SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துன்பத்திலும் நன்மை உண்டு நன்மையிலும் துன்பம் உண்டு

2021-11-23@ 12:38:46

இதம் சொல்லும் ஜோதிட அனுபவங்கள் - 11

மேஷ லக்னக்காரர்களுக்கு களத்திர ஸ்தானம் துலாம். லக்ன அதிபதி செவ்வாய். ஆண்கிரகம் அதாவது மணமகன். நேர் ஏழாம் லக்கினமான துலா லக்கினகாரர்களுக்கு களத்திர ஸ்தானம் மேஷம்.துலா லக்கினத்தின் அதிபதி சுக்கிரன். பெண் கிரகம். ஆணுக்குச் சமமாகப்  பெண்ணும், பெண்ணுக்குச் சமமாக ஆணும் ஒன்றை ஒன்று ஈர்க்கின்ற வகையில் இருக்க வேண்டும். அப் பொழுதுதான் வாழ்க்கைச் சக்கரங்கள் ஓடும். 180 டிகிரிக்கு ஒரு கோடு போட்டால் அது விட்டம்(Diameter) என்பார்கள். இதே விட்டம் எல்லா இடங்களிலும் சமமாக இருந்தால் அது ஒரு வட்டமாக(circle) அமையும்.

சக்கரம் 360 டிகிரிக்குள் வரும். இல்லையென்றால் அது நீள்  வட்டமாகவோ(ellipse) வேறு வடிவத்திலோ  போய்விடும். சுகமாக பயணம் செய்ய சரியான உருவமானவட்டம் தான் உதவும். ஒரு நாள், ஒரு மாதம், ஒரு ஆண்டு என முழு வாழ்க்கை  பன்னிரண்டு பாவங்களில் ஊடுருவிச் சென்று கொண்டிருக்கிறது. காலச் சக்கரத்தில் அல்லது கால புருஷனுக்கு ,மேஷத்துக்கு ஏழாவது ராசியான  துலாத்திற்கு அதிபதி  சுக்கிரன் என்பதால் சுக்கிரன் என்கிற பெண் கிரகத்தை களத்திரகாரகனாக வைத்தார்கள். அதற்கு நேர் எதிர் மேஷம் அதிபதியான செவ்வாய் ஆண்கிரகம் என்பதால் பெண்ணுக்கு களத்திரகாரகனாக செவ்வாயை சொன்னார்கள்.

சுக்கிரன் என்பது அலங்காரம், கவர்ச்சி, சந்தோஷம் போன்ற காரகங்களையும், இனிமையையும் கொண்டிருக்கும்.சுக்கிரனுக்கு அதிதேவதை மகாலட்சுமி.எனவே சுக்கிரன்தான் செல்வத்திற்கு அதிபதி. பொதுவான பணத்திற்கு குருவையும், ஒருவனின் சொந்தப் பணத்திற்கு சுக்கிரனையும் சொன்னார்கள். செவ்வாயின் குணங்களைப்  பாருங்கள். மேஷராசி  தலைமையைக் குறிக்கக்கூடிய ராசி. எனவே குடும்பத் தலைவனை மேஷ ராசி குறிப்பிடுகிறது. செவ்வாய் கிரகத்தில் ஆண்மைக்குரிய பேச்சு, தைரியம், பராக் கிரமம், வேலை செய்தல் எல்லாம் வந்துவிடுகிறது.

சுக்கிரன் செவ்வாய் (மணமகள்,மண மகன்) இரண்டு பேரும் சேர்ந்து வீடு வாசல் என்று வாழ்வதால் பூமி, வீடு இவற்றுக்கு காரகங்களாக சுக்கிரன், செவ்வாய் என்ற இரண்டையும் சொன்னார்கள். இதிலிருந்து தெரிவது ஒரே விஷயம் தான். ஒருவரின் 7-ஆவது ராசி என்பது அவரின் வாழ்க்கைத் துணை என்கிற அமைப்பை குறிப்பதால், அந்த ஜாதகத்திற்கு உரிய பிராப்தமான வாழ்க்கைத்துணையின் அடிப்படையான விஷயங்களை, நாம் மாற்ற முடியாது என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது அவர்களுக்குரிய வாழ்க்கைத்துணை அவர்கள் ஜாதகப்படி மட்டுமே அமையும்.

