SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்துக்கள் முப்பது-நாதமும் கீதமும் இணைந்த நவராத்திரி

2021-10-06@ 15:27:17


நவராத்திரி ஆரம்பம் 7-10-2021

சரஸ்வதி பூஜை 14-10-2021

விஜயதசமி 15-10-2021

மக்கள்  கொண்டாடும் பண்டிகைகளை கோயில்களில் கொண்டாடுவதில்லை. கோயில்களில் கொண்டாடும் பிரம்மோற்சவம் போன்ற பண்டிகைகளை, உற்சவங்களை வீடுகளில் கொண்டாடுவதில்லை. ஆனால், கோயில்களிலும், வீடுகளிலும் ஒரு சேரக் கொண்டாடப்படும் பண்டிகை ஒன்று உண்டென்றால், அது “நவராத்திரி.”  கோயில்களிலும் கொலு. வீடுகளிலும் கொலு. அங்கேயும் தினசரி பாட்டுக் கச்சேரி.  வீடுகளிலும் பாட்டுக் கச்சேரி. அங்கேயும் தினசரி பூஜை, நிவேதனம். வீடுகளிலும் பூஜை, நிவேதனம். பொதுவாக வீடுகளில் கொண்டாடும் எல்லாப் பண்டிகைகளும் ஓரிரு நாட்களில் முடியும். ஆனால், நவராத்திரி பத்து நாட்கள் வீட்டிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.  இதில் தான் எத்தனை எத்தனைச் சிறப்புக்கள்... நமது வாசகர்களுக்காக முப்பது முத்துக்களை (நவராத்திரி விஷயங்களை) மாலையாக்கி இதோ உங்கள் முன் படைக்கிறோம்.

1. நவராத்திரி என்ன பொருள்?

நவராத்திரி என்பதை நவ+ ராத்திரி என்று பிரிக்கலாம். நவம் என்பதற்கு புதுமை, நட்பு, பூமி, ஒன்பது, கார்காலம் என பல பொருள்கள்  உண்டு. ஒன்பது ராத்திரிகள்  செய்யவேண்டிய வழிபாடு அல்லது ஒன்பது நாள்  இருக்க வேண்டிய விரதம் என்ற  பொருளில் இந்தச்  சொல் அமைந்துள்ளது. இது நமக்கு புத்தம் புதிய உணர்வுகளைத்  தருவதால் இந்த நவ (ஒன்பது) ராத்திரிகள்,  நமக்கு புதிய (நவ) ராத்திரிகளாக இருக்கின்றன. புதிய கற்பனைகளைத் தருகின்றன. புதிய உத்வேகத்தைத் தருகின்றன.

அந்த உற்சாகத்தைப்  பெறுவதற்காகவும், புதிய  சக்தியைப் பெறுவதற்காகவும் நவராத்திரி பண்டிகையை  நாம் கொண்டாடுகின்றோம். சக்தி இல்லாவிட்டால் செயல் இல்லை. அந்த சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும்  விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு இரண்டு ஆற்றல்கள்  வேண்டும்.

1. நிலை நின்ற ஆற்றல் (சிவம்).2. செயல்பட்டு நகரும்  ஆற்றல் (சக்தி) (potential and Kinetic energy).
2.  மனிதனுக்கு அவசியமான இந்த செயல்படும் ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
2. புதிய விஷயங்கள்

புதிய கற்பனைகள்

நவ என்றால் புதியது அல்லவா. இந்த 9 நாட்களிலும் அம்பிகையைப் புதுப்புது  அலங்காரத்தோடு நாம் தரிசிக்கிறோம். நம்முடைய மகிழ்ச்சி பெருகுகிறது. சென்ற  ஆண்டு போலவே இந்த ஆண்டு அலங்காரம் வைக்கமாட்டார்கள். புதிய விஷயங்கள்   இருக்கும். புதிய கற்பனைகள் இருக்கும். புதிய உற்சாகம் இருக்கும். அதனாலும்  சென்ற நவராத்திரி போல் இந்த நவராத்திரி இல்லை. இது புதிய நவராத்திரி  என்பதாலும் இதை நவ (புதிய) ராத்திரி என்று அழைக்கிறார்கள். விருப்பம், விருப்பத்தினால் பெறும் அறிவு,அறிவு கொண்டு செய்யும் செயல் என 3 x  3 =9 நாட்கள் பண்டிகை இது. இதன் தத்துவம் இது.  நவராத்திரியில் முதல் மூன்று  நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். நடுவில் உள்ள  மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இறுதி  மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம்.

