நரகாசுரன் கதையை எப்படிப் புரிந்து கொள்வது?
2021-11-17@ 13:58:51

தீபாவளி என்று வந்துவிட்டாலே முதலில் நமது நினைவுக்கு வருவது நரகாசுரன் கதை. நரகாசுரன் என்ற அசுரன் அழிந்த தினத்தை எண்ணெய் முழுக்கிட்டு தீபாவளி தினமாகக் கொண்டாடுவதாக பல புராணங்கள் கூறுகின்றன. ஆனால், இதில் பலருக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு.
கேள்வி - 1
இதென்ன கதை! வராக அவதாரத்தில் தோன்றிய நரகாசுரனை கிருஷ்ண அவதாரத்தில் ஏன் வதம் செய்ய வேண்டும்?
கேள்வி - 2
பகவானின் பிள்ளை நரகாசுரன் என்றால், பகவான் தன் பிள்ளையைக் கொல்வாரா?
கேள்வி - 3
பூமிதேவி மகன் என்றால், தாய் தன் பிள்ளையைக் கொல்வாளா?
கேள்வி - 4
ஒருவன் இறந்த தினம் கொண்டாட்டமாகக் கொண்டாடப்படுவது சரியா?
இந்தக் கருத்து வேறுபாடுகளின் பின்னணியில் நாம் சில விளக்கங்களை ஆராய்வோம்.
கேள்வி - 1
இதென்ன கதை! வராக அவதாரத்தில் தோன்றிய நரகாசுரனை கிருஷ்ண அவதாரத்தில் ஏன் வதம் செய்ய வேண்டும்?
வராக அவதாரத்தில் தோன்றிய நரகன் குறித்து மற்ற அவதாரங்களில் பிரஸ்தாபமில்லை. இரண்யன், ராவணன், கம்சன் போன்ற கதைகளில் நரகாசுரன் குறித்த தகவல் இல்லை.
இதற்கு என்ன சமாதானம்?
1. வராக அவதாரத்தின் ஸ்பர்சம் நரகன் என்றாலும், அவன் கிருஷ்ணா அவதார காலத்தில் தோன்றியிருக்கலாம்.
2. வராக அவதார காலத்தில் தோன்றிய, நீண்ட ஆயுளை உடைய அவன், துவக்கத்தில் நல்லவனாக இருந்து, கிருஷ்ண அவதார காலத்தில் தீயவனாக மாறியிருக்கலாம்.
3. வராக அவதார காலத்தில் அவன் தோன்றியிருந்தாலும், சில யுகங்கள் தொடர்ந்து தவம் செய்து, பிரம்மனிடம் வரம் வாங்கிய பின், கிருஷ்ண அவதார காலத்தில் தன் அட்டகாசத்தை தொடங்கியிருக்கலாம். காரணம் தேவர்கள் இதற்கு முன் பகவானிடம் இவனைப் பற்றி யாரும் முறையிடவில்லையே. எனவே, இதற்கு முன் இவன், பலமற்றவனாக இருந்திருக்க வேண்டும் அல்லது தீமையற்றவனாக இருந்திருக்க வேண்டும்.
இங்கேயும் ஒரு உளவியல் பலமற்றிருக்கும் போது, பெரும்பாலும் மற்றவர்களுக்கு தீமை செய்யும் குணம் வராது. அதிக பலம் பெறும்போது (பணம், அதிகாரம்) அவனே விரும்பாவிட்டாலும் மற்றவர்களுக்கு தீமை செய்யும் குணம் மெல்ல வந்து சேர்ந்து விடும். எனவே, எந்த அவதாரத்தில் அவன் தோன்றியிருந்தாலும், அவன் தீயவனாகி அழிந்தது, கிருஷ்ண
அவதாரத்தில்தான் என்பதே இக்கேள்விக்கு பதில்.
கேள்வி - 2
பகவானின் பிள்ளை நரகாசுரன் என்றால், பகவான் தன் பிள்ளையைக் கொல்வாரா?
