SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள் ..

2021-12-20@ 13:47:24

?என் மகனுக்கு வயதிற்குத் தகுந்த மூளைவளர்ச்சி என்பது இல்லை. அடிக்கடி நோய்வாய்ப்படுகிறான். கண்களால் ஒரு மாதிரி கோணலாக பார்த்து சிறிய சப்தமிடுகிறான். பெயர் சொல்லி அதட்டினால் நார்மலாகி
விடுகிறான். சிசேரியன் மூலம் பிறந்த குழந்தை இவன். ஒரே மகனின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது. உரிய பரிகாரம் கூறுங்கள்.
- நர்மதா, ஈரோடு.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. நீங்கள் குறிப்பிட்டிருப்பது உடல்நிலை ரீதியான பிரச்சினை அல்ல. மனநிலை ரீதியான பிரச்சினை ஆகும். கண்களிலும் கோளாறு எதுவும் இல்லை. சிறு வயதிலேயே இதனை சரிசெய்ய வேண்டியது அவசியம். அவருடைய ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரன் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பதும், லக்னாதிபதி சனி 11ல் அமர்ந்திருப்பதும் சாதகமான நிலையே. இருப்பினும் பூர்வ புண்ய ஸ்தானம் ஆகிய 9ல் செவ்வாய், ராகு இணைந்திருப்பது பிரச்சினையைத் தந்திருக்கிறது. அதிலும் அசுபர்களான செவ்வாயும், ராகுவும் பிதுர்காரகன் ஆகிய சூரியனின் நட்சத்திரக்காலில் இணைந்து தோஷத்தினைத் தந்திருக் கிறார்கள். பரம்பரையில் துர்மரணம் அடைந்தவர்கள் யார் என்பதனை அறிந்து அவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்குத் தேவையான பரிகாரத்தினைச் செய்ய முயற்சியுங்கள். பரம்பரையில் உள்ள துர்மரணம் தொடர்பான தோஷமே உங்கள் மகனின் ஜாதகத்தில் வெளிப்படுகிறது. பிரச்னையை சரிசெய்ய இதுவே சரியான தருணம் என்பதை உணர்ந்து தாமதிக்காது செயல் படுங்கள். 27.08.2022 முதல் மகனின் நடத்தையில் மாற்றத்தை உணர்வீர்கள்.


?35 வயதாகும் என் மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஜாதகம் பார்த்த பெண் வீட்டார் என் மகனின் ஜாதகத்தில் புத்ர தோஷம் உள்ளதாகக் கூறுகின்றனர். எங்கள் பரம்பரையில் இதுவரை யாருக்கும் இதுபோன்ற தோஷம் இருந்ததில்லை. என் மகனின் ஜாதக தோஷத்திற்கு ஒரு நல்ல
பரிகாரம் சொல்லுங்கள்.
- சிவக்குமார், கடலூர் மாவட்டம்.

பரணி நட்சத்திரம், மேஷராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது செவ்வாய் தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் மணவாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் குரு வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால் திருமணம் தாமதமாகி உள்ளது. புத்ரகாரகன் குரு வக்ரம் பெற்றிருப்பதால் புத்ர தோஷம் உள்ளது என்று சொல்வது தவறு. அவருடைய ஜாதக பலத்தின்படி புத்ர பாக்யம் என்பது நன்றாக உள்ளது. ஏதோ ஒரு பெண் வீட்டார் சொன்னதை நம்பி நீங்கள் உங்கள் மகனின் திருமணத்தை நடத்தலாமா வேண்டாமா என்று யோசிப்பது தவறு. மற்றவர்கள் சொல்லும் வீண் புரட்டினை நம்பாமல் உங்கள் மகனுக்கு பெண் பார்க்கும் பணியை தீவிரமாக செயல்படுத்துங்கள். பிரதி வியாழன் தோறும் அருகில் உள்ள ஆலயத்தில் அமைந்திருக்கும் நவகிரஹ சந்நதியில் வடக்கு நோக்கி அருள் பாலிக்கும் குரு பகவானின் சந்நதியில் நெய் விளக்கு ஏற்றிவைத்து உங்கள் மகனை வழிபட்டு வரச் சொல்லுங்கள். வியாழக்கிழமை நாளில் குரு பகவானுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடுவதும்
நல்லது. கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 16 முறை சொல்லி குரு பகவானை வணங்கி வர 06.07.2022க்குள் உங்கள் மகனின் திருமணம் முடிவாகிவிடும். கவலை வேண்டாம்.
“வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹிதந்நோ குரு: ப்ரசோதயாத்,”

