SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சபரிமலைக்கு மாலை போடுபவர்கள் நீலம் அல்லது காவி நிற வஸ்திரம்தான் அணிய வேண்டுமா?

2021-12-08@ 13:59:15

?சபரிமலைக்கு மாலை போடுபவர்கள் நீலம் அல்லது காவி நிற வஸ்திரம்தான் அணிய வேண்டுமா? ஐயப்பன் கோவிலில் பூஜை செய்பவர்கள் வெள்ளை நிற வேட்டி தானே அணிந்திருக்கிறார்கள், அப்படியிருக்க வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து பக்தர்கள் மாலை போட்டு மலைக்கு செல்லக்கூடாதா?
- ஜி.டி. சுப்ரமணியம், கொளத்தூர்.

சாதாரண நாட்களில் ஆடை அணிந்து கொள்வதற்கும், விரதம் இருக்கும் நாட்களில் ஆடை அணிந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. விரதம் இருக்கும் நாட் களில் அணிந்து கொள்ளும் வஸ்திரத்திற்கு ‘தீக்ஷா வஸ்திரம்’ என்று பெயர். சபரிமலைக்கு மாலை அணிந்து கொள்வதற்கு முன்னர் குருஸ்வாமியின் கரங்களால் ஆசிர்வாதம் செய்யப்பட்ட வஸ்திரத்தைப் பெற்று அதனை உடுத்திக் கொள்வது வழக்கம். இது குருவிடம் இருந்து தீக்ஷை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறை. இவ்வாறு தீக்ஷை பெறும்போது சிஷ்யர்கள் ஒரே மாதிரியான உடைகளை அணிவது மரபு. எளிதில் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்துகொள்வது போல.

ஏழை, பணக்காரன், ஜாதி, மத, இன பேதம் ஏதும் இன்றி மாணவர்கள் அனை வரும் ஒரே மாதிரியான சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்வதைப் போல பக்தர்களும் எந்தவிதமான பாகுபாடும் இன்றி ஒரே மாதிரியான வஸ்திரத்தை அணிந்து இறைவன் சந்நதிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக இந்த தீக்ஷா வஸ்திரத்தை குரு ஸ்வாமிகள் பரிந்துரை செய்தனர். இதில் வருகின்ற நிற வேறுபாட்டிற்கும் அர்த்தம் உண்டு. இந்த வஸ்திரங்களுக்கும் வர்ணாசிரம முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வேத சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்து, அதன் வழி நடக்கின்ற பெரியோர்களுக்கு வெள்ளை நிற வஸ்திரம் தீக்ஷா வஸ்திரமாக அறிமுகம் செய்யப்பட்டது.
 
நீங்கள் குறிப்பிடும் ஐயப்பன் கோவில் அர்ச்சகர்கள் இந்த பிரிவினில் வருகிறார்கள். சபரிமலை அர்ச்சகர்கள் மாத்திரம் அல்ல, சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்து அதன்படி நடக்கின்ற கேரளாவைச் சேர்ந்தவர்கள் பலரும் வெள்ளைநிற வஸ்திரத்துடன் சபரிமலைக்கு வருவதை இன்றும் நேரடியாகக் காண முடியும். சிலருக்கு சிவப்பு நிற வஸ்திரமும், சிலருக்கு மஞ்சள் நிற ஆடையும், அடிப்படைத் தேவைகளை குறையின்றி நிறைவேற்றும் தொண்டு செய்பவர்களுக்கு கருப்பு அல்லது நீலநிற வஸ்திரமும் பரிந்துரை செய்யப்பட்டது.

இது அவரவர் செய்யும் தொழிலுக்கு ஏற்ப வழங்கப்பட்ட சீருடையே அன்றி ஜாதியின் அடிப்படையில் அல்ல. வர்ணம் என்றால் நிறம் என்று பொருள். அவரவர் செய்யும் அடிப்படையில் வெவ்வேறு நிறத்தை உடைய வஸ்திரம் சீருடையாக அமைந்ததால்தான் இதற்கு ‘வர்ணாசிரம முறை’ என்ற பெயரும் வந்துள்ளது. இதில் காவி நிற வஸ்திரம் என்பது தாம்பத்ய வாழ்வினைத் துறந்த சந்நியாசிகளுக்கும், சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்ட வயது முதிர்ந்த முதியோர்களுக்கும் மட்டுமே உரியது.

சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் காவி நிற வஸ்திரம் அணிவது அத்தனை சிலாக்கியமில்லை. நீங்கள் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுணர்ந்து அதன்படி நடந்து வருபவர் என்றால் வெள்ளை நிற வஸ்திரத்தையே தீக்ஷா வஸ்திரமாகக் கொண்டு சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லலாம். அவ்வாறு இன்றி சாதாரண லௌகீக வாழ்க்கையில் உள்ளவர் எனும் பட்சத்தில் நீல நிற ஆடையே தீக்ஷா வஸ்திரத்திற்கு உகந்தது. வயது முதிர்ந்தவர் என்றால் காவி நிற வஸ்திரத்தை அணியலாம். இதுபோன்ற தீக்ஷா வஸ்திரங்கள் இறைவனின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் என்பதைப் புரிந்துகொண்டோமேயானால் சிந்தை தெளிவு பெறும். பரம்பொருளை எளிதில் உணரமுடியும்.

?ஆணும் பெண்ணும் இணைகின்ற சாந்தி முகூர்த்த நேரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறார்களே, இது அவசியம் தானா?
- இரா.அன்பழகன், காட்பாடி.

சிவசக்தி ஐக்கியமாக இந்த முகூர்த்தத்தினைச் சொல்வார்கள். திருமணத்திற்கு லக்னம் நிச்சயிக்கும்போது எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு இந்த சாந்தி முகூர்த்த லக்னத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த முகூர்த்தமானது தனிப்பட்ட ஒரு மனிதனின் மன சந்துஷ்டிக்காக நிர்ணயிக்கப்
படுவது அல்ல. ‘பிரஜோத்பத்தி’ என்ற முக்கியமான கடமையை நிறைவேற்றுவதற்காக பெரியவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ள ஒரு நிகழ்வுதான் இந்த சாந்தி முகூர்த்தம் என்பது. எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாக சற்று விளக்கமாகவே காண்போம்.

ஒருவன் தனது பிரம்மச்சரிய காலத்தில் வேதங்களையும், வித்தைகளையும் சரிவர கற்பதன் மூலம் ரிஷிகளை திருப்திபடுத்துகிறான். வேதங்கள் என்றால் இது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்காக என்று தவறாக எண்ணக்கூடாது. இன்று நாம் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொள்கிற கணிதம், அறிவியல் உட்பட அனைத்துப் பாடங்களும் ஏற்கெனவே வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள்தான். இவை அனைத்தும் அன்றைய காலக்கட்டத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகளான மகரிஷிகளின் மூலமாக இந்த உலகத்திற்கு எடுத்துரைக்கப்பட்டவை.

இதையே நாம் வேதமாக போற்றுகிறோம். தங்களால் படைக்கப்பட்ட கருத்துக்களை ஒருவன் படித்து அதன்படி நடந்துகொள்வதைக் கண்டு மகரிஷிகள் திருப்தி அடைகின்றனர். ஆக, வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை கல்வியினைக் கற்றுக் கொள்கின்ற காலம் பிரம்மச்சரியம். அதே போல ஒருவன் யாகங்கள், யக்ஞங்கள் முதலானவற்றை செய்வதன் மூலம் தேவர்களை திருப்திபடுத்துகிறான்.

யாகங்கள் செய்வது என்றால் அவனே நேரடியாகச் செய்ய வேண்டும் என்பது இல்லை. அதற்குரிய பொருளுதவியைச் செய்து, தகுந்த பண்டிதர்களைக் கொண்டு அந்தந்த தேவர்களுக்கு உரிய அவிர்பாகத்தைத் தருவதன் மூலம் தேவர்களையும், கந்தவர்களையும் திருப்திப்படுத்தி அவர்களுடைய ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்கிறான். அடுத்ததாக பூமியில் பிறந்த அனைவருக்கும் தங்களுடைய பித்ருக்கள், அதாவது முன்னோர்களை திருப்திபடுத்த வேண்டிய முக்கியமான கடமை ஒன்று உண்டு.