நரகாசுரன் கதை பலவிதமாக புராணங்களில் கூறப்பட்டு இருக்கிறது.
சிலர் சத்யபாமா கொன்றதாகச் சொல்கிறார்கள்.சிலர் கண்ணனே கொன்றதாகச் சொல்கிறார்கள்.
இதில் ஒரு தெளிவான கதைப்போக்கு இல்லை.
எல்லாவற்றையும் இணைத்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.இந்தக் கதைகளில் மிகவும் நம்பிக்கையான, பல வைணவ ஆசாரியர்கள் மேற்கோள்களாக எடுத்துப் பயன்படுத்திய, “புராண ரத்னம்” என்று சொல்லப்படுகின்ற, விஷ்ணு புராணத்தில் எப்படிக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை சற்று பார்ப்போம்.
துவாரகை நகரை நிர்மாணித்து, கண்ணன் அரசாண்ட பொழுதுதான் அவனிடத்தில் இந்த நரகாசுரன் பற்றிய பிரச்னை வருகிறது. அதுவரை நரகாசுரன் யார் என்றே தெரியாது. ஒரு நாள், தேவேந்திரன் ஐராவதம் என்கின்ற யானையில் வந்து கண்ணனிடம் தன் குறையை முறையிடுகின்றான். ‘‘மதுசூதனா! நீ இப்பொழுது மானிட உருவத்தில் இருந்தாலும், தேவர்களுக்கு எந்தத் துன்பம் வந்தாலும் நீக்கி விடுகின்றாய். அவர்களுக்குத் தொடர்ந்து துன்பம் அளித்த பல்வேறு அசுரர்களை நீ இதுவரை வெற்றி கொண்டிருக்கிறாய். அதனால் சாதுக்கள், ரிஷிகள் மகிழ்ந்தார்கள். இப்பொழுது யாகங்கள் தடையின்றி நடக்கின்றன.
அதனால் தேவர்களுக்கு தடையின்றி ஹவிர் பாகம் கிடைக்கிறது. ஆயினும் இப்பொழுது நரகன் என்ற அசுரன், பூமாதேவியின் மைந்தன், பிரஜோதிஷபுரம் என்ற ஊரில் இருந்துகொண்டு எங்களையெல்லாம் வாட்டி வதைக்கின்றான். தேவர்கள், சித்தர்கள், அசுரர்கள் என்று ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. அவர்களின் கன்னிகைகளை 16,100 பேரை அபகரித்து தன்னுடைய அந்தப்புரத்திலே அடைத்து வைத்து இருக்கின்றான். வருண தேவனின் வெண்கொற்றக் குடையைக் கவர்ந்து விட்டான்.
மந்திர பர்வதத்தின் மணி மகுடத்தை எடுத்து விட்டான். என் தாய் அதிதி தேவதையின் அபூர்வமான அமிர்த குண்டலங்களை அபகரித்து வைத்திருக்கின்றான். அவனை அழித்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்.’’இந்திரனின் முறையீட்டை கேட்ட கண்ணன், உடனடியாக கருடனை அழைத்து, சத்தியபாமாவையும் அழைத்துக்கொண்டு பிரஜோதிஷ்புரம் சென்றான்.
நரகாசுரனின் மந்திரி முரன் என்பவன் கண்ணனோடு சண்டையிட்டான்.
அவனுடைய பெரும்படையை கண்ணன் தோற் கடித்தான். அதனால் “முராரி” என்று பெயர் பெற்றான். ஹயக்ரீவன், பஞ்சனன் முதலான தளபதிகளை கொன்றான். அதற்குப் பிறகு கிருஷ்ணனுக்கும் நரகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. நரகாசுரன் பல்வேறு ஆயுதங்களை கண்ணன் மேல் பிரயோகித்தான். அவற்றையெல்லாம் பகவான் தனது சக்கரத்தினால் தூளாக்கி இறுதியில் தனது சக்கர ஆயுதத்தினால் அவனைப் பிளந்து வீழ்த்தினான். அவன் மாண்டு பூமியில் விழுந்தவுடன், பூமாதேவி தோன்றி அதிதியின் கவச குண்டலங்களைத் தந்துவிட்டு வேண்டுகின்றாள்.
