை சப்தமி. சூரிய தேவனின் ஜெயந்தி நாளாகக் கொண்டாடப்படுகின்றது .

தன்னுடைய தெற்கு திசை பயணத்தை முடித்துக் கொண்டு வடக்கு நோக்கி திரும்புகின்ற நாள் ரதசப்தமி நாளாகக் கொண்டாடப்படுகிறது.  சூரியனை வழிபடுகின்ற ஒரு மரபு காலம் காலமாகவே இருந்து வந்திருக்கிறது. காலையில் சூரிய வழிபாடு செய்யாமல் எந்தச் செயலையும் ஒருவர் தொடங்குவது இல்லை. ரதசப்தமி நாளன்று ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வடகிழக்கு திசையை நோக்கி பயணத்தை சூரியபகவான் மேற்கொள்கின்றார். அவருடைய சாரதியாக அருணன் விளங்குகின்றார். அந்தத் தேரின் 7 குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும், அந்த ரதத்தில் உள்ள 12 ஆரங்கள் 12 ராசிகளை குறிப்பதாகவும் கூறப்படுகின்றது.

ரதசப்தமி நாளில் சூரியனுக்கு பொங்கல் வைத்து படைப்பதன் மூலமாக மிகச் சிறந்த பலன்களை பெறலாம். ஆத்ம சக்தி அதிகரிக்கும். பேராற்றல் பிறக்கும். தைரிய, வீரிய குணங்கள் வளரும். அறிவு கூர்மையாகும். ஞானம் வளரும். வித்தைகள் மேம்படும். கல்வியில் மிகச் சிறந்த வளர்ச்சி கிடைக்கும். திருமலை திருப்பதியில் ரதசப்தமி நாளன்று ஏகதின பிரம்மோற்சவம் நடைபெறும். அன்று மலையப்ப சுவாமி, தேவி பூதேவி தாயாருடன் காலை முதல் இரவு வரை ஏழு வாகனங்களில் நான்கு வீதிகளிலும் பவனி வருவார். இவ்விழா ரங்கம், காஞ்சிபுரம், திருவயிந்திபுரம் முதலிய திவ்ய தேசங்களிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று எப்படி விரதம் இருக்கலாம் என்பதை சுருக்கமாகக் காணலாம்.

பீஷ்மர் கங்கையின் புதல்வன். மகாபாரதத்தில் வருகின்ற முக்கியமான பாத்திரம். அஷ்ட வசுக்களில் ஒருவர். மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்தவர். பகவான் கண்ணனையே எதிரில் அமர வைத்து விஷ்ணு சகஸ்ர நாமம் சொன்னவர். உத்தராயணத்தில் தான் உயிர் துறப்பேன் என்று அம்புப் படுக்கையில் காத்திருந்து, தை மாத வளர்பிறை அஷ்டமி நாளில் நம்முடைய உடலை நீத்து சொர்க்க வாழ்வை பெற்றவர்.
ரத சப்தமி நாளில் அவரை வியாசர் வந்து பார்க்க, அவரிடம் தன் பாவங்கள் நீங்கி முக்தி அடைய வழி கேட்டார். அப்போது வியாசர், எருக்க இலைகளைக் கொண்டுவந்து, பீஷ்மரின் மேனியில் வைத்து அவரின் வேதனையைத் போக்கினார். எருக்க இலை சூரிய பகவானுக்கு உரியது.

சூரியனை அர்க்கன் என்பர். எருக்க இலைக்கு அர்க்க பத்ரம் என்ற பெயரும் உண்டு. ரத சப்தமி நாளில் ஏழு எருக்க இலைகளை சேகரித்து, நீராடும்முன் மூன்று இலைகளைத் தலையிலும் இரண்டு இரண்டு இலைகளைத் தோள்களிலும் வைத்து சூரியனை  மனதார வேண்டி நீராட வேண்டும். ஆண்கள் நீராடும் போது இலைகளில் கொஞ்சம் விபூதியை இட்டும், பெண்கள் கொஞ்சம் மஞ்சள் பொடி இட்டும் நீராடுவது சிறந்தது. இவ்வாறு நீராடினால் பாவங்கள் விலகும். அடுத்த நாள் பீஷ்மர் முக்தி அடைந்தார். அந்த நாளில், புண்ணிய நதிகளில் நீராடி விரதம் இருந்தால் புத்திர பேறு உண்டாகும் என்று சொல்லப்படுகின்றது. அன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.நாம் நதிகளில் நீராட முடியாவிட்டாலும், நாம் நீராடுகின்ற தீர்த்தத்தை புனித நதிகளாக  பாவித்து, பீஷ்மரையும் நினைத்துக்கொண்டு, நீராடி பிரார்த்தனை செய்வதன் மூலமாக பல்வேறு நன்மைகளை பெறலாம்.

