SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சஞ்சலம் நீக்கும் சந்திரன்

2021-10-19@ 14:39:43

நவகிரகங்களில் இரண்டு கிரகங்கள் முக்கியமானவை. ஒன்று சூரியன். இன்னொன்று சந்திரன். இரண்டு கிரகங்கள் ஒளி கிரகங்கள். உண்மையில் சூரியன் வெகு தூரத்தில் இருக்கிறது. சந்திரன் நமக்கு மிக அருகாமையில் இருக்கிறது.

சூரியன் சுய ஒளி.  
சந்திரன் எதிரொளி.  

சுயமாக ஒளி தரக் கூடியது என்பதால் சூரியனுக்கு ஆத்ம காரகன் என்றும், பிதுர்காரகன் என்றும்  பெயர் வைத்தார்கள். சந்திரன் ஆத்மாவின் பிரகாசத்தை பெற்று எதிரொளிக்கிறது. சூரிய ஒளியைச் சார்ந்தது. சூரியன் இல்லையேல் சந்திரன்  இல்லை.  எனவே, ஆத்மாவின் பலம் (சூரியன்) பொறுத்தே, மனோ பலம் (சந்திரன்) இருக்கும். ஆனால், இவை இரண்டும் மிக மிக
முக்கியம். வேதமந்திரத்தில் மற்ற கிரகங்கள் பற்றிய பேச்சு இல்லை. சூரிய சந்திரர்கள் பற்றிய பேச்சு உண்டு. வேதத்தின் முக்கியமான புருஷ சூக்தத்தில் இப்படி வரும்.

சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோ: ஸூர்யோ அஜாயத
முகாதிந்த்ரச் சாக்னிச்ச ப்ராணாத்வாயுரஜாயத   


இதன் பொருள்: மனத்தினின்று சந்திரன் பிறந்தான். விழிகளில் கதிரோன் பிறந்தான். முகத்தில் இந்திரன் அக்னி பிறந்தார்கள். மூச்சில் பிறந்தது காற்று.                பகவானின் இரண்டு கண்கள் சூரிய சந்திரர்கள்.

“கதிர்மதியம் போல் முகத்தான்” என்று ஆண்டாள் பாடுகின்றாள். பெருமாள் கோயில் பிரமோற்சவ வாகனங்களில் இரண்டு வாகனங்கள் மிக முக்கியம்.

ஒன்று சூரிய பிரபை.
இன்னொன்று சந்திர பிரபை.


சூரிய பிரபை வாகனம் பகலிலும், சந்திர பிரபை வாகனம் இரவிலும் பயன்படுத்துவார்கள். காரணம், இங்கே காலத்தை இந்த இரண்டுதான் கட்டுப்படுத்துகிறது. சூரியன் பகல் காலத்தையும், சந்திரன் இரவு காலத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். இவை மாறி மாறி வருவதால் நாட்கள் மாறுகின்றன. மாதங்கள் பிறக்கின்றன. ஆண்டுகள் கடக்கின்றன.
எனவே, ஒருநாளை நகர்த்த இந்த இரண்டு கோள்கள் முக்கியம். ஜோதிட சாஸ்திரத்தில் மற்ற கிரகங்கள் எப்படி இருப்பினும், ஆத்ம காரகனான சூரியனும், மனோகாரகனான சந்திரனும் பலம் இழந்தால், அந்த  ஜாதகம் வலிமையற்றதாகி விடும்.

தாயும் (சந்திரன்) தந்தையும் (சூரியன்) இல்லாவிட்டால் பிறகு வாழ்வேது? வழியேது? சூரியன் அடிப்படையில் உயிர்  நிலையான லக்னத்தையும், சந்திரன் ராசியையும் நிர்ணயிப்பதில் முன் நிற்கின்றனர். லக்னம் நிலை உடையது. மாறாதது. அது மையப்புள்ளி. லக்ன புள்ளி என்பார்கள். சந்திரன் ஒருவர் வாழ்வின் நிகழ்வுகளை நடத்துபவர்.  தசாபுக்திகளுக்கு காரணமானவர்.  ஒருவரின் ஜாதக பலன் தரும் காலத்தைத் தீர்மானிக்கின்றவர். லக்னத்தை மையமாகக் கொண்ட அடிப்படை ஜாதகத்தை “விதி” என்றும், ராசியை அடிப்படையாகக் கொண்டு தசா புத்தி அந்தரத்தை  “மதி” என்றும்  சொல்கிறோம். இங்கே ஒரு சூட்சுமம் இருக்கிறது.

விதியை தந்த இறைவன்தான் மதியையும் தந்திருக்கிறான்.
விதி மாறாதது.

ஜாதகத்தின் பிறப்புக் கட்டத்தை சாகும்வரை மாற்ற முடியாது. அது அமைந்தது அமைந்ததுதான். பிறந்த நேரம் சரியில்லை என்று மறுபடி தாயின் கர்ப்பத்தில் புகுந்து வேறு நேரத்தில் பிறக்க முடியுமா, என்ன? அது நடக்காத செயல். இனி அதனைப்பற்றி கவலைப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆனால், கடந்த காலத்தை நகர்த்தியதும், நடப்பு காலத்தை நகர்த்திக் கொண்டிருப்பதும், எதிர்காலத்தை நகர்த்த இருப்பதும் சந்திரன்தான். எனவே “விதி சரி இல்லை என்றால்,  மதியைப் பார்” என்றார்கள்.வள்ளுவப் பேராசான் விதி, மதியைப்  பற்றி இரண்டு விஷயங்களை மிக அழுத்தமாகச் சொல்கிறார். திருக்குறளில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” - விதி
“முயற்சி திருவினையாக்கும்” - மதி.