3. என்ன கிடைக்கும்?

இந்த நவராத்திரி விரதம், புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமையில் துவங்குகின்றது.  இதில் முதல் நாள் கும்பத்தில் மகாதேவியாகிய அம்பாளை  ஆவாகனம் செய்து,  ஒன்பது ராத்திரிகள் கொலு வைத்து, விரதம் இருக்கின்றோம். இந்த விரதம் மூலமாக  நமக்கு அடுத்த ஓராண்டுக்குத் தேவையான உற்சாகமும் சக்தியும் மகிழ்ச்சியும்  கிடைக்கிறது. நவராத்திரி ஒன்பதாம் நாள் ஆயுத பூஜை நாள் என்று கூறுவார்கள். ஒருவர் தன் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தக்கூடிய கருவிகளை வழிபடுவது தான் ஆயுத பூஜையின் சிறப்பு. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒருவரது வேலையைத் தொடங்குவதற்கு முன்பு, தான் பயன்படுத்தும் கருவிகளை  வணங்கியே வேலையைத் தொடங்குவார்கள். இது இயல்பான வழக்கம்.

4. கலைத்திறன் வளர்க்கும் விழா

கொலு  வைப்பதில் இருக்கட்டும். தினம் அம்பாளுக்கு பல்வேறுவிதமான நிவேதனங்கள் செய்வதில் இருக்கட்டும். தினம்  நாமோ, நம் வீட்டிற்கு வருகின்றவர்களோ), புதிய ஸ்தோத்திரங்கள் சொல்வதும், பாடல்களைப் பாடுவது போன்ற நிகழ்ச்சிகளும்  இருக்கும். அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே, நவராத்திரி நாட்களில் தினமும்  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரும் பாட வேண்டும். இவைகளெல்லாம் நமது கலைத் திறனையும் படைப்புத்  திறனையும் மறைமுகமாக வளர்க்கின்றன. அதற்கான ஒரு ஏற்பாடாகவும்  இந்த  நவராத்திரி பெருவிழா அமைந்திருக்கிறது.

5. எப்படி விரதம் இருப்பது?

நவராத்திரிக்கு வேண்டிய பூஜைக்குத் தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூஜை தொடங்கவேண்டும். அடுத்து  பிரதமையில் ஆரம்பித்து முதல் எட்டு நாட்கள் பகலில் உணவு உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் எளிய உணவுகளை ஏற்கலாம். இந்துக்கள் விரதத்தில், முழுமையாக பட்டினி இருக்க வேண்டும் என்பதை நம்முடைய  பெரியவர்கள் நிச்சயமாகச்  சொல்லவில்லை. இருந்தால் நல்லது. முடியா விட்டால்,  சில எளிய உணவுகளை உட்கொண்டு விரதத்தைத் தொடரலாம்.

6. நிவேதனங்கள்

நவராத்திரியின்  ஒன்பது நாளும் வெண் பொங்கல், புளியோதரை, சர்க்கரை பொங்கல், கதம்ப சாதம்,  தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை அம்பிகைக்கு நிவேதனம்  செய்யலாம். நவதானியச் சுண்டல் நிவேதனம், நவக்கிரக நாயகர்களைத்  திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.  இருப்பினும் வாசகர்கள் வசதிக்காக ஒரு சிறு பட்டியலைத்  தருகிறோம்.

1-ம் நாள். நைவேத்தியம். வெண்பொங்கல். சுண்டல் வெள்ளை கொண்டைக்கடலை..
2-ம் நாள் நைவேத்தியம். புளியோதரை. சுண்டல். பயத்தம் பருப்பு…
3-ம் நாள் நைவேத்தியம். சக்கரைப் பொங்கல். சுண்டல். மொச்சைக் கடலை…
4-ம் நாள் நைவேத்தியம். கதம்பம் சாதம் சுண்டல். பச்சைப் பட்டாணி…
5-ம் நாள் நைவேத்தியம். தயிர் சாதம் சுண்டல் வேர்க்கடலை…
6-ம் நாள் நைவேத்தியம். தேங்காய் சாதம். சுண்டல் கடலைப்பருப்பு…
7-ம் நாள் நைவேத்தியம். எலுமிச்சை சாதம். சுண்டல் வெள்ளை பட்டாணி…
8-ம் நாள் நைவேத்தியம். பாயசம்

சுண்டல் காராமணி…

9-ம் நாள் நைவேத்தியம் அக்கார அடிசல் சுண்டல் சாதா கொண்டைக் கடலை…
செவ்வாய் மற்றும் வெள்ளியன்று புட்டு அல்லது சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல் செய்யலாம்.