நாம் புத்திசாலித்தனமாக தேடியது போல் காட்சிகள் வந்தாலும் அது ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டதுதான். ஜாதகத்தில் நமக்குரிய வாழ்க்கைத்துணையை நாம் தெரிந்து கொள்ள முடியும். இதில் என்ன சிக்கல் என்றால், அது நமக்கு சில நேரங்களில் பிடிக்காது. அதனால் வேறு தேடுவோம். அது அங்கே இங்கே என்று தள்ளி, கடைசியில் விதிப்படிதான் நடக்கும். ஜாதகத்தில் பொருள் காரகங்கள் நமது முயற்சியினால் வேறு வேறு என மாற வாய்ப்பு உண்டு. ஆனால், நமக்குரிய உயிர் காரகங்களான அம்மா, அப்பா, அண்ணன், பிள்ளைகள் எல்லாம் மாறாது. அதைப்போலவே வாழ்க்கைத்துணையும் மாறாது.

அது நன்மையிலும் முடியும்.வேறு வகையிலும் முடியும். மற்ற உறவுகளை அனுசரித்து வாழ்வது போலவே வாழ்க்கைத் துணையையும் அனுசரித்து வாழ்ந்தால் வாழ்க்கை சிக்கலின்றி வாழலாம். அண்ணன், தம்பி, அம்மா, அப்பா உறவுகள் பிறக்கும் போதே உள்ளவை. வாழ்க்கைத் துணை என்பது, இடையில் வருவதுதானே என்று நினைக்கலாம். உண்மையில் வாழ்க்கைத்துணையும் பிறக்கும் போதே நிர்ணயிக்கப்பட்டதுதான். அந்தந்த பாவ காரகங்கள் அந்தந்த வயதில் இயங்கும். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. “ம்..உனக்காக இனிமே ஒருத்தி பொறந்து வரவா போறா..”

உண்மை இதுதான். அவர்களுக்குரிய வாழ்க்கைத்துணையை தேடி இணைப்பதுதான் திருமண பந்தம். இதில் ஒருவர் ஜாதகரீதியாக திருமணம் மூலம் உள்ள எதிர்கால விஷயங்களை தெரிந்து கொள்வதால்  வரக்கூடிய துணை எப்படி என்பதை புரிந்து கொண்டு தயாராகலாம்.

இப்போது உதாரண ஜாதகத்தைப் பாருங்கள்.

இப்போது மேஷ லக்னத்திற்கு 7இல் சனி, செவ்வாய் சேர்க்கை அமைந்த ஜாதகத்தை எப்படிக்கையாளுவது என்பதற்கான விடையைக் காண்போம். ஏழில் சனி செவ்வாய் என்கின்ற காம்பினேஷன் ஒரு மிகப் பெரிய சிக்கலாகப்  பார்க்கப்படுகிறது. விதிகளின்படி அது சிக்கலாகவே இருக்கட்டும். இவ்வுலகத்தில் எந்த ஒரு சிக்கலிலும் அல்லது பிரச்சனையிலும் அல்லது கஷ்டத்திலும் நிச்சயமாக ஒரு நன்மை உண்டு. அதைப் போல எந்த ஒரு நன்மையிலும்  அதிர்ஷ்டத்திலும்  மறைமுகமாக பிரச்சனை உண்டு. அல்லது இப்படிச்  சொல்லலாம்.

ஒரு ஜாதகத்தின் 12 பாவங்களிலும் நன்மை தீமைகள் விரவிக் கிடக்கின்றன. அதைப்போலவே வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள் விரவிக்கிடக்கின்றன. பலாப்பழத்தின் மேலுள்ள தோலில் உள்ள  முட்களையும் கரடுமுரடான தோலையும், உள்ளே இருக்கக்கூடிய நாரையும் பிரிக்காமல், பலாச்சுளையை நீங்கள் சுவைக்க முடியாது. சேற்றில் கால் வைக்காமல் சோற்றில் கை வைக்க முடியாது. கலங்கிய குளத்தில் அழகான தாமரை மலர்கள் இருக்கிறது என்றால், அதை சேற்று நீரில்  இறங்கி கஷ்டப்பட்டே பறிக்க வேண்டும்.

