SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்க்கையின் எல்லைகளைக் கடந்த கடமைகள்..!

2021-11-08@ 14:14:29

A.M. ராஜகோபாலன்

[விசேஷக் குறிப்பு:புரட்டாசி மாதம் 20ம் தேதி (6-10-2021) அன்று மகத்தான பித்ரு பூஜை தினமான “மஹாளய பட்சம்” நாடெங்கிலும், பரமபக்தியுடன் அனுஷ்டிக்கப்பட்டது! இது சம்பந்தமாக, ஏராளமான வாசக அன்பர்கள், பல சந்தேகங்கள் பற்றி ஆதாரப்பூர்வமான விளக்கம் கேட்டு, எழுதியுள்ளனர். பெங்களூரூ, ஜெயநகரைச் சேர்ந்த, திருமதி. காமாட்சி சுப்ரமணியம், 60 வயதுப் பெண்மணி ஒருவரும் பித்ரு பூஜைகளைப்பற்றிக் கேட்டுள்ளார்.

பிள்ளை இல்லாதவர்கள், பிள்ளைகள் இருந்தும், பித்ரு பூஜைகளைச் செய்யாதவர்கள், வெளிநாடுகளில் பணியாற்றிவரும் பிள்ளைகள், சந்தர்ப்பச் சூழ்நிலைகளினால் இந்தியா வந்து, ஈமக்கடன்களைச் செய்ய இயலாத சந்தர்ப்பங்களில், மரண மடைந்தவர்களின் ஜீவனுக்கு, நற்கதி கிட்டாது போகுமா? அத்தகைய ஜீவன்களின் கதி என்ன? பிள்ளைகளுக்குப் பதிலாக, பெண்களோ அல்லது உறவினர்களோ அல்லது அவர்கள்பால் அன்பு பூண்ட நண்பர்களோ பித்ரு பூஜைகளைச் செய்து வரலாமா? அவ்விதம் செய்யப்படும் பித்ரு பூஜைகளின் பலன்கள் சம்பந்தப்பட்ட ஜீவன்களைச் சென்றடையுமா? போன்ற, மானிட வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான பல கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்.

மனிதப் பிறவி எடுத்துள்ள அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய மிக, மிக முக்கியமான விஷயங்கள் இவை!-] பாரதப் புண்ணிய பூமியில், பல யுகங்களுக்கு முன்பு அவதரித்த காஸ்யபர், மரீசி, அத்ரி, மைத்ரேயர் போன்ற மகரிஷிகள் நீண்ட காலம் கடும் தவமியற்றி, அதன் பலனாக, “பிரும்ம ஞானம்” எனும் பெறற்கரிய சக்தியினால், மனித வாழ்க்கையின் ரகசியங்களைக் கண்டறிந்து, அவற்றை நமக்கு உபதேசித்து அருளியுள்ளனர். “மரணம்” என்பது, மனித வாழ்க்கையின் முடிவல்ல! மனிதப் பிறவியின் ஒரு காலகட்டம்தான் என்ற சூட்சுமத்தை முதன் முதலில் வெளிப்படுத்திய நமது வேதகால மகரிஷிகளே ஆவர்! பித்ருக்களுக்கு நாம் ஆற்றவேண்டிய மிக முக்கிய கடமைகள் பற்றியும் அவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி, அருளியுள்ளனர்.

ஏதோ ஒரு காரணத்தினால், ஒருவருக்கு ஈமக்கடன்களையும், அவற்றைத் தொடர்ந்து கடைபிடிக்கவேண்டிய கடமைகளையும் (கர்மாக்கள்)  இறந்தவரின் தந்தை வழி
உறவினர்களைக் கொண்டு செய்துகொள்ளலாம். அத்தகைய உறவினர்கள் கிடைக்காவிடில், தாய்வழி உறவினர்கள் (ஆண்கள்) செய்யலாம். இதற்கும் வழி இல்லையெனில், ஆசார அனுஷ்டானங்களில் உயர்ந்த பெரியோர்களுக்கு, திரவியத்தைக் கொடுத்து, செய்துகொள்ளலாம். எவருமே இத்தகைய கர்மாக்களைச் செய்வதற்கு கிடைக்காத சந்தர்ப்பங்களில்,  நண்பர்களே செய்யலாம்.

