SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதே சீர்காழி, அதே நிகழ்வு,ஆனால் வேறு சம்பந்தர்.

2021-11-23@ 13:47:13

வழி வழியாக சீர்காழி தோணியப்பருக்கு சேவை செய்யும் வம்சத்தில் பிறந்த புண்ணிய சீலர், தாண்டவர். ஆனால், பாவம் விதி யாரை விட்டது?. அவரது ஊழ்வினைப் பயனாக, அவரை வெப்புநோய் பீடித்தது. இதனால் தனது குலத் தொழிலை அவரால் செய்ய முடியாமல் போனது. ஆனாலும் இறைவன் மீது நம்பிக்கை இழக்காமல், நித்தமும் சீர்காழி தோணியப் பருக்கும், திருநிலையம்மைக்கும், தன்னால் இயன்ற தொண்டுகளை புரிந்துவந்தார்.

அப்படி அவர் தொண்டு செய்யும் வேளையில், கோவிலில் இறைவனுக்காக பாடி ஆடும் தேவ தாசியை கண்டார். அவளது இசைப் புலமையில் மயங்கி, அவளிடம் இசை கற்று, அவளது வீட்டிற்குச் சென்று  “சிவ நாம” சங்கீர்த்தனம் செய்து வந்தார்.(சிவ நாமம் பாடிவந்தார்) தாண்டவரின் இந்த நடத்தை அவரது குடும்பத்திற்கு, வெறுப்பை தந்தது. தாண்டவரையும், அந்த நாட்டிய நங்கையையும், ஊர் பலவாறு இழிவாக பேசியது. இது எதையும் பொருட் படுத்தாமல், சிவ நாமத்தை, அந்த நாட்டிய நங்கையோடு பாடுவதை, தாண்டவர் தொடர்ந்தார். இதனால் கோபமடைந்த அவரது குடும்பத்தினர், அவரை நோயாளி என்றும் பார்க்காமல், வீட்டை விட்டு துரத்தினார்கள்.

வேறு போக்கிடம் இல்லாமல் கோவிலுக்கு வந்தார் தாண்டவர். சரியான சோறும் தண்ணீரும் இல்லாமல், தாண்டவர் சோர்திருந்தார். போதாதக் குறைக்கு, வெப்பு நோயும் தனது வேலையை காட்டியது. கோவிலில் திருவிழா நேரங்களில் பயன்படுத்தப் படும், வாகனங்கள் இருக்கும் அறை வரைக்கும் வந்த தாண்டவருக்கு, அதற்கு மேல் துளிகூட நகர தெம்பு இல்லை. அயர்ச்சியின் மிகுதியால் வாகன மண்டபத்தின் ஒரு ஓரமாக அமர்ந்தார். சில நொடிகளில் அவர், தனது நினைவை இழந்து மயங்கிப் போனார். நேரம் உருண்டோடி சூரியன் மறைந்து, ராத்திரி வேளை வந்தது. ஆனால், தாண்டவருக்கு நினைப்பு வந்த பாடு இல்லை.

தாண்டவர் இப்படி வாகன அறையில் மயங்கி இருப்பது தெரியாத கோவில் அர்ச் சகர், அர்த்த ஜாம பூஜைகளை முடித்துவிட்டு, கோவில் நடையை சாத்தினார். கோவிலின் உள்ளே இருந்த தாண்டவருக்கு நடு நிசியில் தான் விழிப்பு வந்தது. விழிப்பு வந்ததும், கூடவே பசியும் வந்தது, நோயின் காரணத்தால் உடலும் வலித்தது. வலி தாளாமல், உலகிற்கே தாயான அம்பிகையிடம் தாண்டவர் முறையிட ஆரம்பித்தார்.

“அம்மா! ஜெகன் மாதா! அன்று குளக்கரையில் அழுத குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் தந்த தாயே! இந்த ஏழைக்கு கருணை செய்யக்கூடாதா?” என்று தாண்டவர் புலம்பியது, சீர்காழி பெரியம்மைக்கு கேட்டதோ இல்லையோ, கோவில் குருக்களின் மகளுக்கு கேட்டிருக்க வேண்டும். சுமார் பத்து வயதே நிரம்பிய அவள் கையில், தாண்டவருக்கு உணவு
எடுத்துக்கொண்டு வாகன அறைக்கு வந்தாள்.

பூட்டியிருந்த கோவிலில் சின்னஞ்சிறு சிறுமி, இவள் எப்படி வந்தாள்? என்பதையும், தாண்டவருக்கு பசியெடுப்பது, இவளுக்கு எப்படி தெரிந்தது? என்பதையும், அவர் வாகன அறையில், சோர்ந்து கிடக்கிறார் என்பதையும், அந்தக் குழந்தை எப்படி அறிந்தது? என்பது, விளங்காத புதிர்தான்.