10.2.2022 - வியாழக்கிழமை சியாமளா நவராத்திரி முடிவு

நான்கு நவராத்திரிகள் வருடத்திற்குக் கொண்டாடப்படுகின்றன. அதில், சியாமளா நவராத்திரியும் ஒன்று. ராஜமாதங்கி தேவியை பிரத்தியேக தேவ தையாக வழிபடுகின்ற விழா இந்த விழா. வடக்கே காளி தேவியையும் வழிபடுகின்றனர். தைமாத வளர்பிறை பிரத மையில் ஆரம்பித்த விழா, இன்றைய தினம் நிறைவுறு கிறது. அம்பாளை கலசத்தில் ஆவாகனம் செய்து ஒன்பது நாட்களும் வழிபட்டவர்கள், இன்றைய தினத்தில் பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். அதனால் பற்பல நன்மைகளை அடையலாம்.

11.2.2022 - வெள்ளிக்கிழமை
கண்ணப்ப நாயனார் குருபூஜை

சைவ சமயத்தில் வண்தொண்டர்கள் என்று சில தொண்டர்களைக்  குறிப்பிடுவார்கள். ஒருவர் கல்லால் அடித்தார். ஒருவர் வில்லால் அடித்தார். ஒருவர் காலால் உதைத்தார் என்று சிறப்பாகச் சொல்வதுண்டு. கல்லால் அடித்தவர் சாக்கியநாயனார். வில்லால் அடித்தவன் விஜயன். காலால் உதைத்தவர் கண்ணப்பன். ஆம் இவருடைய வைராக்கியத்தையும் தியாகத்தையும் போல்  பார்த்திருக்கவே முடியாது.
“கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்” என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், “நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்” என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர்.

திண்ணன் என்பது இவர் பெயர். வேடர் குலத்தில் பிறந்தவர், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித்தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிஷேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சனை செய்து, பக்குவப் பட்ட பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகம விதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவகோசரியார் மனம் வருந்தினார். இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவ கோசரியாருக்கு  உணர்த்த  ஒரு  நாடகம்  நடத்தினார்  ஈசன் .

திண்ணனார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். கண்ணில் குருதி வடிவதைக்  கண்டு திண்ணனார்  அழுதார்.  இறைவனுக்கே இந்த நிலையா என்று தவித்தார். பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். ஆயினும் பலன் இல்லை.இதற்கு ஏதேனும் ஒரு வழி செய்தே தீர வேண்டும் என்று துடித்த அந்த துடிப்பில், தன் கண்ணை பறித்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்றது. ஆனால், இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, “இது என்ன சோதனை?” என்று நினைத்த திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டார்.

தன்னுடைய காலால், இறைவன் கண் உள்ள இடத்தை அடையாளப் படுத்திக் கொண்டு, தன் கையிலிருந்த அம்பால், தன் கண்ணை பறித்து, இறைவனுக்கு வைக்கத்துணிந்தார். “கண் கொடுத்த அப்பா, கண்ணப்பா,” என்று இறைவன் அழைத்து, “நில் கண்ணப்பா” என்று சொன்னார். அவருடைய வைராக்கியத்தையும் தியாகத்தையும் கண்டு சிவபெருமான் காட்சி தந்தார்.
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை “வா” என்ற வான் கருணைசுண்ணப்பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பிகண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட, இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாக மணிவாசகர் திருக்கோத்தும் பியில் குறிப்பிடுகின்றார்.கண்ணப்ப நாயனாரின் குருபூஜை தை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. அந்த தினம் இன்று.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்