SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிற்பமும் சிறப்பும் :மோதேரா சூரியன் கோயில், மெக்சானா

2022-01-25@ 14:34:04

ஆலயம்: மோதேரா சூரியன் கோயில், மெக்சானா
மாவட்டம், குஜராத் மாநிலம்.
காலம்: கி.பி.1026 இல் (சாளுக்கிய) சோலங்கி வம்ச மன்னர் முதலாம் பீம தேவனால் கட்டப்பட்டது.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!’ - மோதேரா சூரியன் கோவில் இயற்கை சக்திகளில் சூரியனே முதன் மையானது என்பதால் சூரியனை வழிபடும் முறை உலகெங்கும் பண்டைக்காலம் முதலே இருந்துவருகிறது. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது.

“ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு
போற்றுதும் காவிரி நாடன் திகிரி போல்
பொன்கோட்டு மேரு வலந்திரிதலான்...”
(சிலப்பதிகாரம் - புகார்க்காண்டத்தின் முதல்காதை)

“…ஓங்கு திரை
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்”
(நற்றிணை - 283 - கி.பி.3 -4 ஆம் நூற்றாண்டு)

என மதுரை மருதன் இளநாகனார் சூரியன் பழந்தமிழர் வழிபட்ட தெய்வமாக இருந்ததைக் கூறுகிறார். சிலப்பதிகாரத்தில் (புகார்க் காண்டம் / கனாத்திறமுரைத்த காதை) தமிழகத்தில் ‘பகல்வாயில் உச்சிக் கிழான் கோட்டம்’ என்ற பெயரில் சூரியனுக்கான கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது. சூரிய வழிபாட்டுக்கென பாரதத்தில் பண்டைய காலத்தில் சிற்பக்கலை சிறப்புடன் பல பிரத்தியேக ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

அவற்றுள் புகழ் பெற்றவை:
தமிழகத்தில் இருக்கும் சூரியனார் கோவில், ஒடிசா மாநிலத்தில் இருக்கும் கொனார்க் கோவில், காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் மார்தாண்ட் சூரியக் கோவில் (தற்போது முழுமையாக சிதிலமடைந்த நிலையில் உள்ளது) மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள மோதேரா சூரியன் கோவில். சௌராஷ்டிராவை (குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதி) ஆண்ட (சாளுக்கிய) சோலங்கி வம்ச மன்னர் முதலாம் பீமதேவனால் மோதேரா நகரத்தில், கி.பி.1026 இல் கட்டி சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தோற்றப்பொலிவுடன் வரவேற்கும் தோரண வாயில்கள், நட்சத்திர வடிவ ஆலய கட்டு மானம், கலை நுணுக்கங்களுடன்கூடிய நெடிய தூண்கள் தாங்கி நிற்கும் சபா மண்டபம், பேரழகு பொருந்திய சிற்பங்கள், 108 சிறு ஆலயங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘சூரிய குண்டம்’ படிக்கிணறு என கோயிலின் ஒவ்வொரு அம்சமும் ஆச்சரியமூட்டுகிறது.

வெளிப்புறச் சுவர்களெங்கும், அழகிய தெய்வ சிற்பங்கள் நிறைந்திருக்கும். இவ்வாலயம் அன்னியர் படையெடுப்புகளினால் சிதைக்கப்பட்டிருந்தாலும், அழிவின் மிச்சங் களிலும் அழகு கொட்டிக்கிடக்கின்றது. அமைக்கப்பட்ட காலகட்டத்தில் எத்தகைய எழிலுடன் இருந்திருக்கும் என்ற எண்ணம் எழாமல் இல்லை. ஆப்கானிய மன்னர் கஜினி முகமதுவின் பல்வேறு படையெடுப்புக்களின் போது, சோமநாதபுரம் சிவன்கோயிலை இடித்து, அங்குள்ள செல்வங்களைக் கவர்ந்து செல்லும் வழியில், மோதேராவில் இருந்த சூரியன்கோயிலும் அவரது தாக்குதலுக்கு உள்ளானது.

சௌராஷ்டிர தேச மன்னர்களாலும், வணிகர்களாலும் மோதேரா சூரியன் கோயில் மீண்டும் கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்டாலும், கி.பி. 12-13 நூற்றாண்டில் டில்லி சுல்தான்களின் படையெடுப்பின் போது, மோதேராவில் உள்ள சூரியன் கோயிலின் பல பகுதிகள் திரும்பவும் சேதப்படுத்தப்பட்டன. இரவும், பகலும் சமமான நேரம் கொண்ட நாட்களான 21 மார்ச் மற்றும் 21 செப்டம்பர் அன்று, இக்கோவில் கருவறையில், கிழக்குநோக்கி அருள் புரியும் சூரியபகவான் விக்ரகம் இருந்த இடத்தின் மீது, காலை வேளையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பு. ஆனால், இப்போது கருவறையில் சூரியன் சிலையே இல்லை. வெகுகாலத்திற்கு முன்பே விக்ரகம் அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

குஜராத்தின் புகழ்பெற்ற படிக்கிணறுகளை நினைவூட்டும் வகையில் செவ்வக வடிவிலான ‘சூரியகுண்ட’ குளத்தில், விநாயகர், நடனம் ஆடும் சிவன், ஆதிசேஷ சயன விஷ்ணு, ஷீதாலா மாதா, பல்வேறு தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 சிற்றாலயங்கள் பக்தர்கள் நீராடிய பின்பு ஆலயம் சென்று வழிபடும் வண்ணம் குளத்தின் நாற்புறங்களிலும் பக்கவாட்டு படிக்கட்டுப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

சிறிய சந்நிதிகளில் உள்ள பல சிற்பங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துவிட்டன. கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள பல கோஷ்ட சிற்பங்கள் சிதிலமடைந்திருந்தாலும், 7 குதிரைகள் இழுத்துச்செல்லும் தேரின் மீது தனது மனைவியர் உஷா, சாயா சகிதம் நின்று காட்சியளிக்கும் சூரியதேவன் சிற்பங்களின் எழிலில் நம் மனம் லயித்து விடுகிறது. இன்று வழிபாடு இல்லாத இவ்வாலயம், இந்திய தொல்லியல் துறையினரால் சிறப்பாகப் புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

செய்தி: படங்கள்: மது ஜெகதீஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

 • nellai-16

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்