SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள் ...

2022-01-04@ 13:10:31

?தந்தையை இழந்த 29 வயதாகும் என் மகனுக்கு அரசுப்பணி கிடைத்தவுடன் திருமணம் செய்யலாம் என நினைத்தேன். ஆனால், அவன் சுய விருப்பப்படி திருமணம் செய்ய முடிவு செய்து விட்டான். நாங்கள் என்ன செய்வது?
 - சேலம் வாசகி.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகன் எதைச் செய்தாலும் நன்றாக யோசித்து விட்டு செய்கிறார். அதே நேரத்தில், தற்போது நடந்து வரும் நேரம் என்பது அவரை தெளிவாக முடிவெடுக்க இயலாத சூழலுக்குத் தள்ளியிருக்கிறது. இந்த ஒரு விஷயத்தைத் தவிர மற்ற அனைத்து விவகாரங்களிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார். தற்போது நடந்து வரும் நேரம் அவரது உத்யோகத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. அரசுப்பணி கிடைக்கும் வரை காத்திருக்காமல் ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டே இருப்பது நல்லது. திருமண விஷயத்தைப் பொறுத்த வரை நீங்கள் நிதானத்தை இழக்காமல் செயல்படுங்கள். ஏதேனும் ஒரு ஆலயத்திற்கு அந்தப் பெண் மற்றும் அவரது தாயாரை வரச் சொல்லுங்கள். நீங்கள் உங்கள் மகனையும் உடன் அழைத்துச் சென்று, அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். இந்த சம்பந்தம் எந்த விதத்திலும் ஒத்துவராது என்பதை அவர்களின் மனம் புண்படாமல் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் மகனுக்கும் எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்ளக் கூடியவர்தான். அந்தப் பெண்ணும் அதே போன்ற குணத்தை உடையவராகத்தான் இருப்பார். பிள்ளைகளின் மனம் நோகாமல் நடைமுறையில் உள்ள யதார்த்த வாழ்க்கையை எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள். திங்கட்கிழமை தோறும் ராகு கால வேளையில், அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்று நான்கு நெய் விளக்குகள் ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 18 முறை சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 18 வாரங்கள் தொடர்ந்து செய்து வர மகன் இந்த பிரச்னையில் இருந்து மீண்டுவிடுவார். கவலை வேண்டாம்.

“யாதேவீ ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
 நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:”

?ஒரு மகன் மற்றும் மகளுடன் வசிக்கும் எனக்கு கணவர் இறந்து 7 வருடங்கள் ஆகிறது. தந்தை, தாயார், அண்ணன், அண்ணி அனைவரும் 2, 3 வருட இடைவெளியில் இறந்துவிட்டனர். ஏதோ முன்னோர் சாபம் என்கிறார்கள். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. நிம்மதி என்பதே இல்லை. இரவு என்ற ஒன்று ஏன் வருகிறது என்று இருக்கிறது. தயவுசெய்து பரிகாரம் கூறுங்கள்.
 - ஒரு வாசகி.

ஜாதகத்தை துல்லியமாக கணித்து பலன் சொல்ல, பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகிய விவரங்கள் அவசியம் தேவை. நீங்கள் பிறந்த தேதியை மட்டும் எழுதிவிட்டு மற்ற விவரங்களை குறிப்பிடாமல் இருந்தால் உங்கள் ஜாதகத்தை எவ்வாறு கணிக்க இயலும்? ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் நீங்கள் மிகவும் இளகிய மனம் படைத்தவர். எதை எதையோ எண்ணி தேவையில்லாமல் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள். உங்கள் தந்தை வழியில் முன்னோர் சாபம் இருப்பதாகவும், அது மற்ற சித்தப்பாக்கள் குடும்பத்தை விட்டுவிட்டு மூத்தவராகிய உங்கள் தந்தையின் குடும்பத்தை மட்டும் பாதிப்பதாகவும் எழுதியுள்ளீர்கள். நீங்கள் திருமணமாகி வேறு குடும்பத்திற்கு வந்த பின் பிறந்த வீட்டு நிலை குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் புகுந்த வீடு பற்றிய விவரங்களை நீங்கள் எழுதவே இல்லை. இரவு நேரம் என்பது மிகவும் பயத்தைத் தருவதாகச் சொல்லி இருக்கிறீர்கள். தினமும் மாலை நேரத்தில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கு விநாயகப் பெருமானுக்கு சாற்றப்பட்டுள்ள அறுகம்புல்லை பிரசாதமாக வாங்கி வந்து இரவில் உறங்குவதற்கு முன்னதாக தலைமாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். படுப்பதற்கு முன்னதாக கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை 16 முறை சொல்லி விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு விழி மூடி உறங்குங்கள். தினமும் இதே முறையை கடைபிடித்து வாருங்கள். நாட்கள்
செல்லச் செல்ல மனதில் உள்ள பயம் நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

