SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனுமனின் ஆலயங்கள்

2022-01-04@ 12:40:08

கூடுவாஞ்சேரி, சென்னை தாம்பரத்தை அடுத்து, செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது கல்யாண ஆஞ்சநேயர் திருக்கோயில். பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலம், இடது கையை இடுப்பில் வைத்திருக்க, வலது கையில் கதை வைத்த நிலையில் காட்சி தருகிறார் ஜெயவீர ஆஞ்சநேயர்.மூலவரான இவர் சதுர்புஜங்களுடன் சங்கு சக்கரமும் தாங்கி, சூரிய புத்திரியான ஸுவர்ச்சலா தேவியுடனும் காட்சி தருகிறார். இவரின் திருநாமம் கல்யாண ஆஞ்சநேயர். சீதா பிராட்டி யைத் தேடிச்சென்ற அனுமன், இராவணனது தர்பாரில் மிக கம்பீரமாக அவனுடன் வாதிடும்

அனுமனின் திருக்கோலத்தை பிரசித்தி பெற்ற கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் தரிசிக்கலாம். பெங்களூர் மகாலட்சுமிபுரத்தில் 22 அடி உயர பிரசன்ன வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. சிறுகுன்றின் மீது ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கி யுள்ளார். இவருக்கு நேர் எதிரில் கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. ஆஞ்சநேயரின் வலதுகையில் சஞ்சீவி மலையும், இடது கையில் கதாயுதமும் கொண்டுள்ளார். இங்குள்ள சந்நதியை வலமாகச் சுற்றி வரும் போது அஷ்டலட்சுமிகளும், இடமாக சுற்றி வரும்போது அஷ்ட விநாயகர்களும் அமைந்திருப்பது மிகவும் சிறப்புக்குரியது.

காஞ்சியிலிருந்து கலவை செல்லும் வழியில் உள்ள ஊர் ஐயங்கார் குளம். இங்குள்ள அனுமன் ஆலயம் லட்சுமி குமார தாத்தாச்சாரியார் என்பவரால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு 136 ஏக்கர் பரப்பளவில் ஒரு குளம் உள்ளது. அதன் தென்புறத்தில் நீராழி மண்டபம் போல் அழகாக அமைந்துள்ளது அனுமன் கோயில். ஒரே கல்லில் வடிக்கப்பட்ட தூண்கள், நாற்புறமும் கோபுரங்கள், நீண்ட மண்டபம், உட்பிராகாரம் என அமைந்துள்ளது. கருவறையில் கை கூப்பியவராக அருள்புரிகிறார் ஆஞ்சநேயர். மதுரை உசிலம்பட்டி சாலையில் ஆனையூர் உள்ளது. இந்த ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலில், ஆஞ்சநேயரின் தாயாரான அஞ்சனா தேவிக்குத் தனிச்சந்நதி உள்ளது. அஞ்சனா தேவியின் வலப்புறம் குழந்தை வடிவில் ஆஞ்சநேயரும், இடப்புறம் ஒரு பெண்ணும் காட்சியளிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் உள்ளது முடியனூர் கிராமம். இங்கே அனந்தவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது.  இக்கோயிலில், உள்ள ஆஞ்சநேயர் தம் கால்களை கல்லால் ஆன சங்கிலியால் கட்டிக்கொண்டிருக்கிறார். ராமாவதாரம் முடிந்து ராமர் வைகுண்டம் புறப்பட்டபோது அனுமனை அழைக்க, அனுமன் போக மறுத்துவிட்டு, பூமியிலேயே இருக்க விரும்பி தன்கால்களை சங்கிலியால் கட்டிக்கொண்டானாம்.
108 வைணவ திவ்ய தேசங்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது ரங்கம் அரங்கநாதர் கோயில். கோயில் வெளிப்புறத்தில் ‘பக்த ஆஞ்சநேயர்’ நெடிய உருவத்துடன் விஸ்வ ரூபியாக காட்சி தருகிறார். இவர் சந்நதியில்தான் புகழ் பெற்ற திருப்பாணாழ்வருக்கும் சந்நதி இருக்கிறது.

