SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரப்பண்டிகைகளை கொண்டாடுவோம்

2021-11-15@ 14:41:55

15.11.2021, திங்கட்கிழமை
ஏகாதசி - துளசி விவாகம்

ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு பாபாங்குசா ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசியை சிலர் பிரபோதினி ஏகாதசி என்றும் சொல்கிறார்கள். வஜ்ராயுதம் போன்று  பாவங்களையெல்லாம் நீக்கும் சக்தி வாய்ந்தது இந்த ஏகாதசி.இந்த ஏகாதசியில் விஷ்ணுவை விரதமிருந்து   பூஜிப்பதால் ஒருவருடைய எல்லா விருப்பங்களும் நிறைவேறும். இந்த உலகத்தில் உள்ள எல்லா புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனும், புண்ணிய தலங்களுக்குச் சென்று பூஜித்த பலனும் இந்த ஏகாதசி அன்று பத்மநாப மூர்த்தியை நினைத்து விரதம் இருப்பதால் கிடைக்கும்.  இதனால் இதற்கு பத்மநாப ஏகாதசி என்றும் ஒரு பெயர் உண்டு.
இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எமலோகத்தை மிதிக்க மாட்டார்கள் என்று புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நரகவேதனையை அனு பவிக்கும் முன்னோர்களை நரகவாசத்திலிருந்து மீட்கும் இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் உடல்நலம், நோயற்ற வாழ்வு, நல்ல மனைவி, கல்வி, குழந்தைகள், குறைவற்ற செல்வம், நண்பர்கள் ஆகிய வற்றைப்  பெறலாம். இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தங்கள் தாய் வழியில் பத்து தலைமுறை முன்னோர்களையும், தகப்பன் வழியில் பத்து தலைமுறை முன்னோர்களையும், உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வார்கள் என்று ஏகாதசி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தசமி அன்று ஒரு பொழுது விரதமிருந்து, ஏகாதசி முழுக்க உபவாசமிருந்து, துவாதசி பாரணை செய்ய வேண்டும். அன்றைய தினம் சாதுர்மாஸ்ய முடிவு தினமாகவும் இருக்கிறது. இது மிகவும் விசேஷம். இந்த தினத்தில் துளசி விவாகம் செய்வது மிகச் சிறப்பானது. துவாதசியன்று சுமங்கலிப் பெண்கள் காலையில் நீராடி, தங்கள் வீட்டில் உள்ள துளசிமாடத்தை மெழுகி தூய்மைப்படுத்தி கோலமிட்டு அலங்கரிப்பார்கள். துளசிச் செடிக்கு மாலையும் வஸ்திரமும் அணிவிப்பார்கள். பெண்கள் அணியக்கூடிய கருகமணி காதோலைமணிகள் போன்ற நகைகளால் அலங்காரம் செய்வார்கள். வெற்றிலை பாக்கு,
மஞ்சள், பழங்கள், தேங்காய், சர்க்கரைப் பொங்கல் இவற்றையெல்லாம் வைத்து படைப்பார்கள். சிலர் நெல்லிக்காயையும் வைத்துப் படைப்பது உண்டு. இந்த துளசிபூஜை பெண்களுக்கு
மாங்கல்ய பலத்தை அளிக்கும். நல்ல வாழ்வினை தரும்.


16 .11. 2021 செவ்வாய்க்கிழமை கடை முகம்ருண விமோசன பிரதோஷம்

ஐப்பசி கடைசி நாளில் காவிரியில் ஸ்நானம் செய்வதை “கடை முகம்” அல்லது “கடை முழுக்கு” என்பார்கள். சைவ வைணவ சமயங் களுக்கு பிரசித்தமான மயிலாடுதுறையில், காவிரிக்கரையில், சைவ வைணவ ஆலயங்களில் உள்ள மூர்த்திகள் தீர்த்தவாரி தருகிறார்கள். இன்று பிரதோஷம் விரதம் இருப்பவர்கள் எல்லா கடன்களிலிருந்தும் விடுபடுகிறார்கள் என்பது இந்தப் பிரதோஷத்தின் முக்கியமாக பலனாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மாலை நேரத்தில் சிவன்கோயிலுக்குச் சென்று பிரதோஷ நேரத்தில் சிவனை தரிசித்து பிரகார வலம் வந்து விரதத்தை முடிக்க வேண்டும்.17. 11. 2021 புதன்கிழமைமுடவன் முழுக்கு ஐப்பசி மாதம் முழுவதும் கார்த்திகையில் காவிரியில் நீராடுவதை மிகச் சிறப்பாக புராணங்கள் கூறுகின்றன. இதற்கு துலா ஸ்நானம் என்ற பெயர். கங்கையை விட இந்த நீராடல் புனிதமானது. ஐப்பசி மாதம் ஏதேனும் ஒரு நாள் அவசியம் நீராட வேண்டும். விட்டுவிட்டால் அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

