ஆடுகின்றானடி தில்லையிலே!
2021-12-29@ 13:38:12

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன்-79
இவ்வுலகில் மானிடப் பிறப்பு எய்திய நமக்கெல்லாம் உதிக்கின்ற ஒவ்வொரு நாளும் பரம் பொருளால் அளிக்கப்படும் பரிசளிப்பு என்று பரிபூரணமாக உணர்ந்து ஆனந்த மயமாக இவ்வுலக வாழ்வை அனுபவிக்க வேண்டும்.நேற்றைய கவலைகளிலும், நிராசைகளிலுமே மனம் வெம்பிவிடாமல், நாளைய பொழுது எவ்வாறிருக்குமோ என்ற கவலைகளிலேயே காணாமற் போய்
விடாமல் அன்றன்று வழங்கப்பட்ட நேரத்தை ஆனந்தமாக அனுபவித்து பணிபுரிவதே நம் கொள்கையாக இருக்க வேண்டும்.
‘உறங்குவது போலும் சாக்காடு
உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு’
என்கிறார் திருவள்ளுவர்.
அப்படியென்றால் என்ன பொருள்?
ஒவ்வொரு நாளும் புதிதாக நாம் பிறக்கின்றோம்! அனைவரும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஆடிப்பாடிக் கூடி மகிழ்ந்து கொண்டாடுகிறோம் அல்லவா!
அவ்விதமே வழங்கபட்ட ஒவ்வொரு தினத்தையுமே பிறந்த நாளாகப் பாவித்து இன்பமாக இருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.
‘இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை’
‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!
எங்கள் இறைவா!’
ஆடுவதும் பாடுவதும் ஆனந்தமாக
உன்னைத்
தேடுவதும் நின் அடியார் செய்கை
பராபரமே
என்று ஆன்றோர்கள் பாடுகின்றனர்.
ஆனந்தமாக விளங்கு
வதின் அவசியத்தையே நடராஜதத்துவம் நமக்கு உணர்த்துகின்றது.
பரிபூரண மகிழ்ச்சியின் வெளிப்பாடு நடனம் தானே! துயரம் என்பதே என்ன
என்று அறியாது துள்ளிக் குதித்து சந்தோஷமாகக் காணப்படுவதால்
தானே இளமைப்பருவம் வாழ்வின் இனிமையான காலமாக எல்லோ
ராலுமே கொண்டாடப்படுகிறது?
ஆனந்தத்தை அளிக்காத சமயம்
பயனற்ற சமயம் என்கின்றார் ‘நீட்ஸ்கே’ என்றும் ஜெர்மன் தத்துவஞானி மேலும் அவர் கூறுகிறார்.
‘How Can I Believe in a god who would not dance?
‘ஆடத் தெரியாத கடவுளை நான்
நம்பத்தயாரில்லை’.
இந்து மத மூர்த்திகளின் வடிவம்
எல்லாமே மகிழ்ச்சியை அளிப்பதாகவும்- முழுமையான களிப்பின் வெளிப்பாடாகவுமே விளங்குகின்றன.
‘காணார்க்கும் கண்டவர்க்கும்
களிப்பருளும் களிப்பே’
என்று அருளாளர்கள் சிவபெருமானின் சிறந்த வடிவமான நடராஜ தோற்றத்தைப் போற்றுகின்றனர்.
விநாயகரின் தோற்றமோ பெருத்த வயிறும், கொழுத்த மேனியும், பரந்த செவியும் நீண்ட துதிக்கையுமாக அனைவரையும் மகிழ்விக்கும் அழகிய வடிவமாகக் காட்சி அளிக்கிறது.
குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருமே முதலில் வழிபட்டு தோப்புக்கரணமும், குட்டும் போட்டு பக்திப் பரவசம் மேலிட மகிழ்ச்சியாக அவரைப் போற்றுகின்றனர்.
அவர் இருக்கும் வானுலகம் ‘ஆனந்த புவனம்’ என்றே புராணங்களால் குறிப்பிடப்படுகிறது.
