SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2022-01-29@ 17:22:40

29.1.2022 - சனிக்கிழமை  சனி பிரதோஷம்

பாற்கடல் கடைந்தபொழுது, அதில் வந்த விஷத்தை சிவபெருமான் பருகினார். இது
நடந்தது  திரயோதசி திதியில். சிவபெருமான் உமா தேவியோடு, திரயோதசி திதியில், தேவர்கள் பலரும் புடைசூழ, சூலம் சுழற்சி கையில் தமருகம் அடித்து ஒரு, ஜாமம் நடனம்  செய்த காலத்தை சிவ ஆகமங்கள் பிரதோஷ காலம் என்று கூறுகின்றன. இப்படி அழகான முறையில் சிவன் ஆடிய இந்த திரு நடனக் காட்சியை மதுரைக்கு அருகில் திருப்பரங்குன்றத்தில் காணலாம் 15 தினங்களுக்கு ஒரு முறை வரும் திரயோதசி பரிதோஷம் என்றும் தினந்தோறும் மாலை பகல் இரவு வேளையை பிரதோஷம் என்றும் கூறுவர். ஆண்டுக்கு ஒருமுறை வரும் சிவராத்திரியை மகா பிரதோஷம் என்பார்கள். பிரதோஷம் விரதம் இருந்து சிவபெருமானை வணங்குவதன் மூலமாக இகபர சுகங்களைப் பெறலாம்பொதுவாகவே ‘‘பிற தோஷங்கள்” நீங்க வேண்டும் என்று சொன்னால் ‘‘பிரதோஷ” காலத்தில் சிவ வழிபாடு நடத்துவது சிறந்தது. அதுவும் சனி பிரதோஷம் என்பது சாலச்சிறந்தது. அன்றையதினம் சிவாலயம் சென்று, நந்தியை வணங்கி, பிரார்த்தனை செய்தால், ஒருவருக்கு சனிபகவானால் ஏற்படுகின்ற பல்வேறு விதமான துன்பங்கள் குறையும்.

சனிதிசை நடப்பவர்களுக்கு, சனியினால் ஏற்படும் துன்பங்கள் குறைந்து சனி திசை, யோக தசையாக மாறும். ஏழரைச்சனி, கண்டச்சனி, அட்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி முதலிய தோஷங்கள் விலகும்.
அன்றைய நாள் முழுக்க உபவாசமிருந்து சிவதரிசனம் முடித்த பிறகு, உப்பு, காரம், புளிப்பு இல்லாமல் உண்பது வழக்கம். பிரதோஷ தினத்தில் சோமசூக்த வலம் செய்வதன் மூலமாக, அந்த வருடம் முழுக்க ஈசனை வழிபாடு செய்த பலனும், சனி பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்த பலனும் நமக்குக்  கிடைத்துவிடும். பிரதோஷ தினம் சிவன் கோயிலில் செய்யப்படுகின்ற வேதபாராயணம், திருமுறை பாராயணம் ஆகியவற்றை அவசியம் செவி குளிரக் கேட்க வேண்டும். அன்றைய தினம் பிறை அணிந்த பெருமானுடன், அம்பாளும் முருகனும் இணைந்த கோலமாகிய சோமாஸ்கந்த மூர்த்தியை
தரிசித்து வழிபட்டால் சகலவிதமான நன்மைகளும் வந்து சேரும்.

31.1.2022 - திங்கள்கிழமை தை அமாவாசை

ஒவ்வொரு மாதமும் “அமாவாசை திதி” என்பது, தாயாகிய சந்திரனும் தந்தையாகிய சூரியனும் இணையும் நாள் ஆகும். அந்த நாளை நம்முடைய “முன்னோர்கள் நினைவு நாளாக” எண்ணி அவர்களுக்கு தனி வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த வழிபாடு என்பது தெய்வ வழிபாட்டுக்கும்  மேலாக பன்னெடுங்காலமாகவே நடைபெற்று வருகின்றது. “தென்புலத்தார் வழிபாடு” என்று இதனைச் சொல்வார்கள். வடமொழியில் பித்ருக்கள் வழிபாடு என்று சொல்லுவார்கள். ஒவ்வொரு மாத அமாவாசையும் முக்கியம் தான் என்றாலும் கூட தட்சிணாயணத்தின் தொடக்க மாதமாகிய ஆடி மாத அமாவாசையும், உத்தராயணத்தில் தொடக்கமாகிய தைமாத அமாவாசையும்  மிக மிகச் சிறந்தது.

