SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வளம் தரும் நவராத்திரி!

2021-10-07@ 15:57:22

நவராத்திரி என்ன பொருள்?

நவராத்திரி என்பதை நவ+ ராத்திரி என்று பிரிக்கலாம். நவம் என்பதற்கு புதுமை, நட்பு, பூமி, ஒன்பது, கார்காலம் என பல பொருள்கள்  உண்டு. ஒன்பது ராத்திரிகள்  செய்யவேண்டிய வழிபாடு அல்லது ஒன்பது நாள்  இருக்க வேண்டிய விரதம் என்ற  பொருளில் இந்தச்  சொல் அமைந்துள்ளது. இது நமக்கு புத்தம் புதிய உணர்வுகளைத்  தருவதால் இந்த நவ (ஒன்பது) ராத்திரிகள்,  நமக்கு புதிய (நவ) ராத்திரிகளாக இருக்கின்றன. புதிய கற்பனைகளைத் தருகின்றன. புதிய உத்வேகத்தைத் தருகின்றன. அந்த உற்சாகத்தைப்  பெறுவதற்காகவும், புதிய  சக்தியைப் பெறுவதற்காகவும் நவராத்திரி பண்டிகையை  நாம் கொண்டாடுகின்றோம். சக்தி இல்லாவிட்டால் செயல் இல்லை. அந்த சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும்  விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு இரண்டு ஆற்றல்கள்  வேண்டும்.
1. நிலை நின்ற ஆற்றல் (சிவம்).2. செயல்பட்டு நகரும் ஆற்றல் (சக்தி) (potential and Kinetic energy).
2. மனிதனுக்கு அவசியமான இந்த செயல்படும் ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

புதிய விஷயங்கள்
புதிய கற்பனைகள்

நவ என்றால் புதியது அல்லவா. இந்த 9 நாட்களிலும் அம்பிகையைப் புதுப்புது  அலங்காரத்தோடு நாம் தரிசிக்கிறோம். நம்முடைய மகிழ்ச்சி பெருகுகிறது. சென்ற  ஆண்டு போலவே இந்த ஆண்டு அலங்காரம் வைக்கமாட்டார்கள். புதிய விஷயங்கள்   இருக்கும். புதிய கற்பனைகள் இருக்கும். புதிய உற்சாகம் இருக்கும். அதனாலும்  சென்ற நவராத்திரி போல் இந்த நவராத்திரி இல்லை. இது புதிய நவராத்திரி  என்பதாலும் இதை நவ (புதிய) ராத்திரி என்று அழைக்கிறார்கள். விருப்பம், விருப்பத்தினால் பெறும் அறிவு,அறிவு கொண்டு செய்யும் செயல் என 3 x  3 =9 நாட்கள் பண்டிகை இது. இதன் தத்துவம் இது.  நவராத்திரியில் முதல் மூன்று  நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். நடுவில் உள்ள  மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இறுதி  மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம்.

என்ன கிடைக்கும்?

இந்த நவராத்திரி விரதம், புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமையில் துவங்குகின்றது.  இதில் முதல் நாள் கும்பத்தில் மகாதேவியாகிய அம்பாளை  ஆவாகனம் செய்து,  ஒன்பது ராத்திரிகள் கொலு வைத்து, விரதம் இருக்கின்றோம். இந்த விரதம் மூலமாக  நமக்கு அடுத்த ஓராண்டுக்குத் தேவையான உற்சாகமும் சக்தியும் மகிழ்ச்சியும்  கிடைக்கிறது. நவராத்திரி ஒன்பதாம் நாள் ஆயுத பூஜை நாள் என்று கூறுவார்கள். ஒருவர் தன் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தக்கூடிய கருவிகளை வழிபடுவது தான் ஆயுத பூஜையின் சிறப்பு. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒருவரது வேலையைத் தொடங்குவதற்கு முன்பு, தான் பயன்படுத்தும் கருவிகளை  வணங்கியே வேலையைத் தொடங்குவார்கள். இது இயல்பான வழக்கம்.