விரதம்  என்பதே இறைவனை வழிபடுகின்ற மன உறுதியைச் சொல்கிறதே தவிர, இந்த  உணவை உண்ண வேண்டும்; இந்த உணவை உண்ணக்கூடாது என்கின்ற பட்டியலை எப்பொழுதும்  தருவதில்லை. படையல் நிவேதனங்கள் அவரவர்கள் உணவுப் பழக்கம் மற்றும் வசதி வாய்ப்புகளைச்  சார்ந்தது. ஆனால் அம்பிகையின் மீது வைக்கக்
கூடிய பக்தி என்பது பொதுவானது.அதுதான் எந்த விரதத்திலும் பிரதானம்.

7. ஆயுள் தோஷங்கள் நீங்க புரட்டாசி  மாதத்தை பாத்ரபத மாதம் என்று சொல்லுவார்கள். சூரியன் கன்னி ராசியில்  பிரவேசிக்கும் மாதம் . புதனுடைய ராசி கன்னி ராசி. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பல் என்று அக்கினி புராணம் கூறுகிறது.  எமனின் கோரைப் பல்லிருந்து  தப்ப, நிவாரணமாக,  நவராத்திரிப்  பண்டிகையை ஒவ்வொருவரும் கொண்டாடவேண்டும்;  அல்லது கோயில்களுக்குச் சென்று பண்டிகைகளின் போது கலந்து கொண்டு வணங்கி,  அவள் பேரருள் பெற வேண்டும். அதன் மூலமாக ஆயுள் தோஷங்கள் நீங்கி எமனின் பிடியிலிருந்து தப்பி வாழ்வை நீட்டித்துக்  கொள்ள  முடியும். அதற்கு அம்பிகையின் பேரருள் துணை செய்யும்.

8. மூன்று கடன்களையும் கழிப்பதற்கான மாதம்

பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று கடன்கள் முக்கியமானது. ஒன்று  தெய்வத்திற்குச்  செலுத்த வேண்டிய கடன்.(தேவ கடன்) நம்மை இந்த உலகத்திலே  படைக்க வைத்து, நாம் வாழ்வதற்கான தண்ணீர் காற்று, நிலம், பயிர்கள் என்று  எல்லாவற்றையும் படைத்தவன். உயிரைப்  படைத்தபோது, அந்த உயிருக்கான அத்தனைத் தேவைகளையும் கொடுத்தவன் என்பதால், படைத்தவனை நன்றிக்கடனோடு நினைப்பது தேவ கடன் என்று சொல்லுவார்கள்.

தேவ கடன் விஷயத்தை  பல்வேறு  சாஸ்திரங்களிலும் மந்திரங்களிலும் நமக்கு காட்டித் தந்தவர்கள் மனன சீலர்களான ரிஷிகள். அவர்கள் அருளிய மந்திரங்களை நாம் தினசரி  பயன்படுத்துவதன்  மூலமாகவும், வேத பாராயணம், ஹோமங்கள் முதலியவற்றைச் செய்வதாலும் ரிஷிகளை நினைத்து சந்தியாவந்தனம், வழிபாடு, தர்ப்பணம்  போன்றவற்றைச் செய்வதாலும்
ரிஷி கடனையும் அடைக்கலாம்.

மூன்றாவதாக நம்மை  இந்த உலகத்துக்குக்  கொண்டுவந்த நம்முடைய பெற்றோர்கள். அந்தப்  பெற்றோர்களின் பெற்றோர்களாகிய நம்முடைய முன்னோர்களுக்கான கடன். அவர்களை பிதுரர்கள் என்று சொல்கின்றோம்.  

புரட்டாசி மாதத்தில் பல்வேறு வகையான  விரதங்கள் இருக்கின்றன. பல கோயில்களில் உற்சவங்கள்  நடக்கின்றன. நவராத்திரி வீட்டிலும் ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. தேவகடனும்  ரிஷி கடனும்  வழிபாட்டின் மூலம் செலுத்தப்படுகிறது.