ஆதிக்கு (முதலுக்கு) பிள்ளையார், அந்தத்திற்கு (முடிவுக்கு) அனுமன். இவர்கள் இருவரும் இணைந்த வடிவமே ‘ஆதியந்தப் பிரபு’. அர்த்தநாரீஸ்வர வடிவம் போல, சங்கர நாராயணர் வடிவம்போல இரட்டைக் கடவுள்கள் இணைந்த வடிவம் இது. இந்த வடிவத்தைச் சென்னை அடையாறு மத்திய கைலாச ஆலயத்திலும், சேலம் கந்தகிரி ஆலயத்திலும் வணங்கி வழிபடலாம். அலகாபாத், பிரயாகையின் கரையில் பெரிய ஆஞ்சநேயர் கோயிலைக் காணலாம். அவர் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். ஒரு தோளில் ராம-லட்சுமணரும் மற்றொரு கையில் கதாயுதமும் ஏந்திப் படுத்திருக்கிறார். காலடியில் மயில்ராவனின் உருவம் இருக்கிறது. போரிட்ட களைப்பில் ஆஞ்சநேயர் படுத்து இளைப்பாறும் கோலம் இது என்கிறார்கள். உடல் முழுவதும் சிந்தூரப் பொடி போட்ட அலங்காரக் கோலத்தில் இருக்கிறார். காசி மாநகரில் உள்ள ‘அனுமன் காட்டி’லிருந்து காசி இந்து பல்கலைக்கழகத்துக்குச்செல்லும் வழியில் ‘சங்கட் நிவாரண ஆஞ்சநேயர் ஆலயம்’ உள்ளது. இங்கே முழுக்க முழுக்க செந்தூர வர்ணம் பூசிய ஆஞ்சநேயர்
வடிவத்தை வழிபடுகிறார்கள்.

எதிரே ராமர்-சீதை ஆலயமும் உள்ளது. கேரளம் திரூர் தாலுக்காவில் உள்ள ஆலத்தியூர் என்னும் ஊரில் கீர்த்தி வாய்ந்த  அனுமன் கோயில் உள்ளது. இங்கே சந்நதியில் ராமபிரான் சீதையில்லாமல் அனுமனுடன் இருக்கிறார். சீதையைத்தேடிச்செல்லும் அனுமனுக்கு, அவளிடம் சொல்ல வேண்டியவைகளை சொல்லிக்கொடுக்கும் பாவத்தில் இருக்கிறார் ராமர். இங்கே பெரிய அளவில் அவல் நைவேத்தியம் தயாரிக்கப் படுகிறது. அதில் தேங்காய், வெல்லம், சர்க்கரை, சுக்கு, சீரகம் போன்றவையும் உரிய விகிதத்தில் கலந்து தயாரிக்கிறார்கள். இதுவே பக்தர்களுக்கும் பிரசாதம்.ஷீரடி செல்லும் பக்தர்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய இடம் பாபாவின் சமாதிக் கோயில். இந்த சமாதி மந்திர் ஷீரடியில் வணக்கத்துக்குரிய முக்கியமான இந்த இடத்துக்குப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருகிறார்கள். ஷீரடி சாவடிக்குப் பின்னால் அனுமன் கோயில் உள்ளது. கருவறையில் இரண்டு ஆஞ்சநேயர் சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள பாபா படமும் செந்தூர வண்ண அனுமன் மூர்த்தங்களும் பக்தர்களுக்கு அளவில்லாத ஆனந்தத்தையும், ஆன்மிக சக்தியையும் வழங்குகிறது.

சென்னை ஸ்கந்தாஸ்ரமத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் 12 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் கல் விக்கிரகமாக காட்சி தருகிறார். வாயு மூலையை அலங்கரிக்கிறார். இவரை வலம் வரும்போது கோஷ்டத்தில் பக்த ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர் ஆகிய சுதையான வடிவங்கள் காட்சியளிக்கின்றன. கர்நாடகா, பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ளது மிகப்பழமை வாய்ந்த சத்தியநாராயணர் திருக்கோயில். இங்கே வீர ஆஞ்சநேயர் அபய ஹஸ்தம் காட்டி அழகிய கோலத்தில் தனிச்சந்நதி கொண்டு அருட்பாலிக்கிறார். இவருக்கு அபிஷேக அலங்காரங்களும், வடைமாலை சாற்றுதல், வெண்ணெய்க்காப்பு செய்தல் போன்றவைகள் தினமும் நடந்த வண்ணமிருக்கின்றன. எப்போதும் பக்தர் கூட்டம் நிரம்பி வழிகிறது.

