SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐப்பசி மாத ராசி பலன்களும், தன்னிகரற்ற தனிப் பெருமைகளும்!

2021-10-18@ 12:30:07

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M. ராஜகோபாலன்

ரிக், யஜுர், ஸாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்கள், இதிகாச புராணங்கள், நீதி மற்றும் தர்ம நூல்கள், புருஷ ஸுக்தம், ஸ்ரீ ஸுக்தம் ஆகியவற்றில் பொதிந்துள்ள ரகசியங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்தவரும், பித்ருக்களுக்குக் காரகத்துவம் வாய்ந்தவரும், ஸதா வலம் வந்துகொண்டிருப்பவருமான “சூரியன்”,  நவகிரகங்களுக்கும் நாயகன் என ஜோதிடக் கலை பூஜித்துப் பெருமை அடைகிறது. அத்தகைய சூரியன், சுக்கிரனின் ராசியான துலாம் ராசியைக் கடக்கும் காலத்தையே ஐப்பசி மாதம் என்றும் துலா மாதம் எனவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

மேஷ ராசியை சூரியன் கடக்கும் காலத்தில் சூரியன் உச்ச பலம் பெறுகிறார். அதே சூரியன், துலாம் ராசியைக் கடக்கும் காலத்தில் நீச்சம் அடைகிறார். சூரியன் ஆத்ம, பித்ரு, சரீர காரகர்.  நேர்மை, ஒழுக்கம், தர்மம், ஆத்ம பலம் தருபவர் சூரியன். நோயற்ற சர்மம் (skin) சூரியனின் கருணை ஒன்றினால் மட்டுமே பெறமுடியும். சூரியன் அளிக்கும் ஆன்மிக சுக அனுபவங்களுக்கும், சுக்கிரனால் நாம் அனுபவிக்கும் உலக சுக அனுபவங்களுக்கும்  எண்ணற்ற வித்தியாசங்களை சூரிய சித்தாந்தம் எனும் நூல் விவரித்துள்ளது.

சூரியன் தரும் ஆன்மிகப் பலன்கள், பிறவிப் பயனை அளிக்கும். சுக்கிரன் தரும் உலக சுகங்கள் மீண்டும், மீண்டும் பிறந்து, அதே சேற்றில் ஆழ்ந்து, புரண்டு, சோகத்தில் தள்ளும். ஜெனன கால ஜாதகங்களில் சூரியன், சுக்கிரன் ஆகியோரின் பலம் மிதமாக இருக்கவேண்டும். அதிகமாக இருந்தாலும், மிகவும் குறைவாக இருந்தாலும், வாழ்க்கை நலன்களை அவை பாதிக்கும்.
சூரியன், துலாம் ராசியைக் கடக்கும் காலத்தில், மக்கள் மனத்தில் ஆன்மிகச் சிந்தனைகளில் ஆர்வம் குறைந்து, உலக-சுகங்களில் அதிக அளவில் ஈடுபடும். இதற்குக் காரணம், மனிதப் பிறவிக்கு ஆன்மிக பலத்தை அளிக்கும் சூரியன், துலாம் ராசியில் நீச்சமடைவதேயாகும்.

ஆதலால், இந்த ஐப்பசி மாதத்தில், காவிரி மற்றும் இதர புண்ணிய நதிகளில் நீராடுவதும், தினமும் அருகிலுள்ள திருக்கோயில் தரிசனமும், ஈஸ்வர தியானமும் மனதில் தவறான எண்ணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும். மிகப் பழமையான பிருஹத் ஸம்ஹிதை, அர்த்த சாஸ்திரம், போஜ ஸம்பூ (மன்னர் போஜனும், மகா கவி காளிதாஸனும் இணைந்து இயற்றிய மத் ராமாயணம்)   ஆகிய நூல்கள் விவரிக்கின்றன. சுக்கிரனின் ராசியான துலாம் ராசியில் சூரியன் பலஹீனம் அடைவதை “நீச்சம்” என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஐப்பசி மாதத்தின் அரிய அருமை-பெருமைகள்!

காலச் சுவட்டின் அடிகளை ஆராய்ந்து பார்த்தால், ஐப்பசி மாதத்தின் கீழ்க்கண்ட பெருமைகள் புலப்படும்.

1. தந்தை தசரதனின் ஆணையை ஏற்று, 14 ஆண்டுகள் மிகக் கடுமையான வன-வாசத்தை முடித்த ஸ்ரீ ராமபிரான், தனது தர்ம பத்தினி ஸ்ரீ சீதை,ஸ்ரீ லக்ஷ்மணன், ஸ்ரீ அனுமன் ஆகியோருடன் அயோத்தியா மாநகரில் பிரவேசித்த தினம் (தீபாவளி தினம்) இந்த ஐப்பசியில்தான்.

2. தமிழகத்தின் புண்ணிய நதியான காவிரியில் தினமும் நீராடி, அறிந்தும் அறியாமலும் நாம் செய்துள்ள அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு, புனிதம் அடையும் மாதம் இந்த துலா காவேரி ஸ்நான மாதம்!