?அரசுத்துறையில் உயர்பதவியில் உள்ள என் மகனுக்கு 2018ல் திருமணம் நடந்து, அது தோல்வியில் முடிந்துவிட்டது.  தற்போது விவாகரத்தும் ஆகிவிட்டது. எல்லாவற்றிலும் வெற்றி பெற்ற தன்னால் மணவாழ்வில் வெற்றி பெற முடியவில்லையே என்று மிகவும் விரக்தியில் உள்ளார். உறவினர்கள் கேலியான வார்த்தைகள் அவருக்குள் தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது. எனது மகனின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமைய பரிகாரம் கூறுங்கள்.
- திருநாவுக்கரசு, தஞ்சாவூர்.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுனலக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது சூரிய தசையில் கேது புக்தி நடந்துவருகிறது. தற்போது நடந்துவரும் தசாபுக்தியின் காலம் அத்தனை சிறப்பாக இல்லை. எனினும் அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் இடம் சுத்தமாக இருப்பதாலும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு, நான்கில் அமர்ந்திருப்பதும் நல்லநிலையே. உங்கள் மகனுக்கு மறுமண வாழ்வு என்பது சிறப்பானதாக அமையும். தற்போது நேரம் சரியாக இல்லை என்பதால் அவர் தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். அவரது உத்யோகத்தில் அவரை முழுமனதோடு ஈடுபட்டு வரச் சொல்லி அறிவுறுத்துங்கள். அவர் வகிக்கும் பதவியின் மகத்துவத்தை அவருக்குப் புரியவையுங்கள். வருவாய்த்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் நீங்கள் மகனையும் அதே துறையில் உயர் அதிகாரியாக உருவாக்கி இருக்கிறீர்கள். தனது பதவியின் துணைகொண்டு வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு இயன்ற அளவில் உதவிடச் சொல்லுங்கள். ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் சனியினால் உண்டாகும் பாதிப்பிலிருந்து விடுபட இயலும். ஞாயிறு தோறும் அருகிலுள்ள சிவன் கோவிலில் அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கித் தரச் சொல்லுங்கள். 18.1.2023 வாக்கில் அவரது மறுமணம் நடந்து நல்லபடியாக வாழ்வார்.

?28 வயதாகும் என் மகள், ஒரு  பையனை விரும்புவதாகச் சொல்கிறாள். பையனின் ஜாதகம் பொருந்தாததால் மேற்கொண்டு தொடர எங்களுக்கு விருப்பமில்லை. பையனின் பெற்றோரிடம் இந்த விவரத்தை தெரிவித்தும் அவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. திருமணத்தை முடித்துவிடலாம் என்று என் மகளை அவசரப்படுத்துகிறார்கள். என் மகளின் திருமண வாழ்வு நல்லபடியாக அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- ரவிச்சந்திரன், கோயமுத்தூர்.

திருவோணம் நட்சத்திரம், மகரராசி, சிம்மலக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகுதசையில் சந்திர புக்தி நடந்துவருகிறது. திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனி வக்ரம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பது சற்று பலவீனமான நிலை ஆகும். எட்டாம் வீட்டில் நான்கு கிரஹங்களின் அமர்வும் சற்று சிரமத்
தினைத் தந்துகொண்டிருக்கும். தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் உங்கள் மகளுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும் வகையில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அவர் சரியாக பேசுவதில்லை என்று எழுதியுள்ளீர்கள். அவருடைய மனநிலையை எண்ணிப் பாருங்கள். உங்கள் மகளுடைய ஜாதக பலத்தினையும் அவருடைய நல்வாழ்வினையும் கருத்தில் கொண்டு அவருடைய விருப்பத்திற்கு சம்மதம் தெரிவியுங்கள். உங்கள் மனைவியிடம் துளசிச் செடிக்கு நீருற்றி அருகில் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி 48 நாட்கள் வழிபட்டு வரச் சொல்லுங்கள். மகளின் திருமண வாழ்வு குறித்த கவலை தீரும்.
“துளசி அம்ருத ஸம்பூதேஸகாத்வம்
கேசவப்ரியா
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா
பவ சோபனே,”

?12ம் வகுப்பு படிக்கும் என் மகனை படிக்க சொன்னாலே தூங்கிவிடுகிறான். கொஞ்ச நேரம் புத்தகத்தை திறந்து வைத்தாலே தூக்கம் வந்துவிடுகிறது. படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் உள்ளது. ஆனால், தூக்கம் வந்து தடுக்கிறது. நன்றாக தூங்கி எழுந்த பிறகு படிக்க போனாலும் அரைமணி நேரத்தில் தூக்கம் வந்துவிடுகிறது. அவன் நல்லபடியாக படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- புவனேஸ்வரி, திருமங்கலம்.

சதயம் நட்சத்திரம், கும்பராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி புதனும் வித்யா ஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டிற்கு அதிபதி குருவும் இணைந்து 12ல் அமர்ந்திருக்கிறார்கள். 12ம் வீடு என்பது தூக்கத்தைக் குறிப்பது. பாடப் புத்தகத்தை படிக்கும்போது மட்டும் தூக்கம் வருகிறதா அல்லது செய்தித்தாள், கதைப் புத்தகங்கள் என்று எதைப் படித்தாலும் தூக்கம் வருகிறதா என்று பரிசோதியுங்கள். இவருடைய கண்களில் பிரச்னை இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமாக நரம்பு பலகீனம் காரணமாகவும் இதுபோன்ற பிரச்சினை உண்டாகலாம். கண் மருத்துவத்தில் நரம்பியல் சார்ந்த நிபுணர்களிடம் உங்கள் மகனை அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தினமும் காலையில் சூரியஒளி படும் இடத்தில் உட்கார்ந்து படிக்க வையுங்கள். முளை கட்டிய பச்சைப் பயறு சாப்பிட்டுவருவதும் நல்லது. வாரந்தோறும் புதன்கிழமை நாளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லி வணங்கச் சொல்லுங்கள். 18.02.2022க்கு மேல் அவரது பிரச்சினை சரியாகிவிடும்.
“ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம்  ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா,”

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர்
ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்