SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழலைவரம் : பலன் தரும் பதிக வழிபாடு

2021-10-28@ 17:24:40

கோதானம்(பசுக்கொடை), பூதானம் (நிலக்கொடை), வஸ்திரதானம் (உடைக்கொடை), அன்னதானம் (உணவுக்கொடை), சொர்ணதானம் (பொற்கொடை) உள்ளிட்ட எந்த தானத்தை வேண்டுமென்றாலும் நாம் இன்னொருவருக்குச் செய்துவிடலாம். ஆனால், சந்தானம் என்பதை இறைவனால் மட்டும்தான் நமக்குத் தரமுடியும். எனவே, தானங்களிலேயே சிறந்த தானம் சந்தானம்; அதாவது குழந்தைப்பேறு.எவ்வளவு செல்வம் இருந்தாலும் அதை அனுபவிக்க மக்கட்ெசல்வம் என்ற ஒன்று வேண்டும்.

பத்து திசைகளிலும் தேர் நடத்தி தனிப்பெயர் பெற்ற தசரதன் தனக்குக் குழந்தை வேண்டும் என்பதற்காக புத்திரகாமேஷ்டி யாகத்தை செய்து குழந்தை பெற்றார். பதினாறு வயது வாழ்ந்தாலும் போதுமென்று மகேஸ்வரனை வேண்டி மார்க்கண்டேயனை பெற்றெடுத்தார் மிருகண்டு முனிவர். இவ்வாறு அனைவரும் விரும்பும் அரியசெல்வம் மழலைச் செல்வம்.மனித வாழ்வில் மனையறத்தின் மாட்சிமையே நன்மக்களைப் பெறுதலில்தான் இருக்கிறது என்பதை,‘‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு’’ என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.

இல்லறத்தான் ஒருவனுக்கு இன்றியமையாத செல்வம் குழந்தைச் செல்வம். அதனால் தான் பதினாறு வகைச் செல்வங்களை சொன்ன அபிராமி பட்டர் குழந்தைச் செல்வத்தை சொல்லும்போது மட்டும் எவருக்கும் குழந்தைச் செல்வம் மட்டும் தவறிவிடக் கூடாது என்பதற்காக, ‘‘தவறாத சந்தானமும்’’ என்று தவறாமல் குறிப்பிடுகிறார்.நல்லதொரு குழந்தைப்பேறு வாய்க்க தசரதரைப் போன்று யாகமோ, மிருகண்டு முனிவரைப் போன்று தவமோ நம்மால் செய்ய முடியுமா? என்றால் அது சற்று அரிதுதான். ஆனால், எளிமையாக வழிபாடு செய்ய முடியும். அதற்கு நாம் செல்ல வேண்டிய கோயில் ஒன்று இருக்கிறது.

அங்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டியதில்லை; பதிகம் பாடினால் போதும். ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை; அங்குள்ள குளத்தில் குளித்தால் போதும். அதனால் நிச்சயமாய் குழந்தைப் பேறு வாய்க்கும். அதன் பொருட்டு கட்டுக்கதையாக இல்லாமல் அனுபவத்தில் நம் முன்னோர் கண்டதைத்தான் இக்கட்டுரையில் நாம் காண இருக்கிறோம்.திருமணமாகி குழந்தைப்பேறு வாய்க்காத தம்பதியர் பலர் இருக்கின்றனர். இவர்கள் யாரோ சொன்ன பரிகாரங்களைச் செய்வதை விடவும் நம் முன்னோர் அனுபவ ரீதியாகக் கண்ட மரபார்ந்த வழிபாடு
களைச் செய்வதன்மூலம் பிள்ளை வரத்தைப் பெறமுடியும் இது திண்ணம்.

‘திருப்பெண்ணாகடம்’ என்ற ஊரில் அச்சுத களப்பாளர் என்பவர் மங்களாம்பிகை என்ற மங்கையை மணம்செய்து வாழ்ந்து வந்தார். நீண்ட நாட்களாகியும் குழந்தைப் பேறு இல்லாத காரணத்தால் என்ன செய்வது என்று தெரியாமல், திருத்துறையூரில் வாழ்ந்த சகலாகமப் பண்டிதரான அருள்நந்தி சிவாச்சாரியாரிடத்தில் தங்களின் குறையைக் கூறி மன்றாடினர். அப்போது அவர், மன்றுள் ஆடும் மகாதேவனை வணங்கி, தெய்வத்தமிழ்த் திருமுறை ஏட்டில் கயிறிட்டுப் பார்த்தார். அப்போது திருஞானசம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய,
‘‘பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு

ஆயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கள் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே’’
என்ற பாடல் வந்தது.