‘ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே’
என்று வாழ்த்தப்பெறும் வடிவேலன் தோற்றமோ குன்றுதோறும்
ஆடும் சண்முகனின் எல்லையற்ற களிப்பையே வெளிப்படுத்துகின்றது.
உவகையின் வெளிப்பாடு உல்லாச நடனம் தானே!
அதனால்தான் வேலவனின் மயில் வாகனம் பக்தர்களால் பெரிதும் நேசிக்கப்படுகிறது.
ஆடும் மயிலைத் திருப்புகழ் அற்புத
மாகப் போற்றுகிறது!
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத்தான
செஞ்சண சேகு தாளத்தோடு நடமாடும்
செஞ்சிறிய கால் விசாலத் தோகை
துங்க அனுகூலப் பார்வை தீர
செம்பொன் மயில் மீதிலே எப்போது வருவாயே!
பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானை ‘ஆனந்தவஸ்து’ என்றே
புகழ்ந்து பட்டமும் அளித்துப் புகழ்கின்றார்.
சத்து : சிவபெருமான்
சித்து : உமா தேவி
இருவர்க்கும் இடையே அமர்ந்துள்ள முருகன் ‘ஆனந்தவஸ்து’ என்கிறார்.
சத்தெனப்படும் தாவில் சிவத்திலும்
சித்தெனப்படும் தேவி இடத்திலும்
புத்திரப்பெயர் பூண்டு இலகும்
‘ஆனந்த வத்து’ வின் கழல் வாழ்த்தி வணங்குவாம்.
நடராஜர், கணபதி, முருகன் போலவே அம்பிகையை
தாயுமானவர் எவ்வாறு துதிக்கின்றார் பாருங்கள்.
அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே!
பின்னையும் கன்னியென மறைபேசும்
ஆனந்த ரூப மயிலே!
சிவ குடும்பம் மகிழ்ச்சிக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்வதைப் போல திருமாலும் பரவசத்தின் பிரதி நிதியாகவே இதிகாசங் களால் சிறப்பிக்கப்படுகின்றார்.
கண்ண பெருமானின் லீலைகளை ஆழ்வார்கள் அனுபவித்து அனுபவித்துப் பாடிய நாலாயிரம் பாடல்கள்தானே திவ்யபிரபந்தம்!‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யாக அல்லவா தரிசனம் தருகின்றார் திருமால்.ஆவிலையில் பாலகனாகத் தன் திருவடித் தாமரையின் சுவையை அவரே அனுபவிக்கும் அழகிய காட்சி ஆனந்தத்தின்
முழுவடிவம்!
ஐயப்பனுக்கோ பேட்டைதுள்ளி ஆரவாரம் செய்து விண்ணதிர பஜனை கோஷம் எழுப்புவது தான் உகந்த வழிபாடாக உள்ளது.ஆஞ்சநேயரின் ஆனந்தக்கூத்தை நாம் அனைவருமே அறிவோம். வடைமாலை, ஜாங்கிரி சாத்துதல், பழவகை அலங்காரங்கள் என ஆனந்தத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றுவிடுகிறது அனுமனின் ஆராதனைகள்.இன்பத்தைக் கற்பிப்பதே இந்து மதத் தெய்வங்களின் இணையற்ற உபதேசமாக இருக்கிறது.
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத்
திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வோம்!
- என்று பாடுகின்றார் மகாகவி.
‘எம்பெருமான் நடம்புரியும் இடம் அன்பர்கள் இதயம்’ என்கின்றார் அருட்
பிரகாசர்.
சிதாகாசத்தில் சிதம்பர நடம்கண்டு மகிழ்வோம்!
(தொடரும்)
திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்
மேலும் செய்திகள்
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் -பாலினும் சொல் இனியாய்
அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்
திருக்குறளில் காதலியின் நெஞ்சம்
வைகாசி மாதச் சிறப்புகள் விசாக நட்சத்திரத்தின் தெய்வீகப் பெருமைகள்!
நெஞ்சம் பயில நினைகின்றிலேன்
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!