SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வளமான எதிர்காலம் அமையும்

2021-12-28@ 13:39:30

?என் மகன் பிறந்த எட்டாம் மாதம் போலியோ தாக்கியது. தற்போது பி.எச்டி., முடித்துவிட்டார். 71 வயது ஆகும் எனக்கு வேறு பிள்ளைகள் கிடையாது. என் மகனின் எதிர்காலம் வளமாக அமைய உரிய வழி காட்டுங்கள்.
- பெருமாள், சென்னை.

சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனைப் பற்றி நீங்கள்
கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ என்ற கவிஞரின் வரிகளுக்கு உதாரணமாக விளங்குகிறார் உங்கள் மகன். ஜென்ம லக்னத்திலேயே புதன், சுக்கிரனின் இணைவும் லக்னாதிபதி குரு வித்யா ஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதும் அவரை ஒரு நல்லாசிரியராக உருவகப்படுத்துகிறது. முனைவர் பட்டம் பெற்றிருக்கும் அவர், மேற்கொண்டு கல்லூரியில் பேராசிரியராக பணி செய்யும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பார். அத்துடன் மணவாழ்வு என்பதும் நல்லபடியாக அமையும். உங்கள் உறவு முறையில் சற்று விலகிய சொந்தத்தில் இருந்து பெண் அமைவார். இவர் பிறந்த ஊரான நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் படித்த பெண்ணாகவும் பரந்த மனப்பான்மை உடையவராகவும் இருப்பார். பிரதி சனிக்கிழமை தோறும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் வயதான முதியோருக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்து வாருங்கள். நீங்கள் செய்யும் தானமும் தர்மமும் உங்கள் பிள்ளையின் வளமான எதிர்காலத்திற்கு மிகச்சிறந்த உரமாக அமையும்.

?எனது மகனுக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகிறது. இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது. எதனால் புத்ரபாக்யம் தாமதமாகிறது, அதற்குரிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- அய்யப்பன்,
திருவனந்தபுரம்.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. இருவரின் ஜாதகங்களில் புத்ர பாக்யத்தைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் பாவகம் நன்றாக உள்ளது. பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் நான்கு கிரஹங்களின் இணைவும் ஐந்தாம் பாவக அதிபதி சூரியன் உச்ச பலம் பெற்று ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதும் குழந்தை பாக்கியத்தை உறுதி செய்கிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் ஐந்தாம் பாவக அதிபதி சுக்கிரன் இரண்டாம் வீட்டில் சனியின் இணைவினைப் பெற்றிருந்தாலும் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருக்கும் புத்ர காரகன் குருவின் பார்வை பலம் பிள்ளைப்பேறு பெறும் அம்சத்தைத் தருகிறது. காலம் கடந்து திருமணத்தை நடத்தியிருப்பதால் புத்ர பாக்யம் கிடைப்பதில் தடை உண்டாகி இருக்கிறது. முறையே 44 மற்றும் 41 வயதில் இருக்கும் உங்கள் மகன் மற்றும் மருமகள் இருவரையும் மருத்துவ ஆலோசனை பெற்று அதன்படி நடக்கச் சொல்லுங்கள். வியாழக்கிழமை நாளில் குருவாயூர் திருத்தலத்திற்குச் சென்று குளத்தில் ஸ்நானம் செய்து குருவாயூரப்பனை தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்வது நல்லது. 25.08.2023 வரை மட்டுமே நேரம் நன்றாக உள்ளது. அதற்குள் வம்சம் விருத்தி அடைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் வடக்கு முகமாக நெய்விளக்கு ஏற்றி வைத்து புத்ரகாரகன் ஆகிய குரு பகவானை தியானித்து தம்பதியர் இருவரையும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 16 முறை சொல்லி வணங்கச் சொல்லுங்கள். நல்லது நடக்கும்.
“வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணி
ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்,”

?38 வயதாகும் என் மகனுக்கு கல்யாணம் நடந்து விவாகரத்தும் ஆகிவிட்டது. மீண்டும் திருமண வாழ்க்கை உண்டா? அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- ராமையா, தஞ்சாவூர்.

உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் கேதுவின் அமர்வும் ஏழாம் வீட்டின் அதிபதி குரு வக்ரம் பெற்ற நிலையில் ஆறில் அமர்ந்திருப்பதும் திருமண வாழ்வில் பிரச்சினையைத் தோற்றுவித்திருக்கிறது. தற்போது குரு தசை துவங்கியிருந்தாலும் சனியின் சாரம் பெற்றிருப்பதாலும் அந்த சனியும் வக்ரம் பெற்றிருப்பதாலும் மறுமணம் என்பது அத்தனை எளிதல்ல. அத்துடன் அவரது லக்னம், லக்னத்தில் இடம் பெற்றிருக்கும் சூரியன், ராகு ஆகிய மூன்றும் ஒரே பாதையில் இணைந்திருப்பதும் பிரச்சினையைத் தருகிறது. முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததற்கான காரணத்தை ஆராயுங்கள். உங்கள் மகன் நடந்துகொள்ளும் விதத்தையும் கவனத்தில் கொண்டு மறுமணம் பற்றி சிந்தியுங்கள். ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் ராகுகால வேளையில் திருபுவனம் திருத்தலத்திற்குச் சென்று சரபேஸ்வரரை தரிசித்து மகனின் பெயரில் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிரதி ஞாயிறு தோறும் ராகு கால வேளையில் உங்கள் மகன் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 54 முறை ஜபம் செய்து சரபேஸ்வரரை வணங்கி வருவதாலும்
வாழ்வினில் நல்லது நடக்கக் காண்பார்.
“சாலுவேஸாய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி
தந்ந: சரப: ப்ரசோதயாத்,”