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ளது கருமாரி திரிபுர சுந்தரி அம்பாள் திருக்கோயில். இங்கே பல மூர்த்திகளின் சந்நதிகள் உண்டு என்றாலும், இந்தக்கோயிலின் பிரதான நாயகன் அனுமன்தான்! சஞ்சீவி வீர சாந்த ஆஞ்சநேயர் என்ற திருநாமம் கொண்டிருக்கிறார். அனுமத் ஜெயந்தியன்று இவருக்கு 1,00,008 வடையால் பிரம்மாண்ட மாலை செய்து வழிபடுகிறார்கள். சிறந்த வரப்பிரசாதியாக விளங்குகிறார்.
முஷ்ணம் திருத்தலத்தில் அமர்ந்த கோலத்தில் ராமாயணத்தைப் பாராயணம் செய்யும் நிலையில் தனிச்சந்நதி கொண்டு காட்சி தருகிறார் அனுமன்! அருகில் ராமர் பட்டாபிஷேகம் கொண்ட கோலத்தில் உள்ளார்.

வேலூருக்கு அருகில் உள்ளது ராணிப்பேட்டை. இங்கிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது தெங்கால் என்ற ஊர். இங்குள்ள சிவாலயத்தில் நான்கு திருக்கரங்களுடன் மான், மழு ஏந்தியவாறு சிவசொரூபமாக காட்சி தருகிறார். இவரை ‘சிவசொரூப ஆஞ்சநேயர்’ என போற்றுகிறார்கள். இவர் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். இப்படியொரு அனுமன் தோற்றம் வேறெங்கும் இல்லை.தஞ்சாவூரின் மேல வீதியில் அமைந்துள்ளது ‘பிரதாப ஆஞ்சநேயர் கோயில்’. மராட்டிய மன்னன் பிரதாப சிம்மனால் கட்டப்பட்டது.  இவர் வாயு மூலையில் கோயில் கொண்டிருப்பதால் ‘மூலை அனுமார்’ எனப்படுகிறார். இங்குள்ள ஆலயத்தூணில், யோக ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இவரை வணங்கி விட்டுத்தான் மராட்டிய மன்னர்கள் போருக்குச் சென்றனராம்.சென்னை வில்லிவாக்கத்தில் கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்தில் ‘இரட்டை ஆஞ்சநேயர்கள்’ அருள்கின்றனர். 300 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் தனிச்சந்நதியில் வாலில் மணியுடன் காட்சி தருகிறார் அழகு ஆஞ்சநேயர்.

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது குடுமியான் மலை. இங்கு12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவாலயம் உள்ளது. இங்கு அழகான ஆஞ்சநேயர், தலையில் கிரீடம், முறுக்கு மீசை, வில் போன்று வளைந்த புருவங்கள், கழுத்தில் விநோதமான மாலை, காலைச்சுற்றியிருக்கும் வால் என்று நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த வீர அனுமன் சிற்பம் அரிதான ஒன்று!திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் 8ம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது. இங்கு ராமதூத அனுமன் காட்சியளிக்கும் சிற்பம் உள்ளது. தூதனாக வந்த தனக்கு இருக்கை அளிக்காத ராவணன் எதிரில் தனது வாலையே சுருட்டி ஆசனமாக்கி அமர்ந்த நிலையில் அற்புத கோலத்தில் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர்.சென்னை அம்பத்தூரில், டன்லப் கம்பெனிக்கு பின்புறம் உள்ளது ஐயப்பா நகர். அயப்பாக்கத்தில் கோயில் கொண்டு அருட்புரிகிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். வராஹர்,

