SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வார விசேஷங்கள்

2021-12-08@ 13:27:03

9.12.2021 - வியாழக்கிழமை -

சம்பக சஷ்டி

முருகப்பெருமானை சுவாமிநாதன் என்று அழைக்கிறோம். காரணம் அவன் ஈசனுக்கே குருவாக விளங்கி சுவாமிமலையில் அருள் தருகின்றார். ஞான பண்டிதனாக விளங்குகின்ற முருகப்பெருமானுக்குரிய சஷ்டி தினம் இன்று.ஆறுமுகப் பெருமானை ஆலயங்களிலோ  வீட்டிலோ, விளக்கு ஏற்றி, செவ்வரளி பூக்களால் மாலை சூட்டி, தூப தீபங்கள் காட்டி, வணங்குவது மிகச் சீரிய பலனைத் தரும். கந்த சஷ்டி கவசம், சண்முகக் கவசம், திருப்புகழ் முதலிய நூல்களை இன்று பாராயணம் செய்வது நல்லது.கார்த்திகை மாதத் தேய்பிறை சஷ்டிக்கு சம்பக சஷ்டி அல்லது சுப்பிர மணிய சஷ்டி என்று பெயர்.  புதுக்கோட்டைக்கு பக்கத்திலுள்ள திருப்பத்தூரில் சிவகாமசுந்தரி உடனுறை திருத்தளிநாதர் திருக்கோயில் ஒன்று உண்டு. இந்த ஆலய மூர்த்தியை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாணிக்கவாசகர், சேரமான் பெருமாள் நாயனார், அருணகிரிநாதர் போன்ற அருளாளர்கள் பாடிப்  பரவி  இருக் கின்றனர். காலத்தினால் தொன்மையான இத்திருத் தலத்தை மருது பாண்டியர்கள் மிகச் சிறப்பாக திருப்பணி செய்திருக்
கின்றனர். அவர்களின் திருவுருவங்களும் இத்திருக்கோவிலில் உண்டு.  இங்கு யோக பைரவர் கோயில் கொண்டிருக்கிறார். மேற்கு நோக்கி அவர் யோகநிலையில் வீற்றிருந்து அருளுகின்றார். இவருக்கு
வாகனம் கிடையாது.

பிரம்மனுடைய அகந்தையை அடக்குவதற்காக சிவபெருமான் தன் புருவத்தின் மத்தியில் இருந்து சிவ அம்சமாக பைரவரை படைத்தார் என்பது புராணம்.
அவருக்குக் கார்த்திகை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை திதியில் இருந்து ஆறு நாட்கள் சம்பக சஷ்டி உற்சவம் நடைபெறும். அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்டை பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷன பைரவர், சம்ஹார பைரவர் ஆகிய அஷ்ட பைரவர்களுக்கும் ஒரே சமயத்தில்
விசேஷமான வழிபாடுகள் நடைபெறும்.
இன்றைய தினம் நகரத்தார் “பிள்ளையார் நோன்பு” என்ற ஒரு விஷயத்தையும் செய்கின்றனர். கார்த்திகை மாதம் சஷ்டி திதியும் சதய நட்சத்திரம் கூடிய நாளில் இந்த பிள்ளையார் நோன்பு கடைப் பிடிக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்துக்கு அடுத்த நாள் ரோகிணி நட்சத்திரத்தில் தொடங்கி, சதய நட்சத்திரத்தன்று நிறைவு செய் கின்றார்கள். இந்த நோன்புக்கு ஒரு கதையும் உண்டு.அக்காலத்தில் பூம்புகார் பட்டினத்தை சுற்றி கடல் வாணிகம் செய்யக்கூடிய நகரத்தார் அதிகம் பேர் இருந்தார்கள். நாம் மகானாக கருதுகின்ற பட்டினத்தார்(திருவெண்காடர்) கூட அவர்களில் ஒருவர் . அவர்கள் வியாபாரம் செய்வதற்காக கடல் பயணம் மேற்கொள்வார்கள். அப்படி மேற்கொண்ட ஒரு சமயம் மிகப்பெரிய புயல்காற்று எழுந்தது. புயலில் அவர்கள் பயணம் செய்த கப்பல் சிக்கியது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர்கள் இறைவனை வணங்கினர். தங்களை காப்பாற்றும்படியாக தங்களுடைய குல தெய்வமான மரகதப் பிள்ளையாரை வேண்டிக் கொண்டார். கப்பல் புயலில் இருந்து காப்பாற்றப்பட்டது. ஏதோ ஒரு கரையில் ஒதுங்கினார். உயிர் பிழைத்தனர். அவர் கள் கப்பலில் இருந்து காப்பாற்றி கரை சேர்க்கப்பட்ட நாள் கார்த்திகை மாதம் சஷ்டி திதி சதய நட்சத்திர நாள்.அந்த நாளில் தங்கள் உயிரைக் காப்பாற்றிய  பிள்ளையாருக்கு இந்த விரதத்தை அவர்கள் இருக்கின்றனர். இன்றும் அதை தொடர்கின்றனர். நம்பிய தெய்வம் எப்படியும் காப்பாற்றிவிடும் என்கிற நம்பிக்கையைத் தரும் விரதம் நகரத்தார் பிள்ளையார் நோன்பு.

10.12.2021- வெள்ளிக்கிழமை -
சூரிய விரதம்- பவ சப்தமி

இன்று சூரிய விரதம் இருப்பதற்கான நாள். இன்று காலை சூரிய உதயத்தில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. இயன்றால் ஆதித்ய ஹிருதயம் போன்ற சூரிய
தோத்திரங்களைச் செய்யலாம். அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு,  சூரிய உதயத்தின் போது, பொங்கல் வைத்து படைக்கலாம். சூரியனை தரிசித்தவாறே, அவருக்குரிய மந்திரங்களை குறிப்பாக சூரிய காயத்ரி போன்ற மந்திரங்களைத் துதித்து வழிபட வேண்டும்.பின்பு நவகிரக சந்நதிக்கு சென்று சூரிய பகவானுக்குரிய செந்தாமரை பூவைச் சமர்ப்பித்து, கோதுமை தானியங்கள் சிறிதளவு வைத்து, நெய்தீபங்கள் ஏற்றி,  தூப தீபங்கள் கொளுத்தி, கோதுமை கொண்டு செய்யப்பட்ட இனிப்பு உணவுகளை நைவேத்தியமாக வைத்து, வழிபட வேண்டும்.

இதன் மூலமாக அளப்பரிய ஆற்றலைப்  பெறலாம். உடலாரோக்கியம் மேம்படும். கொடிய நோய்கள் ஏதும் அண்டாது. முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும். சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும்.
நவகிரகங்களுக்கு தலைவனாக விளங்கக்கூடிய சூரியனுடைய அருள் கிடைத்து விட்டால் மற்ற கிரகங்களின் பூரணமான அருளைப் பெற்றுவிடலாம்.
இந்த தினத்தைப் பவ சப்தமி என்று சொல்லுவார்கள். கார்த்திகை மாதம், அமாவாசைக்குப் பிறகு வருகின்ற ஏழாவது திதி சப்தமி திதி. இம்முறை வெள்ளிக்கிழமையில் வருவதால்  சூரிய நாராயணன் அருளையும், மகாலட்சுமித் தாயார் அருளையும் பெறலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்