எப்படி விரதம் இருப்பது?
நவராத்திரிக்கு வேண்டிய பூஜைக்குத் தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூஜை தொடங்கவேண்டும். அடுத்து  பிரதமையில் ஆரம்பித்து முதல் எட்டு நாட்கள் பகலில் உணவு உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் எளிய உணவுகளை ஏற்கலாம். இந்துக்கள் விரதத்தில், முழுமையாக பட்டினி இருக்க வேண்டும் என்பதை நம்முடைய  பெரியவர்கள் நிச்சயமாகச்  சொல்லவில்லை. இருந்தால் நல்லது. முடியா விட்டால்,  சில எளிய உணவுகளை உட்கொண்டு விரதத்தைத் தொடரலாம்.

நிவேதனங்கள்

நவராத்திரியின்  ஒன்பது நாளும் வெண் பொங்கல், புளியோதரை, சர்க்கரை பொங்கல், கதம்ப சாதம்,  தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை அம்பிகைக்கு நிவேதனம்  செய்யலாம். நவதானியச் சுண்டல் நிவேதனம், நவக்கிரக நாயகர்களைத்  திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.  இருப்பினும் வாசகர்கள் வசதிக்காக ஒரு சிறு பட்டியலைத்  தருகிறோம்.
1-ம் நாள். நைவேத்தியம். வெண்பொங்கல். சுண்டல் வெள்ளை கொண்டைக்
கடலை..
2-ம் நாள் நைவேத்தியம். புளியோதரை. சுண்டல். பயத்தம் பருப்பு…
3-ம் நாள் நைவேத்தியம். சக்கரைப் பொங்கல். சுண்டல். மொச்சைக் கடலை…
4-ம் நாள் நைவேத்தியம். கதம்பம் சாதம் சுண்டல். பச்சைப் பட்டாணி…
5-ம் நாள் நைவேத்தியம். தயிர் சாதம் சுண்டல் வேர்க்கடலை…
6-ம் நாள் நைவேத்தியம். தேங்காய் சாதம். சுண்டல் கடலைப்பருப்பு…
7-ம் நாள் நைவேத்தியம். எலுமிச்சை சாதம். சுண்டல் வெள்ளை பட்டாணி…
8-ம் நாள் நைவேத்தியம். பாயசம்
சுண்டல் காராமணி…
9-ம் நாள் நைவேத்தியம் அக்கார அடிசல் சுண்டல் சாதா கொண்டைக் கடலை…
செவ்வாய் மற்றும் வெள்ளியன்று புட்டு அல்லது சிவப்பு காராமணி இனிப்பு
சுண்டல் செய்யலாம்.

விரதம்  என்பதே இறைவனை வழிபடுகின்ற மன உறுதியைச் சொல்கிறதே தவிர, இந்த  உணவை உண்ண வேண்டும்; இந்த உணவை உண்ணக்கூடாது என்கின்ற பட்டியலை எப்பொழுதும்  தருவதில்லை. படையல் நிவேதனங்கள் அவரவர்கள் உணவுப் பழக்கம் மற்றும் வசதி வாய்ப்புகளைச்  சார்ந்தது. ஆனால் அம்பிகையின் மீது வைக்கக்கூடிய பக்தி என்பது பொதுவானது.
அதுதான் எந்த விரதத்திலும் பிரதானம். ஆயுள் தோஷங்கள் நீங்கபுரட்டாசி  மாதத்தை பாத்ரபத மாதம் என்று சொல்லுவார்கள். சூரியன் கன்னி ராசியில்  பிரவேசிக்கும் மாதம் . புதனுடைய ராசி கன்னி ராசி. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பல் என்று அக்கினி புராணம் கூறுகிறது.  எமனின் கோரைப் பல்லிருந்து  தப்ப, நிவாரணமாக,  நவராத்திரிப்  பண்டிகையை ஒவ்வொருவரும் கொண்டாடவேண்டும்;  அல்லது கோயில்களுக்குச் சென்று பண்டிகைகளின் போது கலந்து கொண்டு வணங்கி,  அவள் பேரருள் பெற வேண்டும். அதன் மூலமாக ஆயுள் தோஷங்கள் நீங்கி எமனின் பிடியிலிருந்து தப்பி வாழ்வை நீட்டித்துக்  கொள்ள  முடியும். அதற்கு அம்பிகையின் பேரருள் துணை செய்யும்.