உடனே, அந்த சிவாச்சாரியார் இந்தப் பதிகம் பாடல்பெற்ற தலமாகிய திருவெண்காட்டுக்கு  அச்சுத களப்பாளரையும் மங்களாம்பிகையையும் சென்று சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் (தேவி கோயில் தீர்த்தம்) மற்றும் அக்னிதீர்த்தம் ஆகிய மூன்று குளங்களிலும் நீராடி, பதிகத்தை முழுமையாக மனமுருகிப் பாராயணம் செய்து பரமனை வணங்கிவரச் சொன்னார்.
சிவாச்சாரியாரின் சொற்படி அவர்களும் வெண்காடு சென்று, முக்குளத்தில் நீராடி, ‘‘கண்காட்டு நுதலானும்’’ என்று தொடங்கும் அருட்பதிகத்தை ஆர்வத்துடன் பாராயணம் செய்து, அங்கு அருள் நல்கும் சுவதாரண்யேஸ்வரர் எனும் வெண்காட்டீசரை வழிபாடு செய்தார்கள்.

அன்றிரவே ஆண்டவன் அச்சுத களப்பாளரின் கனவில் எழுந்தருளி, ‘‘இப்பிறவி யில் உமக்கு பிள்ளைப்பேறு வாய்க்க வாய்ப்பில்லை. ஆனால், நம் பிள்ளையாகிய ஞானசம்பந்தனின் ஞானத்தமிழ்ப்
பதிகத்தைப் பாராயணம் செய்த காரணத்தால் உமக்கு நாம் நல்ல குழந்தைச் செல்வத்தைத் தந்தோம்’’ என்று அருள்செய்து மறைந்தார்.அதைக்கேட்ட அச்சுத களப்பாளர் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று நடந்ததை தன்னுடைய மனைவியாரிடத்தில் சொல்லி மகிழ்ந்தார்.

அன்று தொடங்கி சரியாக பத்தாவது திங்களில் ஞானசம்பந்த பிள்ளையப் போன்றே ‘சுவேதனப்பெருமான்’ என்ற ஞானக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் சந்தானக் குரவர்கள் நால்வருள் முதல்வராக இருக்கக்கூடிய மெய்கண்டார். அவர் அருளிய சிவஞானபோதம்தான் சைவ சித்தாந்த சாத்திரங்களுள் முதன்மையாகப் போற்றப்படுகிறது. சைவ சமயத்தின் முடி மணியாகத் திகழக்கூடிய இந்த சித்தாந்தம் பிறப்பதற்கும் இதற்குக் காரணமாக மெய்கண்டார் பிறப்பிற்கும் காரணமாக அமைந்தது திருவெண்காட்டில் அச்சுத களப்பாளரும் அவருடைய மனைவியாரும் செய்த வழிபாடுதான். இதனை நினைவு கூறும் வகையில் அங்குள்ள சந்திர தீர்த்தத்திற்கு அருகில் மெய்கண்டாரின் ஆலயம் தற்போதும் காணப்படுகின்றது.

அந்த வகையில் நாமும் நம்முடைய பெரியவர்கள் கண்ட அனுபவத்தை வெறும் வரலாறாக மட்டுமே பார்க்காமல் நம் வாழ்க்கையில் செயல்படுத்தலாம். அவ்வாறு பல தம்பதிகள் இந்தக் கோயிலுக்கு சென்று இப்படி வழிபாடு செய்ததால் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர். ஆகவே, நாமும் நல்ல குழந்தைப்பேறு பெற வேண்டுமென்றால் இந்தத் திருக்கோயிலுக்கு சென்று வழிபாடு நிகழ்த்த வேண்டும்.

