SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மந்திரங்களின் தொன்மம்

2021-12-16@ 17:14:13

‘இது செய்ய வேண்டும்’ என்ற உறுதியில் மந்திரங்கள் தோன்றின என்றாலும் ‘மந்திரம்’ என்பது இன்றைய நடைமுறையில் கண்கட்டு, மாயாஜாலம், வினை வைத்தல், எடுத்தல் முதலியவற்றைக் குறிப்பதாகவும் நஞ்சு நீக்க உச்சரிக்கின்ற சொற்களைக் குறிப்பதாகவும் உள்ளது. ஆனால் மானிடவியலாளர் நோக்கில் மந்திரம் என்பதற்குப் பின் வருமாறு விளக்கம் கூறப்படுகிறது. ‘மந்திரம் என்பது ஒரு மாயையை உண்டாக்கி அதனால் இயற்கையை உண்மையாகவே கட்டுப்படுத்துவதாக நம்புவதாகும்’ என்பார் கார்டன் சைல்டு. இதே கருத்தினை ஜார்ஜ் தாம்சன் ‘தாங்கள் விரும்பியபடி இயற்கையைச் செயல்படுத்துவதற்கு உதவக்கூடிய ஒரு பொய்த்தோற்ற உத்தியே மந்திரம்’ ஆகும் என்பார். இதனை ஆ.சிவசுப்பிரமணியன் சுருக்கமாக, ‘பாவனைச் செயல்களையும் (Mimetic actrs) கட்டளையிடுதலையும் (Commands) அடிப்படையாகக் கொண்டது மந்திரம் எனப்படும்’ என மொழிவார்.

மந்திரத்தின் தோற்றம்

பண்டைய புராதன இனக்குழுச் சமூக அமைப்பில் மந்திரம் பெரிதும் வழக்கிலிருந்தது. இச்சமூக அமைப்பில் வாழ்ந்த இனக்குழு மக்களுக்கு இயற்கையின் இயக்கவிதிகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. இயற்கையுடன் போராடுவதே அவர்தம் வாழ்க்கையாய் இருந்தது. ஒரு புறம் இயற்கையின் சீற்றங்களுக்கும் (மழை, புயல், காற்று, பூகம்பம், வறட்சி) மறுபுறம் கொடிய விலங்குகளினால் துன்பத்திற்கும் ஆளாயினர். இவ்வாறாக இயற்கையோடு போராடுவதையே தம் வாழ்க்கையாகக் கொண்ட இனக்குழு மக்கள் இவற்றைக் கட்டுப்படுத்த முயன்றதால் மந்திரம் தோன்றியது.

மழையின்றி வறட்சியாகும் காலத்தில் மழையினைப் பெறுவதற்கு மழை பெய்வது போன்ற பாவனையுடன் (imitation) கூடிய செயல்களைச் செய்து காட்டுவதனால் மழையைப் பெய்விக்க முடியுமென்று நம்பினர். இவ்வாறான பாவனைச் செயல்களுடன் கூடிய சடங்குகள் பாவனை மந்திரம் (imitative Magic)  எனப்படும்வேட்டைச் சமூகத்தில் மந்திரச் சடங்குகளை வேட்டைத் தொழிலுக்காக நடத்தினர். வேட்டையில் விலங்குகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேட்டைக்குச் செல்வதற்கு முன்னர் சில பாவனைச் சடங்குகள் இனக்குழுச் சமூகத்தில் நடைபெற்றன என்று டி.டி. கோசாம்பி குறிப்பிடுவார்.

இச்சடங்குகள் இன்றளவும் பழங்குடிகளிடமும் நாட்டுப்புற மக்களிடமும் வழக்கிலிருப்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தில் வாழும் வலையர்கள் வேட்டைக்குச் செல்லுமுன் தங்கள் கோவிலின் முன்னர் வேட்டையாடுதல் போன்ற நடனத்தை ஆடிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இன்றளவும் வேட்டையாடுவதனைத் தம் குலத்தொழிலாகச் செய்து வருகின்றனர் என்பது கவனத்திற்குரியது ஆகும்.