ஆனாலும் பசியில் தவித்த தாண்டவருக்கு அந்த சிறுமி கொண்டுவந்த உணவு அமுதமாக இருந்தது. அந்த சிறுமி வாஞ்சையோடு ஊட்டஊட்ட, இவர் மெல்ல மெல்ல உண்டார். அவர் அந்த உணவை உண்ணும்போதே அவருக்கு ஏதோ புது வித தெம்பு வந்தது போல இருந்தது. இருந்தாலும் அவரது முகத்தில் சோகம் தாண்டவம் ஆடியது. அதை கவனித்த அந்த சிறுமி,  “தாண்டவரே ஏன் உங்கள் முகத்தில் இப்படி சோகம் தாண்டவம் ஆடுகிறது” என்று கேட்டாள். அந்தச் சிறுமியின் மழலை மொழியில் தன்னை மறந்த தாண்டவர் ஒரு விரக்தி சிரிப்பு சிரித்தார்.

“என்னவென்று சொல்வது அம்மா! உடலை வாட்டும் நோயைப் பற்றி சொல்வதா? இல்லை உற்றாரும் மற்றாரும் என்னை வெறுத்து ஒதுக்கியதை சொல்வதா? பசிக்கு உணவும் இல்லாமல், ஒதுங்க இடமும் இல்லாமல் தவிப்பதை சொல்வதா? நான் இத்தனை பாடு படுவதையும் பார்த்துக் கொண்டு இருக்கும் அம்மையப்பனின் கல் நெஞ்சத்தைப் பற்றி சொல்வதா?” அந்த விரக்தி சிரிப்பின் நடுவே தாண்டவர், தனது துயரங்களை கேள்விகளாக அடுக்கினார்.

தாண்டவரின் துயரத்தை கேட்ட அந்த சிறுமி ஆதரவாக அவரது தலையை வருடினாள். அதில் தாய்மையின் இனிமை வழிந்து ஓடியது. அந்த தாய் அன்பில் தாண்டவர் தன்னை மறந்தார். இதுதான் சமயம் என்று காத்திருந்த சிறுமி மெல்ல பேச ஆரம்பித்தாள்.

“தாண்டவரே! உமது துயரத்திற்கான தீர்வு சிதம்பரத்தில் இருக்கிறது. அங்கே ஆனந்தக் கூத்தாடும் பரமனைப் பாடு உன் துயர் நீங்கும்” அந்தச் சிறுமி, பெரிய மகானைப் போல பரிகாரம்
சொன்னாள். அவள் சொன்ன பரிகாரத்தை கேட்ட தாண்டவருக்கு சிரிப்பு தான் வந்தது. காரணம் இல்லாமல் இல்லை. “ஞானம் சற்றும் இல்லாத இந்த ஏழை எப்படி அம்மா பாடுவேன்?.” தாண்டவர் தனது நகைப்பிற்கான காரணத்தை சொன்னார்.

“உனக்கு அனைத்து ஞானமும் இருக்கிறது. கவலைப்படாதே. தில்லைக்குச் செல்! அங்கே உன் செவியில் விழும், முதல் வார்த்தையைக் கொண்டு பாடல்கள் பாடதொடங்கு! பிறகு நடப்பதைப் பார்! ஆசிகள்!” என்றபடி கை உயர்த்தி ஆசி வழங்கினாள் அந்த சிறுமி.அவளது செய்கை தாண்டவருக்கு வியப்பாக இருந்தது. அதை கண்ட சிறுமி மெல்ல நகைக்க ஆரம்பித்தாள். அந்த மென் நகை, பாலையும் தேனையும் விட இனிமையாக இருந்தது. நிலாவை விட குளுமையாக இருந்தது. அந்த நகைப்பில் லயித்தபடியே தனது எதிரில் இருக்கும் சிறுமியை, தாண்டவர் நோக்கினார். அவள் கற்பூரம் காற்றில் கரைவது போல கரைந்து மறைந்து போனாள். வந்தது சாட்சாத் அம்பிகை என்பது அப்போது தான் தாண்டவருக்கு உறைத்தது. தாண்டவர், புல்லரித்து
மலைத்துப் போனார்.

அதற்குள் பொழுது, புலர்ந்தது. அதிகாலை பூஜைகளை செய்ய பட்டர் கோவிலை திறந்தார். உள்ளே தாண்டவரை கண்ட, பட்டர் “நீ எப்படி இங்கே வந்தாய்?” என்று வினவினார். தாண்டவர் நடந்ததை எல்லாம் சுருக்கமாக சொன்னார். தாண்டவர் சொல்வது எல்லாம் பூரண சத்தியம் என்பதை, அவரது மேனியில் இருந்து வரும் முத்துப் போன்ற ஒளி பறை சாற்றியது. போதாத குறைக்கு அம்பிகையின் சந்நதியில் இருந்த பாதி உண்ட உணவுப் பாத்திரங்களும், தாண்டவர் சொல்வதை ஊர்ஜிதம் செய்தது. இதனைக் கண்ட அந்த கோவில் பட்டர், முத்துப் போல ஒளி வீசும் தாண்டவர் என்னும் பொருள் பட “முத்துத் தாண்டவர்” என்று அழைத்தார்.