கருடர், ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்ரீவர் என்று ஐந்து முகங்களுடன், பத்து கரங்கள் கொண்டு அற்புத திருக்கோலத்தில் காட்சி தருகிறார். திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள பெரணமல்லூர் என்ற ஊரில் உள்ள சிறு குன்றின் மீது குடியிருந்து அருட்பாலிக்கிறார் வரத ஆஞ்சநேயர். இங்கு வரும் எண்ணற்ற பக்தர் கிரிவலம் வந்து வரத ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர்.தாமிரபரணி நதி வடக்கில் இருந்து தெற்காகப் பாயும் தட்சிண கங்கைக்கு அருகில் தெய்வச்செயல்புரம் என்னும் தலத்தில் அருமையாகக் குடிகொண்டு அருளாட்சி புரிந்து வருகிறார் ‘விஸ்வரூப சுந்தர வரத ஆஞ்சநேயர்’ சுமார் 5 அடி உயரத்தில் சாளக்கிராமத் திருமேனியராக விஸ்வரூபம் எடுத்து நின்றபடி அருட்பாலிக்கிறார். இதையடுத்து மூலவர் சந்நதிக்கு மேல் சுமார் 77 அடி உயரத்தில் மற்றொரு அனுமனும் காட்சி தருகிறார்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மேற்கு வாசல் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஒரு அனுமன் கோயில். வால் இல்லாமல் கூப்பிய கரங்களுடன் அருள்கிறார் மூலவர் அனுமன். அருகில் அத்தி மரத்தில் உருவாக்கப்பட்ட அனுமன் அபய ஹஸ்த கோலத்தில் அருள்புரிகிறார். இக்கோயிலுக்குப் பின்புறம் ஆஞ்சநேயர் தீர்த்தம் வளாகத்தில் கடல் மணலால் ஆன சுயம்பு அனுமனையும்தரிசிக்கலாம் ஒரே கோயில் மூன்று அனுமன்கள்.கர்நாடகாவில் உள்ள சிருங்கேரியின் மேற்கு எல்லையில் 1200 வருடங்களுக்குமுன் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிருங்
கேரியின் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் ‘கெரே ஆஞ்சநேயர்’ எண்ணற்ற பக்தர்களின் ஆராதனை தெய்வமாக விளங்கி வருகிறார். ராமபிரானின் வழிபாட்டிற்காகத் திருநள்ளாறு திருத்தலத்திலிருந்துதர்பைப்புல் எடுத்து வரும்போது அனுமன் அமர்ந்து இளைப்பாறிய இடம் அனுமந்தக்குடி. அனுமன் அமர்ந்த குடி என்பது அனுமந்தக்குடி ஆகிவிட்டது.

இங்குள்ள சிவன் கோயிலில், ஆஞ்சநேயருக்கு தனிச்சந்நதி உள்ளது. சென்னைக்கு அருகில்  திருவள்ளூர் பெரிய குப்பம் கிராமத்தில் பிரம்மாண்ட உருவில் பஞ்சமுக அனுமன் அருள்பாலித்து வருகிறார். இவர் விஸ்வரூப பஞ்சமுகர் எனப்படுகிறார். இவரது உயரம் 32 அடி ஆகம சாஸ்திரப்படி அல்லாமல் மந்திர சாஸ்திர அடிப்படையிலேயே இந்தச்சிலை அமையப்பெற்றுள்ளது. பஞ்ச முகங்களின் மூலமந்திரங்கள் அந்தந்த முகங்களுக்கு நேரில் உள்ள சுவரில் முறைப்படி தனித்தனியே எழுதப்பட்டிருக்கின்றன.சென்னை மேற்கு மாம்பலத்தில், வடதிருநள்ளாறு என்றழைக்கப்படும் கோயிலில் சனிபகவான் சந்நதியும், பஞ்சமுக அனுமான் சந்நதியும் அமைந்துள்ளன. வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சுமார் 11 அடியில் ஆஞ்சநேயர் தன் காலில் சனிபகவானை மிதித்த கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். இத்திருக்கோயில், 1489ம் ஆண்டு விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது.தர்மபுரியிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது முத்தம்பட்டி. அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில். இவர் வீரஆஞ்சநேயர் எனப்படுகிறார். அமாவாசை தினங்களில் பெருந்திரளாக
பக்தர்கள் வருகிறார்கள்.


மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • kite_chennai

  மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

 • poland-fish-16

  போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

 • ruto-wins-presidency

  கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

 • ragul-inde-15

  டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

 • independence-15

  75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்