மற்ற அமாவாசையில் முன்னோர் வழிபாடு நடத்தத்  தவறியவர்கள் கூட இந்த அமாவாசை தினத்தன்று விசேஷமான வழிபாடுகள் நடத்துவது வழக்கம். இதன்மூலமாக முன்னோர்களின் ஆசி பெறலாம்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு தடைகள் இருந்தாலும் செயல் தாமதங்கள் இருந்தாலும். வியாபார முன்னேற்றம் இல்லாமல் இருந்தாலும் குழந்தைச் செல்வங்கள் முதலிய விஷயங்கள் காலத்துக்கு நடக்காமல் இருந்தாலும், அவர்களுக்கு முன்னோர்களின் ஆசிகளில் தடை இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.தை அமாவாசை வழிபாட்டை முறையாக நடத்துவதன் மூலமாக அவர்கள் ஆசிகளைப்  பெறலாம். அன்றைய தினம் விரதமிருந்து முன்னோர்களை நினைத்து, நீர்நிலையில் அவர்களை மனப்பூர்வமாக அழைத்து, எள்ளும் நீரும் இறைக்க வேண்டும். இதனை தர்ப்பணம் என்பார்கள்.

எள் (திலம்) அவர்களுடைய பசியை தீர்க்கும். அதோடு சேர்ந்துவிடுகின்ற தீர்த்தமானது அவர்களுடைய தாகத்தைத் தீர்க்கும். இந்த இரண்டும் கிடைத்த மனநிறைவில் அவர்கள் மகிழ்ச்சியோடு தங்கள் வாரிசுகளை வாழ்த்திச்  செல்வார்கள். இந்த வழிபாடு நடத்தாமல் இருந்தால் அவர்கள் மனம் வருத்தப்படும். அந்த வருத்தமானது அவர்கள் சாபமிடாவிட்டாலும், ஒரு சாபமாக மாறி, குடும்பத்துக்கு சில இடையூறுகளைத்  தரும் என்று கருட புராணம் போன்ற நூல்கள் கூறுவதால், தை அமாவாசையை தவறவிடக் கூடாது.இந்த தை அமாவாசையை ஒட்டித்தான் திருநாங்கூர் திருப்பதிகளில் திருமங்கை ஆழ்வாருக்கு மஞ்சள் குளி உற்சவமும், அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் துவங்கி 11 திவ்ய தேச எம்பெருமான்கள் கருடசேவையும் நடைபெறும்.    

1.2.2022 செவ்வாய்க்கிழமை திருவோண விரதம்

27 நட்சத்திரங்களில் ‘‘திரு” என்கிற அடைமொழியோடு இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் இரண்டு. ஒன்று திருவாதிரை. இரண்டு திருவோணம். திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உரிய நட்சத்திரம். உஷ்ண நட்சத்திரம். திருவோணம் என்பது மஹாவிஷ்ணுவுக்கு உரிய நட்சத்திரம். திருவோணத்தான் உலகாளும் என்பார்களே என்பது ஆழ்வார் பாசுரம். இது குளிர்ச்சியான நட்சத்திரம். இந்த திருவோண நட்சத்திரத்தில் விரதம் மேற்கொள்வது திருவோண விரதம் அல்லது சிரவண விரதம் என்று கூறுவார்கள்.மாதம்தோறும் திருவோணம் அன்று பெருமாள் ஆலயங்களில் பெருமாளுக்கு விசேஷமான திருமஞ்சனம் நடைபெறும். இப்பொழுதும் பல பக்தர்கள் திருவோணம் அன்று விரதமிருந்து மாலையில் பெருமாள்கோயிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி அதன்பிறகே விரதத்தை முடித்துக் கொள்வார்கள். சக்தி வாய்ந்த இந்த விரதமானது, உடல் சக்தியையும் உள்ள சக்தியையும் அதிகப்படுத்தும். கும்பகோணத்துக்கு அருகில் ஒப்பிலியப்பன் கோயிலில் இந்த சிரவணம் விரதம் அன்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து பெருமானை தரிசிப்பார்கள்.

ஒரே  ஒரு மாதம் திருவோண விரதம் இருந்தாலும் கூட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். இந்த முறை சிரவணம், (திருவோணம்) மங்கள வாரமாகிய செவ்வாய்க்கிழமை வருவது சிறப்பானது.
அன்றைக்கு விரதம் மேற்கொள்பவர்கள், அவசியம் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச்  சென்று துளசி அல்லது வாசனை மலர்களைத் தந்து பெருமாளை வணங்கி வாருங்கள். திருவோண விரதம் இருப்பவர்களுக்கு சந்திரனால் ஏற்படுகின்ற மனக்குழப்பம் கவலைகள் முதலியவை நீங்கும். உள்ளத்தில் உற்சாகம் பிறக்கும். தொழில் வெற்றி ஏற்படும். குழந்தை இல்லாத வர்களுக்கு குழந்தை செல்வம் ஏற்படும்.  