ஆழ்கடலில் மூழ்கி குளிக்காமல் முத்து எடுக்க முடியாது. நான் ஒருமுறை இப்படி உதாரணங்களைச் சொன்ன பொழுது ஒரு நண்பர் கேட்டார். “அது சரி, நாம் கஷ்டப் படாமலேயே ஒரு ஐம்பது ரூபாய் கொடுத்தால் செந்தாமரைப்பூ கிடைத்து விடுமே.  கோயில் வாசலில் விற்கிறார்களே... கிலோ 50 அல்லது 60 ரூபாய் கொடுத்தால் நல்ல அரிசி வீட்டிற்கே வந்து விடுமே... அப்புறம் ஏன் நாம் சேற்றில் கால் வைக்க வேண்டும்? பலாச்சுளையை பற்றிச்  சொன்னீர்கள். பலாச் சுளையை இப்பொழுது அழகான பாலித்தீன் பையில் போட்டு விற்கிறார்கள். காசு கொடுத்தால் கொட்டையை நீக்கி, அப்படியே வாயில் போடும்படியாகக்  கொடுக்கிறார்களே” என்று சொன்னார்.

நான் சொன்னேன். “உண்மைதான்... நீங்கள் சொல்வது சரிதான். அப்படித்தான் உலகம் இருக்கிறது. பணம் இருந்தால் எல்லாம் கிடைத்துவிடும். ஓகே. இப் பொழுது ஒருவரிடம் கோடி கோடியாகப்  பணம் இருக்கிறது. மனி தனுக்கு கேன்சர் நோய்  வந்துவிட்டது. பணக்காரர்களுக்கு கேன்சர் நோய் வரக்கூடாது என்றோ, வராது என்றோஇல்லையே”

“ஆமாம். எல்லோருக்கும் வரும்.”
“என்ன வித்தியாசம் என்றால், ஏழைக்கு நல்ல வைத்தியம் செய்து கொள்ள முடியாது.பணக்காரன் நல்ல வைத்தியம் செய்து கொள்ளலாம்.”
“சரிதான்”
“செந்தாமரைப்பூவை 50 ரூபாய் கொடுத்து வாங்குவது போல, 50 ரூபாய் கொடுத்து வாங்கி அரிசி வாங்குவது  போல, 2 கோடி சொத்து கொடுத்து, வேறு யாருக்காவது இந்த கேன்சர் நோயை  மாற்றிவிட முடியுமா? அல்லது தனக்கு பதிலாக வேறு ஒருவரை ஆஸ்பத் திரியில் படுக்க வைத்து வைத்தியம் பார்க்க செய்துவிட முடியுமா?”
“அது எப்படி முடியும்?”

“அல்லது. அந்த கேன்சர் நோய்,இவன் பணக்காரன் இவனை ரொம்ப கஷ்டப்படுத்தக்கூடாது என்றுதான்  பார்க்குமா?”
“அதெப்படி பார்க்கும்?அதற்கு  பணக்காரன் ஏழை வித்தியாசம் தெரியாதே”
“அதைத்தான் நானும் சொல்கிறேன். நீங்கள் சொல்வது பெரும் பாலும் “புறம் சார்ந்த” காரகங்கள். பணம் கொடுத்து சமாளிக்கலாம். அதாவது பொருட்கள், தாமரைப் பூ, வைரம், பலாச்சுளை, அரிசி  இவையெல்லாம் பணம் கொடுத்து
வாங்கலாம்.
அதற்கு தானாக கஷ்டப்பட்டு பணம் சேர்த்தாலும் சரி, அடுத்தவன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாலும் சரி,நாம்  வாங்கி அனுபவித்து விட முடியும்.
ஆனால், அகம் சார்ந்த காரகங்களான   அன்பு, மகிழ்ச்சி, நிம்மதி போன்றவை இருக்கிறதே , அதை எப்படி விலை கொடுத்து வாங்க முடியும்? அதை வாங்க முடிந்தால் பல பணக்காரர்கள் வாங்கி வாங்கிப்  போட்டு, அதிக விலைக்கு விற்று காசு பார்த்து விடுவார்களே !

அது இல்லாததால் தானே நிம்மதிக்கு வழி தேடி “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்று ஏதேதோ செய்து பார்க்கிறார்கள். கோயில் கோயிலாக அலைகிறார்கள். ஜாதகம் தூக்கிக்கொண்டு ஜோசியரிடம் போகிறார்கள். அதைத்தான் நாம் பரிசீலிக்க வேண்டும்” இப்படிச் சொன்னவுடன் நண்பர் ஓரளவு புரிந்து கொண்டார். இப்பொழுது அந்த மேஷ லக்ன  ஜாதகத்தை எடுத்துக் கொண்டால், அதில் நேர்மறை விஷயங்களும் இருக்கின்றன. எதிர்மறை விஷயங் களும் இருக்கின்றன.

