SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிலந்தியையும் சிவமாக்கும் சிவந்தமலை

2021-11-23@ 13:47:48

பிரம்மாவினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆதி அருணாசலேஸ்வர ஆலயத்திலிருந்து வாயு லிங்கத்திற்குச் செல்லும் பாதையில் கௌதம மகரிஷியோடு சென்றவர்கள் ஓரிடத்தில் அமர்ந்தனர்.

அருணாசல கிரியை வேகமாக வலம் வராது மனமானது அருணாசலத்தின்மீது தோய்ந்து ஈடுபட்டு கூர்மையாகவும் சித்தத்தில் ஏகாக்கிரகம் சித்திக்கும் வரை காத்திருந்த பிறகே வலம் வரத் தொடங்கினர். மனமானது மானசீகமாக ஒரு இழைபோல அருணாசலத்தை தன்னோடு பிணைத்துக் கொண்டது. அந்தப் பிணைப்பிற்காக ஆங்காங்கு சற்று நேரம் கண்மூடி தியானத்தில் அமர்ந்தது.

அதாவது அருணாசல கிரியை தன்னுடைய நானெனும் உணர்வுக்கு அருகே நகர்த்தி வைத்து அதை பார்த்துக் கொண்டேயிருந்தது. சட்டென்று மனமே கனமானதுபோல உணர்ந்தவுடன் மெல்ல வலம் வரத் தொடங்கினார்கள். இதை ஒரு முறையாகவே செய்தனர். தன் அகங்காரத்திற்கு முன்னர் அருணாசலத்தை நிறுத்தி நிறுத்தி அதையே பார்த்தவாறு வலம் வருதல் என்பதையே தியானம்போன்று செய்தனர். அதோ பார்... அதோ பார்... என்று அருணாசலத்தை காட்டிக் கொண்டே இருத்தல்.

அவர்களுக்கு இன்னும் எத்தனை தூரம் என்பது முக்கியமில்லை. வேண்டிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணமில்லை. ஏன், மெய் வருத்தவும் வேண்டாம். உடம்பு குறித்த நினைவும் வேண்டாமென்றிருந்தனர்.  உள்ளத்தில் பக்தி உதிக்கிறதா இல்லையா என்கிற கவலையும் அவர்களிடத்தில் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அதுவே பிரம்மம். அதுவே நான். ஆனால், இப்போது பிரிந்து கிடப்பதுபோல உள்ளது. ஆனாலும், சேர வேண்டும். பிரம்மமாக வேண்டுமெனில் பிரம்மத்தையல்லவா சுற்ற வேண்டும்.

மாபெரும் கௌதமரிஷியல்லவா வலம் வருகிறார். அவர் இது பிரம்மம் என்று உரைத்த பிறகு இன்னும் என் மனதிற்குள் ஏன் ஐயம் மண்டிக் கிடக்கிறது. அது கிடக்கட்டும். அது எப்போதுமே சந்தேகம் கொள்ளட்டும். நான் போகிறேன் என்று குருவின் மீதுள்ள திடநம்பிக்கையால் அந்தக் கூட்டம் நடந்தது. ஆனாலும், சீடர்கள் சிலரின் மனதில் விசித்திரமான சந்தேகங்கள் இருந்தன.
ஒரு இளம் பிரம்மச்சாரி ஒருவர் எழுந்தார்.

‘‘மகரிஷியே தாங்கள் அருணாசலத்தின் மையம் கூறும் சத்தியத்தையும், அஷ்ட திக் பாலகர்கள் இங்கு நிகழ்த்தும் மாற்றத்தையும் கூறிக் கொண்டு வருகிறீர்கள். ஆனாலும், புராணங்கள் ஆச்சரியமான சில விஷயங்களை கூறுகின்றன. ஒரு சிலந்தி கூட இங்கு மோட்சம் பெற்றதாகவும் கூறுகிறதே. எப்படி அது....’’ என்று கேட்டார்.

‘‘நீங்கள் இவையாவுமே தற்செயல்கள்தான் என்று நான் சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களோ! ஆன்மிகத்தின் மேல் தளங்களில் தர்க்கங்கள் தோற்றுப் போகும் இடங்களே அதிகமுண்டு. அதுவும் மாபெரும் ஞானியின் சந்நதியில் மனம் தான் நிறைவுறும் வரை, திருப்தியுறும் சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருப்பதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா என்று ஞானி கொஞ்சம் நேரம் பார்ப்பார். மனம் ஒப்புக்கொண்ட பிறகுதான் சரணடையும்.

