SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்வு வளம் பெறும்!

2021-12-14@ 12:29:53


?2005ல் திருமணமாகி 2007ல் மகன் பிறந்தான். என் மனைவிக்கு வேலை வாங்கி கொடுத்தேன். வாரம் ஒரு முறைதான் வருவாள். அம்மாதான் என் பிள்ளையை பார்த்துக் கொள்கிறார்கள். 2014ல் என்னுடன் சண்டை போட்டு என் மனைவி பிரிந்து சென்று விட்டாள். ஆறு வருடமாக தொடர்பு இல்லை. அவள் திரும்பி வருவாளா? அல்லது நான் வேறு திருமணம் செய்யலாமா? உரிய வழி காட்டுங்கள்.
- சந்திரசேகர், குடியாத்தம்.

உத்திரட்டாதி நட்சத்திரம் (உத்திரம் என்று தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள்), மீன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்ர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதக பலத்தின்படி இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்கான வாய்ப்பு இல்லை. நீங்கள் என்ன உத்யோகம் பார்க்கிறீர்கள் என்பதை உங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. தற்போது நடந்து வரும் நேரம் தொழில்முறையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது. அதற்கான முயற்சியில் இறங்குங்கள். உங்களால் வெற்றி காண இயலும். நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தால்  நிம்மதிதான் குலையும். மன உளைச்சல் என்பது அதிகமாகும். நடந்ததையே நினைத்து வருந்துவதை விடுத்து நடக்கப்போவதில் கவனத்தை செலுத்துங்கள். உங்கள் முழுக் கவனமும் மகனின் எதிர்கால முன்னேற்றத்தின் பால் செல்லட்டும். மகனை நல்லபடியாக படிக்க வையுங்கள். உங்கள் மதிப்பு உணர்ந்து உங்கள் மனைவி திரும்பி வருவார். வாரந்தோறும் திங்கட்
கிழமை நாட்களில் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டே பிரகாரத்தை 11 முறை வலம் வந்து வணங்குங்கள். நேரம் கிடைக்கும்போது விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு சர்வாபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வணங்கி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் மனம் அமைதி பெறும்.
“வந்தே சம்பு உமாபதிம் ஸூரகுரும் வந்தே ஜகத்காரணம்
வந்தே பந்நக பூஷணம் ம்ருகதரம் வந்தே பஷூனாம்பதிம்
வந்தே சூர்ய சசாங்க வஹ்னிநயனம் வந்தே முகுந்தப்ரியம்
வந்தே பக்த ஜனாச்ரயஞ்ச வரதம் வந்தே சிவம் சங்கரம்.”

?நான் பிறந்ததிலிருந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன். காய்கறி மற்றும் மளிகைக் கடை வைத்திருக்கிறேன். ராகு தசை வந்தால் நன்றாக இருக்கும் என்று எல்லா ஜோதிடர்களும் சொன்னார்கள். 30 லட்சம் கடன் உள்ளது. நிம்மதி என்பது இல்லை. இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறேன். தற்கொலை எண்ணமும் மனதை பேதலிக்கச் செய்கிறது. கடன் தீர்ந்து வியாபாரம் சிறக்க உரிய பரிகாரம் கூறுங்கள்.

