மழலை வரம் தரும் மணிகண்டன்
2021-11-15@ 14:38:00

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஐயப்பசுவாமி மழலை வரம் தந்தருள்வதற்கென்றே குழந்தை வடிவில் காட்சி தரும் திருக்கோயில் புதுச்சேரி, வழுதாவூர் சாலை, கோவிந்தப்பேட்டையில் உள்ளது. முதன் முதலில் புதுச்சேரியில் ஐயப்பனுக்கென்று தனி ஆலயமாக அமைந்ததோடு, கருங்கற்களாலான 18 படிகளுடன் கூடிய இவ்வாலயம் அக்காலத்தில் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு கூட்டு பஜனை செய்யும் இடமாகத்தான் இருந்தது. அருகில் உள்ள ஐயனாரப்ப சுவாமி ஆலயத்தில் யாருடனும் பேசாது மௌனமாக வாழ்ந்து வந்தார் ஒரு மகான். அவர் சித்தியடைந்த பிறகு அவரது ஆசியுடன் கட்டப்பட்டது இவ்வாலயம்.
இவ்வாலயத்தின் முக்கிய சிறப்பாக குழந்தை வடிவத்தில் குண்டு கண்களுடனும், அழகான கன்னங்களுடன், கழுத்தில் மணியோடும், நம்மை தூக்கச் சொல்லி இரு கைகளை உயர்த்திய நிலையில் தொட்டிலில் படுத்த வண்ணம் காட்சி தரும் சந்தான மணிகண்டனை பார்த்துக் கொண்டே இருக்கலாம். சாதி, மத, ஆண், பெண் பாகுபாடின்றி இவரை யாவரும் தொட்டு வணங்கி, தொட்டிலை ஆட்டுவித்து மகிழலாம். குழந்தைப்பேறு வேண்டும் அன்பர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து, இரண்டு இளநீர்களை பூஜை செய்து அருந்தி, இவரை மடியில் ஏந்தி ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். ஒரு மண்டல காலம் விரதமிருந்து மீண்டும் இரண்டு இளநீர்களை பூசித்து அருந்த குழந்தைப்பேறு ஏற்படுவதில் உள்ள சிக்கல்கள் விலகி குழந்தைப்பேறு
பெற்றவர்கள் இங்கு ஏராளம்.
சபரி மலையைப் போன்றே காட்சி தரும் இவ்வாலயத்தில் பம்பா கணபதி, கன்னி மூல கணபதியும், சபரிமலையில் பீடமாக காட்சி தரும் சபரி பீடம் இங்கு சபரி அன்னையாக முழு உருவமாக தரிசிக்கலாம். சக்தி வாய்ந்த 18 படிகளின் வலது பக்கம் பெரிய கருப்பண்ணசுவாமியும், இடதுபுறம் சின்ன கருப்பாயி அம்மையோடு சின்ன கருப்பண்ண சுவாமியும் காவல் புரிய மூலஸ்தானத்தில் சின்முத்திரையோடு யோகப் பட்டையத்தோடு அழகே உருவாக காட்சியளிக்கிறார் ஐயப்பன். நாகராஜப்பிரபுவாக சிவபெருமானும், அமர்ந்த கோலத்தில் நவகிரகங்களும் காட்சி தரும் இவ்வாலயத்தில் திருமணப் பேறு தருவதில் சிறந்த வரப்பிரசாதியாக விளங்கு கிறாள் மாளிகைபுரத்தம்மன். இந்த அன்னைக்கு அபிஷேகம் செய்து ரவிக்கை வைத்து வழிபட்டு பக்தியோடு பிரசாதமாக பெற்றுச் சென்றால் திருமணத்தடைகள் எல்லாம் விலகி திருமண பாக்கியம் கிட்டுகிறது என்பது கூடுதல் சிறப்பு. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆலயத்தில் கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், மகர ஜோதியில் புஷ்பாஞ்சாலி, ஆடி அமாவாசையில் பால்குடம், உலக நன்மைக்காக மகா சாஸ்தா ஹோமம், திருவிளக்கு பூஜை, சனிக்கிழமை தோறும் படிபூஜை என விழாக்கள் களைகட்டுகின்றன. சபரிமலை செல்ல இயலாத பக்தர்கள் இங்கு வந்து படி ஏறி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றுகிறார்கள்.
- எஸ்.கிருஷ்ணஜா
மேலும் செய்திகள்
நல்ல பலன்களை பெற…
சிறப்பான வாழ்வருள்வார் சிவசைலநாதர்
திருமணத்தடை நீங்க பழஞ்சிறை தேவி வழிபாடு
வெற்றி வாகை சூட வைக்கும் வாராஹி தேவி
மாமங்களங்கள் அருளும் சப்த மாதர்கள்
வெற்றிவாகை சூட வைக்கும் வாராஹி வழிபாடு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!