ஆண்டாளிடம் “எது நன்னாள்?” என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அவள் பதில் சொன்னாள். “மதி நிறைந்த நன்னாள்” என்றைக்கு மதி, பூரணமாக வானில் ஜொலிக்கிறதோ, அது நல்ல நாள். அதாவது பௌர்ணமி நல்லநாள்.இது ஒரு அர்த்தம். இது நேர் அர்த்தம். ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுபர் என்றும், அவர் குருவைப்போல மற்ற கிரகங்களோடு சேரும்போதும், பார்க்கும் பொழுதும் அக்கிரகங்களின் தீய பலன்களைக் குறைக்கிறார் என்றும் விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், இங்கே வேறு ஒரு பொருள் உண்டு. என்றைக்கு அறிவுத் தெளிவு ஏற்படு
கிறதோ, அதன்மூலம் நல்ல புத்தி பிறக்கிறதோ, அது நன்னாள்.

அது, ராகு காலம் ஆக இருந்தாலும், நல்ல நாள்தான். ராகு காலத்திலும் குழந்தைகள் பிறக்கின்றன. நல்ல செயல்கள் நடக்கின்றன. எனவே, பொதுவாக நாளை, அறிவுத் தெளிவு ஏற்படுகின்ற, மதி நிறைந்த நாள் என்பர்.  ஒருவர் ஜாதகத்தில், சந்திரன் ஒளி பொருந்திய நிலையில் அமர்கின்ற பொழுது, அவர் பாதையை அவர் வகுத்துக்  கொள்வார். துன்பங்கள் வந்தாலும் மனம் கலங்க மாட்டார். சற்று நேரத்தில் அதனை எதிர்கொள்ளும் முடிவை அவர் எடுத்துவிடுவார். அந்த ஆற்றல் அவருக்கு இருக்கும். சந்திரன் காரகங்கள் பலமாக வேலை செய்யும். சந்திரன் சரி இல்லை என்றால், பல எதிர்விளைவுகள் ஏற்படும். சொந்தமாக புத்தியும்  இருக்காது.

சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இவர்களுக்கு மற்ற கிரக பலன்கள் எத்தனை மேன்மையாக இருப்பினும் பெரிய முன்னேற்றம் இருக்காது. மனதையும் உடலையும் ஆட்சி செய்யும் சந்திரன் கெட்டுவிட்டால், உடலும் சரி இருக்காது. மனதும்  இருக்காது. அதோடு நரம்புகளை கையாளும் புதனும் கெட்டு விட்டால் “மன பிறழ்வு” ஏற்பட்டு பேதலித்துக் கிடப்பார்கள்.
சந்திரனோடு,  ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் சேரும் போது இந்த விளைவுகள் ஏற்படும். சுப கிரகங்கள் பார்த்தால், சரி செய்யும்படி இருக்கும்.சந்திர பலத்தினால் பல சங்கடங்களைத்  தீர்க்கலாம்.

அதில் மிக முக்கியமான விஷயம், கோயிலுக்குச் சென்று 5 நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள். வீட்டிலும் ஐந்து நிமிடம் பூஜை செய்யுங்கள். கோயில் என்பது பல அற்புதமான அதிர்வலைகள் உள்ள இடம். மனதின் அலைபாய்ச்சலை  ஒழுங்குபடுத்தும்.‘‘மனசு ஒரே குழப்பமா என்னமோ போல் இருந்தது. கோயிலுக்கு வந்தேன். அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. அரைமணிநேரம் போனதே தெரியவில்லை. மனசு நிம்மதி ஆகிவிட்டது’’ என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். இங்கே சந்திரன் மறைமுகமாக பலப்பட்டுவிட்டார் என்று பொருள். உங்களை அறியாமல் ஒரு தெளிவும், அறிவும், வழியும் கோயில் சாமி தரிசனத்தில், அங்குள்ள சூழலில் கிடைத்திருக்கும். இங்கே விதியை விலக்கி, மதி வழிநடத்தும்.

‘‘எனக்கு கோயில் பிடிக்காது. பழக்கம் இல்லை’’ என்கிறீர்களா? பரவாயில்லை. தியானம் செய்யுங்கள். யோகா செய்யுங்கள். மதி (சந்திரன்) தெளிவாகும்.நல்ல நண்பர்களிடமும் (நிஜமான நண்பர்களிடம்) பெரியவர்களுடனும் பேசுங்கள். மதி தெளிவாகும். ஜென்ம விதியிலேயே மதியின் பலம் இணைக்கப்பட்டிருந்தால், அவருக்கு யார் ஆலோசனையும் ஜோதிடமும் ஆன்மிகமும் வேண்டாம். அந்த அமைப்பு இல்லாமல் தடுமாறு பவர்களுக்குத்தான் இது. சொந்த மதி இல்லாவிட்டால் இரவல் மதி (ஆலோசனை) வேண்டும். இரவல் மதி, கோயில், பிரார்த்தனை, பூஜை, பெரியவர்கள் ஆலோசனைகளில் கிடைக்கும். சந்திரனைப் பலப்படுத்தி, சகல நன்மைகளும் பெற்று சஞ்சலமின்றி வாழும் வழிகள்தான் இப்படிப்பட்ட வழிகள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sc-maha-24

  மகாராஷ்டிராவில் 1-12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு!: மாணவர்கள் உற்சாகம்

 • jammu-vaccine-24

  கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி!: ஜம்மு - காஷ்மீரில் சில்லிடும் குளிரில் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவகர்கள்..!!

 • republic20222

  டெல்லியில் குடியரசு தினவிழா ஒத்திகை : சிறப்பு படங்கள்

 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்