SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

தொன்மங்களும் மந்திரப் பாடல்களும்-4

2021-11-23@ 13:48:40


‘‘இன்னொரு கதையில் மாசாணிக்கு பிரசவம் பார்க்க வரும் மருத்துவச்சி, மாசாணி என்ற பெண்ணுக்கு கொடூரமான மரணம் நிகழும். அதுவும் இந்த இடத்தில், இந்த நேரத்தில் என்று அறிந்து, மாசாணியின் அவளது ஊருக்கு வருகைக்காகக் காத்திருக்கின்றாள். மாசாணியும் அவளது கணவனும் வருகையில் அவளுக்குப் பிரசவவலி ஏற்படுகிறது. அவளை ஓரிடத்தில் இருக்கச்செய்து,
அருகிலுள்ள ஊரில் யாரேனும் மருத்துவச்சி இருக்கிறாரா என்று தேடுகிறான். கடுமையான மழை, அமாவாசை இருட்டு மருத்துவச்சி வீட்டுக் கதவைத் தட்டு முன்னே அவள் அரிக்கேன் விளக்குடன் அவனுடன் வரத் தயாராகிறாள். ஆனால் மாசாணி அங்கே இறந்து கிடக்கின்றாள்.

மருத்துவ மூதாட்டி சொல்கின்றாள். ‘‘இறந்து போன தாயும், சேயும் சாதாரணமானவர்கள் அல்ல. இவர்கள் அம்மனின் அவதாரம், இவர்கள் சாதராணமானவர்களாகப் பிறக்கவில்லை, வானத்திலிருந்து மண்ணிற்கு தேவதைகள் போல் தேரில் வந்தவர்கள் விண்ணகத்திலுள்ள தேவர்களும் முனிவர்களும் பூமாரி பொழிவது என் அகக் கண்களுக்குத் தெரிகிறது. இவர்கள் அவதாரம் நோக்கம் நிறைவேறியபடியால் தெய்வமானார்கள் என்று கதை நீள்கிறது.’’ இங்கே மாசாணியை அம்மனின் அவதாரம் என்று கதையாடல் நிகழ்த்தப்படுவதைப் பார்க்கிறோம்.
(கதை எண்:11)

இன்னொரு கதையையும் இதே மருத்துவச்சி, அம்மனின் அவதாரம் எனும் பொருளில் சொல்கின்றாள். ‘‘காமதேனு எனும் பசுவை அரக்கர்கள் கைப்பற்றி, தமது இடத்திற்கு இழுத்துச் செல்ல முயன்றனர். இதை உணர்ந்த காமதேனு பார்வதி பரமசிவனை வேண்டுகிறது. காமதேனுவை அரக்கர்களிடமிருந்து மீட்டு தங்களின் நந்தவனத்தில் இடம் கொடுக்கிறார்கள். இதற்
கிடையே காமேதேனுவைக் காணாமல் தேவர்கள் தேடியலைந்து பார்வதி, பரமசிவன் இருக்குமிடம் வந்து காமதேனுவை வேண்டி நிற்கிறார்கள். பார்வதி தேவியும் காமதேனுவைப் பார்த்தவுடன் காமதேனு தலைகுனிந்து நின்றது. காரணம் அரக்கர்கள் பிடித்து இழுத்தபோது, அச்சத்தால் பார்வதி முன்னே சாணம் போட்டதை இழிவென்று கருதி நின்றதாம். தேவி ‘பரவாயில்லை நீ செய்த செயல் வருந்தத்தக்கதல்ல. இது நான் பூமியில் அவதாரம் எடுப்பதற்காகவே நடந்தது’’ என்றாள். இந்த காமதேனு போட்ட சாணியில்தான் மாசாணி வழுக்கி விழுந்து தெய்வமானாள். அதனால் சாணியும் புனிதமாக வழிபடப்படுகிறது. மாசாணியை அம்மனாகவும் சாணியைப் புனிதமானதாகவும் அன்னை தேவிதான் ஆக்கினாள் என்று சொல்லப்படும் கதையும், இங்குக் கருதத்தக்கது.
(கதை எண்.11)

இன்னொரு கதையில் பிரியவிரதன் என்பவன் இல்லற வாழ்வு ஏற்காமல் யோக மார்க்கமே சிறந்தது என்று வாழ்ந்துவந்தான். இதனையறிந்து அவனது தந்தை ‘‘நீ இல்லறம் ஏற்காவிடில் உனக்கு பிதுர்க்கடன் செய்யக்கூட புத்திரப்பேறு இல்லாமல் போய்விடுமே’’ என்று சொல்லியும் அவன் மறுக்க, தந்தை பராசக்தியிடம் வேண்டினான். பிரியவிரதனின் மனம் மாறியது. அவனுக்குத் திருமணமானது. ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை. கணவனும் மனைவி மாலதியும் புத்திரகாமேஷ்டியாகம் செய்து ஈஸ்வரியை வேண்டிட, மாலதி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியானாள். பெண் குழந்தை பிறந்தது ஆனால் இறந்து போனது.

இறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு ஈஸ்வரியிடம் போனான் பிரியவிரதன். தேவி ஒளிவடிவில் பிரியவரதன் முன்னே தோன்றி, கலங்காதே இன்பதுன்பங்கள் நிறைந்தது தான் இல்லறம். இந்தக் குழந்தையை உயிர்ப்பிக்கின்றேன். ஆனால் அவள் எனது அம்சம், விரைவில் என்னை வந்து சேர்ந்துவிடுவாள். உனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும் வாக்களிக்கின்றாள். அதன்படி இறந்த குழந்தை உயிராகி பிரியவிரதன் வீட்டில் வளர்ந்து, மானுடர் முறைப்படி திருமணம் நடந்து மாட்டுச் சாணத்தில் வழுக்கி விழுந்து தெய்வமாகியது என்று ஒரு கதை சொல்லப்படுகிறது.
(கதை எண்:11)

பார்வதிக்கும் சிவனுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. பார்வதி அம்மா கோபித்துக்கொண்டு விஸ்வரூபம் (வானளவு உயரம்) எடுக்க, அவரிடம் சிவனும் விஷ்ணுவும் சாந்தப் படுமாறு கேட்டுக் கொள்ள அவர் கோபத்தைத் தணிக்க அவரை அப்படியே படுக்கும்படி செய்கின்றனர். அந்த கிடந்த கோலமே மாசாணியம்மன் ஆகும் என்று ஒரு கதை சொல்லப்படுகிறது.
(கதை எண் :24)

ஈஸ்வரன் தட்சனிடம் பார்வதியைப் பெண் கேட்க, சுடுகாட்டுச் சாம்பலை உடைய சிவனுக்கு பெண் தர மறுக்க, சிவன் பார்வதியைக் கவர்ந்து சென்று மணமுடிக்கின்றார். சில காலம் கடந்த பின் தட்சன் யாகம் செய்யும் சடங்கிற்கு சிவனையும் பார்வதியையும் முறைப்படி அழைக்கவில்லை. இருந்தாலும் பார்வதி தட்சனின் யாகத்தில் கலந்து கொள்கின்றாள். தந்தையிடம் சிவனை முறைப்படி அழைக்க வேண்டுகின்றாள். தட்சன் மறுக்கிறான். இதனால் அதே யாகத்தில் விழுந்து உயிர்விடுகின்றாள். இதன்பின் தேவர்களின் வேண்டுதலின்படி மறு பிறவி எடுத்து மயானத்தில் குடிகொண்டவன் தான் மாசாணி. மயானத்திலிருந்து எழுந்ததால் மாசாணியானாள். இக்கதை பார்வதிதான் மாசாணி என்று சொல்கிறது.
(கதை எண்:25)

‘‘மாசாணி குறித்த வரலாற்றுச் செய்திகள் மாங்கனியைத் தின்ற குற்றத்திற்காக நன்னனால் கொலை செய்யப்பட்ட, பெண்ணே மாசாணி என்கின்றன.’’ துளசி இராமசாமி என்பவர் எழுதியுள்ள மாசாணியம்மன் வரலாற்று ஆய்வு நூல் நன்னனையும், மாசாணியையும் கொங்கு வேளாளர் சாதியைச் சேர்ந்தவர் என்று கூறுகிறது. மாங்கனியைத் தின்றதற்காகப் பெண் கொலைபுரிந்த நன்னன் என்று சொல்லப்படும் வரலாறு சங்க இலக்கியம், குறுந்தொகையில் 292ம் பாடலில் இடம்பெறும் பின்வரும் செய்தியே காரணமாகும். இதனைப் பாடிய புலவர் பரணர் ஆவார். காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு.

மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு. அவள் நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்,
பெண் கொலைபுரிந்த நன்னன் போல,

வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை:
ஒரு நாள். நகை முக விருந்தினன் வந்தென,
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே.