மீதி இருக்கக்கூடிய பிதுர் கடன்  கழிப்பதற்கு மகாளயம். அதுவும் இந்த மாதத்திலேயே வருவதால் மூன்று  கடன்களையும் கழிப்பதற்கான மாதம் என்று  புரட்டாசி மாதத்தை பெரியவர்கள்  
கொண்டாடுகின்றார்கள்.

9. எப்போது பூஜை செய்ய வேண்டும்?

விரதம்  இருப்பவர்கள் பொதுவாக பகலில் விரதம் இருந்து, இரவு அம்பிகைக்கு பூஜை நிவேதனம் செய்து அந்தப் பிரசாதத்தை மட்டுமே உண்ண வேண்டும். ஒன்பதாம் நாள்  நவமி அன்று முழுமையாக உபவாசம் இருப்பது நல்லது. அது கிட்டத்தட்ட ஏகாதசி  விரதம் போல. ஏகாதசிக்கு எப்படி துவாதசி பாரணை முக்கியமோ அதைப்போல  மகாநவமியில் விரதமிருந்து, அடுத்த நாள் விஜயதசமியில் காலை  9:00 மணிக்குள்  பாரணையை முடிக்க வேண்டும். தினசரி இரவு 7 மணி முதல் அதிகபட்சம் 9 மணி வரை நவராத்திரி பூஜையை நிறைவேற்றுவது சாலச்சிறந்தது. தினமும் இரவில் கொலு  பொம்மைகளுக்கு ஆரத்தி எடுத்தல் அவசியம்.

10. நவராத்திரியில் என்னென்ன படிக்கலாம்?

9 நாட்களும் அம்பாளுக்கான பிரத்தியேகமான நாட்கள் என்பதால் அம்பிகைக்குரிய  ஸ்லோகங்களை, இசைப்  பாடல்களை வாசிக்கலாம். புராணங்கள் வாசிப்பவர்கள் தேவி பாகவதம் பெரும்பாலும் படிக்கிறார்கள். இது தவிர ராமாயணம் மகாபாரதம்  படிப்பதாலும் ஒன்றும் தவறு இல்லை. அபிராமி அந்தாதி, லலிதா ஸஹஸ்ரநாமம்,  லஷ்மி ஸஹஸ்ரநாமம், சூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலாவல்லி மாலை,  துர்கா அஷ்டோத்திரம், மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் போன்ற எண்ணற்ற அம்பாள்  வழிபாட்டு மந்திரங்களையும்,அம்பிகையின் மீது இயற்றப்பட்ட எளிமையான பாடல்களையும் பாடலாம்.

11. குழந்தைகளுக்கு அம்பிகையின் ஆசி

குழந்தைகளுக்கு  எளிமையான ஸ்லோகங்களைச் சொல்லித் தந்து, அவற்றை நவராத்திரியில் பாடச்சொல்லி, பரிசுகள் வழங்கலாம். கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அவர்களுடைய  கலைத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்க்கலாம். இது குழந்தைகளின் திறனை மட்டுமல்லாது அம்பிகையின் ஆசிகளையும் அள்ளித்தரும்.

12. நவராத்திரி கொலு

நவராத்திரியின்  பிரத்தியேகமான சிறப்பு கொலு வைத்தல். இந்து சமயத்தில் ஆண்டு தோறும் நடக்கக் கூடிய பல்வேறு பண்டி கைகளில் அல்லது விரதங்களில் இந்த  நவராத்திரியில் மட்டுமே கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைப்பது என்கின்ற   வழக்கம் இருக்கின்றது. பரம்பரையாக சிலர்  வைக்கின்றனர். இந்த கொலு  என்பது  ஆன்மீகத்தையும் உளவியலையும் இணைக்கும்  உன்னதமான விஷயம். இதில் முதல்  தத்துவம். உலகம் முழுக்க சக்தி பரவியிருக்கிறது. அந்த சக்தியின் இருப்பு  ஒவ்வொன்றிலும் இருக்கிறது என்பதை உணர்த்துவது கொலு.

13. கொலு வைப்பதன் தத்துவம்

கொலு  வைப்பதன்  அடிப்படை தத்துவம் இதுதான்.  பல்வேறு பொம்மைகள். பல படிகள்.  நடுநாயகமாக அம்பாள் .சக்தியின் வடிவம். எங்கும் நிறைந்து இருக்கக்கூடிய  அந்த சக்தி சொரூபம் ,‘‘நான் இருக்கிறேன்” என்பதை பிரத்தியட்சமாக காட்டுவதற்காக, தன்னைச் சுற்றிப் பல பொருள்களை வைத்துக் கொண்டு, தானும் அதில்
நடுநாயகமாக  வீற்றிருக்கின்றாள்.  