வேளாண்மைச் சமூகத்திலும் மந்திரச் சடங்குகள் தொடர்ந்து வந்துள்ளன. பயிர் செழிக்க மழை வேண்டி இச்சடங்குகளை நடத்தினர். நியூசிலாந்து நாட்டின் மோரிஸ் (Maoris)  இன மக்கள் உருளைக் கிழங்கின்  வளர்ச்சிக்காக நடனம் ஆடுவது மரபு. உருளைக்கிழங்குத் தோட்டங்களில்  குருத்துகள் கீழ்த்திசைக் காற்றினால் நாசமாகாமல் தடுக்க, பெண்கள் இந்நடனத்தை ஆடினர். அதில் காற்று, மழை போன்றன வேகமாக வருவதைப் போற்றும் பயிர் நன்கு முளைத்து வளர்ந்து பூத்து வருவதைப் போன்றும் பாவனை செய்து ஆடுவர். பயிரின் வளர்ச்சியை நடனமாக ஆடிக் காண்பிப்பதனால் பயிரை அது போல வளர்த்துவிட முடியும் என நடனம்  ஆடுபவர்கள் கருதினர். இதுதான் புராதன காலத்திய மந்திரத்தின் அடிப்படையாகும். பாவனைச் செய்கைகளே (Mimetic Acts)  புராதான கால மந்திரத்தின் தோற்றுவாய் ஆகும்.

மழை பெறுவதற்காகப் பழங்காலத்தில் பூசாரி அல்லது மந்திரவாதி ஓர் உயரமான இடத்திலிருந்து நீரை ஊற்றுவதனால் மழை பெய்யுமென்று நம்பியது. இதன் பாற்படும். இவ்வாறான பாவனையுடன் கூடிய மழைச் சடங்குகள் இன்றளவும் வழக்கிலிருப்பது கவனிக்கத்தக்கது. பண்டையக் காலத்தில் மந்திரம் சமயத்தில் ஓர் அங்கமாக இருந்ததனை இவற்றால் உணரலாம்.

மந்திரத்திலிருந்து சமயம் தோன்றுதல்

பொருளாதார நலன்களைப் பெறுவதற்காகப் பல்வேறு வகையான மந்திரச் செயல் முறைகள் புராதன மக்களிடம் வழக்கிலிருந்தன. இம் மந்திரத்தினால் தாங்கள் வேண்டியது கிடைக்காமல் போன போது ஏதோ ஒரு மீயியற்கை ஆற்றல் (Supernatural power)  தங்களது மந்திரச் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது என்று நம்பினர். இம் மீயியற்கை ஆற்றல்களைத் திருப்திபடுத்தச் சில சடங்குகளைச்செய்தனர். இச்சடங்குகள் பலியிடுதல் மற்றும் படையலாக அமைந்தன. இம் மீயியற்கைச் சக்திகள் பின்னர் கடவுள் என்ற தனியான நிலைக்குக்  கொண்டு வரப்பட்டது. மந்திரச் சடங்குகளை முன்னின்று நடத்திய இனக்குழுத் தலைவன் அல்லது மந்திரவாதி கடவுளுக்கு வழிபாடு செய்யும் பூசாரியாக மாறினான். பண்டைய மந்திரவாதிகள் பூசாரிகளாகச் செயல்பட்டதன் எச்சமாக இன்றைய பூசாரிகள் மந்திரவாதியாகச் செயல்படுவது அமைகிறது. இவ்வாறாக மந்திரத்திலிருந்து சமயம் படிப்படியாகத் தோன்றியது.

மந்திரமும் சமயமும்

மந்திரமும் புராதனச் சமயத்தின் வடிவங்களுள் ஒன்றாக அமைகிறது. இம்மந்திரம் சடங்குகளின் தொகுப்பாக அமைந்தது. இன்று உள்ள அனைத்து சமயங்களிலும் மந்திரத்தின் கூறுகளை இன்றும் காணலாம். பழங்காலத்தில் மந்திரமும் சமயமும் வெவ்வேறானதாக அமையவில்லை. ஏனெனில் இரண்டுமே அளந்தறிய முடியாத ஆற்றல் பெற்றவையாகக் கருதப்படுகின்றன.