“வக்ரதுண்டாய ஹூம் ஓம் நமா ஹேரம்ப மதமோதித
 மம ஸர்வ ஸங்கடம் நிவாரய நிவாரய நமோ நம:”

?36 வயதாகும் என் மகனுக்கு நல்லபடியாக திருமணம் முடிந்து கடந்த 2020ம் ஆண்டில் பெண் குழந்தையும் பிறந்தது. கணவன், மனைவி இருவரும் மனம் ஒத்துப்போகாமல் அங்கும் இங்குமாக உள்ளனர். அவர்களது மன சங்கடங்கள் நீங்கி ஒற்றுமையாக வாழ பரிகாரம் இருப்பின் கூறவும்.
- ஒரு வாசகர், திருச்சி மாவட்டம்.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில், தற்போது சுக்ர தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சந்திரன் ஆட்சி பலம் பெற்றிருப்பதால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. மருமகள் பூராடம் நட்சத்திரம், தனுசு ராசியில் பிறந்திருக்கிறார். சஷ்டாஷ்டகம் என்பது இருந்தாலும் இது அனுகூலமாகவே உள்ளது. கடக ராசிக்கும், தனுசு ராசிக்கும் வசியம் என்பது உண்டு என்பதால், அவர்களுக்குள் உண்டாகியிருக்கும் இந்த கருத்து வேறுபாடு என்பது தற்காலிகமானதே. உங்கள் மகனின் ஒரு சில செயல்பாடுகள் மருமகளின் மனதிற்கு ஒத்துப்போகவில்லை. இந்த உண்மையை உங்கள் மகன் வெகுவிரைவில் புரிந்து கொள்வார். தம்பதியருக்கு இடையே தனிப்பட்ட முறையில் உண்டாகியிருக்கும் பிரச்னையில், பெரியவர்கள் உள்நுழைந்து பெரிதாக்க வேண்டாம். அவர்களாகவே புரிந்துகொண்டு ஒன்றிணைந்து விடுவார்கள். பேத்தி புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர், வளர வளர பெற்றோருக்கிடையே இருக்கும் மனஸ்தாபம் முற்றிலுமாக காணாமல் போகும். பிரதி வெள்ளிக்கிழமை தோறும் உங்கள் மகனின் கரங்களால் ஆதரவற்ற நிலையில் இருக்கும் வறியவர்களுக்கு அன்னதானம் செய்யச் சொல்லுங்கள். இயன்ற அளவில் எளிய முறையில் செய்தால் போதும். 9.2.2023 முதல் தம்பதியர் இருவருக்குமிடையே எந்தவித கருத்து வேறுபாடும் உண்டாகாது. சகலவிதமான சம்பத்துக்களுடன் அவர்கள் இருவரும் ஒற்றுமையாக வாழ்வதை கண்கூடாகக் காண்பீர்கள்.