14. எங்கெங்கு காணினும் சக்தியடா

இந்த தத்துவத்தை அற்புதமாக விளக்கும் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல்.சக்தியின் தத்துவ தரிசனம் தரும் பாடல் இது.
எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா!
- அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம்
- அந்த
தாயின் கைப்பந்தென ஓடுமடா - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!
காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழு நினைப்பில்
- அன்னை

தோளசைத்தங்கு நடம்புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் - என
நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!’

15. எத்தனை நவராத்திரிகள் தெரியுமா?

நவராத்திரி பண்டிகை பல விதமாக கொண்டாடப்படுகிறது. ஆனி ஆடி மாதங்களில் வருவது வராகி  நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. பங்குனி  மாதத்தில் நவராத்திரி உண்டு. அதற்கு வசந்த நவராத்திரி என்று பெயர். ஆனால் புரட்டாசி மாதம் வருகின்ற நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்று பெயர். தென்னகத்தில் மிக விமரிசையாக கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரியாகிய  புரட்டாசி நவராத்திரி.  இக்காலங்களில் தினசரி மாலையில் அம்பிகையை பூஜை  செய்து ஸ்தோத்திரங்கள் பாடி வழிபாடு நடத்த, கல்வியும் செல்வமும் வீரமும் பெற்று சகல துறைகளிலும் முன்னேற்றமான வாழ்வு பெறலாம்.

16. நவராத்திரி கோலங்கள்

நவராத்திரியில் கலைகள் வளர்கின்றன. கற்பனைகள் வளர்கின்றன. உற்சாகம் பிறக்கிறது என்றெல்லாம் பார்த்தோம். இந்த கற்பனையில் ஒரு வெளிப்பாடுதான்  நவராத்திரியின் ஒவ்வொரு பெண்களும் பொறுமையோடு கொலு அலங்கரிப்பது. அந்த  கொலுவுக்கு முன்னால்   நவராத்திரி கோலம் போடுவது. கோலம் என்றாலே அழகு. கோலம் போடாமல் எந்த ஒரு பூஜையும் நாம் செய்ய முடியாது. நம்முடைய மனதின் அழகை அல்லது மனதின் கோலத்தை வெளிப்படுத்துகின்றது கோலம். இந்த வண்ணக் கோலத்தை நாம் அம்பிகையை எண்ணிப் போடுவதால் நம்முடைய திறன் வளர்வதோடு  அவளுடைய அருளும் நமக்கு கிடைக்கிறது.

17. நவராத்திரி கோலங்கள்

நவராத்திரியின்  ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வகையான கோலங்கள் உண்டு. அவற்றை பெரியவர்களிடம் கேட்டு முறையாக போடுவதால் பற்பல நன்மைகள் உண்டு. இந்தக் கோலங்களை எக்காரணத்தை முன்னிட்டும் சுண்ணாம்பு கட்டிகளாலோ, இரசாயனப் பொடிகளாலோ போடக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நவராத்திரி கோலங்கள் போடுவதன் மூலமாக வண்ணக் கோலங்கள் எண்ணங்களாக மாறும். அதுமட்டும் இல்லாமல்  அரிசிமாவினால் போடப்படும் கோலத்தினால்  சின்ன சின்ன ஆயிரக்கணக்கான  ஜீவராசிகளுக்கு உணவு கிடைத்த புண்ணியமும் சேரும்.

18. பெண்களின் ஆற்றலை அளவிட...

கோலங்கள் என்பது அற்புதமானது. பெரும்பாலும் பெண்கள் தினம் தெருவிலே  கோலம்  போடுகின்றார்கள். அது  மஹாலஷ்மியை வரவேற்பது போலாகும். விடியலில்  கோலம் போடும் வீட்டில் மங்கள சக்திகள் நுழைகின்றன. விழாக்காலங்களிலும்  கோலம் போடுகிறார்கள். நவராத்திரியிலும் கோலம் போடுகின்றார்கள். கோலம், மனதின் கோணல்களை மாற்றுகிறது. இந்த கோலத்தைப் போடவேண்டும் என்று மனது தான் கற்பனை செய்கின்றது. அடுத்து அந்த  கற்பனை, இப்படி வண்ணத்தோடு போட்டால்  எப்படி  இருக்கும் என்று முன்
கூட்டியே படம் பிடிக்கிறது.

