SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்மிக அமுதத் துளி-2

2021-12-29@ 13:39:21

புள்ளியியல் கணக்குகளும், இயற்பியல், கணிதக் கணக்குகளும் வாழ்க்கைக்கான கணக்கு என்ன என்பதை கணக்கிட்டுத் தந்து விடுவதில்லை. ஆன்மிகம் அல்லது பக்தி நெறிகளும், வேதாந்த, தத்துவச் சாரங்களும் மட்டும் வாழ்க்கையின் பாவ புண்ணியக் கணக்குகளை பட்டியலிடுகின்றன. இந்த பட்டியலை சற்றே மெய்ப்பு நோக்கத் தெரிந்த மனிதர்கள் தங்கள் அந்திமக் காலத்தில் மகிழ்ச்சியை பரிபூர்ணமாக உணர்ந்து நிம்மதியாக இருக்கின்றனர். தாகமெடுத்துத் தத்தளிக்கும் பறவைக்கு வானிலிருந்து விழும் ஆகாய கங்கைத் துளி அமிர்தமாக மாறிவிடுவது போன்றே பிறவிக் கடலை நீந்திக் கரையேறத் தெரியாமல் தவிக்கும் ஆத்மாவிற்கான அமுதத் துளிகள் அவ்வப்பொழுது எங்கிருந்து ஆகினும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

கண்ணுக்குத் தெரியாத கடவுளா?

குழந்தைகள் தவறு செய்யக் கூடாது என்பதற்காக பெரியவர்கள் சொல்லுகின்ற வழிமொழி ‘தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்’ என்பதுதான். குழந்தைகளும் ஒரு சில காலம் வரை அதனை உண்மை என்றே நம்பி விடுகின்றன. விஷய சுகங்கள் தெரிந்தபின் பெரியவர்கள் கண்ணையே குத்தாத சாமி நம் கண்ணை எங்கே குத்தப் போகிறது என அசட்டையாக இருக்கப் பழகி விடுகின்றன.

பிறகு வரும் நாட்களில் கடவுள் கண்ணுக்குத் தெரியவே மாட்டான் என்பதில் உறுதியாகி விடுகின்றன. தப்பும் செய்து விட்டு அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்கின்ற தவறான வழிகளையும் கற்றுக் கொண்டதன் விளைவுதான் சிற்சில இடங்களில் மனதிற்குக் கவலை தரும் சம்பவங்கள் நடக்கின்றன. மனிதனே தெய்வமாக மாறுவதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைப்பதுடன் பெரியவர்களும் உணர்ந்து கொள்ளுதலே கடவுளை கண்ணுக்குத் தெரிய வைக்கும் வழிகாட்டுதல் ஆகும். முகம் தெரியாத மஹிசாவின் கவிதை இதனை ஓரளவு சுட்டிக் காட்டவே செய்கிறது.

உயரப் பறப்பது என்ற தாகத்தில்
உந்திபற என்றேன்,
உதவிக்கரம் நீண்டது…
பறக்கும் போதுதான் தெரிந்தது
வானில் பறப்பது எளிதல்ல…
எதுவு மற்ற பிரபஞ்ச வெளிக்கு
ஏகினேன் எளிதென்று.
சஞ்சரித்த பிறகு புரிந்தது
அதுவும் எளிதல்ல
என்று…
கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம்
கேட்டேன் எது எளிது என்று?!
எதிரில் நின்று
சொன்னான் நல்ல
மனிதனாக மாறுவது எளிது என்று.

நல்ல மனிதனாக மாற வேண்டும் எனில் பிராயச்சித்தங்கள் வேண்டியது இல்லை. நல்லவகைளை மட்டும் செய்து வந்தால் போதுமானது. நல்லது எது என்பதனையும் நமது இலக்கியங்கள் சொல்லி வைத்து உள்ளது. இதனை இளையவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கற்றுத் தரவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கும் காலகட்டம் இது.நீர் மேல் எழுத்துமுருகப் பெருமானின் திருவருளால் பேசும் திறமை பெற்று கந்தர் கலிவெண்பா, முத்துக்குமாரசுவாமிக்கும் மதுரை மீனாட்சிக்கும் பிள்ளைத் தமிழும், சகலகலாவல்லிமாலை சரஸ்வதிக்கும் பாடிய ஞானியார் குமரகுருபரசுவாமிகள் பாடியது நீதிநெறி விளக்கம் ஆகும். 102 பாடல்கள் காப்பு பாடலுடன் சேர்த்து பாடியிருக்கிறார்.