பிறகென்ன அம்பிகையின் ஆணைக்கு இணங்க சிதம்பரத்துக்கு விரைந்தார் முத்துத் தாண்டவர். அங்கே அவரது காதுகளில் விழுந்த முதல் வார்த்தை “பூலோக கைலாசம்” என்பதாகும். அம்பிகையின் ஆணைக்கு இணங்க இதையே முதல் வார்த்தையாக வைத்து பாட ஆரம்பித்தார். “பூலோக கைலாச கிரி சிதம்பரம் அல்லால் புவனத்தில் வேறும் உண்டோ” என்று முதல் பாடல் பாடினார்.

அவரது பாடலால் மனம் மகிழ்ந்த ஈசன், ஐந்தெழுத்துப் படியில் ( சிதம்பரத்து ஈசன் சன்னதி படியின் பெயர்) ஐந்து பொற்காசுகள் தோன்றும்படி செய்தார். ஈசனின் உள்ளக் குறிப்பை அறிந்த தில்லை வாழ் அந்தணர்கள் அதை முத்துத் தாண்டவருக்கு பரிசாக தந்தார்கள். இப்படியே தினமும் தாண்டவர் கோவிலுக்கு வருவார். காதில் விழும் முதல் வார்த்தையை வைத்து பாடல் பாடுவார். தங்கக் காசுகளை பரிசாகப் பெறுவார். இப்படி பல நாட்கள் தொடர்ந்து நடந்தது.

ஆனால் திடீரென்று ஒருநாள் கோவிலுக்கு வந்த தாண்டவருக்கு காதுகளில் ஒரு வார்த்தையும் விழவில்லை. கோவிலே நிசப்தமாக இருந்தது. இப்படி கோவிலே நிசப்தமாக இருந்தாலும் தான் இறைவனுக்கு ஆற்றும் தொண்டில் பங்கம் வரக்கூடாது என்று தாண்டவர் எண்ணினார். ஆகவே எந்த பேச்சிமையையே முதல் வார்த்தையாக வைத்து “பேசாதே நெஞ்சமே” என்று பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததும் வழக்கம் போல ஈசனிடம் பரிசு பெற்றார்.

இவர் ஒரு முறை சீர்காழியில் இருந்து தில்லைக்கு வரும் வழியில், கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கொள்ளிடக் கரையில் நின்று தாண்டவர்,  “காணாமல் வீணில் காலம் கழித்தோமே” என்ற பாடலை பாடி அம்மையப்பனை சரண் அடைந்தார். அவர் பாட வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தது போல கொள்ளிடம் வழி விட்டது. தாண்டவர், ஆனந்தமாக தில்லை நடராஜனை தரிசித்து, “கண்டபின் கண் குளிர்ந்தேன்” என்று பாடினார்.

இதே போல வேறு ஒரு நாள் இவர் சீர்காழியில் இருந்து தில்லை வரும் போது, இவரை நாகம் தீண்டியது. ஆனால், தாண்டவர் கொஞ்சம் கூட பயம் கொள்ளாமல் “அருமருந்தொரு தனி மருந்திது அம்பலத்தில் கண்டேனே” என்று பாடினார்.

அவரது உடலில் விஷமே ஏறவில்லை. அதைக் கண்டு பலர் அதிசயித்தார்கள். இறுதியில் இவர் ஆவணித் திங்கள், பூச நட்சத்திரத்தில் தில்லை நடராஜர் முன்பு நின்று, “மாணிக்க வாசகர் பேறெனக்கு தரவல்லாயோ அறியேன்” என்ற பாடலை பாடினார். பாடி முடித்ததும் ஜோதி வடிவாகி மாணிக்கவாசகரைப் போலவே ஈசனோடு இரண்டறக் கலந்தார்.

சாதாரண வெப்பு நோயாளியாக இருந்த தாண்டவரை, இப்படி பெரும்பேறு பெற்றவராக மாற்றியது, அம்பிகையின் திருவருளே என்றால் அது மிகையல்ல. இப்படி தன்னிகரில்லா அருள் புரியும் சீர்காழி பெரியம்மையை, நவராத்திரி அன்று வணங்கி பெரும்பேறு பெறுவோம்.

ஜி.மகேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

 • sandjakki11

  "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்