மூன்றாவது புள்ளிகளை இணைக்க கூடிய வளைவுகளும் கோடுகளும் ஒரு பெண், எத்தனை கவனத்தோடு, இந்த  கோலத்தைப்  போடுகின்றாள்  என்பதைக் காட்டுகிறது. இந்தப் பயிற்சி அவளுடைய  மன ஒருமைப்பாட்டையும், கற்பனைத் திறனையும், படைப்பூக்கத்தையும்   நிதானத்தையும், புதியது கற்கும் ஆர்வத்தையும் அளவிடுகிறது. அதிகரிக்கிறது. ஒரு குடும்பத்துக்கு இவை முக்கியமான பயிற்சிகள் அல்லவா. அந்தப் பயிற்சிகளை மறைமுகமாக கொடுப்பது இந்த நவராத்திரி கோலங்கள். எனவே தினசரி விதம்விதமான கோலத்தைப் போடுங்கள். அம்பிகையை நீங்கள் மகிழ்ச்சிப்படுத்துவது போலவே உங்கள்  மனதையும் நீங்கள் மகிழ்ச்சி அடையச் செய்கின்றீர்கள். இந்த கோலத்தை பார்க்கின்ற பார்வையாளர்களையும் நீங்கள் மகிழ்ச்சி அடையச் செய்கிறீர்கள். இதன் மூலம் குடும்பம் குதூகலமாக இருக்கும்.

19. மங்களப் பொருட்கள் தர வேண்டிய முறை

ஒவ்வொரு நாளும் பூஜை முடிந்தவுடன் எல்லோருக்கும் பிரசாதம்  கொடுத்து, வந்திருக்கக்கூடிய பெண்களுக்கு தாம்பூலத்தோடு மங்கலப் பொருட்களைத் தருகின்ற வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.  நீங்கள் தயவு செய்து உங்களுக்கு யாரேனும் கொடுத்த ஒரு ரவிக்கைத் துண்டு அல்லது மஞ்சளை மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள். வேறு பரிசுப் பொருளாக இருந்தால் கொடுக்கலாம். பிரசாதத்தை  ஒவ்வொருவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.  மறந்துவிட வேண்டாம்.  இதில் இன்னொரு நுட்பமும் இருக்கிறது.

மலிவான விஷயமாகவோ, உபயோகம் இல்லாத ஒரு பொருளாகவோ யாருக்காவது தரலாம் என்றெல்லாம் நினைத்து, நீங்கள் எந்தப் பரிசுப் பொருளையும் தர வேண்டாம்.
நீங்கள் சுமங்கலிப் பொருட்களை தருகின்ற பொழுது, இரண்டு விஷயங்கள் முக்கியம்.

1. நீங்கள் எத்தனை பேருக்கு தருகின்றீர்கள் என்பது முக்கியமல்ல. எந்த மனநிலையில் தருகின்றீர்கள் என்பது முக்கியம்.

2. அந்தப் பொருட்களை பயன்படுத்தக் கூடிய தரத்தில் தரவேண்டும் என்பது அதைவிட முக்கியம்.

 இதை மறந்து விட்டால், கடமைக்கான பூஜையாகத்  தான் இருக்குமே தவிர, கண்ணியமான பூஜையாக இருக்காது.

20. தாய் வழிபாடு

சக்தி  வழிபாடு தான் தாய் வழிபாடு. அறு சமயங்களில் “சாக்தம்” என்கின்ற சமயம் சக்தி வழிபாட்டின் பெருமையைச் சொல்லுகின்றது. பழைய வேத காலத்திலேயே சக்தி  வழிபாடு இருந்துள்ளது. ரிக் வேதத்தில் உஷஸ் தேவதையைப் பற்றிய குறிப்புக்கள்  வருகின்றன. அவள்தான் இந்த உலகுக்கு ஒளி தருகின்றாள். இருளை அகற்றுகின்றாள்.

இதில் இருள் என்பது அறிவு குறைபாட்டையும், ஒளி என்பது ஞானத்தையும் குறிக்கும் சொல். கோடி சூரிய பிரகாசமாய் அவள் உலா வருவதாக ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இவள்தான் “வேத மாதா” என்றும் குறிப்பிடப்படுகின்றாள். முப்பெரும் தேவியர்களாக, இவளே பிரிந்து, முறையாக இந்நிலத்தை காப்பவள் என்று சொல்லப்படுகின்றாள். ஆகையினாலே இவளே கலைமகள், அலைமகள், மலைமகளாக இருக்கின்றாள். இதிகாசங்களான ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் தேவி வழிபாடு குறித்து ஏராளமான தகவல்கள் உண்டு.