அதன்பின்னரே முன்னகரும் என்கிற கணத்தில் ஞானி அந்த மனதின்மீது ஒரே அடி அடிக்கவும் கூடும். மனம் பல சமயங்களில் தத்துவத்தை கையுறைபோல பயன்படுத்தி அகங்காரத்தை பாதுகாத்துக் கொள்ளும். மீண்டும் மீண்டும் தத்துவத்தைப் பேசிப்பேசி தன்னுடைய தொடர்ச்சியை நீட்டிக்கச் செய்து கொள்ளும். சரணாகதியைப்பற்றி பேசியபடி இருக்கும். ஆனால், எப்போது சரணாகதி செய்யப் போகிறாய் என்று மனதிடம் கேட்டால் நாளைபோல் ஒருநாள் என்று கூறும். அகங்காரத்தை அழித்தல் என்பதே மனதால் இயலவே இயலாத ஒன்று.
கூர்மையான தத்துவத்தின் நோக்கமானது பிரம்மத்தை லட்சியார்த்தமாக வைத்து நகரும் பட்சத்தில் தர்க்கத்தின் கூர்மையை சீவிக்கொண்டே இருக்கலாம். இன்னமும் இதன் மையப் புள்ளி என்ன என்று அதிநுட்பமாக கூர்மையாக குவித்தபடி இருக்கலாம்.

ஆனால், அகங்காரத்தின் அழிவுதான் சகல சாஸ்திரங்களின் சாரம் என்று தெரிந்தபிறகு எல்லாவற்றையும் தேவையற்று சுமந்து கொண்டிருத்தல் பாதையை மாற்றும். சிற்றின்பம்போல மனதிற்கு தத்துவமும் தர்க்கமும் தற்காலிக இன்பத்தை கொடுத்துக் கொண்டிருந்தால் குரு சட்டென்று அதற்கு நேரெதிரான கருத்தை கூறி அதை உடைப்பார். அதையேதான் புராணங்களிலுள்ள சில விஷயங்களும் செய்யும். மனதின் நேர்க்கோடான கறாரான தர்க்கத்தை புராணம் எதிர்கோட்டில் வந்து இதோ சிலந்திக்கும் இங்கு முக்தி கிடைக்கிறது நீ என்ன செய்கிறாய் என்று கேட்கும். அதைப் பார்த்து மனம் சிரிக்கும்போது, புராணம் கூறியதையே ஒரு ஞான குரு கூறவும் கூறலாம்’’‘‘ஏன் அப்படி.... மஹரிஷி’’ இம்முறை எல்லோரும் சேர்ந்து கேட்டனர்.

‘‘மனதை ஒரு அளவுக்கு மேல் ஆன்மிக உயர்தளத்தில் சாய்த்து அழிக்காமல் முக்தி கிடைப்பது அரிதானது. ஏனெனில், ஞானிகளுக்கு மனதின் சகல சூட்சுமங்களும் தெரியும். எந்தெந்த விதத்தில் அது ஏமாற்றிக் கொள்ளும் என்று புரிந்து வைத்திருப்பர். எனவே, தர்க்கமும் தத்துவம் காட்டும் நுட்பமும் ஒரு எல்லை வரையில் இலக்குகளை கூறிவிட்டு நகர்ந்து கொள்ள வேண்டியவை. அதற்குப்பிறகு ஜீவன் முக்தரே குருவாக அமைந்துவிட்ட பின்னர் தத்துவங்களையே மனதால் பிதற்றிக் கொண்டு வீணாக விதண்டாவாதங்களினால் எந்தப் பயனும் இல்லை. எனவே, புராணங்கள் இந்த மலையை சுற்றி வந்து யார் யார் என்னென்ன பெற்றார்கள் என்று கூறும்.

அது முற்றிலும் தர்க்க மனத்தினருக்கு எதிரானதாகவே தெரியும். சேகரிக்கப்பட்ட அறிவின் எல்லையை உடைத்து வெளியேறி பிரம்மத்தை அறியவும், அகங்காரத்தை சிறிதாகவே உணரவைக்கும் விஷயங்களை புராணம் அநாயாசமாக கூறிச் செல்லும். சிலசமயம் அளவுக்கதிகமான தர்க்க மனம் அகங்கரித்து கொக்கரிக்கும். எனவேதான், ஞானிகளும் பாமரத்தனமாக சிறுசிறு காரியங்களை செய்து அவர்களை அதிர்ச்சியடைய வைக்கின்றனர். அதேபோல ஒரு ஜீவன் இந்த அருணாசல தலத்தை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தால் இந்திரனே வந்து உனக்கு கொடி பிடிக்கிறான் என்று கூறி ஊக்கத்தையும் அளிக்கும்.