எப்போது பூஜை செய்ய வேண்டும்?

விரதம்  இருப்பவர்கள் பொதுவாக பகலில் விரதம் இருந்து, இரவு அம்பிகைக்கு பூஜை நிவேதனம் செய்து அந்தப் பிரசாதத்தை மட்டுமே உண்ண வேண்டும். ஒன்பதாம் நாள்  நவமி அன்று முழுமையாக உபவாசம் இருப்பது நல்லது. அது கிட்டத்தட்ட ஏகாதசி  விரதம் போல. ஏகாதசிக்கு எப்படி துவாதசி பாரணை முக்கியமோ அதைப்போல  மகாநவமியில் விரதமிருந்து, அடுத்த நாள் விஜயதசமியில் காலை  9:00 மணிக்குள்  பாரணையை முடிக்க வேண்டும். தினசரி இரவு 7 மணி முதல் அதிகபட்சம் 9 மணி வரை நவராத்திரி பூஜையை நிறைவேற்றுவது சாலச்சிறந்தது. தினமும் இரவில் கொலு  பொம்மைகளுக்கு ஆரத்தி எடுத்தல்
அவசியம்.

நவராத்திரியில் என்னென்ன படிக்கலாம்?

9 நாட்களும் அம்பாளுக்கான பிரத்தியேகமான நாட்கள் என்பதால் அம்பிகைக்குரிய  ஸ்லோகங்களை, இசைப்  பாடல்களை வாசிக்கலாம். புராணங்கள் வாசிப்பவர்கள் தேவி பாகவதம் பெரும்பாலும் படிக்கிறார்கள். இது தவிர ராமாயணம் மகாபாரதம்  படிப்பதாலும் ஒன்றும் தவறு இல்லை. அபிராமி அந்தாதி, லலிதா ஸஹஸ்ரநாமம்,  லஷ்மி ஸஹஸ்ரநாமம், சூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலாவல்லி மாலை,  துர்கா அஷ்டோத்திரம், மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் போன்ற எண்ணற்ற அம்பாள்  வழிபாட்டு மந்திரங்களையும்,அம்பிகையின் மீது இயற்றப்பட்ட எளிமையான பாடல்
களையும் பாடலாம்.

 கொலு வைப்பதன் தத்துவம்

கொலு  வைப்பதன்  அடிப்படை தத்துவம் இதுதான்.  பல்வேறு பொம்மைகள். பல படிகள்.  நடுநாயகமாக அம்பாள் .சக்தியின் வடிவம். எங்கும் நிறைந்து இருக்கக்கூடிய  அந்த சக்தி சொரூபம் ,‘‘நான் இருக்கிறேன்” என்பதை பிரத்தியட்சமாக காட்டுவதற்காக, தன்னைச் சுற்றிப் பல பொருள்களை வைத்துக் கொண்டு, தானும் அதில்
நடுநாயகமாக  வீற்றிருக்கின்றாள்.

