SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தை வந்த ராசி...

2013-12-11@ 16:00:48

சிறுகதை

அந்த வீடே இரண்டாம் முறையாக சந்தோஷத்தால் நிறைந்தது. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகள் படர்ந்து நெஞ்சங்களையும் படபடக்க  வைத்தன. இந்த இரண்டாவது குதூகலம் ஆனந்தனால் வந்தது. மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பிய அவன், வழக்கம் போல பேன்ட்  -சட்டையிலிருந்து விடுபட்டு, லுங்கி சுதந்திரத்துக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு, முகம் கழுவி, பூஜையறைக்குச் சென்று, லேசாக நெற்றியில்  விபூதியைத் தீற்றிக்கொண்டு, பத்து விநாடிகள் இறைவனுக்கு தன் தியானத்தை சமர்ப்பித்துவிட்டு ஹாலுக்கு வந்து டெலிவிஷன் முன் இருந்த
நாற்காலியில் அமர்ந்தான்.

அவனுடைய அம்மாவும் அப்பாவும் இங்கிதம் தெரிந்து, வாசலுக்குச் சென்று காற்றாட அமர்ந்துகொண்டார்கள். அவனிடமிருந்து டிபன் பாக்ஸை  வாங்கிக்கொண்டு சமையலறைக்குள் புகுந்த விலாசினி, அவனுக்கு டீ தயாரிக்க ஆரம்பித்தாள். படுக்கையறையில், முதல் சந்தோஷத்துக்குக்  காரணமான கீர்த்தனா தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு மாதக் குழந்தை.ஆவி பறந்த டீயை ஒரு கோப்பையில் ஏந்தி வந்த விலாசினி, ஆனந்தனிடம்  அதைக் கொடுத்து விட்டு பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அவளுக்குள் என்னவென்றே தெரியாத ஒரு உற்சாகம்  கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது. ஏதோ நல்ல விஷயம் நடக்கப் போகிறது அல்லது நடந்திருக்கிறது...

அது தனக்குத் தெரிந்தவரை வீட்டிற்குள் இல்லை. கணவன் மூலமாகத்தான் தெரியப் போகிறது! ஆவலுடன் அவனுடைய முகத்தைப் பார்த்தபடியே  அமர்ந்திருந்தாள். மெல்ல அவளைப் பார்த்து முறுவலித்த ஆனந்தன், நிதானமாக டீயைக் குடித்து முடித்தான். பொதுவாகவே அவன் வரும் நேரத்துக்கு  சன் தொலைக்காட்சி 7 மணி செய்தி ஆரம்பிக்கும். அன்றைக்கு அவனுக்கு என்னவோ தொலைக்காட்சிப் பெட்டியை முடுக்கவும் தோன்ற வில்லை.  அதுமட்டுமல்ல, அன்று அவன் மனைவியைப் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்ததிலும் வித்தியாசம் தெரிந்தது.    ‘‘என்னங்க, ரொம்ப சந்தோஷமா  இருக்கீங்க போலிருக்கு?’’ என்று ஆவலுடன் அவனைப் பார்த்துக் கேட்டாள் விலாசினி.

‘‘ஆமாம்’’ என்ற ஆனந்தனின் குரலில் செயற்கையாகக் கட்டுப்படுத்திக்கொண்ட மகிழ்ச்சி மலர முனைந்தது. ‘‘இன்னிக்கு எங்க ஆபீஸ் ஜி.எம். என்னைக்  கூப்பிட்டு அனுப்பிச்சார்.....’’ ‘‘ம்....அப்புறம்...!’’ ஏதோ மிகவும் உற்சாகமான ஒரு விஷயத்துக்கு அவன் வரப்போகிறான் என்பதை அவள் எளிதாகப்  புரிந்துகொண்டாள். ‘‘ரொம்ப நாளா நிலுவையில் இருந்த என் பதவி உயர்வு பற்றி நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேனில்லையா? அது இன்று முதல்  எனக்குக் கிடைத்துவிட்டதாக ஜி.எம். சொன்னார்... நிலுவைத் தொகைகளோடு கிடைக்கும்.’’ ‘‘அட, அப்படியா!’’ அப்படியே ஜிவ்வென்று பறந்தாள்,  விலாசினி. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்னாலேயே அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டிய உயர்வு அது. ஆனால், எதனாலோ அது தட்டிக்  கொண்டே போயிற்று.

