SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலையரசியின் கவின்மிகு கோயில்கள்

2021-10-13@ 10:43:31

மதுரை

மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஸ்ரீசரஸ்வதி தேவிக்கும் ஸ்ரீமஹாலட்சுமிக்கும் தனி சந்நதிகள் அமைந்துள்ளன. இத்திருக்கோயிலின் தூண் ஒன்றில் இருகைகள் மட்டுமே உடைய சரஸ்வதியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தேவி தன் இடக்காலை ஊன்றி வலக்காலை முன்வைத்த நிலையில் வீணை வாசிக்கும் தோற்றத்தில் நின்ற திருக்கோலத்தில் வலது தோளில் கிளியுடன் விளங்கு கிறாள். மதுரையில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ‘சிந்தா தேவி’ (சரஸ்வதி) என்னும் அம்மன் கோயில் ஒன்று இருந்ததாக மணிமேகலையினால் தெரிய வருகின்றது. இந்தக் கோயிலைப் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் கருதுகின்றார்கள்.

பத்மநாபபுரம்

கம்பர் தமிழ் நாட்டிலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது தான் வணங்கிய சரஸ்வதி தேவியின் திருவுருவையும் தன்னுடன் எடுத்து வந்து விட்டார். அச்சிலையே இன்று பத்பநாபபுரம் கோட்டையின் உள்ளே நிறுவப்பட்டுள்ளது.  பத்மாசனத்தில் காட்சி தரும் இப்பெருமாட்டி நவராத்திரி உற்சவத்தின் போது திருவனந்தபுரம் எழுந்தருளுகிறார். அவ்வாறு  எழுந்தருள வரும் போது அன்னையை தமிழக கேரள எல்லையில் இரு மாகாண மக்களும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

வேதாரண்யம்

திருமறைக்காடு என்றழைக்கப்படும் வேதாரண்யத்தில் சரஸ்வதி தேவி கலைகளின் வடிவாய் நின்று வழிபட்டதால் இங்கு அமைந்துள்ள சரஸ்வதி ‘வேத சரஸ்வதி’ என்று போற்றப்படுகிறாள்.

திருநெய்த்தானம்

ஸ்ரீஇருதயபுரீஸ்வரரை சரஸ்வதி பூஜித்த பேறு பெற்ற தலம் இது. இது திருவையாறு சப்ததானத்தலங்களில் ஒன்றாகும். இங்கும் சரஸ்வதி தீர்த்தம் உள்ளது.

ஆவுடையார் கோயில்

ஆவுடையார் கோயில் தூணில் சகல ஆபரணங்களையும் தரித்துக் கொண்டு தன் திருக்கரங்களில் வீணையை ஏந்தியவாறு சரஸ்வதியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

கைலாசநாதர் கோயில்

பல்லவர் காலத்தில் ராஜசிம்ம பல்லவனால் எழுப்பப்பட்ட ஆலயம் கைலாச நாதர் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் 3 இடங்களில் சரஸ்வதியின் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இதில் இரு சிற்பங்களில் 4 திருக்கரங்களும் அதில் வலக் கரங்களில் அட்சமாலையும் தியான முத்திரையும் விளங்க, இடக்கரங்களில் கமண்டலமும் ஓலைச்சுவடியில் கொண்டு விளங்குகிறாள். மூன்றாவது சிற்பத்தில் தன் வலக்கரங்களில் அட்சமாலையும் அபய முத்திரையும் இடது கரங்களில் கமண்டலமும், தாமரையும் ஏந்தியுள்ளாள்.

சீர்காழி

சிவபெருமானை அவமதிக்கும் நோக்குடன் தட்சன் ஒரு பெரும் யாகம் செய்தபோது, அதில் கலந்துகொண்ட அனைவரையும் சிவபெருமானின் ஜடாமுடியில் உதித்த வீரபத்ரர் விரட்டி அடித்து யாகத்தையும் அழித்துவிட்டார். அவ்வமயம் அந்த யாகத்தில் கலந்து கொண்ட பிரம்மனை தண்டித்து அவரது மனைவியான சரஸ்வதியின் மூக்கை அரிந்துவிட்டார். தன்தவறை உணர்ந்து சரஸ்வதி சீர்காழியில் உள்ள சட்ட நாதரை தனது துணைவரான பிரம்ம தேவருடன் வழிபட்டு அருள் பெற்றாள்.

பெருவேளூர்

(மணக்கால் ஐயம்பேட்டை)

அப்பர் சம்பந்தர் முதலியோரால் பாடல் பெற்ற ஸ்தலமான இவ்வூரில் சரஸ்வதி சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதாகக் கூறப்படுகிறது. ப்ரும்ம தேவன் தன் வலப்புறம் வாணியுடனும், இடதுபுறம் சரஸ்வதியுடனும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதால், இத்தல ஈசர் வாணீ சரஸ்வதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.

தோட்டப்பாளையம்

வேலூரில் உள்ள தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் ஆலயத்தில் கோஷ்ட தெய்வமான பிரம்மாவிற்கு நேர் எதிரில் சரஸ்வதி தேவி அமைந்துள்ளாள்.