அதனால் ஏற்படும் அச்சத்தினை அடிப்படையாகக் கொண்டவை மந்திரமும் சமயமும் ஆகும்.மந்திரம், சமயம் இரண்டும் மனித அனுபவத்தில் ஒன்றே. மந்திரம் என்பது மனித அனுபவத்தில் பிரபஞ்சம் முழுமையின் வரலாற்றையும் கூறுவதாகும். சமயம் என்பது, வெளியுலகத்தை மனித அனுபவத்தால், அறிவின் முதிர்ச்சியால் வெளிப்படுத்தப் படுவதாகும் என்று ஹெர்கோவிட்ஸ் குறிப்பிடுவார். இவர் கருத்திலிருந்து மந்திரமும் சமயமும் ஒன்றிலொன்று தொடர்புடையன என்பதை அறியலாம்.

பழங்காலத்தில் சமயம் இல்லாமலே மந்திரம் மட்டும் வழக்கிலிருந்திருக்கிறது. மனித வரலாற்றில் மந்திரம் சமயத்தை விடப் பழமையானது. சமுதாயத்தின் பெரும்பகுதியினர் சோர்வுற்று, மெலிந்து அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கியிருந்தனர். இவர்களின் அடிமனத்தில் மந்திரங்களைப் பற்றிய நம்பிக்கை உறைந்திருப்பதைக் காணலாம். இயற்கையைக் கட்டுப்படுத்த தன்னால் இயலவில்லை என்பதை அறிந்த மனிதன், மீயியற்கைச் சக்தி அதனைக் கட்டுப்படுத்துகிறது என்று நினைக்கத் தொடங்கினான் என்பார் ஜேம்ஸ் ஃபிரேசர். மேலும் அவர் இவ்வாறான மந்திர நம்பிக்கையிலிருந்து சமயம் படிப்படியாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கடவுளருக்கு மந்திர சக்தி உண்டு என்ற நம்பிக்கை மந்திரத்திலிருந்து மதம் உருவானதை விளக்கும் என்றும் கூறுகிறார்.

இவ்வாறான கருத்திலிருந்து மந்திரமும் சமயமும் பழங்காலத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்தே காணப்பட்டன என்பதைத் தெளிவாகக் கூற முடியும். இன்றைய நாட்டுப்புறச் சமயச் சடங்குகளில் மந்திரத்துடன் தொடர்புடைய சடங்குகள் மலிந்து காணப்படுவதும் மேற்கூறிய கருத்திற்கு அரண் சேர்ப்பதாகும். இந்நிலையை மமாந்திரிகச் சமய எல்லை (Magic Religious Border Line)  என்று அறிஞர்கள் கூறுவர்.

மனிதன் தன் வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள ‘சமயம்’ ‘மந்திரம்’ என்னும் இரு வழிகளை மேற்கொள்கிறான். இயற்கைக்கும் இயற்கையிறந்த நிலைக்கும் அடிப்படையாக அமைந்துள்ள ஆற்றலைச் சமுதாயத்துடன் ஒத்துப் போகுமாறு கட்டுப்படுத்துவதற்காக ‘மந்திரம்’ சமயம் ஆகிய இரு வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் முன்னது, இயற்கையிறந்த நிலையினையும், பின்னது இயற்கை நிலையினையும் குறிக்கின்றன. இவற்றில் மேற்கொள்ளப்படும் சடங்குகள் இவற்றைச் செய்யும் மனிதனுக்கும் இயற்கையிறந்த ஆற்றல்களுக்கும் இடையே ஒரு பிணைப்பினை உண்டாக்க உதவுகின்றன என்று மந்திரத்திற்கும் சமயத்திற்கும் உள்ள தொடர்பு நிலையை விளக்குவர்.

மந்திரத்தின் வகைகள்


மந்திரத்தை அதன் பயன்பாட்டு அடிப்படையில் தூய மந்திரம் (White Magic)  தீய மந்திரம் (Black Magic)  என இருவகைப்படுத்துவர்.  