விருந்தினனாக ஒருநாள் வந்த அவன் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டான். அதனால் பகைவர் தாக்கும் ஊர் இரவெல்லாம் தூங்காமல் கிடப்பது போல என் தாய் என்னைப் பாதுகாத்துக் கொண்டு தூங்காமல் கிடக்கிறாள். இவள் நரகத்துக்குச் செல்வாளாக’ என்பது பாடலின் கருத்தாகும்.ஒரு பெண் குளிக்கச் சென்றாள். அப்போது மாங்காய் ஒன்று நீரில் மிதந்து வந்தது. அதனை அவள் எடுத்துத் தின்றுவிட்டாள். அதற்காக அரசன் நன்னன் அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்தான். அவள் செய்தது குற்றமாயின் அந்தக் குற்றத்துக்குத் தண்டமாக 81 யானைகளும் அவள் எடை அளவு தங்கமும் அவளது சுற்றத்தார் தருவதாகக் கூறியும் ஏற்க மறுத்துக் கொன்றுவிட்டான். அதனால் அவனைப் பெண் கொலைபுரிந்த நன்னன் என்று குறிப்பிடலாயினர்.

அவன் இறந்த பின்னர் நரகலோகம் சென்றான். அவனைப் போல என் அன்னையும் நரகம் செல்வாளாக.  இவைகளெல்லாம் ஆனைமலை மாசாணி குறித்துச் சொல்லப்படும் பெருங்
கதையாடல்கள் ஆகும். இவைகள் மாசாணி என்ற முன்னோர் வழிபாட்டை, காளி என்ற பெருந்தெய்வமாக்க முயல்கின்றன. அதோடு நில்லாமல் அதை மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவளைப் பராசக்தி நிலைக்கு உயர்த்தி விட்டன. கதைகளில் மட்டுமல்ல ஏராளமான பாடல்கள் மாசாணி குறித்து உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றன.

‘‘காளியாகத் திகழ்பவளாம் மாசாணித் தாயே
கருணை உள்ளம் கொண்டவளாம்
மாசாணித் தாயே
திருசூலம் கொண்டவளாம் மாசாணித் தாயே
திருநடனம் புரிந்தவளாம் மாசாணித் தாயே’’
என்றும்

பகவதி நீயே பார்வதி நீயே
ஆனைமலை தனிலே வாழ்பவள் நீயே
 என்றும்

காளியும் நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே மாசாணி நீயே
என்றும்

சிம்ம வாகினி நீதானம்மா
விஷ்வரூபினி நீதானம்்மா
அங்காள ஈஸ்வரி நீதானம்மா
அனைத்தையும் காப்பவள் நீதானம்மா
என்றும்

சக்தியும் மாரியும் நீதானம்மா
சஞ்சலம் தீர்ப்பதும் நீதானம்மா
முத்து மாரியும் நீதானம்மா
மூகாம்பிகையும் நீதானம்மா
இந்து சக்தியும் நீதானம்மா
வேத சக்தியும் நீதானம்மா
மூல சக்தியும் நீதானம்மா
முதலும் முடிவும் நீதானம்மா’’

என்றெல்லாம் மாசாணியம்மன் குறித்து கட்டப்பட்டுள்ள வரலாறுகள். மாசாணியை முதலும் முடிவுமற்ற சக்தி வழிபாடாகக் காட்டுகின்றன.  இதில் மாசாணி மயானத்தில் ஆவி
வழிபாட்டுடன் இணைந்து தோன்றிய முன்னோர் வழிபாடென்பது முழுவதும் மறைந்து, காளியே மாசாணியாய் ஆனைமலையில் அவதாரமெடுத்துத் தங்கியுள்ளதாக மேற்கண்ட பெருங்கதையாடல்களின் வழி திரும்பத் திரும்ப நிறுவப்பட்டு வருகிறது. இங்கு நன்னன் என்ற மன்னன் வரலாறெல்லாம் மையம் இழந்து விளிம்புக்குத் தள்ளப்பட்டு விட்டதையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும். மாசாணி காளி தெய்வம் ஆன பின்பு, மனிதப் பிறப்புடைய நன்னனுக்கெல்லாம் இங்கு வேலையில்லை.