21. எல்லோருக்கும் உரிய நவராத்திரி

1. நவராத்திரி நாள் என்பது எல்லோருக்கும் உரிய நாள். ஏழை மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற வேண்டும் என்பதற்காக மகாநவமி அன்று கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியை வணங்குகின்றார்கள்.

2. தம்பதிகள் இணக்கமாக வாழவும் பல்வேறு உலகியல் பயன்  பெறவும் அம்பிகையை நவராத்திரியில் வணங்குகின்றார்கள்.

3. குழந்தைச்செல்வம் இல்லாதவர்கள் , நவராத்திரி பூஜையை முறையாக முடிக்கும் பொழுது அவர்களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படுகின்றது.

4.  தொழில் வர்த்தகத்தில் உள்ளவர்கள் நல்ல லாபம் பெறுவதற்கு நவராத்திரியில்  மகாலட்சுமியை வணங்கி, செல்வ வளத்தை பெருக்கிக்  கொள்ளுகின்றார்கள்.

5. மனதில் தன்னம்பிக்கை வரவும், அச்சம் நீங்கவும், வீரம் பிறக்கவும், தைரியம் சிறக்கவும் துர்கா பூஜை உதவுகிறது.

6.  கலைஞர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளை வைத்து ‘‘மகாநவமி” அன்று கலைமகளுக்கு சிறப்பான வழிபாடுகள் செய்கின்றார்கள்.

7. விவசாயிகள் தன, தான்ய விருத்தி ஏற்படவும், பசு விருத்தி ஏற்படும் சரஸ்வதி பூஜையை ஆயுத பூஜை என்று கொண்டாடுகிறார்கள்.

22. சப்தமி, அஷ்டமி, நவமிஒன்பது நாட்களும் விரதம் இருப்பது சிறப்பானதாகும். அப்படி விரதம் இருக்க  முடியாதவர்கள் குறைந்தபட்சம் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று தினங்கள்  விரதமிருந்து அம்பிகையை வணங்கலாம். அதுவும் இயலாதவர்கள் அஷ்டமி தினத்தில்  அவசியம் துர்க்கையை வ ணங்குவதன் மூலமாக பேரருள் பெறலாம். அஷ்டமி தினத்தில் அம்பிகையை வணங்குவதன் மூலமாக நம்முடைய எல்லா கஷ்டங்களும் தீரும். இந்த நாளில்தான் அனேக கோடி யோகினியருடன் தட்ச யாகத்தை அழிப்பதற்காக அம்பாள் துர்க்கையாக வீறு கொண்டு எழுந்தாள் என்று தேவி பாகவதம் தெரிவிக்கிறது. குமாரி பூசை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும்.

இரண்டு வயதிற்கு மேல்  பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூசைக்கு உரியவர்கள்.  முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி,  கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற  பெயர்களால் பூசிக்கப்பட வேண்டும். குமாரிகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞ்சள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்.

23. ஒற்றைப்  படிகள்

கொலு என்பது நம்முடைய கற்பனைத்திறன், படைப்புத்திறன், எண்ணங்கள் எல்லாவற்றையும் பிரதிபலிப்பது மட்டு மல்ல; அதில் ஆன்மீக தத்துவமும் அடங்கியிருக்கிறது.

அத்தனை உயிரினங்களிலும் அம்பிகை உறைகிறாள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது  இந்தத்  தத்துவம். கொலு படிகளை பெரும்பாலும் ஒற்றைப்படையில் வைப்பது தான் வழக்கம். 5,7,9 என்று ஒற்றைப்   படைகளில் படிகளை அமைக்கலாம். மூன்று படிகள் வைத்தால்  கூடத்  தவறு இல்லை.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பொம்மைகளைச் சேகரித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நீங்கள் படிகளை வளர்த்துக் கொள்ளலாம்.

24. பொம்மைகளை எப்படி வைக்க வேண்டும்?