பெண்களின் ஆற்றலை
அளவிட...
கோலங்கள் என்பது அற்புதமானது. பெரும்பாலும் பெண்கள் தினம் தெருவிலே  கோலம்  போடுகின்றார்கள். அது  மஹாலஷ்மியை வரவேற்பது போலாகும். விடியலில்  கோலம் போடும் வீட்டில் மங்கள சக்திகள் நுழைகின்றன. விழாக்காலங்களிலும்  கோலம் போடுகிறார்கள். நவராத்திரியிலும் கோலம் போடுகின்றார்கள். கோலம், மனதின் கோணல்களை மாற்றுகிறது. இந்த கோலத்தைப் போடவேண்டும் என்று மனது தான் கற்பனை செய்கின்றது. அடுத்து அந்த  கற்பனை, இப்படி வண்ணத்தோடு போட்டால்  எப்படி  இருக்கும் என்று முன்கூட்டியே படம் பிடிக்கிறது.

மூன்றாவது புள்ளிகளை இணைக்க கூடிய வளைவுகளும் கோடுகளும் ஒரு பெண், எத்தனை கவனத்தோடு, இந்த  கோலத்தைப்  போடுகின்றாள்  என்பதைக் காட்டுகிறது. இந்தப் பயிற்சி அவளுடைய  மன ஒருமைப்பாட்டையும், கற்பனைத் திறனையும், படைப்பூக்கத்தையும் நிதானத்தையும், புதியது கற்கும் ஆர்வத்தையும் அளவிடுகிறது. அதிகரிக்கிறது. ஒரு குடும்பத்துக்கு இவை முக்கியமான பயிற்சிகள் அல்லவா. அந்தப் பயிற்சிகளை மறைமுகமாக கொடுப்பது இந்த நவராத்திரி கோலங்கள். எனவே தினசரி விதம்விதமான கோலத்தைப் போடுங்கள். அம்பிகையை நீங்கள் மகிழ்ச்சிப்படுத்துவது போலவே உங்கள்  மனதையும் நீங்கள் மகிழ்ச்சி அடையச் செய்கின்றீர்கள். இந்த கோலத்தை பார்க்கின்ற பார்வையாளர்களையும் நீங்கள் மகிழ்ச்சி அடையச் செய்கிறீர்கள். இதன் மூலம் குடும்பம் குதூகலமாக இருக்கும்.

மங்களப் பொருட்கள் தர வேண்டிய முறை

ஒவ்வொரு நாளும் பூஜை முடிந்தவுடன் எல்லோருக்கும் பிரசாதம்  கொடுத்து, வந்திருக்கக்கூடிய பெண்களுக்கு தாம்பூலத்தோடு மங்கலப் பொருட்களைத் தருகின்ற வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.  நீங்கள் தயவு செய்து உங்களுக்கு யாரேனும் கொடுத்த ஒரு ரவிக்கைத் துண்டு அல்லது மஞ்சளை மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள். வேறு பரிசுப் பொருளாக இருந்தால் கொடுக்கலாம். பிரசாதத்தை  ஒவ்வொருவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.  மறந்துவிட வேண்டாம்.  இதில் இன்னொரு நுட்பமும் இருக்கிறது. மலிவான விஷயமாகவோ, உபயோகம் இல்லாத ஒரு பொருளாகவோ யாருக்காவது தரலாம் என்றெல்லாம் நினைத்து, நீங்கள் எந்தப் பரிசுப் பொருளையும் தர வேண்டாம். நீங்கள் சுமங்கலிப் பொருட்களை தருகின்ற பொழுது, இரண்டு விஷயங்கள் முக்கியம்.

1. நீங்கள் எத்தனை பேருக்கு தருகின்றீர்கள் என்பது முக்கியமல்ல. எந்த மனநிலையில் தருகின்றீர்கள் என்பது முக்கியம்.
2. அந்தப் பொருட்களை பயன்படுத்தக் கூடிய தரத்தில் தரவேண்டும் என்பது அதைவிட முக்கியம்.
இதை மறந்து விட்டால், கடமைக்கான பூஜையாகத்  தான் இருக்குமே தவிர,
கண்ணியமான பூஜையாக இருக்காது.