‘‘கண்ணா! முன்பு வராக அவதாரம் எடுத்தபொழுது உன்னுடைய கொம்பினால் என்னை மேலே எடுத்தாய். அந்த ஸ்பரிசத்தின் விளைவாக இந்த நரகன் எனக்கு மைந்தனாகத் தோன்றினான். ஆகையால் இவன் உனக்கும் மைந்தனே. அவன் துஷ்டனாக இருந்ததால் அவனை நிக்ரகம் செய்தாய். நீயே அவனைக் கொடுத்தாய். நீயே அவனைக் கொன்றாய். ஆயினும், அவருடைய சந்ததியைக் காப்பாற்று. என் மகனை மன்னித்தருள வேண்டும்’’ என்று சொல்ல, அதனை கண்ணன் ஏற்றுக் கொண்டான். இவ்வளவுதான் அந்த விஷ்ணு புராணத்தில் வருகிறது.
நரகாசுரன் பகவானின் பிள்ளைதான். தன் புதல்வனை, தானே அழிப்பாரா என்ற கேள்வி எழும். உலகில் நல்லதும் கெட்டதும் இறைவனின் படைப்பு. கெட்டது நல்லவற்றை அழிக்க முற்படும்போது பகவான் கெட்டதை அழிக்கிறார். தன் படைப்புதானே என்று பார்க்க மாட்டார்.
கேள்வி - 3
பூமிதேவி மகன் என்றால், தாய் தன் பிள்ளையை கொல்வாளா?
எல்லா வளங்களும் நமக்குத் தரும் தாயான பூமியை அழித்தும் இழித்தும் நாசம் செய்யும் மனிதர்கள், பூமியை நரகமாக்கும்போது, அந்த நரகத்தைச் செய்யும் நரகா
சுரர்களை, பூமியே நாசம் செய்கிறாள். நரகாசுரன் மட்டும் பூமா தேவியின் மகனல்ல. நரகாசுரனால் பாதிக்கப்பட்டவர்களும் பூமாதேவியின் பிள்ளைகள்தானே!
மற்ற பிள்ளைகள் வாழ, ஒரு பிள்ளையை எதிர்க்கத் தயங்க மாட்டாள் பூமா தேவி (சத்யபாமா) என்பதைக் காட்டுவதே நரகாசுரன் கதை. மேலோட்டமாக கதையைப் படித்தால், தாய் பிள்ளையைக் கொல்வாளா என்று கேட்கத் தோன்றும்.
நரகாசுரன் போன்ற ஒரு பிள்ளை செய்யும் கொடுமைகளைப் பார்த்தால், எந்தத் தாயாக இருந்தாலும் கொல்வாள் என்ற முடிவுக்கு வரமுடியும். தாய் தவறு செய்தால் தண்டிப்பாள் என்பது மட்டுமல்ல, தந்தைகூட மகன் என்றும் பாராமல் தண்டிப்பார் என்பதற்கு, நம்மிடையே மனுநீதி சோழன் கதையுண்டு. இத்தகைய தர்மத்தினை காக்கும் பண்புதான் பாரதம் முழுவதும் பரவியிருந்தது. தனது மகனின் தேரில் கன்று ஒன்று அடிபட்டு இறக்க, அந்த கன்றின் தாய்பசு நீதி கேட்டு மணி ஒலிக்க, நீதி கேட்டது ஐந்து அறிவு விலங்கு என எண்ணாமல், தவறு செய்பவன் தன் மகன் எனக்கூட பார்க்காமல் தண்டித்தான். உயர்ந்த பண்புதான் அன்று சத்திய பாமாவிடமும் பின்பு திருவாரூர் மனு நீதி சோழனிடமும் இருந்தது.