மயிலாடுதுறையிலிருந்து மங்கைமடம் செல்லும் வழியில் அமைந்துள்ள இத்திருத் தலமானது சோழநாட்டு காவிரி வடகரைத் தலங்களில் பதினொன்றாவது தலமாக இடம் பெற்றுள்ளது. மூன்று மூர்த்திகள் (சுவேதாரண்யேஸ்வரர், அகோரர், ஆடல்வல்லான்) மூன்று தலமரங்கள் (வில்வம், கொன்றை, ஆல்) மூன்று தீர்த்தங்கள் (சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம்), மூவரும் தேவாரம் பாடிய பெருமை என்று சிறந்து விளங்கும் இத்திருத்தலம்தான் நவகிரகங்களில் ஒன்றான புதனுக்குரிய திருத்தலமாகவும் திகழ்கிறது.

‘ஆதி சிதம்பரம்’ என்று அழைக்கப்படும் இத்தலத்தில் வெள்ளானை வழிபட்டதை, ‘‘வெள்ளானை வேண்டும் வரம் கொடுக்கும் வெண்காடு மேவிய விகிர்தனாரே’’ என்று அப்பரடிகள் பாடுவதாலும் தேவர் தலைவனான தேவேந்திரன் பூசித்ததை, ‘‘விண்ணவர்கோன் வழிபட’’ என்று சம்பந்தர் பாடுவதாலும் அறியலாம். பட்டினத்தாருக்கு இவ்வூரின் பெயரால் ‘திருவெண்
காடர்’ என்ற ஒரு திருப்பெயருண்டு. ‘முக்தி வெண்காடு, முக்தி நகர், முக்தி வாயில்’ என்றெல்லாம் இத்தலம் போற்றப்படுகிறது.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சூரியகுண்டம் மற்றும் சோமகுண்டம் ஆகிய இரண்டும் இத்தலத்திலுள்ள சூரிய, சந்திர தீர்த்தங்கள் தான் என்று உரை செய்கிறார் தமிழ்த்தாத்தா உ.வே சாமிநாதையர். மேலும், பெரியபுராணத்தில் இடம் பெற்றுள்ள சிறுத்தொண்டை நாயனாரின் மனைவியார் இந்த ஊரைச் சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பல சிறப்புக்கள் பொருந்திய தலத்தை அடைந்து நாமும் முறையாக முக்குளத்தில் நீராடி, சம்பந்தப் பெருமானின் பதிகத்தை எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாகப் பாடி இறைவனை வழிபட, மெய்கண்டாரைப் போன்ற குழந்தைப்பேறு கட்டாயமாக வாய்க்கும். வழிபடுவோம்.

பாட வேண்டிய திருப்பதிகம்

திருச்சிற்றம்பலம்
‘‘கண்காட்டு நுதலானுங்
கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும்
பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும்
பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும்
விடைகாட்டுங் கொடியானே.

பேயடையா பிரிவெய்தும்
பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர்
ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன்
வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத்
தோயாவாந் தீவினையே.

மண்ணொடுநீ ரனல்காலோ
டாகாயம் மதிஇரவி
எண்ணில்வரு மியமானன்
இகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண்  பெருமையொடு
சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண்
காடிடமா விரும்பினனே.

விடமுண்ட மிடற்றண்ணல்
வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை
மலர்நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை
தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த
நகைகாட்டுங் காட்சியதே.

வேலைமலி தண்கானல்
வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால்
வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர்
விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற் றான் அடியார்
என்றடர அஞ்சுவரே.

தண்மதியும் வெய்யரவுந்
தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர்
கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம்
பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல்
வீற்றிருக்கும் வெண்காடே.

சக்கரமாற் கீந்தானுக்கு
சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும்
அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும்
வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம்நன் குடையானும்
முக்கணுடை இறையவனே.

பண்மொய்த்த இன்மொழியாள்
பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன்
றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை
நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண்
டிசைமுரலும் வெண்காடே.

கள்ளார்செங் கமலத்தான்
கடல்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கௌற்கோடி
உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும்
மேதகுவெண் காட்டாவென்(று)
உள்ளாடி உருகாதார்
உணர்வுடைமை உணரோமே.

போதியர்கள் பிண்டியர்கள்
மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிறிமின்
அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர்
வியன்திருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு
தீதிலரென் றுணருமினே.

தண்பொழில்சூழ் சண்பையர்கோன்
தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி
விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை
பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய்
வான்பொலியப் புகுவாரே’’.
திருச்சிற்றம்பலம்

சிவ. சதீஸ்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

 • pig-heart-human-11

  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்