SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குரு பெயர்ச்சி பலன்களும், எளிய, சக்தி வாய்ந்த, சூட்சும பரிகாரங்களும்..!

2021-11-05@ 17:17:01

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

நமது கிரக மண்டலத்தில் அனைத்து கிரகங்களுமே சதா சுழன்றுகொண்டேதான் உள்ளன. இத்தகைய சலனத்தினால். பூவுலகத்துடன் அவற்றிற்கு ஏற்படும் சாய்மான கோணம் (Relative Inclination in Degrees) மாறிக்கொண்டே இருக்கின்றது.  இத்தகைய மாறுதல், ராகு, கேது ஆகிய இரு நிழல் கிரகங்களுக்கு மட்டும் மற்ற கிரகங்களிடமிருந்து மாறுபட்டுள்ளது. ஏனெனில், ராகு, கேதுவுக்கு சலனம் (Movement) கிடையாது! அவை நிலையானவை!! ஆயினும்,  நாம் வசிக்கும் பூமி, தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் வலம் வருவதால், ராகு, கேதுவுடன் ஏற்பட்டுள்ள சாய்மான கோணமும் (Angular inclination in relation to earth) மாறுபடுகிறது.

எவ்விதம் வேகமாகச் செல்லும் ரயிலிலிருந்து பார்த்தால், வெளியே தெரியும் செடி,கொடிகள் கட்டடங்கள் ஆகியவை வேகமாக நகர்வது போன்று கண்களுக்குப் புலப்படுகின்றன அல்லவா? அதே போன்றுதான்!!  இவ்விதம் அனைத்து கிரகங்களுமே அடிக்கடி இடம் (ராசிகள்) மாறிக்கொண்டிருப்பதைத்தான் “ராசி மாறுதல்” என நாம் கூறுகிறோம்.  இவை, நமது வாழ்க்கையின் பல அம்சங்களையும் பாதிப்பதால், மக்கள் கிரக மாறுதல்களை அதிக அக்கறையுடன் கவனித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, குரு, சனி, ராகு,கேது ஆகிய நான்கு சக்திவாய்ந்த கிரகங்களின் ராசி மாறுதலையே அதிகக் கவலையுடன் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்! இதற்குக் காரணம், நமது அன்றாட வாழ்க்கையின், மிக, மிக முக்கியமான குடும்ப நலன், ஆயுள், ஆரோக்கியம், உத்தியோகம், தொழில், வருமானம், மனநிலை ஆகியவை இந்த நான்கு கிரகங்களின் பிடியில் இருப்பதேயாகும்!! பொன்னன், வியாழன், பிருகஸ்பதி என பல பெயர்களால் பூஜிக்கப்படும் குரு, நவகிரகங் களில் அதிசார, வக்கிர, அஷ்டம, அர்த்தாஷ்டக ஸ்தான சஞ்சாரம்   ஆகிய எவ்வித தோஷமும் இல்லாத பரம சுபக் கிரகமாவார்.

ஜெனன கால ஜாதகத்தில் பாதகமான நிலைகளில் இருந்தாலுங்கூட, அதிகத் துன்பங்களை ஏற்படுத்தாத இரக்க குணம் கொண்டவர் குரு! கையும் களவுமாகப் பிடிபட்ட கொலையாளிகளுக்குக்கூட சில நீதிபதிகள் மரண தண்டனை கொடுப்பதில்லை! அதற்கு அவர்களது மனம் இடம் தராது!!  அதே போன்ற மகத்தான கருணை உள்ளம் கொண்டவர் மட்டுமல்ல நமக்கும் அத்தகைய இரக்க குணத்தை அளிப்பவர், குரு!  தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும், சாதுக்களுக்கும் ஆச்சார்யன் ஆதலால், பிருஹஸ்பதி எனப் பூஜிக்கப்படும் பெருமை பெற்றவர்.

அந்தணர்களுக்கும், பசுக்களுக்கும், பிரம்ம ஞானிகளுக்கும் அதிபதியாவார், குரு! ஜெனன கால ஜாதகத்தில் குரு, சுப ஆதிபத்தியம் கொண்டிருந்தால், நற்குணங்களால் உயர்ந்த உத்தம மனைவியையும், தாய், தந்தையரைத் தெய்வமென பூஜிக்கும் புத்திரர்களையும்  செல்வம் நிறைந்த வாழ்க்கையைவிட, அமைதியும், மனநிறைவும் கொண்ட குடும்பமே போதும் என்ற மனப்பான்மையையும் அளித்தருள்வார். தங்கத்தைத் தொட்டாலே, அது தொற்று நோயாகப் பற்றிக்கொண்டுவிடும் என்பதுபோல் உதறித் தள்ளிய ஸ்ரீ தியாகராஜ ஸ்ரீ சுவாமிகள், மத் நிகமாந்த மஹா தேசிகர், பூஜ்யஸ்ரீ  சின்மயானந்தர் ஆகிய அவதாரப் புருஷர்களின் ஜாதகங்களில் குரு பகவான் உயர்ந்த சுப-பலம் பெற்றிருப்பதே, குருவின் தெய்வீகப் பெருமையை உணரச் செய்யும்!