திருப்பூந்துருத்தி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பூந்துருத்தியில் உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் கருவறைக் கோஷ்ட தேவதையாக சரஸ்வதி விளங்குகிறாள். இவளது மேலிரண்டு கரங்களில் அட்சமாலையும் சுவடியும் காணப்படுகிறது. கீழிரண்டு திருக்கரங்களில் அபய ஊரு முத்திரைகளைத் தாங்கியுள்ளாள்.

திருவீழிமிழலை

சரஸ்வதி மூன்று வேளைகளில் ( காலை, மதியம், மாலை) மூன்று ரூபங்களில் (காயத்ரீ, சாவித்ரீ, சரஸ்வதி) விளங்குவதாக வேதங்கள் சொல்கின்றன. அவ்வாறு மூன்று வடிவங்களையும் தாங்கி இவ்வூரில் உள்ள ஸ்ரீவீழி நாதரை வழிபட்டதால் இங்கும் காயத்ரீஸ்வரர், சாவித்ரீஸ்வரர் மற்றும் சரஸ்வதீஸ்வரர் என்ற திருநாமங்களில் லிங்க ரூபங்கள் விளங்குகின்றன.

திருநெல்வேலியில் சரஸ்வதி கோயில்

திருநெல்வேலியில் உள்ள கீழமாட வீதியில் உள்ள கோமதி அம்மன் திருச்சந்நதிக்கு எதிரே கலைவாணி சரஸ்வதிக்கென்று தனி கோயில் உள்ளது. சிருங்கேரி மகா சந்நிதானம் அவர்களின் விருப்பத்திற்கிணங்க உருவாக்கப்பட்ட திருக்கோயில் இது. புதன்கிழமை தேவியை அர்ச்சித்து வழிபட கல்வி ஞானம் மேன்மையுற்று விளங்குவர்.

இராமேஸ்வரம் வீணா சரஸ்வதி

ராமேஸ்வரத்தில் உள்ள பல தீர்த்தங்களில் காயத்ரீ தீர்த்தம், சாவித்திரீ தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகியவையும் அடக்கம், இத்திருக்கோயிலின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும்
அமைந்துள்ளன.பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ஒரு தீவாகும். பாம்பன் பாலத்தின் மூலம் பாரதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. காசியாத்திரை செல் பவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று ராமநாதஸ்வாமியை தரிசனம் செய்துவிட்டு பின்னர் காசி சென்று காசி விச்வநாதரை தரிசித்து மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாதஸ்வாமியை தரிசிப்பர். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இத்திருக்கோயிலில் பத்ர பீடத்தில் சுகாசனத்தில் சதுர் புஜங்களுடன் சரஸ்வதி அமர்ந்திருக்கிறாள். பின் கரங்களில் அட்சமாலை, சுவடி முன் கரகங்களில்  வீணையை ஏந்தியபடி காட்சி தருகிறாள். ஸர்வாலங்கார பூஷிதையாக காட்சி தரும் சரஸ்வதியின் திருவுருவை கண்டு தரிசித்து அவள் அருள் பெறுவோம்.

காஞ்சிபுரம்

முக்தி தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பழம்பெரும் திருக்கோயில்களில் ஒன்று கச்சபேஸ்வரர் திருக்கோயில், இங்கு சியாமளா தேவி தனி சந்நதி கொண்டு விளங்குகிறாள். சரஸ்வதி சிவனை வழிபட்டு அருள் பெற்ற தலம் இதுவாகும். இவள் தன் திருக்கரங்களில் வீணை, கிளி, பாசம், அங்குசம், குயில், தாமரை, நீலோத்பலம், மலரம்பு கரும்புவில் ஆகியவற்றை ஏந்திய  நிலையில் காட்சி தருகிறாள். காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலிலும் மகாசரஸ்வதி தனிச் சந்நதி கொண்டு அருள் புரிகிறாள்.

கடலங்குடி

நாகை மாவட்டத்தில் உள்ள கடலங்குடி கிராமத்தில் உள்ள திருமேனியார் சிவாலயத்தில் சரஸ்வதியின் திருமேனி காண்போரைக் கவரும் விதத்தில் உள்ளது. பெரும்பாலும் இவ்வுருவத்திலேதான் படங்கள் வரையப்படும். பத்ர பீடத்தில் இடது காலைத் தொங்கவிட்டு அதன் மேல் வலக்காலை வைத்துக் கொண்டு பின் வலக்கரத்தில் ஜபமாலையும் முன் கீழ்கரத்தில் சுவடியும் வைத்திருக்கிறாள். பின் இடமேற்கரம் மற்றும் முன் வலக் கீழ்கரம் ஆகியவற்றால் வீணையைத் தாங்கிக் கொண்டு அதை மீண்டும் பாவனையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. கையில் வளையல்களும் காலில் கொலுசும் கழுத்தில் முத்துச் சரங்களும்,
தலையில் கிரீடமும் தரித்துக் கொண்டு காண்போரைக் கவரும் வண்ணம் அமர்ந்திருக்கிறாள்.
உயிரோட்டமான சிற்பம்.

- ரஞ்சனா பாலசுப்ரமணியன்


மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்