இத்தனைக்கும் அவனுடைய மேலதிகாரி, சக ஊழியர்கள் எல்லோருமே அவ்வப்போது ஏற்படும் சின்னச் சின்ன பூசல்கள் தவிர மற்றபடி மிகவும்  இணக்கமானவர்கள்தான். அவரவர் திறமையை நிரூபித்து தத்தமக்குரிய சலுகைகளையும்  உரிமைகளையும் பதவி, வருமான உயர்வுகளையும் பெற்று  வருபவர்கள்தான். ஆனாலும் என்னவோ ஆனந்தனுக்கு மட்டும் மூன்று வருடங்களாகத் தேங்கிப் போயிற்று. அவனது உழைப்பு அப்பழுக்கற்றது; குறை  சொல்ல முடியாதது. தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட சிபாரிசு கடிதம் காணாமல் போய்விட்டதென்று ஒரு காரணம்; அதுவரை தலைமை  அலுவலகத்தில், அந்தப் பிரிவில் பணியாற்றி வந்தவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டதால், அவர் என்ன செய்து வைத்தார், எப்படி  செய்து வைத்தார் என்று  யாருக்கும் தெரியவில்லை என்று இந்த கம்ப்யூட்டர் காலத்துக்குப் பொருந்தாத இன்னொரு காரணம்....ஆனாலும் ஆனந்தன்  பொறுமை காத்தான். தன் திறமை மீது அவனுக்கு நம்பிக்கை இருந்தது.

கணவனின் பெருமை தனக்குப் பெருமை என்ற உவகையில் திளைத்த விலாசினி, உடனே வாசலைப் பார்த்து சற்று உரத்தே சொன்னாள்: ‘‘அத்தே,  உள்ளே சீக்கிரம் வாங்க; உங்க பிள்ளைக்குப் ப்ரமோஷன் கிடைச்சிருக்காம்....’’ அவர்கள் உள்ளே வருவதற்குள், ‘‘அதென்ன இப்படி ஒரு  அமுக்கத்தனம்? இந்த நல்ல விஷயத்தைக் கொஞ்சம் சந்தோஷமாகத்தான் சொன்னா என்னவாம்?’’ என்று அவனிடம் கொஞ்சலாகக் குறைபட்டுக்  கொண்டார்கள்.  ஆனந்தனின் பெற்றோர் உள்ளே வந்தார்கள். ‘‘கங்க்ராசுலேஷன்ஸ் ஆனந்தா. ஆல் த பெஸ்ட்’’ என்று வாழ்த்தினார் அப்பா.  ‘‘ப்ரமோஷன்னா சம்பளம் கூடத்தானே?’’ என்று வெகுளியாகக் கேட்டாள், அம்மா. ‘‘ஆமாம். எனக்கு எப்போதிலிருந்து நிலுவையில் இருக்கிறதோ  அப்போதிலிருந்து அரியர்ஸ் தொகையும் சேர்த்துக் கிடைக்கும்’’ என்று கூறிய ஆனந்தன், அப்படியே இருவர் பாதங்களையும் தொட்டு வணங்கினான்.
கண்களில் நீர் பனிக்க, ‘‘நீ நல்லா இருப்பே அப்பா, கடவுள் எப்பவும் உன் கூடத்தான் இருக்கார்...’’ என்று பெற்றோர் இருவரும் நெஞ்சார  வாழ்த்தினார்கள்.

