SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்

2021-10-07@ 16:01:24


?வங்கியில் பணியாற்றி வரும் என் பேத்திக்கு 31 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. தந்தை இல்லை. தாய் மற்றும் தங்கை இவள் பொறுப்பில் இருப்பதால் திருமணம் வேண்டாம் என்கிறாள். சூழ்நிலைக்கு தகுந்த வரன் கிடைக்க என்ன பரிகாரம் செய்ய
வேண்டும்?
- லலிதா, மயிலாடுதுறை.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேத்தியின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் களத்ர ஸ்தானம் ஆகிய ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய செவ்வாய் ஆறில் மறைவதும் லக்னாதிபதி சுக்கிரன் எட்டில் அமர்ந்திருப்பதும் திருமண வாழ்வினை தடை செய்து வருகிறது.  மேலும் ஐந்தாம் பாவக அதிபதி சனி மூன்றில் அமர்ந்திருப்பது மணவாழ்வில் விருப்பமின்மையைத் தோற்றுவிக்கிறது. சூழ்நிலைக்கு தகுந்த வரன் கிடைக்க வேண்டும் என்று எழுதியுள்ளீர்கள். இவருடைய ஜாதக பலத்தின்படி நீங்கள் எதிர்பார்க்கும்படியான வரன் அதாவது தனது மனைவியின் குடும்பத்தாரை கவனித்துக்கொள்ளும் படியான வரன் அமைவது கடினமே. திருமணம் நடக்கும் பட்சத்தில் கணவன் மற்றும் புகுந்த வீட்டு தரப்பில் உருவாகும் பிரச்சினையை சமாளிப்பதே இவருக்குப் பெரும்பாடாக இருக்கும். ஒன்றை தியாகம் செய்தால்தான் மற்றொன்றை அனுபவிக்க இயலும். இதனைப் புரிந்தே உங்கள் பேத்தி செயல்படுகிறார். அவரது விருப்பம் போல் இருக்க அனுமதியுங்கள். தமிழ்மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமை நாள் அன்று மயூரநாதர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அவயாம்பிகை அம்மனின் அபிஷேகத்திற்கு பசும்பால் வாங்கித் தந்து வழிபடச் சொல்லுங்கள். அம்மனின் அருட்பார்வையால் இவரது வாழ்வும் வளம் பெறும்.

?எனது இடத்தில் வீடு கட்டி 2012ல் தளம் போட்டுவிட்டேன். பின் மற்ற வேலைகள் செய்ய பணம் இல்லாமல் வேலை பாதியில் நின்றுவிட்டது. தாய் வழியில் வர வேண்டிய பாகம் தடைபட்டு நிற்கிறது. தந்தையின் வழியில் உள்ள சொத்தில் பாகம் தர சித்தி மறுக்கிறார். பூர்வீக சொத்தில் இருந்து எனக்குரிய பாகம் கிடைக்குமா? வீடு கட்டி முடிக்க என்ன
பரிகாரம் செய்ய வேண்டும்?
 - சிவசங்கரன், சென்னை.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் குருசந்திர யோகம், பௌம பார்க்கவ யோகம், மார்த்தாண்ட யோகம் ஆகியவை உள்ளதால் பூர்வீக சொத்தில் நியாயமாக உங்களுக்கு வர வேண்டிய பாகம் நிச்சயமாக வந்து சேரும். முழு மூச்சுடன் முறையான நடவடிக்கைகளில் இறங்குங்கள். உங்களுக்கான உரிமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றத்தின் மூலமாகவும் உங்களால் தீர்வு காண இயலும். தற்போது நடந்து வரும் கிரஹ சஞ்சார நிலை என்பது உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. பூர்வீக சொத்து என்பது ஒருபுறம் இருந்தாலும் நீங்கள் கட்டி வரும் வீட்டினை முடிக்க இயலாமல் தடைபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த இடத்தில் உள்ள பூமிதோஷம் என்பது இதற்கான காரணமாக இருக்கலாம். கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் அந்த மனையில் முறையாக பயிற்சி பெற்ற வேதியரின் துணைகொண்டு சதுஷ்ஷஷ்டி பைரவர் மற்றும் யோகினி பலி பூஜையைச் செய்யுங்கள். தடைபட்டு நிற்கும் வீட்டு வேலை உடனடியாக முடிவிற்கு வரும். ஞாயிற்றுக்
கிழமை தோறும் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அமைந்திருக்கும் குறுங்காலீஸ்வரர் ஆலய வளாகத்தில் அருள்பாலிக்கும் சரபேஸ்வரரை தரிசித்து பிரார்த்தனை செய்து வர பூர்வீக சொத்தில் நியாயமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய பாகம் என்பதும் வந்து சேர்ந்துவிடும்.