2.2.2022 - புதன்கிழமை
சியாமளா நவராத்திரி ஆரம்பம்

அறுவகை சமயங்களில் அம்பிகைக்கு பிரதானம் கொடுத்து வழிபடும்  சமயம்  “சாக்த சமயம்”. அம்பாளுக்கு நவராத்திரி விரத பூஜை என்பது 9 நாள்களுக்கு விசேஷமாகக் கொண்டாடப் படுகிறது. பொதுவாக தென்னகத்தில் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுகின்ற “சாரதா நவராத்திரி” தான் கவனத்துக்கு வரும். அதில் தான் ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற விசேஷங்கள் வருகின்றன. ஆனால் ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் இருப்பது நம்மில் பல பேருக்குத் தெரியாது. வராகிதேவி வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தருகின்றன “ஆஷாட நவராத்திரியும்”, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு முக்கியத்துவம் தருகின்ற புரட் டாசி மாத “சாரதா நவராத்திரியும்”, லலிதா திரிபுரசுந்தரிக்கு முக்கியத்துவம் தருகின்ற “வசந்த நவராத்திரியும்” இதில் உண்டு.சியாமளா நவராத்திரி என்பது ராஜமாதங்கி தேவிக்கு முக்கியத்துவம் தருகின்ற நவராத்திரி விழாவாகும்.

மாதங்கி என்பவர் மகாவித்யா எனப்படும் பத்து தந்திர தெய்வங்களிள் ஒருவர். பார்வதியின் ஆங்கார அம்சம். பிரம்மாவின் குமாரனாகிய மதங்க முனிவரின் மகள் மாதங்கி சரஸ்வதி யின் தாந்த்ரீக வடிவமும் கூட. சரஸ்வதியைப் போலவே, குறிப்பாக எதிரிகளின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும், மக்களை ஈர்ப்பதற்கும், கலைகளில் தேர்ச்சி பெறுவதற்கும், உயர்ந்த அறிவைப் பெறுவதற்கும் மாதங்கி தேவியின் வழிபாடு முக்கியம்.இவருக்கு ராஜமாதங்கி, ராஜ சியாமளா என்றும் வேறு பெயர்கள் உள்ளன. இந்தியாவின் வடபகுதியில் சியாமளா தேவி என்று அறியப்படுகிறார்.

மாதங்கி என்பது மரகதபச்சை வண்ணத்தைக் குறிக்கிறது. உச்சிஷ்டா மாதங்கினியின் கைகளில் உடுக்கை, வாள், மண்டையோடு போன்றவை காணப்படுகிறது. இவரின் இன்னொரு தோற்றமான ராஜ மாதங்கியின் உருவம் வீணை வாசிப்பவராகவும், கிளியை வைத்திருப்பவராகவும் சித்தரிக்கப்படுகிறது.இந்த நவராத்திரி பூஜையானது தை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த பிரதமை திதியிலிருந்து தொடங்குகின்றது. அம்பிகையை பூரணகலசத்தில் எழுந்தருளச் செய்து, நாம் தினம்தோறும் வீட்டில் பூஜை செய்யலாம். அதில் ஐந்தாவது நாள் பஞ்சமி நாள். இந்த நாளை “வசந்த பஞ்சமி” என்று சொல்வார்கள். அன்றைய தினம் கலைமகள் திருஅவதாரம் செய்த தினமாகக் கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக வடநாட்டில் இந்த வசந்த பஞ்சமி அன்று தான் கலைமகளை வணங்கி வித் தையை ஆரம்பம் செய்கின்றார்கள்.

இந்த நவராத்திரி விரிவாக கொண்டாடப் படாவிட்டாலும், தை அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி, ஒன்பது நாட்கள் அருகிலுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று அம்பாளை ராஜமாதங்கி தேவியாக மனதில் எண்ணி வழிபாடு நடத்துவதன் மூலமாக 16 செல்வங்களையும் பெற்று பயனடையலாம்.  

3.2.2022 - வியாழக்கிழமை அப்பூதி அடிகளார் குருபூஜை

63 நாயன்மார்களில் மிகச்சிறந்த சிவத்தொண்டர் அப்பூதியடிகள் “ஆண்டவனும் அடியாரும் ஒருவரே” என்பதை உலகுக்குக் காட்டியவர் அப்பூதியடிகள்.அவருடைய அவதாரம் நவகிரகங்களில் ஒருவராகிய சந்திரனுக்கு உரிய திங்களூர் ஆகும்.திங்களூர் திருவையாறு அருகே உள்ளது.அப்பூதி அடிகளார் சிவபெருமானை வணங்குவதை விட சிவபெருமானை வழிபடும் அப்பர் அடிகளை வணங்கி மிக எளிதாக சிவனருள் பெற்றார். திருநாவுக்கரசர் சீடராக தன்னைத்தானே கருதிக்கொண்டு அவர்மீது அன்போடு இருந்த அப்பூதி அடிகள், தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தும் திருநாவுக்கரசுக்கு உரியது என்று வைராக்கியம் செய்துகொண்டார்.