அப்போது உள்ளிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. ‘‘உன் அப்பாவுக்கு ப்ரமோஷன் வந்திருக்குடி செல்லம்’’ என்று சொன்னபடியே உள்ளே  ஓடினாள், விலாசினி. தூங்கி எழுந்து அருகில் யாரும் இல்லாததால் பயத்துடன் அழ ஆரம்பித்த கீர்த்தனாவை அப்படியே அள்ளி அணைத்துக்  கொண்டாள். தாயின் அரவணைப்பைத் தான் பிறந்த இந்த ஒரு மாதத்தில் தெரிந்துகொண்டிருந்த கீர்த்தனா சட்டென்று அழுகையை நிறுத்தினாள்.  மலர்ந்து சிரித்தாள். ஹாலுக்கு வந்து குழந்தையைக் கணவனிடம் கொடுத்தாள். அவன் முகமும் பழகியிருந்ததால், அவனைப் பார்த்தும் பொக்கை வாய்  திறந்து  சிரித்தாள் கீர்த்தனா.  ‘‘என் செல்லக் குட்டி, தூங்கினியாம்மா? அப்பா வந்திட்டேன் பார், விளையாடலாமா?’’ என்று  பாசத்தை  வெளிக்காட்டினான் ஆனந்தன்.  விலாசினி தன் மாமனார்-மாமியாரைப் பார்த்தாள். அவர்களும் அவளுடைய பார்வையின் பொருளைப் புரிந்து  கொண்டார்கள்.  மாமியார், ‘‘தாடா, என் செல்லத்தை. இந்தப் பட்டுக் குட்டி வந்த வேளைதான் உனக்கு ரொம்ப நாளா வரவேண்டிய ப்ரமோஷன்  கிடைச்சிருக்கு. ரொம்ப லக்கி என் பேத்தி’’ என்று பாராட்டினாள்.

‘‘ஜோசியரும் சொன்னார்’’ மாமனார் தன் சந்தோஷத்தைத் தெரிவித்துக்கொண்டார். ‘‘உங்க பேத்தியாலதாங்க உங்க குடும்பத்துக்கே விடிவுகாலம்  பிறக்கப் போகுதுன்னார்...’’ ‘‘ஏன் இப்ப இந்தக் குடும்பம் எந்த வகையில குறைஞ்சு போச்சாம்?’’ ஆனந்தன் பளிச்சென்று கேட்டான். அவன் குரலில்  கடுமை.  மூவருமே திடுக்கிட்டு அவனைப் பார்த்தார்கள். இந்தக் குழந்தையைச் சொல்லி சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடாதா? என்ன  சொல்கிறான், இவன்? ‘‘இதோ பாருங்க, இந்தக் குழந்தை பிறந்த வேளைதான் எனக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு, எனக்கு நல்லது நடந்திருக்குன்னு  இனிமேலும் யாரும் சொல்லிகிட்டுத் திரிய வேண்டாம்’’ கோபம் மேலிட சொன்னான், ஆனந்தன்.  ‘‘என்னங்க, வந்து...’’ விலாசினி ஏதோ சொல்ல முன்  வந்தாள். அவள் அழுதுவிடுவாள் போலிருந்தது.

‘‘இதோ பார், நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். எல்லாம் இந்தக் குழந்தை வந்த வேளைதான்னா, நான் உழைச்சதுக்கெல்லாம் மதிப்பே இல்லையா?  என்னுடைய படிப்பு, அனுபவம், அதனால கிடைச்ச அறிவு, நேரங்காலம் பார்க்காத என் உழைப்பு, என் நிறுவனத்துக்கு நான் காட்டற விசுவாசம், எந்த  இடையூறு வந்தாலும் காத்திருந்த என் பொறுமை... இதெல்லாம்தான் என் உயர்வுக்குக் காரணமே தவிர, இதோ, இப்ப பிறந்த இந்தக் குழந்தை  இல்லை...’’ ‘‘அட, நீ என்னப்பா, சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா...’’ என்று அப்பா அவனை சமாதானப்படுத்த முனைந்தார். ‘‘ஆமாண்டா, இதெல்லாம் உன் உழைப்பு இல்லாம வேற என்ன? உன் பிரயத்தனங்கள்தான் உனக்கு இந்த ப்ரமோஷன் கிடைக்கக் காரணம். ஆனா,  இத்தனை நாள் தள்ளிப்போட்டுகிட்டே வந்த அந்த ப்ரமோஷன் இப்ப கிடைச்சிருக்குன்னா அதுக்கு என் செல்லம் கீர்த்தனா வந்த வேளைதானே? இப்படி  சொன்னா, அது தப்பா?’’ அம்மா தன் கணவருக்கு வக்காலத்து வாங்கினாள்.