கல்வியின் பெருமை, ஈகை, வாழ்தலின் மேன்மை போன்றவை உள்ளடக்கமாகும். இதில் காப்பு பாடல் ஒன்றே நமக்கு வாழ்க்கைக்கான சூட்சுமத்தை உணர வைத்து விடுகிறது. நம்மவர்களே! நீங்கள் சிற்றம்பலத்து நடனம் கண்டும் சிவபெருமானை நினைத்துக் கொண்டே இருங்கள். ஏனெனில் இளமையும் அழகும் நீரிலே எழுகின்ற நீர்க்குமிழி போன்றது. எழுந்த வேகத்தில் மறைந்துவிடும். உங்களிடம் இருக்கின்ற செல்வம் எப்படிப்பட்டது என்றால் கடல் அலைகள் போன்றது.

வேகமாகவும், உயரமாகவும் வரும். வந்து பின் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே சென்று விடும். அதனை விட முக்கியமானது ஒன்று உண்டு ஆன்மாவைத் தாங்கி நிற்கின்ற இந்த உடல் நீரின் மேல்
எழுதிய எழுத்தைப் போன்றது. நிலையில்லாதது. ஆகவே நீங்கள் எப்பொழுதும் சிற்றம்பலத்து ஆடுகின்ற எம்பெருமான் திருப்பாதங்களை நினைத்துக் கொண்டிருங்கள் என்பது காப்புப் பாடலின் அழகிய ஆழமான கருத்து ஆகும். உண்மைதானே வாழ்க்கையின் நிலையாமை புரிய வருகின்ற பொழுது தவறு செய்வதற்கும் பயம் வரத்தானே செய்யும். தன்னுடைய மனசாட்சிக்கு பயப்பட ஆரம்பிப்பான் மனிதன். நல்லது செய்ய வேண்டும் என உயரிய எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிடும்.குமரகுருபரரின் பாடலைப் பார்ப்போம்.

நீரில் குமிழ் இளமை நிறை செல்வம்
நீரில் சுருட்டு நெடுந்திரைகள்-நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்காள் எள்னே
வழுத்தாத எம்பிரான் மன்று.

நிலையில்லாத இந்த உடல் அழிந்து விடும் என்பதை உறுதியுடன் சொல்லி ஒன்று மட்டும் அழியாது என்கிறார். அறம், பொருள், இன்பம், வீடு பெறுதலுக்கான ஆத்ம பலத்தைத் தருவது அப்பழுக்கற்ற கல்விதான் என்பது இவர் வாக்கு.அழியாதது எது?

குமரகுருபரர் கூறுகின்ற அப்பழுக்கற்ற கல்வி உண்மையும், நேர்மையுமே! நாம் கலைமகளின் அருளால் கல்வி கற்பதன் மூலமாக நமது உடம்பும் கல்வியும் அழியாமல் இருந்து விடுமா? உடம்பு அழிந்துவிடும் என்பதனை உறுதியாகக் கொண்டாலும் வாங்கிய கல்விப்பட்டங்கள் நமக்குப் பின் நிலைத்து நிற்பதற்கான வாய்ப்பு எப்படி இருக்கக்கூடும்? இவை செல்வத்தை அதிகப்படுத்துவதற்கான வழியாகவும், வாழ்வின் நித்திய செலவுகளுக்கான ஆதாரமாகவும் மட்டுமே விளங்க முடியும்.

ஆக கல்வி என்பது நாம் கற்றுக் கொண்ட தன் மூலமாக யாதொரு தீங்கும் செய்யாது. முடிந்த அளவு நல்லவைகளையும், உண்மையையும் கடைபிடிப்பது என்று இருந்தால் அதுவே புகழாகும். இத்தகைய புகழுடம்பைத்தான் நமது ஆன்மீக அருளாளர்களும், மகா முனிவர்களும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். பிரம்மன் படைத்த எலும்பும் சதையுமான உடல் அழியும். நல்லவைகளால் மெருகேறியதால் அந்த ஆன்மா அழியாது இருந்து பரம் பொருளின் அணுக்கத் தோழமையாகி விடும். பின் அந்தப் புகழுடம்புக்கு அழிவு ஏது?

கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
மலரவன் உண்டமிழ் ஒர்க கொவ்வான்-மலரவன் செயி
வெற்றுடம்பு மாய்வன போன் மாயா புகழ்கொண்டு
மற்றவர் செய்யும் உடம்பு

தான்கற்ற கல்வியால் வாழ்க்கையின் உண்மைத் தன்மையை அறியக் கற்றுக் கொடுக்கின்ற அந்த தமிழ்ப் படைப்புகள் வாழும் அதுவே
புகழுடம்பு என்பது குமரகுருபரரின் வாக்கு. இது அவர் தமிழ் மேல் கொண்ட பற்றைக் காட்டுகின்றது. எதனைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கும் முறைமையாகும். இதனையே வேதங்களும், இதிகாசங்களும் கற்றுத் தருகின்றன.

நல்ல சொல் தருகஒருவர்க்கு உதவுவது என்பது பணம் வழியாக மட்டு மல்லாது. அவர்கள் துன்பப்படும் போது ஆறுதல் சொல் கூறலாம். அந்த இனிய சொல்லே அவர்களுக்கு மருந்தாகும். இனியன சொல்லுதல் பற்றி திருவள்ளுவர் குறளுரைத்திருக்கின்றார். திருமூலர் ‘யாவர்க்கு மாம் பிறர்க்கு இன்னுரைதானே’ என்றும் மந்திரம் சொல்லுகின்றார். ஆக கடுமையான சொற்களைப் பேசுவதால், மற்றவர்கள் மனம் புண்படும். ‘எள்ளி நகையாடல், கிண்டல், இவையும் கூடாது.

இதமான இனிய சொற்களுடன் உரையாடுதலே இறைவன் பக்கம் செல்லுகின்ற வழியும் ஆகும். சிலருக்கு அவர்கள் செய்த பாவத்தின் விளைவாக நல்ல இனிய சொற்களும் நாவிலிருந்து வராமல் போய்விடுகிறது. இது கொடுமையிலும் கொடுமை என்கிறார் குமரகுருபரர். ஆக நமது வாயிலிருந்து நல்ல சொல் வர வேண்டும் என்றால் தீயவகைளைப் பற்றிய சிந்தனை இருத்தல் கூடாது.

இதனையே மகாகவி பாரதியார் ‘வாக்கின்லே இனிமை
வேண்டும், நினைவு நல்லது வேண்டும்:
நல்லவே எண்ணல் வேண்டும்’ என்று பாடினார்.
மேற்கூறிய கருத்துக்களை எல்லாம் குமர
குருபரரின் நீதிநெறி விளக்கம் சொல்கிறது.

ஈகை அரிதென்னும் இன் சொலினும் நல்கூர்தல்
ஓ... ஒ... கொடிது கொடிதம்மா - நாகொன்று
தீவினைக் கம்மியனால் வாய்ப் பூட்டிடப் படின் மற்று
ஆவா இவர் என் செய்வார்?
இன் சொல் வராததற்குக் காரணம் அவர் தீவினைதான்.
ஊழ்வலியால் வந்த பழி:

நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயும்
செந்நெறிச் செல்வாரின் கீழல்லர்-
முன்னைத் தம்
ஊழ்வலி உன்னிப் பழி நாணி உள்ளுடைவார்
தீய செயினும் சில.

தங்களது முன் வினையாலும், இப்பிறவி வினையாலும் தீய காரியங்களும் செய்ய நேர்ந்து விடுகிறது. ஏதோ ஒரு வினாடி நேரத்திலாவது இந்தப் பழிக்கு அஞ்சுவாராயின் அதுவே
பின்னர் தொடர்வதால் அவர்களால் நிச்சயமாக அடுத்து வரும் நாட்களில் தீயவை செய்ய இயலாது. நல்லதையே செய்ய நினைப்பர். பிறகு அவர்கள் மேன் மக்களே. எனவே தவறுகள்
செய்தல் மனித இயல்பு. அத்தகைய தவறு களிலிருந்து விடுபட்டு நன்மார்க்கத்தைத் தேடிப் போவதற்கான அமுதத் துளிகள்தான் கடைத்தேறி தெய்வீகம் தோன்றும் தாகத்திற்கான
அருமருந்தாகும்.

(தொடரும்)

மகேஸ்வரி சற்குரு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shooting-russia-school-26

  ரஷ்யாவில் பள்ளி வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!!

 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

 • iran_ladies

  ஈரானில் கொடூரம்: ஹிஜாப் சரியாக அணியாத பெண்ணை அடித்துக்கொன்ற போலீஸ்... முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்