எப்படியாவது ஒரு ஜீவன் அத்யாத்மிகமான வழியிலோ அல்லது மேலோட்டமான பக்தியை கைக்கொண்டோ இந்த வட்டத்திற்குள் வரமாட்டானா என்று ஆங்காங்கு விஷயங்களை கூறியபடிச் செல்லும். இன்னும் கேட்டால் அவையாவுமே நிஜமானதும் கூட.’’ கௌதமர் இதைக் கூறும்போது அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது.  ‘‘நீங்கள் சொல்வதை நாங்கள் ஒரு
வழியாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், இவையாவும் நிஜமாக நடந்த விஷயங்களா...’’ அங்கிருப்போரில் வேதாந்த பண்டிதர் கேட்டார்.

‘‘உங்கள் பார்வையில் பார்க்கும் பொருள் மட்டுமே உண்மை. அடுத்ததாக பார்க்கும் பொருள் பார்ப்பவனாலேயே தெரிகிறது என்று கூர்மையாக வந்து உலகம் மனதில் எப்படி விரிகிறது என்று பார்க்கிறீர்கள். ஆனால், ஒரு ஜீவன் எனில் அது மானிடன் மட்டுமே என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த தேசத்தில்தான் எருமையொன்று வேதம் சொன்ன கதையை கேட்டிருப்பீர்கள்.
அதுபோல இந்த க்ஷேத்ரத்தை பொறுத்தவரையில், அதேபோல ஞானியை அணுகும் ஒவ்வொரு ஜீவனும் சரிதான், ஏதோவொரு பெரிய மாற்றத்தின் பொருட்டே அருகே ஒரு ஈஸ்வர சக்தியால் இழுத்து வரப்படுகின்றனர். இந்த வட்டத்திற்குள் வரும் எதுவுமே தற்செயல்கள் அல்ல. உங்களின் தர்க்க அறிவென்பது உங்களுடைய எல்லை வரையிலானவை மட்டுமே. ஏன், ஞானியர் முன்பு ஒருவேளை அவர் அதை இடித்து தூள்தூளாக்கலாம்.

இந்த அருணாசல தலத்தில் ஒரு காக்கை இரை தேடும்போது பறந்து அதன் இறகுகளால் உண்டான காற்று என் முன்னிலையில் வீசிற்று அது உடனே முக்தி அடைந்தது. பசுக்கள் அருணாசல சாரலில் மேயும்போது கன்றுகளின் ஞாபகத்தால் பால்சுரந்து அந்த மலையிலேயே பொழிந்தது. உடனே அதற்கு முக்தி கிடைத்தது. சிலந்திப்பூச்சி சிறிதாக தன் வாயிழைகளால் கூடு கட்டியது. அதுவே அருணாசலத்திற்கு வஸ்திரம் போலானது. அதற்கு உடனே மோட்சம் சித்தித்தது. சிறு பூச்சிகளும் சித்தர்களுடைய ரூபமேயாகும். முனிவர்களும் தேவர்களும் நிழல் தரும் மரங்களாக இருக்கிறோம் என்று அருணையை நோக்கி தவம் புரிகின்றனர்.

எனவே, உடும்போ, நாகமோ, நாயோ, நரியோ, புலியோ, யானையோ, தேனீயோ எதுவாயினும் இத்தலத்தைப் பொறுத்தவரையில் அது வேறு ஏதோ ஒரு மாற்றத்தை பெற்றே தீரும். ஜீவன் எனில் அது மானிடர்கள் மட்டுமல்ல. அதேசமயம் உங்களை தர்க்கத்தின்பால் பொருட்டு யோசிக்கவே வேண்டாம் என்றும் சொல்லவில்லை. முரண்களால் ஆனதே பிரகிருதி என்கிற உலகம். பாரத பூமியில் ஒரு ஞானி இருந்தார். உடல் தளர்வுற்று உயிர் பிரியும் தருவாயில் கிடந்தார்.

அவரது சீடர் அருகே நகர்ந்து இவரா ஞானி என்று எண்ணியதுதான் தாமதம். விலுக்கென்று எழுந்தார். எது ராமராகவும் கிருஷ்ணராகவும் அவதரித்ததோ அதுவே இப்பொழுதும் வந்திருக்கிறது. உன் வேதாந்தத்தால் அல்ல என்று சொல்லிவிட்டு மீண்டும் படுத்துவிட்டார். இதுவே தர்க்கம் தோற்றுப்போகும் இடம். அகங்காரம் வெறும் கேள்விக்
குறியாகும் நிலை.

கிருஷ்ணா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்