SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெபத்திற்கு தூரம் தடையல்ல

2021-11-02@ 15:26:03


இங்கிலாந்து தேசத்தின் திருச்சபை ஒன்றில் வழிபாடு நடந்து கொண்டிருக்கையில், அத்திருச்சபையின் போதகர், இலங்கை தேசத்திலுள்ள மலைக் காடுகளுக்குள் வசிக்கும் ஜனங்களுக்கு மத்தியில் இறைப்பணி ஆற்றுவதற்கு வேண்டுகோள் விடுத்தார். ஒரு பெண்மணி அந்த இறைப் பணியை செய்வதற்கு தன்னை அர்ப்பணித்தார்கள்; இலங்கைக்குச் சென்று சிறப்பாக இறைப் பணியாற்றி வந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டின் காலை வழிபாடு ஒன்றில் அப்பெண்மணியின் இறைப்பணியைக் குறித்து போதகர் பகிர்ந்து கொண்டார். இலங்கையில் இறைப்பணி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும், இறைப்பணி மூலமாக பலர் நன்மை பெற்று வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார். எனினும், அப்பகுதியில் கொடிய விஷம் கொண்ட விஷப் பூச்சிகள் மற்றும் நாகங்கள் உண்டு என்றும் கடவுள் தாமே, அந்தப் பெண் மணியை விஷப் பூச்சிகளிலிருந்து விலக்கிக் காக்க பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றும் பகிர்ந்து கொண்டார். அன்று இரவு, இங்கிலாந்து திருச்சபையை சார்ந்த ஒரு
வீட்டின் குடும்ப ஜெபத்தில் சிறுவன் ஒருவன் பின்வருமாறு ஜெபித்தான்.

ஆண்டவரே! இலங்கை காட்டுப் பகுதியில் விஷப்பூச்சிகள் பல உண்டாம். எங்கள் ஊரிலிருந்து இலங்கைக்குச் சென்று, இறைப்பணி ஆற்றிவரும் அம்மாவை விஷப்பூச்சிகள் ஒன்றும் தீண்டாதபடி, பத்திரமாகக் காத்துக்கொள்ளும் ஆமென் என்று வேண்டினான். அடுத்த வாரம் அப்பெண்மணியிடமிருந்து அந்தப் போதகருக்கு கடிதம் ஒன்று வந்தது. சென்ற வாரம் இறைப்பணியை நிறைவேற்றிவிட்டு, இரவு நேரத்தில் காட்டுப்பகுதி வழியே நான் சென்று கொண்டிருந்தபோது கருநாகம் ஒன்று படமெடுத்து என்னைத் தீண்ட வந்தது. மிக அருகில் வந்துவிட்டது. ஆனால், திடீரென திரும்பி, புதருக்குள் புகுந்துவிட்டது. கடவுள் என்னை ஆச்சரியமாகக் காப்பாற்றினார் என்று அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.

என்ன ஒரு ஆச்சரியம்! சிறுவன் இங்கிலாந்து தேசத்தில் ஏறெடுத்த வேண்டுதலைக் கேட்டு கடவுள், இலங்கையில் இறைப்பணியாற்றிய பெண்மணி வாழ்வில் அற்புதம் செய்தார்.
அன்புக்குரியவர்களே! கடவுள் எல்லைக் கடந்தவர். அவர் உலகம் முழுவதையும் ஆளுகை செய்கிறவர். எனவே, நமது வேண்டுதலுக்கு அவர் பதில் கொடுக்க தூரம் ஒரு தடையில்லை. அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார் (சங்கீதம் 107:20) என்று திருமறை வாசகம் குறிப்பிடுகிறபடி, உலகின் எந்தப் பகுதியில் வசிப்போருக்காக நாம் வேண்டிக்கொண்டாலும், நமது வேண்டுதலைக் கேட்டு, தமது வார்த்தையை அனுப்பி
கடவுள் அற்புதம் செய்கிறார்.

இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் அதிகாரி ஒருவர் அவரிடத்தில் வந்து, ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்(மத்தேயு 8:8) என்று முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த தனது பணியாளருக்காக அவரிடத்தில் வேண்டு தல் செய்தார். அப்பொழுது இயேசு, நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது (மத்தேயு 8:13) என்றார். என்ன ஒரு அற்புதம்! ஆண்டவர் கூறிய அதே நிமிடத்தில் அற்புதம் நிகழ்ந்தது என்பதை அந்த அதிகாரி தன் வீட்டிற்கு வந்தபோது அறிந்துகொண்டார்.ஆம், அன்பானோரே! நமது வேண்டுதல்களுக்கு பதில்கொடுக்க கடவுளுக்கு தூரம் ஒரு தடையல்ல. ஆகவே, தூர இடங் களில் இருக்கும் நமக்கு அருமையானோரே, என்ன தேவையில் இருப்பினும் அவர்களுக்காக வேண்டிக் கொள்வோம். அப்பொழுது, நமக்கு மிகவும் அருகி லிருக்கும் கடவுள் நிச்சயமாக நமக்கு பதில் தருவார். நமது ஜெபத்திற்கு பலன் தருவார்!!
 
- Rt.Rev.Dr.S.E.C.
தேவசகாயம் பேராயர்,
தூத்துக்குடி - நாசரேத்
திருமண்டலம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sc-maha-24

  மகாராஷ்டிராவில் 1-12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு!: மாணவர்கள் உற்சாகம்

 • jammu-vaccine-24

  கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி!: ஜம்மு - காஷ்மீரில் சில்லிடும் குளிரில் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவகர்கள்..!!

 • republic20222

  டெல்லியில் குடியரசு தினவிழா ஒத்திகை : சிறப்பு படங்கள்

 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்