கேள்வி - 4
ஒருவன் இறந்த தினம் கொண்டாட்டமாகக் கொண்டாப்படுவது சரியா?
நரகன் கதைகளின் புறத்தோற்ற வடிவங்களை விட்டு விடுவோம். ஆனால்,இந்த நரகாசுரனை எப்படிப் புரிந்து கொள்வது என்பது குறித்து சிந்தித்தால், நரகாசுரனையும் புரிந்து கொள்ளலாம். தீபாவளியையும் புரிந்து கொள்ளலாம்.பெரும்பாலான இந்திய புராணங்களில் சொல்லப்பட்ட கதைகள், “தத்துவங்களின் குறியீடுகள்” என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். சரி, சத்யபாமா, மகன் என்றும் பாராமல் நரகனைக் கொன்றாள் என்ற கதையை எடுத்துக்கொண்டும் ஆராய்வோம். பூமாதேவியின் மகனான நரகாசுரன், பிரம்மதேவரிடம், தன் தாயைத் தவிர யாரும் தன் உயிரை மாய்க்கும் தகுதியற்றவர்கள் என்ற நிலையை வரமாகப் பெற்றான்.
இந்த அபூர்வமான வரம் கிடைத்தவுடன், அவன் ஆணவத்தால் எல்லோரையும் பகைத்துக் கொண்டான். தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் என எல்லா பிரிவிலுள்ள பெண்களைத் துன்புறுத்தி அந்தப்புரத்தில் அடைத்து வைத்தான். இப்படி அவன் செய்த தவறுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அவன் மறந்து விட்டது ஒரே ஒரு விஷயத்தைத்தான். தன்னைவிட தன்னைப் படைத்தவன் அதிக சக்தி உடையவன் என்பதை மறந்து விட்டான். அப்படி மறந்ததால், அவன் ஆணவம் இன்னும் அதிகரித்தது. அதிகமான பாரம் ஏற்றினால், எத்தனை வலிமையான வண்டியாக இருந் தாலும் அச்சை முறித்து விடும். மண்டையில் அதிக வரபலமும், ஆணவமும் பெற்றவனாக இருந்தால், உயிரைப் பறித்துவிடும்.
நரகாசுரனை அழித்தது அவன் ஆணவமும் அடாத செயலும் அடுத்து, இறக்கும் பொழுது பிராயச்சித்தமாக வரம் கேட்ட பல பாத்திரங்கள் நமது இதிகாச புராணங்களில் உண்டு. அதில், ஒருவன்தான் நரகாசுரன். இனி, இக்கதையின் தத்துவ வடிவத்தைப் புரிந்து கொள்வோம். அசுரன் என்ற வார்த்தையிலே சுரன் என்கிற வார்த்தையும் உண்டு. ‘‘அ” எழுத்து முன்னொட்டாக இணையும் பொழுது, நேர்மாறான பொருளைத் தரும்.
உதாரணமாக சுத்தம் என்பது தூய்மை. அதில் “அ” சேர்த்தால் அசுத்தம் என்று வரும்.
பொருள்:- தூய்மையின்மை.