‘‘ஆமாம், தப்புதான்’’ திடமாக சொன்னான் ஆனந்தன். ‘‘நான் என்ன என் ஹெட் ஆபீஸ்ல, ‘சார் எனக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கு சார். இனிமே  நான் சேமிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கேன் சார், எனக்கு எப்படியாவது ப்ரமோஷன் கிடைக்க ஏற்பாடு செய்ங்க சார்...’னு கெஞ்சியா  வாங்கினேன்? என்னவோ ஆளாளுக்குப் பேசிகிட்டே போறீங்களே!’’ விசும்ப ஆரம்பித்தாள், விலாசினி. ‘‘ஆனாலும் நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாது.  நீங்க சாமி கும்பிடுவீங்க; ஆனா, ஜோசியத்திலே எல்லாம் நம்பிக்கை இல்லேதான், தெரியும். அதுக்காக நாங்க இப்படி சொற்பமா  சந்தோஷப்பட்டுக்கறதையும் கூடாதுங்கறீங்களே இது என்ன நியாயம்?’’ ‘‘நான் அப்படி சொல்லலேம்மா...’’ ஆறுதலாகப் பேசினான் ஆனந்தன்.  ‘‘நம்மளோட நல்லது, கெட்டதுக்கெல்லாம் எதுக்காக இந்தக் குழந்தையை சம்பந்தப்படுத்தணும்னுதான் கேட்டேன்.’’

‘ஹுக்கும்’ என்று வேதனையோடு முனகியபடி விருட்டென்று உள்ளே சென்றாள், விலாசினி. அவளை மௌனமாகப் பின்தொடர்ந்தாள் அம்மா.  அவளுடைய கைகளுக்குள் பாதுகாப்பாக இருந்த கீர்த்தனா ஆனந்தனைப் பார்த்து சிரித்தது. இரண்டு நாட்கள்கூட ஆகியிருக்காது. மாலை நேரத்தில்  ஒரு தகவல் வந்தது. அதிர்ச்சியான தகவல். சாலை விபத்து ஒன்றில் ஆனந்தன் சிக்கி விட்டான். காலில் பலத்த அடி. எலும்பு முறிவே  ஏற்பட்டுவிட்டது. விவரம் கேள்விப்பட்ட அவனுடைய அலுவலக நண்பர்கள் அவனை ஒரு மருத்துவ மனையில் சேர்த்திருந்தார்கள்.
அவ்வளவுதான். பதறிப்போனாள் விலாசினி. ஆனந்தனின் பெற்றோரும் பெருத்த அதிர்ச்சிக்குள்ளானார்கள். உடனே எந்த மருத்துவமனை என்று  தெரிந்து கொண்டு உடனேயே ஒரு ஆட்டோ பிடித்து அங்கே போய்ச் சேர்ந்தார்கள். கூடவே கைக்குழந்தை கீர்த்தனா.