?ஜாதகத்தில் உள்ள தோஷத்தினை அறிந்து பல்வேறு பரிகாரங்கள் செய்தபின் மகளின் திருமணம் நடந்தது. இருவரும் தம்பதியராக வாழவில்லை என்பதையும், மருமகன் குறை உள்ளவர் என்பதையும் பத்து மாதங்கள் கழித்துத்தான் அறிந்தோம். எங்கள் வறுமையை பயன்படுத்தி, பிள்ளை அரசுப்பணியில் உள்ளார் என ஆசைகாட்டி வற்புறுத்தி மணம் முடித்தனர். தற்போது, உண்மை தெரிந்ததும் வீண்பழி சுமத்தி பெண்ணை எங்கள் வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி விட்டார்கள். என் மகளுக்கு தாலி பாக்கியம் உள்ளதா? உரிய பரிகாரம் கூறுங்கள்.
- கமலா, திருவள்ளூர்.

    மிக நீண்ட கடிதத்தை எழுதியிருக்கிறீர்கள். அதில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக மகளின் திருமணத்திற்கு வாங்கிய கடனை முழுமையாக பைசல் செய்து முடித்த பின்பு நீங்களும் உங்கள் கணவரும் உயிரை மாய்த்துக் கொள்ள குலதெய்வத்தின் முன்பு சத்தியம் செய்திருப்பதாக எழுதியுள்ளீர்கள். இது என்ன கொடுமை? உங்களுடைய முதுமையும், வறுமையும் இவ்வாறு உங்களை முடிவெடுக்க வைத்திருக்கிறது. அதிலும், தற்போது மகளையும் உங்களுடன் அழைத்துச் சென்றுவிடலாமா என்று யோசிப்பதாக எழுதியிருப்பது மேலும் அதிர்ச்சியைத் தருகிறது. இறைவன் தந்த உயிரை மாய்த்துக் கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. நம்மை படைத்த இறைவனுக்கு தெரியும். நம்மை எப்பொழுது மீண்டும் திரும்ப அழைத்துக் கொள்ளவேண்டும் என்பது. அதுவரை, ‘‘பூர்வ ஜென்ம கர்மா” என்பதை அனுபவித்துத்தான் தீர வேண்டும். உயிரை மாய்த்துக் கொள்வதால் மட்டும் கர்மவினை என்பது தீர்ந்து விடாது. இனிமேலாவது இதுபோன்று அசட்டுத்தனமாக யோசிக்காமல் இவ்வுலக வாழ்வில் உள்ள போராட்டங்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் செவ்வாய், சனி, கேது ஆகியோரின் இணைவு கடுமையான பிரச்னையைத் தோற்றுவித்திருக்கிறது. அத்துடன், மாங்கல்ய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், புதன் ஆகியோரின் இணைவும் சிரமத்தையே தருகிறது. அவருடைய ஜாதக பலத்தின்படி மணவாழ்வு என்பது அத்தனை சிறப்பாக இல்லை. அவருக்கு மறுமணம் செய்வது குறித்து யோசிக்க வேண்டாம். அதே நேரத்தில், ஒன்பதில் சுக்கிரனின் ஆட்சி பலமும், நான்காம் வீட்டில் குருவின் ஆட்சி பலமும் அவர் சுகவாசியாக வாழ்வதற்கு துணைபுரியும். உங்களுக்குப் பிறகு அவர் காலம் முழுவதும் தனது அடிப்படை தேவைகளுக்கு அடுத்தவர்களை சார்ந்திருக்காமல் வாழ்வதற்கு உரிய ஏற்பாட்டினை பெற்றோராகிய நீங்கள் செய்து வைப்பீர்கள். சிறிது காலம் பொறுத்திருங்கள். 28.12.2022 வாக்கில், உங்கள் பிரச்னைக்கான தீர்வு என்பது கிடைத்துவிடும். தொடர்ந்து குலதெய்வ வழிபாட்டினை தவறாமல் செய்து வாருங்கள். செவ்வாய்க்கிழமை தோறும் கந்தசஷ்டி கவசம் படித்து வருவதோடு முருகப்பெருமானிடம் மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். முடிந்தால் தைப்பூச நாளில் அருகிலுள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்கு காவடி சுமந்து சென்று வழிபடுங்கள். இறைவனின் அருளால் உங்கள் பிரச்னைகள் தீரும்.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்