SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொற்கதிர்க்கு நெற்கதிர்!

2022-01-11@ 13:51:31

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன்-80

சித்திரை தொடங்கி பங்குனி வரை உள்ள பன்னிரண்டு தமிழ் மாதங்களில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புற்று விளங்கினாலும், தைமாதம் தனித்துவம்பெற்றுப் பொலிகின்றது.‘தை பிறந்தால் வழிபிறக்கும்!’ என்று மங்கலகரமாக வழங்கப்படும் முதுமொழியே அதற்கான அத்தாட்சி! மனித வாழ்க்கைச்சக்கரம் நம்பிக்கை என்னும் அச்சில்தானே சுழல்கிறது! ஒவ்வொரு வருக்கும் அந்த நம்பிக்கை ஒளியை ஊட்டுகிறது ‘வழிபிறக்கும்’ என்னும் ஒற்றை வாசகம்!தை மாதம் தொடங்கும் முதல் நாளேபொங்கல் திருவிழாவாகப் பொலிகிறது.விழாக்களின் வரிசையை விமரிசையாகத் தொடங்கி வைக்கும், இம்மாதம் பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்,தைப்பூசம், தைக்கிருத்திகை, தை அமாவாசை, தை வெள்ளி என பல பண்டிகைகளின் பட்டியலை ஒருசேரத் தருகின்றது!

கை நிறைந்தது! - இன்று
தை பிறந்தது!
காலை வானம் நெற்றி மீது
திலகம் ஏற்றது! - உடன்
கால ஏட்டில் இன்பப் பொங்கல்
உலகம் பூத்தது!

மண் மகிழ்ந்தது! - ஒரு
பண் திகழ்ந்தது!
மாடு கூட கொம்பில் வண்ணம்
பூசிக்கொண்டது! - தமிழ்
மண்டலமே உயிர் எருமை
பேசிக் கொண்டது!

கண் களித்தது! - வான்
பொன் தெளித்தது!
கரும்பு மஞ்சள் இஞ்சி என்று
கதிரும்வந்தது! - பழைய
கழனிகந்த புது மணியோ
விருந்து தந்தது!

 - என்று பாடி மகிழ்கிறார்கள் பாவலர் பெருமக்கள்!இயற்கையோடு இசைந்து மனித இனம் வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் இனிய விழாவாகப் பொங்கல் பண்டிகை திகழ்கிறது. பொற்கதிரான சூரிய தேவனுக்கு நெற்கதிர்களால் நிலமங்கை காணிக்கை செலுத்தி மகிழ்கின்றாள். இனிப்பு மூங்கிலாக வழங்கும் கரும்பையும், பொங்கலையும், இஞ்சி மஞ்சள்கள் தழைகளையும் விண்ணகத் தேவர்க்கு படையலாகப் படைத்து மகிழ்கிறார்கள், உழவர் பெருமக்கள். நன்றி பாராட்டலுக்கு ஒரு நல்ல உதாரணமாக விளங்குகின்றது இவ்வரிய விழா! ‘பொங்கலோ பொங்கல்’ என மகிழ்ச்சிக் கூத்தாடி சூரியனுக்கு விழா எடுத்தால் மட்டுமே ‘பொங்கலின் மகத்துவம்’ முழுமை பெற்றுவிடுமா?

‘தன் கடன் ஒழுங்காய் ஆற்றும்
சாதனைச் செங்கதிர்க்குப்
பொங்கலைப் படைத்தல் மட்டும்
புவனத்தோர் செய்கை அல்ல!

அங்கவன் கடமை ஆற்றும்
அற்புதம் போல நன்றாயத்
தங்களைத் தாம் இயக்கி
தழைப்பதே நன்றிப் பொங்கல்!

சற்றியிருக்கும் காரிருளைச் சூரியன் நீக்குவதால் வெளி உலகம் வெளிச்சம் பெறுகிறது! ஆனால், பேராசை, தன்னலம், அச்சம், கோபம், பொறாமை முதலிய தீய குணங்களால் இதயம் இருட்டறையாகவே உள்ளதே என்கின்றார் மகாகவி பாரதியார்.

வானம் எங்கும் பரிதியின் சோதி!
மலைகள் மீதும் பரிதியின் சோதி!
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி!
மானவன்றன் ஊத்தினில் மட்டும்
வந்து திற்கும் இருள் இது என்னே?

தை முதல் நாளில் நாம் எப்படிவிளங்க வேண்டும் என்பதை அதற்கு முதல் நாள் நாம் கடைபிடிக்கும் போகிப் பண்டிகை மூலமே புரிந்து கொள்ளலாம். போகியன்று அதுவரை சேர்ந்து குவிந்த வேண்டாதவற்றை எல்லாம் நெருப்பில் இட்டு எரிக்கின்ற ஒரு வழக்கம் நடைமுறையில் உள்ளது. பின்பு, அடுத்த நாளில் புத்தரிசியைப் புதுப் பானையில் இட்டு பொங்கல் பொங்குகின்றோம். அவ்வாறே ஆசை, கோபம் முதலிய தீயவற்றை அழித்து தூய்மை மனதுடன் நாம் துவங்கினால் நம் படையலை பகவான் ஏற்றுக் கொள்வான்!

தைப் பொங்கல் தரும் தத்துவத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப விழாவைக் கொண்டாடினால்தான் போகியையும், பொங்கலையும் அர்த்தம் புரிந்து கொண்டு கடைபிடித்தால்தான் அடுத்த விநாடியே ‘வழி பிறந்து விட்டது’ என உணர்ந்து கொள்ள இயலும்.தைபிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!தங்கச்சம்பா நெல் விளையும் தங்கமேதங்கம்!

(தொடரும்)

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Republic Day Tamilnadu

  புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

 • Republic Day Tamilnadu

  புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

 • Republic Day Tamilnadu

  Neglected Decorated Vehicles - Parade on Republic Day in Chennai!

 • Republic Day Chennai

  சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில்

 • tamil-mozhi-25

  தமிழுக்காக உயிர்த் தியாகம்!: மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்