அந்த முக்கியமான கடமையின் பெயர்தான் பிரஜோத்பத்தி. அதாவது பிரஜைகளை உற்பத்தி செய்வது. படைக்கும் தொழிலைச் செய்கின்ற பிரம்மாவினுடைய அருளாசி அந்த நேரத்தில் தேவைப்படுகிறது. வம்சம் விருத்தி அடையும்போதுதான் பித்ருலோகத்தில் உள்ள முன்னோர்கள் மோட்சகதிக்குச் செல்ல இயலும். ஒரு பெண்ணின் துணையின்றி ரிஷிகளையும், தேவர்களையும் முன்சொன்ன இரண்டு கடமைகளின் மூலம் திருப்திபடுத்திவிட முடியும்.

ஆனால் பித்ருக்களை கரையேற்ற, அவர்களை திருப்திபடுத்த ஒரு பெண்ணின் துணை நிச்சமாகத் தேவைப்படுகிறது. சிவமும், சக்தியும் ஐக்கியமானால் மட்டுமே உலகத்தில் உயிர்கள் தோன்ற முடியும். உயிர்கள் இன்றி உலகம் இயங்காது. ஆக இந்த உலகத்தையே இயக்குகின்ற அந்த சிவசக்தி ஐக்கியத்தினை ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்வினில் முதன்முதலில் உணருகின்ற அந்த சாந்தி முகூர்த்தம் என்பது இதனால்தான் இத்தனை முக்கியத்துவமும், சிறப்பும் பெறுகிறது.

?தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்றால் என்ன என்பதை விளக்க முடியுமா?
- அருந்தாச்செல்வி, திருமங்கலம்.

தீட்டு என்கிற சொல் புரிந்துகொள்ளப் படாமலேயே காலம் காலமாக பெரும் பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இது குறித்து தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு. இப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே.

அதனால்தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள். தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? சிந்தித்துப் பாருங்கள். இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்காக இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுதுதான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.

தீட்டு என்பது வேறு, அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்ற ஐந்தும் ஆகும். முதலில் காமத்தீட்டு என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம். காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். அதற்காகவே முயற்சி செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்துவிட்டால், மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

இல்லையென்றால் மனதில் சதா வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.  இதனால்தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றார்கள். இரண்டாவதாக குரோதத் தீட்டு என்பதன் விளக்கத்தினைக் காண்போம். குரோதம் என்பது கோபம்.  யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன. சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்
பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள், சிலர் தூக்கில் இடப்படுவார்கள்.

கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர்.கோபம் எழும்பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால்தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர்.

குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு. மூன்றாவதாக வருவது லோபத் தீட்டு. லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப் பதும் எல்லாம் சுயநல வேகமே. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால்தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள்.

இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு. அடுத்து வருவது மதத் தீட்டு. மதம் என்பது கர்வம் (ஆணவம்) ஒருவரையும் மதிக்காது மமதையோடு இருப்பது இது. எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வத்தினையும் தருவது.  தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் ஆணவத்தால் யாவரையும் துன்பப்படுத்தித் தான் மகிழ்ச்சி அடையும் குணத்தினையும் தருவது. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால்தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர்.  

கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு. இறுதியாக வருவது மாற்சரியத் தீட்டு. மாற்சரியம் என்பது பொறாமை. பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்கமுடியாமல் வேதனைப்படுவது இது. எந்த நேரமும் நாம் நல்லபடியாக இல்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது. எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப்படுவார்கள், எப்பொழுது செத்துப்போவார்கள் என்று எண்ணத்தூண்டுவது.

தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால்தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு. இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இவற்றைத் தொடுபவர்களே தீட்டு உடையவர்கள் ஆகிறார்கள்.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

 • nellai-16

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

 • nepallumbii

  நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

 • ooty-rose-exhi-14

  50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

 • odisha_park

  இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்