?எனது மகள் 20 வருட காலமாக மன நோயால் பாதிக்கப்பட்டு மாத்திரை சாப்பிட்டு வருகிறாள்? திருமணம் செய்யவும் முடியவில்லை. டாக்டரிடம் கூப்பிட்டாலும் கோயிலுக்கு அழைத்தாலும் வர மறுக்கிறாள். அவளுக்கு திருமணம் நடக்குமா? என்ன
பரிகாரம் செய்ய வேண்டும்?
- தமிழரசன், வண்டலூர்.

மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மகளுக்கு தற்போது 41வது வயது நடந்து வரும் சூழலில் திருமணம் நடக்குமா என்று கேட்டிருக்கிறீர்கள். மகளைப் பெற்றவர்களின் மனநிலை நன்றாக புரிகிறது. என்றாலும் ஜாதக பலம், பூர்வ புண்ய ஸ்தான பலம், ஊழ்வினை என்பவை பாரபட்சம் ஏதுமின்றி அவரவர் வாழ்வினில் தாக்கத்தினை உண்டாக்கும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது செவ்வாய் தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீடு சுத்தமாக இருந்தாலும் களத்ர ஸ்தான அதிபதி குரு 12ம் வீட்டில் செவ்வாய் மற்றும் சனியுடன் இணைந்திருப்பதும் ஐந்தாம் வீட்டில் கேதுவின் வலிமையான நிலையும் மணவாழ்வினை தடைசெய்கிறது. அவரது ஜாதக பலத்தின்படியும் அடுத்து வர உள்ள தசாபுக்திகளின் அடிப்படையிலும் பெருத்த மாற்றத்தைக் காண இயலாது. அவர் கோயிலுக்கு வர மறுத்தாலும் அவரது காதுகளில் ஒலிக்கும்படியாக ஹனுமான் சாலிஸா, சுந்தர காண்டம் முதலியவற்றை படித்து வாருங்கள். அவர் கோயிலுக்கு வரவில்லை என்றால்கூட வீட்டில் இருந்தவாறே ராமஜெயம் இயன்றவரை எழுதச் சொல்லுங்கள். சதா ராமநாமத்தினை ஜபித்து வருவதாலும் ஆஞ்சநேய ஸ்வாமியை பிரார்த்தனை செய்து வருவதாலும் அவரது மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வர இயலும். ராம் ராம்.

?25 வயதாகும் என் மகனுக்கு கல்வி அறிவு அதிகம் இல்லை. கெட்ட பழக்கவழக்கத்தால் வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவாக உள்ளது. அவன் தீய பழக்கத்திலிருந்து விடுபடவும் வேலைக்குச் சென்று
வீட்டிற்கு உதவியாக இருக்கவும் உரிய பரிகாரம்
சொல்லுங்கள்.
- ராமதிலகம், ராஜபாளையம்.