3. ஒரு துளி நீர் தீர்த்தத்தினால், நமக்கு சுவர்க்க வாழ்க்கையைப் பெற்றுத் தரும் பாகீரதி கங்கை நம் வீடு தேடி, அதிகாலையில் வந்து, நம் ஒவ்வொருவர் வீட்டின் தீர்த்தத்திலும் ஆவிர்பவித்து சகல பாவங்களிலிருந்தும் நம்மை விடுவித்து, அருள் புரியும் தீப ஒளித் திருநாள், ஐப்பசியில்தான் அமைந்துள்ளது!

4. தீர்க்க முடியாது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட கொடிய நோய்களைக்கூட தீர்த்தருளும் சக்தி பெற்ற, பக்தர்களைக் காக்க எந்நேரமும் திவ்ய ஹஸ்தத்தில் அமிர்த கலசத்துடன் காட்சி தந்தருளும் ஸ்ரீ தன்வந்த்ரி பகவானின் அவதாரமும் ஐப்பசி மாதத்தில்தான்.

5. கொடிய வறுமையையும், அடியோடு போக்கிடும் ஸ்ரீ மஹாலட்சுமி - குபேர பூஜையை இந்த ஐப்பசி மாதத்தில்தான், தீபாவளி தினத்தன்று செய்தால், உடனுக்குடன் பலன் தருவதை
அனுபவத்தில் காணலாம்.

6. முருகப் பெருமான், சூரனை சம்ஹரித்து, தர்மத்தை நிலைநாட்டி, பக்தர்களைக் காப்பாற்றியதும் இந்த ஐப்பசியில் வருவதால், மிகப் புண்ணிய, புனித மாதம் இது! கந்தர் சஷ்டி விரதம் இருப்பதும், கிருத்திகை சஷ்டி விரதம் அனுஷ்டிப்பதும், அனைத்து நட்சத்திரங்களும் உயர்ந்தவைதான் எனினும், இம்மாதத்தில் வரும்  முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த விசாக நட்சத்திரம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. விரதமிருந்து, கந்தனை மனமுருகித் துதிப்பதால் எண்ணற்ற நற்பலன்களை அபரிமிதமாகப் பெற்றுவிடலாம்.

7. “கங்கையின் புனிதமாய காவிரி...” என ஆழ்வார்கள் போற்றிய காவிரி நதியைப் பூஜித்து, அதில் தினமும் ஸ்நானம் செய்து, அனைத்து பாவங்களிலிருந்தும் நம்மை விடுவிப்பதும் இந்தத் துலாம் மாதம்தான்!

8.  “சுக்கில யஜூர் வேத”த்தை சூரிய பகவானிடமிருந்து கற்று, உலகிற்கு அளித்த ஸ்ரீ யாக்கிய வல்கியர் மகரிஷி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்த புண்ணிய மாதம் ஐப்பசி.

9. வேத தர்மத்தை அந்நியர்களிடமிருந்து பாதுகாக்க, சீக்கிய மத குருவான ஸ்ரீ குரு கோவிந்த சிங் “கால்ஸா” என்ற வீர அமைப்பினை ஆரம்பித்த பெருமை ஐப்பசியையே சேரும்!
10. யுகங்களில் இரண்டாவதான துவாபர யுகம் ஆரம்பமானதும் இந்த ஐப்பசியில்தான்!

11. ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமி மிக உயர்ந்த தினமாகிலும், ஐப்பசியில் வரும் பௌர்ணமி மிகப் பெருமை வாய்ந்தது. காரணம், இந்தத் தினத்தில் விரதம் இருப்பதும், பௌர்ணமி பூஜை செய்வதாலும் அளவிற்கு அதிகமான செல்வச் செழிப்பைத் தரும் மகாலட்சுமியின் அருள் கடாட்சத்தினை பரிபூரணமாகப் பெற்றுவிடலாம் பூஜா தேவதையாக மகாலட்சுமி விளங்குவதால், விவாகம் தள்ளிப்போதல், தடங்கல்கள் விலகும்! ஐப்பசி மாதத்தின் இத்தகைய பெருமைகள் அனைத்தையும்விட, ஓர் தன்னிகரற்ற புகழ் ஒன்றையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதுதான் ஐப்பசியில் வரும் “மஹாளய பட்சம்” எனப்படும் ஈடு இணையற்ற 15 பித்ரு பூஜை புண்ணிய தினங்கள்!

இது பற்றிய  விசேஷ கட்டுரை இப்பிரத்யேக மலரில் எமது “தினகரன்” வாசக அன்பர்களாகிய உங்களுக்கு வழங்குவதில் அளவற்ற மன மகிழ்ச்சியை அடைகிறோம். இம்மாதத்தின் ஒவ்வொரு புண்ணிய தினத்திற்கும் தக்க வழிகாட்டியாக அமைந்து, உங்கள் துன்பங்கள் யாவும் கதிரவனைக் கண்ட பனிபோல் விலகி, நீங்கள் மகிழ்ச்சியுடனும் மன நிம்மதியுடனும் இருத்தலே யாம்பெறும் சம்மானமாகக் கருதி, மனநிறைவு பெறுகிறோம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • etna-volcano-23

  இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!

 • sandjakki11

  "மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!

 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்