எல்லோருக்கும் உரிய நவராத்திரி
1. நவராத்திரி நாள் என்பது எல்லோருக்கும் உரிய நாள். ஏழை மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற வேண்டும் என்பதற்காக மகாநவமி அன்று கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியை வணங்குகின்றார்கள்.
2. தம்பதிகள் இணக்கமாக வாழவும் பல்வேறு உலகியல் பயன்  பெறவும் அம்பிகையை நவராத்திரியில் வணங்குகின்றார்கள்.
3. குழந்தைச்செல்வம் இல்லாதவர்கள் , நவராத்திரி பூஜையை முறையாக முடிக்கும் பொழுது அவர்களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படுகின்றது .
4.  தொழில் வர்த்தகத்தில் உள்ளவர்கள் நல்ல லாபம் பெறுவதற்கு நவராத்திரியில்  மகாலட்சுமியை வணங்கி, செல்வ வளத்தை பெருக்கிக்  கொள்ளுகின்றார்கள்.
5. மனதில் தன்னம்பிக்கை வரவும்,
அச்சம் நீங்கவும், வீரம் பிறக்கவும், தைரியம் சிறக்கவும் துர்கா பூஜை உதவுகிறது.
6. கலைஞர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளை வைத்து ‘‘மகாநவமி” அன்று கலைமகளுக்கு சிறப்பான வழிபாடுகள் செய்கின்றார்கள்.
7. விவசாயிகள் தன, தான்ய விருத்தி ஏற்படவும், பசு விருத்தி ஏற்படும் சரஸ்வதி பூஜையை ஆயுத பூஜை என்று
கொண்டாடுகிறார்கள்.

பத்துவிதமான சக்திகள்

சிவசக்தி  தத்துவத்தில் சிவன் என்பது ஆற்றலின் இருப்பிடத்தையும், சக்தி என்பது அந்த  ஆற்றலின் வெளிப்பாட்டையும் குறிக்கக்கூடியது. பிரகாஸா  என்று சக்தி  ஒளியையும், விமரஸா  என்று அதன் பிரதிபலிப்பை   சிவமும் காட்டுவதாகச் சொல்லுகின்றார்கள். தேவியின் உருவ வேறுபாடுகளை  தசமஹாவித்யா என்று வர்ணிக்கிறார்கள்.  தசமஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஒரு மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவதை
அறியும் நுட்பமே  தசமஹாவித்யா.

அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.
1. மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்துக் கேடுகளையும் தனதாக்கி  நன்மையை பிறருக்கு அருள்பவள்.
2. புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியைக் காப்பாற்றும் நாயகி. மனதில்  ஏற்படும் எண்ணங்களுக்குக்
காரணமானவள். அழகும், சுந்தரவதனமும்  நிறைந்தவள்.
3. பகுளாமுகி: பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால்
தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள்.
4. திரிபுரசுந்தரி: பதினாறு வயது கன்னிகையின் உருவைக்கொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம், என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்குபவள். சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம்  இவளுடையது.
5. தாரா: நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹாசக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.
6.  கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா  சக்தியாக திகழ்பவள். அழகும், செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே  
லக்ஷ்மியாக வணங்குகிறோம். வெள்ளை யானை சூழ வலம் வரும் நாயகி கமலாத்மிகா.
7. காளி: கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வண வேதத்தை குறிப்பவள்.  மயானத்தில் உறைபவள்.  வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள்.  அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும்,
ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.
8.  சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்து வரும்  ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது.  ஆண் - பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.
9. தூமாவதி: கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிற  ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும் கொண்டவள். கையில் புகை கக்கும்  பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.
10.  திரிபுரபைரவி: பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாகக் காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய  போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட  வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • BIPIN RAWAT

  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

 • BlackBox_Helicopter_Coonoor

  குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

 • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

  வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

 • Vaikunda Ekadasi

  பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

 • burundi-fire-8

  புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்