ஆனைமலை மாசாணியை சக்தியின் வடிவமென்று பெருங்கதையாடல்கள் கட்டி வைத்திருக்கிற ஒற்றை வரலாற்றை, மாசாணி குறித்து நாட்டுப்புற மக்களிடம் வழக்கிலுள்ள தொன்மக் கதைகள் கேள்விக்கு உள்ளாக்கி, மாசாணி எங்கள் குலத்தில் பிறந்த பெண் என்று சொல்லி குடும்பத் தெய்வம், குலதெய்வம் என்று கொண்டாடி வருவதை நாம் கருத்தில் கொண்டு அவை குறித்துப் பதிவு செய்யவும் வேண்டியிருக்கின்றது. சொக்கம்புதூரில் வழிபடப்படும் மாசாணியை அவர்கள் குலத்தில் தோன்றிய பெண்ணென்றே இம்மக்கள் பல கதைகளில் திரும்பத் திரும்ப சொல்கின்றனர். குழந்தை பெற முடியாமல், சாணியை மிதித்து வழுக்கி விழுந்தவள். மாமியார் கொடுமை தாங்காமல் கணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி, மயானத்தில் சாமியானவள்.

காதல் திருமணம் செய்துகொண்டால் ஊரைவிட்டு வெளியேறி மயானத்தில் தெய்வமானவள் என்று ஆனைமலை மாசாணி குறித்த தொன்மத்திற்குநேர் எதிரான ஒரு கதையாடல்கள் இம்மக்களிடம் வழக்கிலிருந்திருக்கின்றன. இவை களில் சில கதைகள் வருமாறு ‘‘ஆனைமலைப் பகுதியில் மன்னனுக்கு இணையாக வாழ்ந்த தேவேந்திர குலத்தைச் சேர்ந்த பெண் தான் மாசாணி. இவள் நன்னன் என்ற மன்னனின் மரத்தில் பழுத்த மாங்கனியைத் தின்றதால், நன்னன் அவளைக் கொலை செய்துவிடுகின்றான். அவள் உடலை மயானத்தில் புதைத்து, அதே இடத்தில் சாமியாகக் கும்பிட்டார்கள். அவளின் நினைவாகத்தான் சொக்கம்புதூரில் கோயில்கட்டி வழிபடுகின்றோம் என்று ஒரு கதை சொல்லப்படுகிறது’’
(கதை எண்:1)

இன்னொரு கதை ‘‘தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மாசாணிங்கிற ஒரு அழகான பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்துவந்தாராம். அப்போது மாசாணியை
பிள்ளைப் பேற்றுக்காக வளைகாப்பெல்லாம் செய்து, அவள் தாய் வீட்டுக்கு அனுப்புனாங்களாம். அப்ப திடீர்னு மழை பெய்ய, ஒரு மாட்டுக் கொட்டகையில் அவளை விட்டுவிட்டு, மாசாணியின் கணவன் மருத்துவச்சியைக் கூப்பிட போனாராம். மருத்துவச்சி வருவதற்குள் குழந்தை பிறக்க மாட்டாம இறந்து போயிட்டாளாம் மாசாணி. அதே இடத்திலேயே அவளை சாமியாக வைத்து வழிபட்டு வந்தாங்களாம்’’ என்று ஒரு கதை சொல்லப்படுகிறது.(கதை எண்:2) மற்றொரு கதை வருமாறு.

‘‘மாமியார் வீட்டில் மருமகள் மிகவும் கொடுமைக்கு ஆளாகிறாள். நிறைமாதக் கர்ப்பத்தோடு ஒருநாள் கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறி காட்டின் வழியே நடந்து வருகின்றாள். அப்போது அவளுக்குத் தாகம் எடுக்கிறது. காட்டில் தனியே இருந்த அவளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. காட்டிலேயே குழந்தை பிறக்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காததால் அவள் இறந்து விடுகிறாள் குழந்தையும் இறந்துவிடுகிறது. பின்னர் ஒரு நாள் ஒரு பெரியவரின் கனவில் தோன்றி தான் தெய்வமாகிவிட்டதாகவும் தன்னை வணங்கும் படியாகவும் கூறுகிறது. அதன்படி மாசாணியம்மன் வழிபடப்படுகின்றாள் என்று சொல்லப்படுகிறது. (கதை எண்:3)

மாசாணிக்கு இளமையிலேயே திருமணம் முடிகிறது. கணவனும் மனைவியும் இன்பமாக வாழ்கின்றனர். மாமியார் பொறாமை கொள்கிறாள். வேண்டுமென்றே சண்டையிடுகின்றாள். ஆனாலும் மாசாணி எல்லாருடனும் சந்தோஷமாகவே பழகிவருகின்றாள். இந்நிலையில் மாசாணி கர்ப்பமடைகிறாள். இதனிடையே கணவன் வேலை தேடி வெளியூர் போய்விடுகின்றான். இதைப் பயன்படுத்தி மாமியார் மாசாணியை வீட்டை விட்டுத் துறத்திவிடுகிறாள்.