ஜாதகத்தில், குருபலம் சிறப்பாக இருந்தால், பிள்ளைக் குழந்தைகளும், சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் பெண் குழந்தைகளும் பிறப்பார்கள் என “பூர்வ ஜென்ம நிர்ணய சாரம்” எனும் புராதன சூட்சும நூலிலும், “பிருஹத் ஸம்ஹிதை” எனும் நூலில் விரயஸ்தானமாகிய 12ம் இடத்தை விவரிக்கும் அத்தியாயங்களிலும் விளக்கப்பட்டுள்ளன. இத்தகைய பெருமைபெற்ற குரு, புனர் பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகனாவார்! கடகம் இவரது உச்ச வீடு; மகரம் நீச்ச வீடாகும். ஜாதகத்தில், தான் இருக்கும், ராசியிலிருந்து 5, 7, 9ம் இடங்களைத் தன் சுபப்-பார்வையினால் தோஷமற்றவையாகச் செய்யும் சக்தி பெற்றவர், “குரு பார்க்கில், கோடி நன்மை...” என்றொரு மூதுரையே உண்டு! சூரியன், சந்திரன், செவ்வாய் இவரது நட்புக் கிரகங்கள். புதனும், சுக்கிரனும் பகைக் கிரகங்களாவர்.

ஜெனன கால ஜாதகத்தில் குரு சுப-பலம் பெற்றிருப்பவர்கள், மகிழ்ச்சியுடன், மன நிறைவுடன் தூய்மையும் நிறைந்த வாழ்க்கையைப் பெற்று மகிழ்வார்கள். கோள்சாரத்தில் (Transit of Jupiter) ஒரு ராசியில் சுமார் ஒரு வருட காலம் இவர் சஞ்சரிப்பார். செவ்வாய், சுக்கிரன், சனி போன்ற கிரகங்களின் ஆகர்ஷண சக்தியினால், இவரது சலனம் பாதிக்கப்படும்போது, குருவின் வேகம் பாதிக்கப்படுகிறது.  இந்தப் பாதிப்பையே “வக்ரம்”, “அதிசாரம்” எனக் குறிப்பிடுகிறது, ஜோதிடக்கலை! பண்டைய காலத்தில் பொன்னன்! ரோமானியர்களும், கிரேக்கர்களும், குரு பகவானை “ஜுபிடர்” எனும் தேவதையாக வணங்கி வந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. கிரேக்க நாட்டின் தலைநகரான “ஏதென்ஸ்” நகரில் ஜுபிடருக்காக பிரம்மாண்டமான, அழகிய கோயில் ஒன்று இருந்தது என்றும், உலக அதிசயங்களில் அதுவும் ஒன்றாக விளங்கியது எனவும் பிற்காலத்தில், அது பகைவர்களால் அழிக்கப்பட்டதாகவும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சென்ற காலத்தில் பாரதத் திருநாட்டின் நாளந்தா மற்றும் தக்ஷசீலம் சர்வகலா சாலைகளில், ரோமானிய, கிரேக்க, எகிப்து, பாலஸ்தீன மாணவர்கள் வந்து ஜோதிடம் எனும் வானியற் கலையை விசேஷ பாடமாக (special subject) கற்றனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன, சரித்திரத்தின் ஏடுகளில்! குருவின் ராசி மாறுதல்!இத்தகையபெருமை பெற்ற குரு பகவான், வாக்கியக் கணித முறைப்படி, ஐப்பசி 27ம் தேதி (13-11-2021) சனிக்கிழமையன்று, பிற்பகல் 2.48 மணிக்கு அவரது நீச்ச ராசியான மகரத்தைவிட்டு, நட்பு வீடான கும்பத்தில் பிரவேசிக்கிறார்.

பிலவ வருடம். பங்குனி மாதம், 30ம் தேதி (13-04-2022) புதன் கிழமை, அவரது அதிசார கதியில், அவரது ஆட்சிவீடான மீனராசிக்கு மாறுகிறார். இருப்பினும், கும்ப ராசிபலன்களையே தந்தருள்வார்! வக்ர, அதிசார கதிகளில் குரு பூர்வ ராசிபலன்களையே தருவார். குருவின் தற்போதைய ராசி மாறுதலினால், எந்தெந்த ராசியினர், எந்த அளவிற்கு நன்மைகள் பெறுவார்கள் என்பதை டிகிரி சுத்தமாகக் கணித்து, எமது அன்பிற்கு உரிய “தினகரன்” வாசக அன்பர்களுக்கு அளிப்பதில் அளவற்ற மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும் பெறுகிறோம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

 • pig-heart-human-11

  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்