- கந்தசாமி, தூத்துக்குடி.
தற்கொலை செய்துகொண்டால் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா? சவாலை சந்திப்பதுதான் வாழ்க்கையே தவிர அதிலிருந்து விலகிச் செல்வது அல்ல. எந்த தைரியத்தில் கடன் வாங்கினீர்களோ, அதே துணிச்சலோடு பிரச்சினைகளையும் எதிர்த்து நில்லுங்கள். பயந்து ஓடிக்கொண்டே இருந்தால் நாய்கூட துரத்தி வரத்தான் செய்யும். எதிர்த்து நின்றீர்களேயானால் துரத்திய நாயும் பயந்து ஓடிவிடும். மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி என்பது நடந்துவருகிறது. உங்கள் ஜாதகத்தில் தொழிலைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் ஜென்ம லக்னத்திலேயே ராகுவுடன் இணைந்து அமர்ந்திருப்பது நல்ல நிலையே ஆகும். தசாநாதன் ராகு உங்கள் உழைப்பிற்கான பலனைத் தருவார். அதே நேரத்தில் ஓரிடத்தில் அமர்ந்து தொழில் செய்வதை விட அலைந்து திரிந்து செய்யும் தொழில் சிறப்பான பலனைத் தரும். காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வீடுகளுக்கு நேரிடையாக சப்ளை செய்யுங்கள். திருமணம், ஹோட்டல் போன்ற இடங்களுக்கு பெரிய ஆர்டர்களை எடுத்து டெலிவரி செய்ய முயற்சி செய்யுங்கள். உங்கள் அனுபவமும் முகராசியும் நிறைய வாடிக்கையாளர்களை பெற்றுத் தரும். 22.03.2023 முதல் உங்கள் கடன் பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக முடிவிற்கு வரத் துவங்கும். வருடம் ஒரு முறை திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக சென்று செந்தில் ஆண்டவனை வணங்குவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். செவ்வாய் தோறும் அருகிலுள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று நான்கு நெய் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். உங்கள் பிரச்னைகளின் வீரியம் குறையக் காண்பீர்கள்.

?30 வயதாகும் என் மகன் எம்.எஸ்சி., பி.எட். படித்திருக்கிறார். இதுவரை அரசு  பணிகிடைக்கவில்லை.  திருமணமும் தடைப்பட்டுவருகிறது. களத்ர தோஷம் உள்ள தால் தாமதமாகத்தான் திருமணம் என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சிலர் இந்த வருடம் என்கிறார்கள். எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. நல்வழி காட்டுங்கள்.
- கிருஷ்ணமூர்த்தி, சேலம்.

பரணி நட்சத்திரம், மேஷராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் சந்திரபுக்தி நடந்து வருகிறது. உத்யோக ஸ்தானத்தைக் குறிக்கும் பத்தாம் வீட்டில் சனி ஆட்சிப் பலத்துடன் அமர்ந்திருப்பதால் நிச்சயமாக உங்கள் மகனுக்கு அரசுப் பணி என்பது கிடைத்துவிடும். ஆசிரியர் வேலைக்கு மட்டும் முயற்சிக்காமல் அரசுத் துறை சார்ந்த அனைத்து பணிகளுக்கும் தேர்வுகளை தவறாமல் தொடர்ந்து எழுதிவரச் சொல்லுங்கள். அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாய் களத்ர காரகன் சுக்கிரனுடன் இணைந்து எட்டில் அமர்ந்திருப்பதால் களத்ர தோஷம் என்று ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

தற்போது நடந்துவரும் தசாபுக்தி பலத்தின் அடிப்படையில் 2022ம் ஆண்டின் இறுதியில் அவரது திருமணம் நடந்துவிடும். உங்கள் மகனின் ஜாதகத்தை ஆராய்ந்ததில் பித்ருதோஷமும், குலதெய்வ வழிபாட்டில் குறைபாடும் உள்ளதை அறியமுடிகிறது. உங்கள் குடும்பத்தில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கிரியைகளை சரிவரச் செய்து வருகிறார்களா என்பதை அறிந்து அந்தக் குறையை சரிசெய்ய முயற்சியுங்கள். வருடந்தோறும் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வழிபட மறக்காதீர்கள். இவ்விரு குறைகளையும் சரிசெய்தீர்களேயானால் உங்கள் மகனின் வாழ்வினில் கண்டு வரும் தடைகள் காணாமல் போகும். அவரது வாழ்வும் வளம்பெறும்.

?எனது இளைய மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளான். இவனுக்கு திருமணமாகி மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறாள். ஒழுங்காக வேலைக்கும் செல்வதில்லை. தினமும் சண்டை போட்டு குடிப்பதற்கு பணம் கேட்டு அனைவரையும் துன்புறுத்துகிறான். இவனை எப்படி திருத்துவது என்று தெரியவில்லை. என்னபரிகாரம் செய்ய வேண்டும்? யார் செய்தால் பலன் கிடைக்கும்? நான் செய்யலாமா அல்லது அவன் மனைவி செய்ய வேண்டுமா?
- சிங்காரம், திருவண்ணாமலை.