கர்ப்பிணியான மாசாணி அழுதுகொண்டே காட்டின் வழியே இரவில் வருகின்றாள். பிரசவ வலியால் துடிதுடித்து இறந்துபடுகின்றாள். பின்பு பூசாரியின் கனவில் தோன்றி நான்தான் மாசாணி என்னும் பெண் தெய்வம் எனக்குச் சுடுகாட்டிலேயே கோயில் கட்டி வழிபடுங்கள் என்று சொல்ல, அப்படி உருவானதுதான் மாசாணி வழிபாடு என்று ஒரு கதை சொல்லப்படுகிறது. (கதை எண்:4) இன்னொரு கதையில் காதல்  திருமணம் செய்துகொண்டு போன மாசாணி ஒரு அரசனின் மகள் என்றும் பிள்ளைப் பெற மாட்டாமல் இறந்து போய் தெய்வமானாள் என்றும் சொல்கிறது. (கதை எண்:21).

மற்றொரு கதையில் மாசிலாமணி என்ற அழகிய பெண்ணிடம் மயங்கிய சிவன், மனிதவுருக்கொண்டு, அவளை மணந்து வாழ்கின்றார். மாசிலாமணி கருவுறுகின்றாள். ஆனால் சிவன் தனது ஊர்போய் வந்து, அழைத்துச் செல்வதாகச் சொன்னவர் திரும்பி வரவில்லை. இதனிடையே கருவுற்ற மாசிலாமணி ஊராரின் பேச்சுக்கும் கேலிக்கும் ஆளாகிறாள். மனம் வெறுத்து ஊரை விட்டுப் போகிறாள். போகிற வழியில் உப்பாற்றங்கரையில் தங்குகிறாள். இவளை இரண்டு ஆண்கள் வேறு பின் தொடர்கிறார்கள். இதனால் அச்சப்பட்டு கீழே விழுந்து, குழந்கை பெறமாட்டாமல் இறந்துபோகிறாள். இதுதான் மாசாணி தெய்வமான வரலாறு என்று கிராம மக்களின் தொன்மக்கதையில் சிவனின் மனைவி தான் மாசாணி என்று வருவது வியப்பாக இருக்கிறது.
(கதை எண்:17)

நாட்டுப்புற வழிபாட்டில் ஒரே பெயருடைய தெய்வங்களை ஒன்றுக்கு மேற்பட்ட சமூகங்கள் தங்களின் குலதெய்வம் என்று கொண்டாடி வருவது இயல்பே. கருப்பராயன், கருப்பசாமி, மதுரை வீரன், அங்காளம்மன், அங்காள பரமேஸ்வரி, காளியம்மன், பேச்சியம்மன், கன்னிமார், துர்க்கையம்மன் திரௌபதியம்மன் என்றெல்லாம் அமையும் தெய்வங்களை எல்லாச் சாதி மக்களும் அவரவர்களுக்கான சாமி என்று கொண்டு வழிபட்டு வருவது ஒன்றும் புதிதல்ல.

இது நாட்டுப்புறச் சமய வழிபாட்டின் தன்மைகளில் முதன்மையானதும் ஆகும். ஆனால் அத்தெய்வம் தனது முன்னோராக எப்படி ஆனது என்பதற்கு தனியான தோற்றக்கதை ஒவ்வொரு சாமி பற்றியும் கட்டாயம் வழக்கிலிருக்கும். மாசாணி வழிபாடு அதன் வழிபாட்டின் தன்மையிலிருக்கும், அது ஒரு தாய்த்தெய்வ வழிபாடென்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இவ்வழிபாடு மயானத்தில் நடைபெறுகிறது. இவள் மயானத்தில் இருப்பதால் துஷ்ட தேவையாகிறாள். இவளை எப்படி ஓர் சமூகம் குடும்ப தெய்வமாகவும் குலதெய்வமாகவும் ஏற்று வழிபடுகிறது. இதற்கான காரணம் இவர்கள் செய்கின்ற சடங்குகளின் வழியும், இத்தெய்வம் தோன்றிய கதைகளின் வழியும்தான் வெளிப்படும்.

(தொடரும்)

பேரா.முனைவர் தே.ஞானசேகரன்

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்