தூய மந்திரம்

சமுதாய நலன்களுக்குப் பயன்படுத்தப்படும் மந்திரம் ‘தூய மந்திரம்’ எனப்படும். வழிபாட்டுச் சடங்கிலும் மழை வளம், பயிர்வளம், குழந்தைப்பேறு, செல்வ வளம் போன்ற வளமைச் சடங்குகளிலும் (Fertility Rituals)  பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வியல் சடங்குகளிலும் இம்மந்திரம் இடம்பெறுகிறது.

தீய மந்திரம்


இது மனிதர்களுக்குத் தீய பயக்கும் பொருட்டுப் பயன்படுத்தப்படுவதாகும். செய்வினை, பில்லி சூனியம், ஏவல் போன்ற மாந்திரிகத் தொழிலுக்குப் பயன்படுகிறது. ஒருவருக்கு இதன்மூலம் நோயுண்டாக்கவும் மரணம் உண்டாக்கவும் முடியுமென்று நம்பப்படுகிறது.

மந்திரம் பற்றிய ஆய்வுகள்

ஜேம்ஸ் ஃபிரேசர் எனும் மானுடவியல் அறிஞர் உலகின் பல்வேறு பகுதிகளிலும் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் மந்திரச் சிந்தனையைப் பழங்காலத்தாகவும் சமயச் சிந்தனையை அடுத்ததாகவும் அறிவியல் சிந்தனையை அதற்கு அடுத்ததாகவும் கருதினார். மந்திரத்திலிருந்து சமயம் தோன்றியது என்பது இவரது கொள்கை. இவர் இரு விதிகளின் அடிப்படையில் மந்திரங்களை ஆராய்ந்தார். அவை ஒத்த விதி (Law of Similarty)  தொத்துவிதி, (Law of Contact)  எனப்படும்.

முதல் விதியுடன் தொடர்புடைய மந்திரம் ஒத்த மந்திரம் (Homeopathic Magic)  அல்லது பாவனை மந்திரம் (Imitative Magic) எனப்படும். இரண்டாவது விதியுடன் தொடர்புடைய மந்திரம் ‘தொத்து மந்திரம்’ (Contagious Magic)  எனப் பெயர் பெறும். இவ்விரு மந்திரங்களையும் ‘ஒத்துணர்வு மந்திரம்’ (Sympathetic Magic)  என்பார். ஏனெனில் இவருடைய கருத்துப்படி வினையும் செயலும் இவ்விரு மந்திரங்களிலும் ஒத்திருக்கின்றன. (Sympathy between cause and effect) ஃபிரேசரின் இக்கொள்கை மந்திரம், சடங்கு, சமயம் பற்றிய ஆய்வில் அறிஞர்களால் பெரிதும் போற்றப்பட்டுப் பின்பற்றப்பட்டது.

ஆர்.ஆர்.மாரெட் (R.R.Marett)  என்பார் ‘சமயத்தின் வாயிற்படி’ (The Threshold of Religion 1929) என்னும் நூலில், மந்திரச் சமயம்   (Magico Religious) என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இச்சொல் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் மந்திரம், சமயம் ஆகிய இரண்டின் இயல்புகளையும் ஒன்றிலொன்று கலந்திருப்பதாக விளங்கி வந்தது.சிக்மண்ட்ஃபிராய்டு (Sigmund Greud) ‘குலக்குறியும் விலக்கும்’ (Totem and Taboo, 1918)எனும் ஆய்வில் ஃபிரேசரின் மந்திரம் - சமயம் மேம்பாடாகக் கருதி ஏற்றுக் கொள்கிறார். இவர் இயலாமை (impotence) முகத்தில் இறுக்க உணர்வாக வெளிப்படுகிறது என்றும் இதுவே குழந்தை மனத்திலும் பண்டைய மனிதனிடமும் மந்திரச் சிந்தனையாக வளர்ந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