?காதலித்து திருமணம் செய்துகொண்ட என் மகனும் மருமகளும் ஆறு மாதம் பிரிந்து இருக்க முடிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்குள் என்ன மனஸ்தாபம் என்று தெரியவில்லை. திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. நானும் என் கணவரும் மிகுந்த மன வேதனையில் உள்ளோம். தகுந்த பரிகாரம் கூறுங்கள்.
- மலர்விழி, விழுப்புரம்.

உங்கள் மகன் தன்னைவிட இரண்டு வருடம் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். நமது தர்மத்திற்கு மாறான ஒரு செயலைச் செய்யும்போது அதற்குரிய பலனையும் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பயன்? மகனின் ஜாதக விவரத்தை அனுப்பியிருக்கும் நீங்கள் மருமகளின் பிறந்த தேதியை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள். பிறந்த நேரம் இருந்தால்தான் ஜாதகத்தை கணித்து பலன் சொல்ல இயலும். அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருந்தாலும் கேதுவின் சாரத்தில் சஞ்சரிக்கிறார். தாம்பத்யம் பற்றிச் சொல்லும் 12ம் வீட்டின் அதிபதி புதன் வக்ரம் பெற்றிருப்பதும் மூன்றாம் பாவத்தில் சூரியன், சுக்கிரன், சனியின் இணைவும் மணவாழ்வில் பிரச்னையைத் தோற்றுவித்திருக்கிறது.

உங்கள் மகனின் ஜாதகப்படி தவறு என்பது உங்கள் மருமகளிடம் இருப்பதாக தெரியவில்லை. நீங்கள் நேரடியாக உங்கள் மருமகளிடம் பேசிப்பாருங்கள். பிரச்னையைக் கண்டறிந்து பெரியவர்கள் ஆகிய நீங்கள் அதற்குத் தீர்வு காண முயற்சியுங்கள். செவ்வாய்க்கிழமை நாளில் மைலம் திருத்திலத்திற்குச் சென்று முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மகனின் நல்வாழ்வுடன் விரைவில் வம்ச விருத்தி கிடைக்க வேண்டும் என்பது உங்கள் பிரார்த்தனையாக அமையட்டும்.

?எனக்கு தற்போது 55 வயது ஆகிறது. கடந்த 50 ஆண்டுகளாக என் ஒரு காதில் கோளாறு ஏற்பட்டு காதுகேளாமல் ஆகிவிட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக எனக்குள் ஒரு பிரம்மக் குரல் கேட்டுக்கொண்டு இருக்கிறது. அது என்னை பைத்தியம் பிடித்தவன் போல் நடமாட விட்டுவிட்டது. குடும்பமே பிரிந்து செல்லும் நிலை உண்டாகியுள்ளது. அந்த குரல் என்னை கொடூரமாக மிரட்டுகிறது. தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டு கிறது. ஏதாவது பரிகாரம் செய்து இதனை சரி செய்ய முடியுமா? எனக்கு யாருடைய உதவியும் கிடைக்கவில்லை.
- கோபாலகிருஷ்ணன், சேலம்.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது கேது தசையில் சுக்ர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் மூன்றாம் வீட்டில் உண்டாகியிருக்கும் சூரியன்,சனியின் இணைவு காது பகுதியில் பிரச்சினையைத் தந்திருக்கிறது. ஆனால் அதற்கும் தற்போதைய உங்கள் பிரச்னைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. உங்கள் ஜாதகத்தில் சனியின் சாரம் பெற்றிருக்கும் கேது 12ம் வீட்டில் உச்ச பலம் பெற்றிருப்பதும் தற்போது அவருடைய தசையின் காலம் நடந்து வருவதுமே இன்றைய உங்கள் நிலைக்கான காரணம். அத்துடன் ஜென்ம லக்னாதிபதி குரு ஆறாம் வீட்டில் நீசம் பெற்ற ராகுவுடன் இணைந்திருப்பதால் ஆன்மபலம் என்பதும் குறைந்திருக்கிறது. மனதைக் கட்டுப்படுத்த தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்கள்.

சித்தபுருஷர்கள் பற்றிய கதைகளை அவ்வப்போது படித்து வாருங்கள். உங்கள் ஊரில் உள்ள சீலைநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்திருக்கும் ஊற்றுமலை முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள். அங்கிருக்கும் அகத்தியர் குகையில் அமைந்திருக்கும் சக்கரத்தை வழிபட்டு குகைக்குள் விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள். மலைப்பகுதியில் அமர்ந்து தியானம் செய்வதன் மூலம் உங்கள் மனதிற்குள் ஒலிக்கும் குரலை உங்களால் கட்டுப்படுத்த இயலும். முயற்சித்துப் பாருங்கள். உங்களுக்குரிய குருவினை கண்டுபிடித்து அவரது ஆலோசனைகளைப் பின்பற்றி நடப்பதன் மூலமாகவும் வாழ்வின் எஞ்சிய காலத்தை நிம்மதியாக கழிக்க இயலும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்