அநாதைப் பிரேத சம்ஸ்காரத்தின் தெய்வீகப் பெருமையைப் பற்றி மகா பெரியவர், சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் வலியுறுத்திக் கூறியதுண்டு! பித்ரு பூஜைகளுக்கு நம்பிக்கையும், சிரத்தையும், பக்தியும் மிக, மிக அவசியம். சிரத்தையுடன் செய்வதால்தான் அதற்குப் பெயரே சிரார்த்தம் எனப்பட்டது. இதுபற்றி, கருடபுராணம், வைத்தியநாத தீக்க்ஷிதம், பூர்வ ஜென்ம நிர்ணய சாரம் போன்ற நூல்கள் சரியான வழிகாட்டி, உதவுகின்றன.

சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன், தனது புதிய சூட்சும சரீரத்தில் வைவஸ்வதம் எனும் ஸ்ரீதர்மராஜரின் நகருக்குச் சென்று, அதன் ஜீவித காலத்தில் செய்துள்ள பாவ புண்ணிய பலன்களுக்கேற்ப, பித்ரு லோகத்திலும், அதன் பிறகு வேறு உலகங்களிலும்  சிறிது காலம் தங்கியபின், மழைத் துளியின் மூலம் பூமியை வந்தடைந்து, பயிர்கள் மூலம் ஆண்-பெண் வீரியம் இணைவதின் மூலம் மீண்டும் பூவுலகில் ஓர் தாயின் கர்ப்பத்தில் சேர்ந்து, மறுபிறவி எடுப்பதாக அந்நூல்கள் விளக்கியுள்ளன.

புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே, உத்தமமான பெற்றோர்களுக்குக் குழந்தை களாகப் பிறவி எடுக்க முடியும்! இவ்விதம் மறுபிறவி எடுக்கும் வரையில், பூவுலகில் அந்த ஜீவனுக்காக செய்யப்படும் திதி-பூஜைகள், அமாவாசை, கிரகண புண்ணியகாலம், மாதப்பிறப்பு, மஹாளயம் போன்ற புண்ணிய தினங்கள் ஆகியவற்றில் பித்ருக்களுக்காக நாம் சமர்ப்பிக்கும் எள் கலந்த தீர்த்தம் ஆகியவை அமுதமாக மாறி, நமது மூதாதையர்களுக்கு உணவாகவும், தாகம் தீர்க்கும் தீர்த்தமாகவும், சூரிய பகவான் மூலம் சென்றடைகிறது.

பக்தியும், தெய்வீகச் சிந்தனைகளையும் கொண்டுள்ள பலர், தங்களுக்கு ஈமச்சடங்குகள் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்துகொள்கின்றனர். அத்தகைய பெரியோர்கள், கயை எனும் தன்னிகரற்ற தர்ம க்ஷேத்திரத்திற்குச் சென்று, அங்கு பிரவிஹிக்கும் பல்குனி புண்ணிய நதியில் நீராடி ஆத்ம பிண்டம் எனும் திதி பூஜையை, தாங்கள் இருக்கும்போதே தங்களுக்காக செய்துகொள்கிறார்கள் (சம்பாதிக்கும்போதே, வங்கியில் எதிர்காலத்திற்கென்று சேமித்து வைத்துக்கொள்வதைப் போல...!).

சுருக்கமாகக் கூறின், ஈமச்சடங்குகளையும், அதற்குப் பிறகு மாதாமாதமும், ஒருவருடகாலச் சடங்குகளுக்குப் பின், ஆண்டுதோறும் செய்யவேண்டிய சிரார்த்தம் ஆகியவற்றை ஜீவனுக்காக சம்பந்தப்பட்ட அல்லது அன்பும், கருணையும் கொண்ட யார் வேண்டுமானாலும் செய்யலாம்! பெண்கள் மட்டும் நேரடியாகச் செய்யக் கூடாது. தர்ப்பைப்புல்லைக் கொடுத்து, பெரியோர்கள் மூலம் செய்யலாம். மகத்தான புண்ணிய பலன் கிடைக்கும்.