மருத்துவமனையில் துக்கம் கண்களில் நீர் பெருக்க, தன்னைச் சுற்றி நின்றிருந்த தன் பெற்றோர், விலாசினியைப் பார்த்தான் ஆனந்தன். ‘‘எனக்கு  ஒன்றுமில்லை, பயப்படாதீங்க. இன்னும் இரண்டு வாரங்கள்ல எலும்பு கூடிவிடும்னு டாக்டர் சொல்லிவிட்டார்....’’ என்றான். அவர்களுக்கும் ஒன்றும்  சொல்லத் தோன்றவில்லை. சம்பிரதாயமாக விபத்து எப்படி நிகழ்ந்தது, யார் மேல் குற்றம் என்றெல்லாம்  விசாரிக்க ஆரம்பித்தார் அப்பா. ஆனந்தனும்  அவரிடம்  விவரங்களைச் சொன்னான்.  அது கேட்ட அம்மா, ‘‘அதானே, என் பிள்ளை எப்படி தப்பு செய்வான்? இவன் நேராகத்தான் ஸ்கூட்டர்  ஓட்டிகிட்டுப் போயிருக்கான், கண்ட கண்டவனுங்களுக்கெல்லாம் வண்டி ஓட்ட லைசென்ஸ் கொடுத்திட்டாங்களா, இவன்தான் ஆப்டான்,  அவங்களுக்கு...!’’ அம்மா தன் பையனுக்கு ஆதரவாக சலித்துக்கொண்டாள், மறைமுகமாக விபத்துக்குக் காரணமானவர்களைச் சபித்தாள்.


பெற்றவர்கள் அங்கிருந்து போன பிறகு, கண்களில் நீர் வழியத் தன்னருகே அமர்ந்திருந்த மனைவியை ஆறுதல்படுத்தினான், ஆனந்தன். ‘‘இதோ பார்,  இந்த விபத்து எதிர்பாராமல் ஏற்பட்டது. சீக்கிரமே சரியாகிவிடும். கவலைப்படாதே. ஒரு விஷயம் தெரியுமா, எங்க ஜி.எம். என்னுடன் செல் பேசினார்.  உடம்பு பூரணமா சரியானப்புறம் வேலைக்கு வந்தா போதும்னுட்டார். என் ஃப்ரெண்ட்ஸும் என் வேலையை ஷேர் பண்ணி பார்த்துக்கறதா  சொல்லியிருக்காங்க.’’அதில் விலாசினி சமாதானமானதாகத் தெரியவில்லை. ‘‘இப்படி ஆயிடிச்சே...’’என்று மெல்லிய குரலில் புலம்பினாள். ‘‘விலாசினி...’’ ஆனந்தன் அவள் தோளைத் தொட்டுத் திருப்பினான். ‘‘இப்ப விபத்து நடந்ததே இது எதனால? என் கவனக் குறைவால அல்லது என்  மேல மோதின கார்க்காரர் கவனக் குறைவால. இதுவும் கீர்த்தனா பிறந்த ராசி தானோ?’’பளிச்சென்று எழுந்துவிட்டாள் விலாசினி. ‘‘என்ன பேசறீங்க,  நீங்க? அந்தக் குழந்தை மேல ஏன் இப்படி அபாண்டமா பழி போடறீங்க?’’என்று கேட்டுப் பதறினாள்.

‘‘நானும் அதைத்தான் சொல்றேன்’’ - ஆனந்தன் சொன்னான். ‘‘நமக்கு நடக்கற நல்லது, கெட்டதுக்கு நாமதான் காரணம். குழந்தை பிறந்த ராசியாலன்னு  நல்ல விஷயத்துக்கு சந்தோஷப்படற நாம, இது மாதிரியான விஷயத்துக்கும் அந்தக் குழந்தை மேல வருத்தப்படலாமா, அது சரியா? நல்லது நடந்தா  அப்படி சந்தோஷப்படற நம்ம மனசு, கெட்டது நடந்தா அந்தக் குழந்தை மேல வெறுப்பை வளர்க்கவும் செய்யும். அதனால இப்பதான் முளை  விட்டிருக்கற இந்தக் குழந்தையை எதுக்கும் காரணமாக்காம நம்ம மனசைப் பக்குவப்படுத்திப்போம்.’’  அவன் சொன்னதை மெல்லத் தலையசைத்து  ஆமோதித்தாள் விலாசினி.  அவள் கண்களிலிருந்து துளிர்த்த நீர், நன்றிக் கண்ணீர். குழந்தைமீது அவன் வைத்திருக்கும் பாசத்தின் சரியான
பரிமாணம் அவளுக்கு இப்போது புரிந்தது. அறைக்கு வெளியே இருந்தபடி கவனித்த பெற்றோருக்கும் தான்.    

பிரபுசங்கர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்