SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனிதநேயம் வளரட்டும்!

2021-12-20@ 13:49:33

வசந்த் என்ற வாலிபனுக்கு சுமார் 20 வயதிருக்கும். பாலிடெக்னிக் பயின்று வந்த அவன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் விழுந்து கிடந்தான். அதே சாலையில் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த செவிலியர் வனஜா காரிலிருந்து இறங்கி, வசந்த்தை பரிசோதித்ததில் அவனது இதயத் துடிப்பு அபாய கட்டத்தில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வசந்தின் நெஞ்சுப் பகுதியை பலமாக அழுத்தி முதலுதவி கொடுத்ததில் அவ்வாலிபனுக்கு இதய துடிப்பு மீண்டும் சீரானது. அருகிலிருந்தவர்கள் உடனடியாக 108க்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வசந்த்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது ஒரு கற்பனைக் கதையல்ல. மாறாக, கடந்த 03.12.21 அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடந்த உண்மைச் சம்பவம். அந்த செவிலியர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்கள். இவரது நற்செயலைக் கேள்விப்பட்ட திருவாரூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் அவர்கள் செவிலியர் வனஜாவை நேரில் வரவழைத்து, அவரது அர்ப்பணிப்பு. உணர்வையும், சமூக அக்கறையையும் பாராட்டி, செவிலியர் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்து, நற்சான்றிதழ் வழங்கினார். மேலும், இதைக் கேள்விப்பட்ட பல சமூக ஆர்வலர்களும் செவிலியா்
வனஜாவை வலைத்தளங்கள் வழியாகப் பாராட்டி வருகின்றனர்.

ஆண்டவர் இயேசுவும் இதைப்போன்ற ஒரு சம்பவத்தை தனது போதனையைக் கேட்க வந்திருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவருக்கு எடுத்துரைத்தார். அந்த நிகழ்வு நல்ல சமாரியன் உவமை என்று அழைக்கப்படுகிறது. கள்ளர்களால் அடித்து, காயப் படுத்தப்பட்டு, இரத்தக் காயங்களோடு சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு மனிதனை, சமாரியா என்ற பட்டணத்தைச் சார்ந்த ஒருவன் காண்கிறான். அவன்மீது இரக்கப்பட்டு, அவனது காயங்களைக் கட்டி, அவனை தனது சொந்த வாகனத்தில் ஏற்றி, விடுதி ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறான். மேலும், போதுமான பணத்தை விடுதிக் காப்பாளரிடத்தில் கொடுத்து, நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் (லூக்கா 10:35) என்று கூறுவதைக் காணலாம். நம்மைச் சுற்றிலும் நடை பெறுகின்ற பல வேதனையான சம்பவங்களை நாம் காணும்போது, மனித நேயம் மறைந்துவிட்டதோ என்று எண்ணி வருந்துகிறோம். ஆனால், உண்மையாகவே மனித நேயம் மறையவில்லை. அது வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டுதான் வனஜாவின் செயல்பாடாகும்.

அன்புக்குரியவர்களே! அனாதை இல்லங்கள், மன வளர்ச்சி குன்றியோர் இல்லங்கள், தொழுநோய் மருத்துவ மனைகள், உடல் ஊனமுற்றோர் காப்பகங்கள் போன்றவை யாவும் மனிதநேயம் மறையவில்லை என்பதற்கான அடையாளங்கள் ஆகும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பலர் வேலையின்றியும், உணவின்றியும் தவித்துக்கொண்டிருக்கையில், பல தொண்டு நிறுவனங்கள், செல்வந்தர்கள், பொது நல விரும்பிகள் உதாரத்துவமாக உதவிகள் செய்தது உணவின்றி தவித்த விலங்குகளுக்கும், பறவைகளுக்கும்கூட உணவினைப் பகிர்ந்து கொடுத்தது போன்ற செயல்கள் மனித நேயம் மறையவில்லை என்பதற்கான கூடுதல் ஆதாரங்களாகும். ஆகவே அன்பானோரே! மனித நேய சிந்தனைகள் நமது மனதிலும் மலரட்டும். அது நாள்தோறும் வளரட்டும். அப்பொழுது, கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான் (நீதி மொழிகள் 22:9) என்ற திருவசனத் திற்கேற்ப கடவுள் நம்மீது கருணையாக இருந்து நம்மையும் ஆசீர்வதிப்பார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shortest-man-world-25

  மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

 • modheadd1

  பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

 • canata-storm-24

  வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

 • north111s

  உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்