முதலில் அந்த ஜாதகத்தின் எதிர்மறை விஷயங்கள்:

1. செவ்வாய் பாவி 7ல். செவ்வாய் தோஷம். கடுமையான செவ்வாய் தோஷம்.

2.ஏழில் சனி. அவரும் மேஷ லக்கினத்திற்கு சரி இல்லாதவர். சனி தோஷம் அல்லது களத்திர தோஷம். அஷ்டமாதிபதி செவ்வாய். அவர் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்.

3.மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி துலாத்தில் உச்சம் பெற்று வலுவாக உட்கார்ந்திருக்கிறார். சனியும் செவ்வாயும் பகைவர்கள். ஒரே ராசியில் அமர்வதால் அந்த ராசி அதாவது அந்த பாவம் கெடுகிறது .இது ஒரு மேலோட்டமான மதிப்பீடு.
 
சரி, இதில் உள்ள நேர்மையான நேர்மறையான விஷயங்கள் என்ன?

1. மேஷம் கணவன் லக்னமாக அமைந்தால், துலாம் மனைவியின் லக்கனமாக அமையும் அல்லவா. அந்த  லக்கினத்தை துலாத்தில் வையுங்கள்.

2. ஏழுக்குடைய செவ்வாய் லக்கினத்தில் இருந்து ஏழாம் இடத்தை பார்க்கிறது. அதாவது  தன் ராசியை ஒரு கிரகம் பார்க்கின்ற போது அந்த ராசி பலம் பெற்றுவிடும். மேஷ ராசிக்கு எதிரில் உள்ள செவ் வாயால் மேஷ ராசி மறைமுகமாக பலம் பெற்றுவிடுகிறது. அதாவது கணவனின் லக்கினம் பலம் பெறுகிறது. இது ஒரு நேர்மறை விஷயம்.

3. மனைவியின் குடும்ப அதிபதியாகிய 2ம் இட செவ்வாய், லக்கினத்தில் அமர்கிறார் .அதுவும் 2-ஆம் இடத்துக்குரிய தனகாரகன் லக்கின கேந்திரம் ஏறி  அமர்கின்ற பொழுது, அந்த லக்கனம்  வலுப்பெற்று விடுகிறது.  ஜாதகனுடைய 7 வது ராசியாக இருக்கின்ற பொழுது மறைமுகமாக அதுவும் பலம் பெற்று விடுகிறது.

அதனால் துன்பங்களுக்கு இடையே  நன்மையும் இருக்கிறது. மனைவியின் மூலமாக தனம், செல்வாக்கு இவைகளெல்லாம் கூட அதில் இருக்கின்றன.

4.சனியைப்பொருத்தவரை,சனி துலா லக்கினத்திற்கு பஞ்சமாதிபதி. அவர் உச்சம் பெற்று ராசியைப் பார்க்கிறார். எனவே மனைவியின் பூர்வ புண்ணிய பலன் மேஷ  ராசிக்கு கிடைக்கிறது. இப்போது இந்த ஜாதகத்தில் குரு அல்லது சுக்கிரன் அல்லது வளர்பிறை சந்திரன் போன்ற சுபர்கள் பார்த்து விட்டால் யோக பலன்கள்  கிடைத்து விடுமே.

5. துலா லக்னம் என்பதால் மனைவி எதிலும் சமநிலையோடு இருப்பார் என்பதும் இதில் உள்ள நல்ல விஷயங்களில் ஒன்று.மனைவி “சரி என்றால் சரி, தப்பு என்றால் தப்பு” என்று சொல்பவளாக இருப்பாள். ஆகையினால் கணவன் ஒரு குற்றம் செய்துவிட்டு மனைவி அதை ஏற்றுக் கொள்வாள் என்று எதிர்பார்க்க முடியாது.

6. சுக்கிரனுடைய துலாம் ஸ்தானத்தில் இருப்பதால் மனைவி பெரும்பாலும் அழகாக இருப்பாள். அதுவும் சுபர் பார்வை பெற்று விட்டாலோ, லக்கினாதிபதி சுக்கிரன் சுப வலிமை பெற்றாலோ, நிச்சயம் அழகு தான். ஆனால் அங்கே செவ்வாய் இருப்பதால் கோபம் வரும். சுப கிரகம் பார்த்தால் கண்ணியமான, அதே சமயம் கண்டிப்பான பேச்சு இருக்கும்.