பூசம் நட்சத்திரம், கடக ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது கேது தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சனி மற்றும் கேதுவின் இணைவும் ஜென்ம லக்னாதிபதி குரு நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பதும் தீய பழக்கங்களுக்கு அடிமையாக்கி இருக்கிறது. தற்போது கேது தசை நடந்து வருவதால் கடுமையான மனக்குழப்பமும் சிந்தனையில் தெளிவின்மையும் அவரை சூழ்ந்துள்ளது. இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள். 07.03.2023 முதல் துவங்கும் சுக்ர தசை அவரது வாழ்வினில் மாற்றத்தை உண்டாக்கும். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதை மெய்ப்படுத்தும் விதமாக தனது வாய் வார்த்தைகளை கொண்டு நன்றாக சம்பாதிக்கத் துவங்குவார். தனது பேச்சுத்திறமையால் தொழில் செய்து பிழைத்துக் கொள்வார். கேது தசை முடிவுறும் காலத்தில் தீய பழக்கங்களில் இருந்து வெளியே வந்து புதுவாழ்வினைத் துவங்குவார். சனிக்கிழமை தோறும் பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வார் சந்நதியில் நான்கு நெய் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். அத்துடன் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு உங்கள் மகனின் கைகளால் வஸ்திர தானம் செய்யுங்கள். மகனின் மனநிலையில் நல்லதொரு மாற்றத்தினைக் காண்பீர்கள்.

?பி.இ., படித்துள்ள என் மகள் கல்லூரியில் படிக்கும்போது ஒரு பையனுடன் காதல் ஏற்பட்டதாகவும் அவனைத்தான் திரு மணம் செய்துகொள்வேன் என்றும் கூறுகிறாள். நீ மாறி வர வேண்டும் என்று என்னை வற்புறுத்து கிறாள். எனது மகள் எங்கள் பேச்சை கேட்டு நடந்து எங்களை தலைநிமிர வாழவைப்பாளா? உரிய பரிகாரம் கூறுங்கள்.
- சீர்காழி வாசகி.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சூரியன், புதன், ராகு ஆகிய கிரஹங்களின் இணைவு பிடிவாத குணத்தினைத் தந்திருக்கிறது. மேலும் தான் செய்வது தான் சரி என்ற எண்ணமும் அவரிடம் நிறைந்திருக்கும். பல நேரத்தில் இந்த தன்னம்பிக்கை அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தாலும் திருமண வாழ்வினைப் பொறுத்த வரை அவரது விருப்பம் போல் செயல்பட இயலாது. திருமண பந்தத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பது அவரது விருப்பம் போல திருமணத்தை நடத்திக்கொள்ள அனுமதிக்காது. வீண் பிடிவாதத்திற்காக அந்தப் பையனை வலிய தேடிச் சென்று திருமணம் செய்துகொண்டாலும் மணவாழ்வு என்பது அத்தனை சிறப்பாக அமையாது. களத்ர ஸ்தான அதிபதி குரு நான்காம் வீட்டில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதாலும் மாத்ரு காரகன் சந்திரனின் பார்வை குருவின் மீது விழுவதாலும் உறவுமுறையில் இருந்து மண மகன் அமைவார். அவரது ஜாதக பலத்தின்படி 18.12.2021ற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் அவரது மனநிலையில் மாற்றத்தை உண்டாக்கும். சிறிது காலம் கழித்து பெற்றோர் ஆகிய உங்களை மாப்பிள்ளை பார்க்கச் சொல்வார். உங்கள் மகள் பிறந்த ஊரில் இருந்து வடக்கு திசையில் நிரந்தர பணியில் உள்ள உங்கள் உறவினர் ஒருவரின் பிள்ளையே மருமகனாக வருவார். வியாழன்தோறும் குருபகவானுக்கு ஐந்து நெய்விளக்குகள் ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை சொல்லி வழிபட்டு வாருங்கள். 17.10.2022ற்குப் பின் மகளின் மணவாழ்வு
உங்கள் கௌரவத்தை உயர்த்தும்
வகையிலேயே அமையும். கவலை வேண்டாம்.
“தேவானாஞ்ச ருஷீனாஞ்ச குரும் காஞ்சன சந்நிபம்
புத்திபூதம் த்ரிலோகேசம் தம்நமாமி ப்ருஹஸ்பதிம்”

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர்
ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Coimbatore jallikattu

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

 • pipin-statue-21

  குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

 • rose-shaped-coral-21

  என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

 • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

  திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

 • Marinaa

  சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்