ஒருசமயம் கால் இல்லாத ஒரு பக்தர் காவிரியில் நீராட நினைத்து வெகுதூரத்தில் இருந்து வந்தார். ஆனால் அவர் வந்து சேர்வதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து விட்டது. அதனால் அவர் பகவானிடம் பிரார்த்தனை செய்தார். “இனி ஓர் ஆண்டு  நாம் காத்திருக்க வேண்டும், இப்படி ஆகிவிட்டதே” என்று நினைத்து வருந்தினார். அவருடைய பிரார்த்தனைக்கு மனமிரங்கிய பகவான், “கார்த்திகை முதல் தேதி பிறந்து விட்டதே என்று நீ வருத்தப்படுகிறாய். உன்னுடைய பக்திக்கு மகிழ்ந்து நாம் ஒரு வரம் தருகி றோம். கார்த்திகை முதல் நாளில் காவிரியில் நீராடினாலும் ஐப்பசியில் நீராடிய பலன் அவர்களுக்கு கிடைக்கும்.” இந்த நீராட்டல் பிரத்தியேகமாக அந்த மாற்றுத்திறனாளிக்கு தரப்பட்டதால் இந்த முழுக்குக்கு  “முடவன் முழுக்கு’' என்று பெயர் .


18.11.2021 வியாழன் பரணி தீபம்

வசிஸ்ரவஸ் என்ற முனிவர் ஒரு யாகம் செய்தார். நிறைவில் தானம் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் மகன் நசிகேதன் பல கேள்விகளை அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தான். தந்தையே என்னை யாருக்காவது தானமாகத் தரப்போகிறீர்களா? ஆமாம். உன்னை எமனுக்குத் தரப்போகிறேன் என்று வசிஸ்ரவஸ் சொன்னார்.நசிகேதன் எமனுலகம் சென்றான்.  எமதர்மனிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டான். பல வரங்களையும் நீண்ட ஆயுளையும் பெற்றுத் திரும் பினான். பூலோகத் திலிருந்து எமனுலகு செல்லும் உயிர்கள் பல இருட்டில் பாதை தெரியாமல் தத்தளிப்பதைப் பார்த்தான் நசிகேதன். கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகைக்கு முன்பாக வரும் பரணி நட்சத்திரத்தன்று யார் வீடுகளில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருக்கிறதோ அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெளிச்சம் தெரியும். அது மட்டுமல்ல. கார்த்திகை தீபத் திருநாளன்று சொக்கப்பனை எரித்தால் அனைத்து உயிர்களுக்கும் வெளிச்சம் கிடைக்கும் என்ற வரம் பெற்றான். அன்று முதல் பரணிதீபம் எங்கும் ஏற்றப்பட்டது. அதோடு, சக உயிர்
களின் நன்மைக்காக சொக்கப்பனை கொளுத்தும் வழக்கமும் வந்தது. உலக உயிரினங்கள் அனைத்துக்காகவும் மோட்ச தீபம் ஏற்றும் தினம் இது. உலக நன்மைக்காக வேண்டிக்கொண்டு தீபம் ஏற்றி வணங்குவது நம் மரபு.

19.11.2021 வெள்ளிக்கிழமை

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம்

கார்த்திகை என்றாலே ஒளி என்று பொருள். கார்த்திகைத் தீபநாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்பத்திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது. கார்த்திகை தீபத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு.நான்முகன் தனது மனைவியான சரஸ்வதி தேவியை விட்டுவிட்டு தான் மட்டும் யாகம் ஒன்றை நடத்தினார். மனைவி இருக்கும்போது வைதீக காரியங்களைத் தனித்துச் செய்யக்கூடாது. தனது கணவன் தன்னைப் புறக்கணித்ததை எண்ணி, கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்துக்குத் தடையாக உலகெங்கும் இருளைப் பரவச் செய்தாள். யாகம் தடைப்பட்டது. நான்முகன் செய்வதறியாது திகைத்தார். தனது தந்தையான திருமாலிடம் சென்று முறையிட்டார். அன்று கார்த்திகை மாத பௌர்ணமி தினம். திருமால் உடனே தானே ஒரு ஜோதிப் பிழம்பாக உருமாறி நின்றார். அந்தப் பிரகாசத்தில் உலகமே ஒளிர்ந்தது. யாகம் நல்லபடி நிறைவேறியது. இந்தச் சம்பவம்நடந்தது காஞ்சிபுரத்தில் உள்ள தூப்புல் திருத் தலத்தில். இத்தலத்தில் விளக்கொளிப் பெருமாள் எனும் திருநாமத்தோடு தீபப்பிரகாசராய் சேவை சாதிக்கிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ambedkar

    சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவு நாள்: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

  • AIADMK

    பன்னீர்செல்வம், பழனிசாமி போட்டியின்றி தேர்வு

  • animal-snake-6

    சென்னை பாம்பு பண்ணையில் உள்ள பிரத்யேக விலங்குகளுக்கு உணவு அளித்து மகிழும் பார்வையாளர்கள்..!!

  • trichy 06

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின மூன்றாம் நாளாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஆழ்வார்கள்

  • sandart-18----

    ஒடிசாவில் கண்களுக்கு விருந்து படைக்கும் சர்வேதேச மணற்சிற்ப திருவிழா!: பார்வையாளர்கள் பிரம்மிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்