மஹாளயபட்சத்தின்போது, நமக்கு எவ்வித உறவுமில்லாத, ஆனால் நாம் துன்பப்படும்போது, இரக்கப்பட்டு உதவிய நண்பர்களுக்கும், கர்மாக்கள் செய்ய எவரும் இல்லாதவர்களுக்கும்கூட, நாம் அந்த 15 தினங்கள் பிரத்யேகமாக சிரார்த்தம் அல்லது தர்ப்பணம் கொடுக்கிறோம்; அவர்கள்தான் “காருண்ய பித்ருக்கள்” என அழைக்கிறோம். சரீரத்தை விட்ட ஜீவன்களுடன் எவ்வித உறவும் இல்லாதவர்கள்கூட, செய்வதற்கு எவருமில்லாத சூழ்நிலையில், தாங்களே அந்தக் கடமைகளைச் செய்யலாம். அளவற்ற புண்ணியத்தைப் பெற்றுத்தரும் என்பதே தர்ம சாஸ்திரமும், கருடபுராணமும், இதர ரகசிய நூல்களும் மிகத் தெளிவாகக் கூறியுள்ளன. மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமானவை!

குருவின் கும்ப ராசி சஞ்சாரத்தில்..!

அதிக நன்மைகளைப் பெறும் ராசியினர்
மேஷம், மிதுனம், துலாம், மகரம்
சுமாரான நன்மைகளைப்
பெறும் ராசியினர்
ரிஷபம்,  சிம்மம், விருச்சிகம்
பரிகாரம் செய்துகொள்ள
வேண்டிய ராசியினர்
கடகம், கன்னி, தனுசு,  
கும்பம்,  மீனம்


அவசியமான ராசிகளுக்கு எளிய, சக்தி வாய்ந்த பரிகாரங்களையும் கூறியிருக்கிறோம். இவையனைத்தும் சிறந்த பலனளிப்பவை.
குரு பகவானின் திருவருள், உங்கள் அனைவருக்கும் கிடைக்க, எமது தின ஆராதனைத் தெய்வமாகிய ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரிடம் பிரார்த்தித்துக்கொள்கிறோம்.

விவாகப் பொருத்தத்தில்..!

பிள்ளையின் விவாகத்திற்குப் பெண் பார்க்கும்போது,  பெண்ணின் ஜாதகத்தில் குரு பகவான் ஜென்ம லக்கினத்திலோ, 5ம் இடத்திலோ அல்லது 7ம் இடத்திலோ பாபக் கிரகச் சேர்க்கை, பார்வையின்றி சுப- பலம் பெற்றிருந்தால், மற்ற பொருத்தங்களைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை என்றும், அத்தகைய பெண், மனைவியாக அமைவது பெறற்கரிய பாக்கியம் எனவும் கூறுகிறது, “ஜோதிட ரத்னாகரம்” எனும் மிகப் பழைமையான ஜோதிடக் கிரந்தம். அந்த அளவிற்கு நம் வாழ்க்கையில் இடம்பெற்றுள்ளார், குரு பகவான்!

ஆடம்பர வாழ்க்கையை அளிப்பவர் சுக்கிரன்!

அடக்கமும், அமைதியும் நிறைந்த வாழ்க்கையைக் கொடுப்பவர் குரு. அழகான மனைவியைத் தருபவர் சுக்கிரன். அன்பான மனைவியை அளிப்பவர் குரு. ஆடம்பர ஹோட்டலில் அதிக விலை கொடுத்துப் பருகும் காபி தராத மன நிறைவை- குடிசையில் பாசமும், பரிவும் நிறைந்த மனைவி, தன் கைகளினால் அன்புடன் மிதமான சூட்டுடன் ஆற்றிக் கொடுக்கும் கஞ்சி கொடுக்கிறதே! இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் குரு பகவானின் பெருமையை!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Ukrain_Russia

  கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்

 • somaaih111

  சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!

 • HOTDOGGG111

  ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

 • SYDNEYY111

  தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

 • Mexico_Mayor

  மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்