திருவாதிரை நட்சத்திரம், மிதுனராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்துவருகிறது. நல்ல திறமைசாலியான உங்கள் மகனின் இன்றைய நிலைக்குக் காரணம் என்ன என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். அவர் என்னதான் பிடிவாதம் செய்தாலும் குடிப்பதற்கு பணம் தருவதை நிறுத்துங்கள். தற்போதைய கிரஹநிலையின்படி வருகின்ற சித்திரை மாத வாக்கில் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படலாம். அதுபோன்ற சூழலைச் சந்திக்கும்போது அவர் திருந்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். உடல்நிலை சரியில்லாமல் அவர் அவதிப்படும்போது மனைவியின் சேவை அவரது மனதை மாற்றும்.

மனைவியின் மீது அவருக்கு இருந்து வரும் சந்தேகமும் காணாமல் போகும். ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய் இவரை நல்லபடியாக வாழ வைப்பார். பெண் குழந்தை வளர வளர இவரது மனநிலையும் மாறுபடும். தற்போது நடந்து வரும் தசாபுக்தி நல்ல சம்பாத்யத்தையும் தரும். செவ்வாய் தோறும் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி அவரது மனைவியை வழிபட்டு வரச் சொல்லுங்கள். துர்கையின் சந்நதியில் இருந்து பிரசாதமாக எலுமிச்சம்பழத்தைப் பெற்று அதனை சாறு பிழிந்து உங்கள் மகனுக்கு கொடுத்து வர அவரது மனநிலையில் மாற்றத்தைக் காண்பீர்கள்.

“ஸர்வபாதா ப்ரசமனம் த்ரைலோக்யஸ்ய அகிலேச்வரி
ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத்வைரி விநாசனம்,”

?கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கொரோனா தலைவிரித்து ஆடிய சமயத்திலும் சிரமம் பாராது என் மகனின் திருமணம் நடந்தது. ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் உறவினர்கள் என்று நம்பி
திருமணம் செய்தோம். மருமகளின் நடத்தை சரியில்லை. விவாகரத்து கோரியுள்ளோம். பூர்வ ஜென்ம பாவமா தெரியவில்லை. என் மகனின் நல்வாழ்விற்கு வழி காட்டுங்கள்.
- ராமசாமி, மதுரை.

கிருத்திகை நட்சத்திரம், ரிஷபராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகுதசையில் கேது புக்தி நடந்துவருகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சூரியனின் பலவீனமான சஞ்சார நிலையும் எட்டில் அமைந்துள்ள புதன், செவ்வாயின் இணைவும் கடுமையான களத்ர தோஷத்தினைத் தந்துள்ளது. தற்போதைய கிரஹநிலையின்படி இவர் தனது உத்யோகத்தில் கவனத்தை செலுத்து வது நல்லது. மறுமணத்திற்கு தற்போது அவசரப்பட வேண்டாம். உத்யோக ரீதியான பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் இவரது மனதிற்கு நிம்மதியை உண்டாக்கும். கடுமையான மன உளைச்சலில் இருக்கும் அவரை எப்படி தனியாக வெளியூருக்கு அனுப்புவது என்று சிந்திக்காமல் தைரியமாக அனுப்பி வையுங்கள். இன்னும் ஒரு வருடம் கழித்து இவருக்கேற்ற பெண்
வந்து சேர்வார். 2023ம் ஆண்டு தை மாதவாக்கில் இவரது மறுமண வாழ்வு மலரும்.

அதுவரை அவசரப்படாமல் பொறுமையாக இருங்கள். மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கும் அவர் மனம் ஆறுதலடைய சிறிது காலம் பிடிக்கும். ஞாயிறு
தோறும் ராகுகால வேளையில் சரபேஸ்வரரை வணங்கி வரச் சொல்லுங்கள். கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வணங்குவதாலும்
வாழ்வினில் வளம் பெறுவார்.“கலங்க கண்டாய பவாந்தகாய கபால சுலாங்க கராம்புஜாய
புஜங்க பூஷாய புராந்தகாய நமோஸ்து துப்யம் சரபேச்வராய,”


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்