7. வாக்கு ஸ்தான  அதிபதியாக  நெருப்பு கிரகமான செவ்வாய் இருப்பதால், சுடு சொற்களால் பேசவைக்கும். சர ராசி என்பதால் பட படவென்று பேச வைக்கும் .சனியும் கூட இருப்பதால் சமயத்தில் எதையும் செய்யாமல் மூட் அவுட்டாகி மூலையில் உட்கார வைக்கும். இவ்வளவு விஷயங்களும் அதிலேயே இருக்கின்றன.

8. இவர்கள் எதிலும் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். அதே நேரத்தில் எதையும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். லக்கின  அதிபதி சுக்கிரனுக்கு, தனாதிபதி செவ்வாய் நண்பர் என்பதால், பொருளாதாரப் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஓரளவு நிலம், பணம் இருக்கின்ற வாய்ப்பு அதிகம்.

மேஷ லக்னக்காரர்களுக்கு மனைவியால் அல்லது கணவனால்  இத்தனை  சிறப்புகளும், ஏதோ ஒரு வகையில் அடைந்து தான் தீர வேண்டியிருக்கும் என்பதையும் இந்த ஏழாம்  சனி செவ்வாய் சேர்க்கை காட்டுகிறது .

இப்பொழுது நான் சொல்வது ஒரு பொதுப் பலன்தான்.

இதே துலாத்தில் சித்திரை, சுவாதி, விசாகம் என்ற மூன்று நட்சத்திரங்கள் இருக்கின்றன .செவ்வாய் தனது நட்சத்திரமான சித்திரையில்  இருக்கின்றபொழுது பலன்  வேறு. சுவாதியில் வருகின்ற பொழுது பலன் வேறு. துலாத்துக்கு பகையும் 3, 6 ஆதிபத்தியம்  உடைய குருவின் நட்சத்திரமான விசாகத்தில் வருகின்ற பொழுது பலன் வேறு. ஆனால், எந்த இணைப்பாக இருந்தாலும் முழு தீமையும் முழு நன்மையும் ஒரேடியாக இருந்து விடாது. ஏதோ ஒரு விதத்தில் வரு கின்ற கஷ்டங்கள் வேறு ஏதோ ஒரு பாவங்களில் சரி செய்யப்பட்டு இருக்கும்.

எனவே பிரச்சனையை கிரகங்கள் தெரிவித்தால், அதனைக்  கையாளும் திறன் பற்றியும் வேறு கிரகம் தெரிவிக்கும். பொதுவாக  எந்த ஜாதகத்திலும், எந்த கிரகமும் பெரும்பாலும் சாதாரணமாகவே இயங்கும். அது தன்னுடைய ஆதிபத்தியத்தின்  மிக உச்ச நல்ல பலனையும், மிக உச்ச தீய பலனையும்  தருவதற்கு காத்திருக்கும். அதற்கு கோச்சாரம் தசா புத்திகள் எல்லாம் துணை புரிய வேண்டி இருக்கும். ஒருவருக்கு சனி தசை சிறுவயதில் வந்துவிட்டால், பிறகு செவ்வாய்திசை வருவதற்கு 60 வயது ஆகி விடும்.

பிறக்கும்போது சந்திர திசையில் ஆரம்பித்தால் சனி திசை வருவதற்குள் 50 வயது ஆகிவிடும். சனி செவ்வாயின் தனித்தனி புத்திகளை கணக்கிட்டால் அவை  குறுகிய நாட்கள் என்பதால் எளிதில் கடந்து விடலாம். அப்போது சனி செவ்வாய் கிரக சேர்க்கையால் வரும் தீய பலன்கள் பெரிய அளவில் பாதிக்காது. அது கட்டத்தில்தான் இருக்குமே தவிர நடைமுறைக்கு வராது. இந்த விஷயங்களோடு ஜாதகத்தில்  ஆராய்கின்ற பொழுது பல அற்புதமான விஷயங்கள் குறித்த  தெளிவு வரும். அவை என்ன என்பதை மேலும் பார்ப்போம்.

(இதம் சொல்வோம்)

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

 • sandjakki11

  "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்