மாலினோவஸ்கி (Malinowaski) ‘பவளத்தீவும் மந்திரமும்’ (Coral gardens and their magic, 1935) எனும் நூலில் மந்திரமும் சமயமும் வெவ்வேறானவை என்று கூறியுள்ளார். சமயம் மனித இருப்பு குறித்த அடிப்படைப் பிரச்சனைகளைப் பற்றியது என்றும் மந்திரம் சில குறிப்பிட்ட விளக்கமான, தெளிவான சிக்கல்களைப் பற்றியது என்றும் இவர் விளக்கியுள்ளார். லெவிஸ்ட்ராஸ் (Levi - Strauss)  ‘தி சேவேஜ் மைண்ட்’ (The savage mind 1966) எனும் நூலில் வளர்ச்சியடையாச் சமூகங் களில் மனச் செயற்பாட்டின் தொகுப்புச் சிந்தனையாக மந்திரச் செயற்பாடுகள் விளங்குகின்றன என்றார். மேலும் மந்திரம், சமயம் இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டையும் இவர் தெரிவித்தார். மந்திரம் இயற்கை உருவாக்கிய மனிதச் செயற்பாடுகள் ஆகும். சமயம், மனிதன் உருவாக்கிய இயற்கைச் சட்டங்கள் ஆகும் என்று விளக்கினார்.

மேற்கூறிய அறிஞர்களின் கருத்துக்களின் வழி புராதன மக்களிடம் வழக்கிலிருந்த மந்திரம், சமயம் பற்றிய சிந்தனைகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. புராதனக் காலத்தில் சமயம் இல்லாது மந்திரம் மட்டும் வழக்கிலிருந்திருக்கிறது என்பது அறிஞர்களின் பொதுவான கருத்து. மந்திரம் சமயத்துடன் கலந்து ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவியலாதவாறு மாறிவிட்டது. இன்றைய நாட்டுப்புறச் சமயத்தில் (Folk Religion) இடம்பெறும் சமயச் சடங்குகளில் பெரும்பாலானவை மந்திரமும் சமயமும் கலந்தனவாகும்.

எடுத்துக்காட்டாக, அம்மன் வழிபாட்டில் இடம்பெறும் முளைபாலிகைச் சடங்கில் ஆடப்படும் கும்மி, நடனம் பயிர்வளம் வேண்டும். ஒருவகைப் பாவனை நடனமாக (Mimetic Dance)  அமைகிறது. மேலும், இவ்வழிபாட்டில் தெய்வமேறியவர்களின் மீது மஞ்சள் நீரை ஊற்றுவது மழை வேண்டும் பாவனைச் சடங்காக விளங்குகிறது. நோய் நீக்கம் வேண்டிக் கோயில்களில் செய்யப்படும் நேர்த்திக்கடன் சடங்குகளில் பெரும்பாலானவை மந்திரத்துடன் தொடர்புடையனவே ஆகும்.

காட்டாக, நோயால் பாதிப்படைந்த உறுப்புகளைப் போன்று வெண்கலம் அல்லது மண்ணால் உருவம் செய்து காணிக்கையாக்குதல் ஒத்த மந்திரத்துடன் தொடர்புடையதாகும். இவ்வகையில் மந்திரத்தின் கூறுகள் நாட்டுப் புறச் சமயச் சடங்கில் கலந்துள்ளதை அறியலாம். சமயத்தின் தோற்றத்தினையும் சமயச் சடங்குகளின் மறைபொருளினையும் அறிந்து கொள்வதற்கு மந்திரம் பற்றிய ஆய்வு இன்றியமையாததாக அமைகிறது.

பேரா.முனைவர் தே.ஞானசேகரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • italy-first-female

  இத்தாலியில் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி

 • shooting-russia-school-26

  ரஷ்யாவில் பள்ளி வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!!

 • nia-23-kerala

  பிஎஃப்ஐ இடங்களில் என்ஐஏ சோதனைக்கு கண்டனம்: கேரளாவில் முழு அடைப்பு; வாகன கண்ணாடி உடைப்பு; பெட்ரோல் குண்டு வீச்சு..!!

 • ship-22

  இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு..!!

 • putin-action-protest

  புடின் அதிரடி உத்தரவு! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்