அதுபோல சுரன் என்பது மேலான தெய்வீகத் தன்மையைக் குறிக்கும் சொல். சுரர் (தேவர்) என்றால் ஏதோ ஒரு உலகத்தில் வாழ்பவர் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். வள்ளுவர் சொல்லுகிறார்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
எனவே ஒருவன் வாழும் வாழ்க்கையினால் தெய்வத் தன்மையை அடைகிறான். தெய்வத்தன்மையான பொறுமை, அடக்கம், திறமை, செல்வம், அறிவு உள்ளவர்களை தேவன் அதாவது சுரன் என்று அழைக்கிறோம். இதற்கு எதிர்மறையான கொடுங்கோல் தன்மை, பழி வாங்கும் உணர்ச்சி, வன்முறைகள் ஆகியவற்றைக் கொண்டவர்களை அசுரன் என்கி றோம். வாழ்வியலில் ஒருவன் அடாவடி பலாத்காரம் செய்தால், அவனை, “அசுரன் போல, ராட்சசன் போல இருக்கிறான்” என்றும், ஒருவன் நன்மை செய்தால், அவனை, “தெய்வம்போல எனக்கு வழி காட்டினான்” என்றும் சொல்கிறோம் அல்லவா! இங்கே அனைவரையும் நலியச் செய்த தீமைகளின் தொகுப்பை “நரகாசுரன்” என்கின்றோம்.
பூமியில் இரண்டு தன்மைகளும் உண்டு என்பது கண்கூடு தெய்வத் தன்மையான சுபிட்சம் உள்ள பகுதிகளை “சொர்க்கம்” என்றும் அசுரத்தன்மையான அமங்கலம் உள்ள பகுதியை “நரகம்” என்றும் சொல்லலாம். ஒவ்வொருவர் மனதிலும் இந்த இரண்டு தன்மைகளும் உண்டு. வாழ்வின் நோக்கம் தெய்வத் தன்மையைப் பெறுவதுதான். அதாவது மங்களத்தைப் பெறுவதுதான். மங்கலத்தைப் பெற, அமங்கலங்கள் போக வேண்டும். நரகமாகிய அமங்கல அசுரனை மாய்த்து, சொர்க்கமான தெய்வத் தன்மையைப் பெறும் நோக்கில் கொண்டாடப்படுவதுதான் தீபாவளி எனலாம். நரகன் செய்த கொடுமைகளால் எல்லோர் வாழ்விலும் இருட்டு இருந்தது.
அச்சம் இருந்தது. விரக்தி இருந்தது. அவன் அழிந்தவுடன் எல்லோர் வாழ்விலும் ஒளி பிறந்தது. அச்சம் அகன்றது. மகிழ்ச்சி வளர்ந்தது. மகிழ்ச்சி பிறந்ததன் வெளிப்பாடு குதூகலமும் கொண்டாட்டமும் தானே. அதேதான் இங்கும்.“தீமை” எனும் “நரகாசுரன்” அழிந்ததால், அந்தநாள் மகிழ்ச்சியும் குதூகலமும் உடைய பண்டிகையாக மலர்ந்தது. அஞ்ஞானத்தின் ஸ்தூல வடிவம்தான் நரகாசுரன்.
அந்த இருளைப் போக்குவதற்கு ஞான தீபங்களை ஏற்றுகிறோம். எனவே, மங்களமாகிய சொர்க்கத்தைத் தனி வாழ்விலும், சமூக வாழ்விலும் போற்ற வேண்டும். அமங்கலமாகிய நரகத்தைத் தனி வாழ் விலும், சமூக வாழ்விலும் அழிக்க வேண்டும். அதற்கான பிரார்த்தனைதான் தீபாவளிப் பண்டிகை.நரகாசுரன் கதையை, வெறும் கதையாக இல்லாமல், தத்துவ விளக்கமாக புரிந்து கொள்ள முயல்வோம். தீமையைப் போக்கும் தீபாவளித் திருநாளை, மகிழ்ச்சி யோடு கொண்டாடுவோம். நன்மையை வளர்ப்போம்.
பாரதிநாதன்
மேலும் செய்திகள்
செவ்வாய் தோஷம் எப்படி வருகின்றது?
கத்திரிவெயிலை அக்னி நட்சத்திரம் என்று ஏன் அழைக்கிறார்கள்?
ஏழரை நாட்டுச் சனி என்றால் என்ன?
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவதன் தாத்பரியம் என்ன?
சந்திராஷ்டமம் என்றால் என்ன? இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவது ஏன்?
அசோகாஷ்டமி தெரியுமா உங்களுக்கு?
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்