ஐயப்பன் தலங்கள்
2021-12-06@ 13:39:14

திருச்சி நீதி மன்ற வளாகம் அருகே ஐயப்பன் ஆலயம் உள்ளது. 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப் படுகின்றன; இந்திய புண்ணியத் தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 444 புனிதக் கற்கள் ஆலயத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகின்றன.
சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் மகாசாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்ம சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா என எட்டு சாஸ்தாக்கள் திசைக்கொருவராக அருள்கின்றனர்.
சென்னை அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் ஐயப்ப சாஸ்தா ஆலயம் உள்ளது. இவர் திருவுரு முன் ஒரு வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதன்மீது தேங்காய்மூடி நெய் தீபமேற்றி வழிபட நல்ல வேலை கிடைப்பதாக நம்பிக்கை.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் ஆலயம் வடசபரி என போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் தங்கத்தேரில் ஐயன் உலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.
திருத்துறைப்பூண்டி அருகே காடந்தேத்தியில் ஐயப்பன் ஐயனாராக அருளாட்சிபுரிகிறார். இவரை சுகப்பிரம்ம ரிஷி வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.
சீர்காழி தென்பாதியில் யானை வாகனத்தில் பூரணா, புஷ்கலாவோடு சாஸ்தா வீற்றருள்கிறார். தேவேந்திரனிடமிருந்து இந்திராணி பிரியாமல் காத்ததால் இவர் கைவிடேலப்பர் என
போற்றப்படுகிறார்.
கையில் பூச்செண்டுடனும், இருபுறமும் தேவியருடனும் அமர்ந்த நிலையில் அருளும் சாஸ்தாவை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயப் பிராகாரத்தில் தரிசிக்கலாம்.
கன்னியாகுமரி, ஆச்ராமம் தலத்தில் உச்சிக்கொண்டை போட்டு, திருமார்பில் பூணூல் தவழ, கழுத்தில் பதக்கம் மின்ன, நெற்றியில் திருநீற்றுப் பட்டையுடன் ‘அஞ்சனம் எழுதிய சாஸ்தா’ எனும் பெயரில் ஐயப்பன் காட்சி தருகிறார்.
சபரிமலையில் ஐயப்பன் யோகாசன முறையில், மூலாதாரத்து குண்டலினி சக்தி மேலெழ உதவும் ஆசனத்தில் வீற்றருள்கிறார். அறிவின் அடையாளமான சின்முத்திரை ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கிய நிலையையும், ஹரிஹர ஐக்கியத்தில் பிறந்ததை கால்களை இணைக்கும் பட்டையும் உணர்த்துகிறது.
விழுப்புரம் அருகே நேமூர் பாதையில் எண்ணாயிரம் கிராமத்தில் செம்மணேரி ஆண்டவர் எனும் பெயரில் சாஸ்தா அருள்கிறார். தன்னை குலதெய்வமாகக் கொண்டவர்கள் தன்னை மறந்தால் அவர்கள்
கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் அற்புதத்தை நிகழ்த்துபவர் இவர்.
திருவையாறு&திருக்காட்டுப்பள்ளி பாதையில், கூத்தூரில், கேரள வியாபாரிகள் கொணர்ந்த ஐயப்பன்விக்ரகம், வழியில் இங்கே நிலை கொண்டுவிட்டார். கருவறையில் தேவியருடன் ஐயப்பனும்,
விநாயகப்பெருமானும் அருள்கிறார்கள்.
பூத கணங்கள் புடைசூழ தன் நாயகியருடன் ஐயன் அருளும் தலம் சொரிமுத்தையனார் ஆலயம். தென்திசையை சமன் செய்ய வந்த அகத்தியருக்கு ஐயன் காட்டிய அருட்கோலம் இது.
ஈசன் பவனி வரும் திருவழகை உலாவாக்கினான் சேரமான் பெருமான். அதை பூவுலகிற்கு தெரியப்படுத்த அந்த ஏட்டுக்கட்டினை ஏந்திய ஐயனை அரங்கேற்றிய ஐயனார் எனும் பெயரில் திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் பாதையில் உள்ள பிடவூரில் தரிசிக்கலாம்.
தென்காசி அருகே குற்றாலத்தில் நான்கு திசைகளிலும் ஐயன் அருள்புரிகிறார். இதில் மேலவாசல் தர்மசாஸ்தா, பல குடும்பங்களுக்கு குலதெய்வமாய் அருள்புரிகிறார். பீட வடிவில் அருவமாக ஐயன் இங்கு அருள்வது சிறப்பு.
திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி அருகே, ஏரிக்கரை ஓரத்தில் கர்ப்பிணி ஒருத்திக்கு கையில் விளக்கொளியுடன் சடைமுடியுடன் வந்து பிரசவம் பார்த்த ஐயன், பாலக வடிவில் நின்ற கோலத்தில் கோயில் கொண்டுள்ளார்.
சேங்காலிபுரம் அருகே எருமைத்தலை கிராமத்தில் மாவிலங்கை மரத்தடியில் யானை மீதமர்ந்த கம்பீரமான சாஸ்தாவை தரிசிக்கலாம்.
நெல்லை, பாளையங்கோட்டை, சாந்திநகரில் சங்குகர்ணன் எனும் அரக்கனை அழித்த சண்பகாரண்ய சாஸ்தா எனும் மத்யாரண்யேஸ்வர சாஸ்தாவை தரிசிக்கலாம்.
மயிலாடுதுறை, வஸ்த்ரராஜபுரம் எனும் இடத்தில் தேவியரை அணைத்தபடி காட்சிதரும் ஐயனை தரிசிக்கலாம். இங்கு நாகம் ஒன்று ஐயனுக்கு காவலாக உள்ளதால் இவர் நாகசாஸ்தா என்றும் வணங்கப்படுகிறார்.
தஞ்சை, மெலட்டூர் அருகே சுரைக்காயூரில் ஐயன் தன் தேவியுடன் அருள்கிறார். வருடா வருடம் மெலட்டூரில் நடக்கும் பாகவதமேளாவில் ஹரிஹரபுத்ர ஜனனம் மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது.
- ஜெயலட்சுமி
மேலும் செய்திகள்
வரலட்சுமி விரதத்தன்று தரிசிக்க வேண்டிய தலங்கள்
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நாக சதுர்த்தியன்று தரிசிக்க வேண்டிய நாகநாதர் கோயில்கள்
பழதலவிருதட்சங்கள்
ஆனித்திருமஞ்சனம் நிகழும் ஆடல்வல்லான் ஆலய சிற்பங்கள்!
ஆலயங்கள் அறிவோம்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!