அவர் திருநாவுக்கரசுநாயனார் மீது  மிக அன்பு கூர்ந்து, தம்முடைய வீட்டினுள்ள அளவைகள், தராசுகள், பிள்ளைகள், பசுக்கள், எருமைகள் முதலிய எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசுநாயனார் பெயரையே சொல்லிவருவார். அன்னம் பாலித்தல், சத்திரம் அமைத்தல், தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் என்ற சகல பணிகளையும் திருநாவுக்கரசரின் திருப்பெயரால் அவர் செய்து வந்தார்.திருநாவுக்கரசு நாயனார் திருப்பழனமென்னும் தலத்தை வணங்கிக் கொண்டு, திங்களுருக்குச் சமீபமாகிய வழியிலே செல்லும்பொழுது, திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயர் எங்கும் எழுதப்பட்டிருத்தலைக் கண்டு, அங்கு நின்றவர்கள் சிலரை நோக்கி, ‘‘இந்தத் தண்ணீர்ப்பந்தரை இப்பெயரிட்டுச் செய்தவர் யார்?” என்று கேட்டார்.

அவர்கள் இங்கு உள்ள அறச்சாலைகள், குளங்கள், திருநந்தனவனங்களெல்லாவற்றையும் அப்பூதியடிகள் என்னும் பெயருடைய சிவனடியார் திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயரிலேயே செய்கிறார்.” என்றார்கள். திருநாவுக்கரசு நாயனார், ‘‘இங்ஙனம் அவர் பெயரில் செய்தற்குக் காரணம் யாதோ” என்று நினைந்து அப்பூதியடிகள் வீடு தேடிச் செல்ல, உள்ளிருந்த அப்பூதிநாயனார் சிவனடியார் ஒருவர் வாயிலில் வந்து நிற்கின்றார் என்று கேள்வியுற்று விரைந்துசென்று, திருவடிகளிலே  வணங்கினார்.  திருநாவுக்கரசு நாயனார் ‘நாம் திருப்பழனத்தை வணங்கிக்கொண்டு வரும்பொழுது, வழியிலே நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரைக் கண்டும்,  நீர் செய்திருக்கின்ற தருமங்களைக் கேட்டும்’ உம்மைக் காண விரும்பி வந்தோம்” என்று சொன்னார்.

பின்பு, “சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரிலே உம்முடைய பெயரை எழுதாது,வேறொருபெயரை ‘‘எழுதியதற்குக் காரணம் யாது?” என்று வினவ;  அப்பூதிநாயனார் கோபமடைந்தார்.
“நீர் நல்லவார்த்தை பேசவில்லை., உலகெங்கும் சிவநெறி பரப்பும் பெருந்தொண்டரது திருப்பெயரோ வேறொருபெயர்? நாயனாருடைய மகிமையை இவ்வுலகத்திலே அறியாதார் யாருளர்? நீர் சிவவேடத்தோடு நின்று இவ்வார்த்தை பேசினீர். நீர் எங்கே இருக்கிறவர்? சொல்லும்” என்று கோபித்தார்.  திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகளுடைய அன்பை அறிந்து, ‘‘ஆரு கத சமயப் படுகுழியினின்றும் ஏறும் பொருட்டுப் பரமசிவன் சூலைநோயை வருவித்து ஆட்கொள்ளப்பெற்ற உணர்வில்லாத சிறுமையேன் யான்” என்று அருளிச்செய்தார்.

உடனே அப்பூதிநாயனார், இரண்டு கைகளும் சிரசின்மேலே குவிய, கண்ணீர் சொரிய, உரை தடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, திருநாவுக் கரசுநாயனாருடைய பாதாரவிந்தங்களில் விழுந்தார்.
அவரை உணவருந்த (பாதபூஜை, (மஹேஸ்வர பூஜை)) வீட்டுக்கு அழைத்தார். அப்பொழுது அப்பூதி அடிகளின் குழந்தையை ஒரு  பாம்பு தீண்டி, குழந்தை இறந்து விட்ட செய்தி அறிந்த திருநாவுக்கரசர், திங்களூர் இறைவன்மீது, “ஒன்றுகொலாம்” என்று தொடங்கும் பாடலைப் பாடி, குழந்தையை உயிர்ப்பித்துக் கொடுத்தார். சுந்தரமூர்த்தி நாயனார் அப்பூதி அடிகளைப்  பற்றி குறிப்பிடும்பொழுது,” “ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்” என்று குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் திருப்பெயரை விட, சிவபெருமானின் அடியாராகிய திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதி  எளிதாக சிவப்பேறு பெறலாம் என்பதை உணர்த்தியவர் அப்பூதியடிகள்.அவர் குருபூஜை இன்று. (தை மாதம் சதய நட்சத்திரம்)


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்