SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைதியான இரவு!

2021-12-28@ 13:41:28


கிறிஸ்துமஸ் கேரல் பாடல்களில் உலகப்புகழ் பெற்ற பாடல் ‘அமைதியான இரவு' (Silent Night) என்ற பாடல். இந்தப் பாடல் தோன்றிய விதம் சுவையானது. ஜெர்மனி நாட்டின் சால்ஸ்பர்க் அருகே உள்ள நகரம் ஒபன்டார்ப். இங்கே உள்ள புனித நிகோலாஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக இருந்தவர் ஜோசப் மோர். 1818ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி அந்திமாலையில் இவர் கிறிஸ்துமஸ் திருப்பலி பூசைக்குத் தயாராக கோவிலுக்கு வந்தார். திருப்பலி பூசையில் இன்னிசை அமர்க்களப்பட வேண்டும் என்ற ஆவலுடன் ஆலய ஆர்கன் இசைக்கலைஞர் பிரான்ஸ் குரூப்பரும் அங்கு வந்திருந்தார்.ஆனால், ஆர்மோனியத்தைத் திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. ஆர்மோனியத்தின் பெல்லோசை எலி கடித்துச் சுவைத்திருந்தது. அவ்வளவுதான். இனி ஆலயத் திருப்பலிப் பூசையில் எப்படி இன்னிசையை முழக்கப்போகிறோம் என்ற கவலை அவர்களை ஆட்கொண்டது.

இன்னும் சில மணிநேரத்தில் கிறிஸ்துமஸ் பூசை தொடங்கிவிடும். அதற்குள் ஆர்மோனியத்தை சரிபார்க்க முடியாது. வெளியே பனி கொட்டுவதால் வேறு இடத்தில் இருந்து ஆர்மோனியத்தை வாங்கி வரவும் வாய்ப்பு இல்லை. கிறிஸ்துமஸ் இரவில் ஆர்கன் இசைக்கருவி எல்லோருக்கும் தேவையாயிற்றே. யார் இரவல் கொடுப்பார்கள்?இந்த நிலையில் ஜோசப் மோரின் மனதில் புதிய எண்ணம் எழுந்தது. இன்றைய இரவுத் திருப்பலியில் ஆர்கன் இசைக்கருவி இல்லை என்ற குறையே இல்லாமல் அற்புதமான ஒரு பாடலை இசைக்கவேண்டும். அதன் இனிமையில் மக்கள் மெய்மறக்க வேண்டும். ஆர்கன் ஒலிக்கவில்லை என்ற குறையே அவர்களுக்கு ஏற்படக்கூடாது. ஆர்கன் கருவி பழுதான விவரம் யார் நினைவுக்கும் வரக்கூடாது.

ஜோசப் மோர் ஒரு முடிவு செய்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய ‘சைலன்ட் நைட்’ என்ற பாடலுக்கு, பிரான்ஸ் குரூப்பரின் உதவியுடன் இசைவடிவம் கொடுத்தார். ஒற்றைக் கிடார் கருவியின் உதவியுடன் ஒத்திகை நடந்தது.அன்று நள்ளிரவில் ஆலய மணிகளின் பின்னணி இசையுடன் முதன்முறை இந்தப் பாடல் இசைக்கப்பட்டது. அதன்பிறகு இந்தப் பாடல் ஒலிக்காத கிறிஸ்துமஸே இல்லை என்று கூறி விடலாம். உலகம் முழுவதும் 320 மொழிகளில் இந்தப் பாடல் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.கிறிஸ்துமஸ் பாடல்களின் மன்னன் என்று இந்த ‘சைலன்ட் நைட்’ பாடலைத்தான் குறிப்பிட வேண்டும். கிறிஸ்துமஸ் கேரல் பாடல்களில் கடைசியாகப் பாடப்படும் பாடலும் இதுதான். அதிலும், ஆலயத்தின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இந்தப் பாடலைப் பாடுவது மரபு.

காலங்களைக் கடந்து இன்றும் உலகம் முழுக்க ஒலிக்கிறது இந்த ஒப்பற்ற பாடல்.செம்மார்பு குருவி ஒருமுறை அம்மாவிடம் கதை கேட்டபோது சொன்னது…அது இயேசு பாலன் பிறந்த இரவு. பெத்லகேம் ஊரின் மாட்டுத் தொழுவத்தில் குளிரும் பனியும் கொட்டமடித்துக் கொண்டிருந்தன. குழந்தை இயேசுவுக்கு குளிர் தாக்கிவிடக்கூடாது என்பதற்காக ஜோசப் என்கிற தந்தை சூசைவளன், தொழுவத்தின் ஒரு பகுதியில் கணப்பு நெருப்பை எரிய விட்டார். நேரம் நள்ளிரவை நெருங்கி விட்டது. பாவம். நீண்ட தொலைவு நடந்து வந்த களைப்பால் சூசைவளன் சற்று கண்ணயர்ந்து விட்டார். கணப்பு நெருப்பை அவர் கிளறி விடாததால் அது அணையும் நிலைக்கு வந்து விட்டது.

அப்போது பார்த்து பிரவுன் நிற வண்ணாத்திக்குருவி ஒன்று இயேசு பாலனைத் தரிசிக்க தொழுவத்துக்குள் வந்தது. அங்கு பாலன் குளிரில் சிணுங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது.கணப்பை சற்று கிளறிவிட்டால் இதமான வெப்பம் ஏற்படும் என்பது அந்தக் குருவிக்குத் தெரியும். எனவே கணப்பின் அருகில் பறந்து போய்நின்று தன் சிறகுகளை வீசி அணைந்து கொண்டிருந்த நெருப்பை அது பற்ற வைத்தது. வாவ். நீறுபூத்த நெருப்பு மீண்டும் வீறுகொண்டு எழுந்தது. மாட்டுக் கொட்டகையில் மீண்டும் சுகமான வெப்பம் பிறந்தது. இயேசு பாலன் முகத்தில் இனியதோர் புத்துணர்ச்சி.
இந்த வேளையில் சூசை வளன் விழித்துக் கொண்டார். கணப்பை ஒரு சின்னப்பறவை தன் சிறகால் விசிறி உயிர்பெறச் செய்ததைக் கண்டு நெகிழ்ந்து போனார். அந்தப் பறவையை நெஞ்சார வாழ்த்தினார்.
அவர் வாழ்த்தியதாலும், நெருப்புக்கு மிக அருகில் நின்றதாலும் அந்தப் பறவையின் நெஞ்சுப்பகுதி அன்று முதல் அழகிய சிவப்பு நிறம் பெற்று விட்டது. அன்றுமுதல் தலைமுறை தலைமுறையாக அந்தவகை குருவிகளுக்கு நெஞ்சில் சிவப்புநிறம் நிலைத்து விட்டது. உலகின் அதிகாரபூர்வ கிறிஸ்துமஸ் பறவை இந்த செம்மார்பு வண்ணாத்திக் குருவிதான்.
 
- மோகனரூபன், உவரி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • peru_Clowns Day

  பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

 • yercaussss

  ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

 • america_primery

  அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

 • shortest-man-world-25

  மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

 • modheadd1

  பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்