படிகளில்  பொம்மைகளை நீங்கள் வைக்கின்ற பொழுது, ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை படைத்த  ஜீவராசிகளை முதல்  ஐந்து படிகளில் வைக்கலாம். ஆறாவது படியில் மனித உருவங்களை அமைத்து, ஏழாவது படியில் மகான்களின் உருவங்களை அமைத்து, அடுத்த படியில் பல்வேறு தேவதைகளின் திருவுருவங்களை அலங்கரித்து வைத்து எல்லாவற்றுக்கும் மேலாக ராஜராஜேஸ்வரி அல்லது அம்பிகையை அலங்கரித்து உயரமான ஒன்பதாம் படியில் வைக்க வேண்டும். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை இந்த படிநிலைகள் காட்டுகின்றன. 25. கொலு மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திஐந்தறிவு வரை சுய அறிவின் வெற்றி தோல்விகள் இல்லை. ஞானம் சாஸ்திரம் இல்லை.

ஆனால்,  ஆறாவது அறிவு படைத்த மனிதனுக்கு சுய அறிவும் அறிவுச் சுதந்திரமும் உண்டு. அவன் ஆறாவது அறிவு படியில் இருந்து ஏழாவது படிக்கு உயரலாம். அல்லது  விலங்காக வாழ்ந்து கீழ் படிகளில் இறங்கலாம்.  அவன் ஏறுவதும் இறங்குவதும்  அவன் கைகளில் அவன் வாழும் வாழ்க்கையில் உண்டு. ஆறறிவு படைத்த மனிதன்  ஆறாவது படியில் இருந்து ஞானம் என்கின்ற அறிவு படைத்த ஏழாவது படிக்குச்  சென்று, “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வம்” என்கின்ற நிலையை எட்டுகின்ற எட்டாவது படிக்குச் சென்று, ஒன்பதாவது படியில்  நிற்கக்கூடிய தேவியின் திருவடி வாரத்தில், ஒவ்வொரு ஜீவராசிகளும் மகிழ்வு பெற்று, தங்கள் வாழ்வின் நிறைவை அடைய வேண்டும் என்பதை உணர்த்துவதுதான்  
கொலுவின்  நோக்கம்.

26. உறவுகளை ஒன்று சேர்க்கும் நவராத்திரி

திருவாரூர் நன்னிலம் அருகே, ஏனங்குடி என்கிற கிராமத்தில் நவராத்திரி கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது, பிரிந்து போன உறவினர்கள் இந்த நவராத்திரி கோயிலில் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக துர்க்கை அம்மனை வேண்டி ஒன்பது நாட்கள்  விரதமிருந்து ஒன்பதாவது நாள் இந்த கோயிலில் தங்கள் பகையை மறந்து வந்து சேருகிறார்கள். இந்தக்  கோயிலின் இன்னொரு சிறப்பு நவக்கிரக சந்நதிகள் ஒரே  திசையில் இருக்கின்றன. பண்டிகை என்றாலே உறவுகளை ஒன்று சேர்த்து குதூகலமாக  வைத்திருக்கும் மன உற்சாகத்தைத் தருவது தானே. இக்கோயிலில் அதற்கென்றே ஒரு  சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி ஆன்மிகத்தோடு இணைந்து செயல்படுத்துவது அற்புதம்.

27. இந்தியா  முழுதும் நவராத்திரி

சோழர் காலத்தில் நவராத்திரி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது . தென்னகத்தில்  மஹாநவமி என்று கொண்டாடப்
படும் நவராத்திரி விழாவின் பண்டிகையாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வடநாடுகளில் ராமர் ராவணனை வதம் செய்து சீதையை  மீட்டுக்கொண்டு அயோத்தி திரும்பிய நாளை விஜயதசமி யாக கொண்டாடியதாகக் கருதப்பட்டு, இப்பொழுதும் “ராம்லீலா”பண்டிகை என்ற பெயரில்  கொண்டாடுகிறார்கள். குஜராத் மாநிலத்தில் நவராத்திரி பூஜை தண்டியா  நடனத்துடன் கொண்டாடப்படுகின்றது.  கர்நாடகத்தில் மைசூரில் “தசரா பண்டிகை”  மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் குலசேகரன்பட்டினம் தசரா  பண்டிகை மிகவும் சிறப்பானதொரு பண்டிகையாகும்.

28. நவ துர்கா

துர்க்கையின் ஒன்பது வடிவங்களை நவ துர்கா என்று சொல்லுவார்கள். சைலபுத்ரி, பிரமசாரிணி,  சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள். ‘‘பிரதமம் சைல புத்ரிச்ச த்விதியம் பிரம்மசாரினிம் திருதியம் சந்திரகண்டாச்ச கூஷ்மாண்டா சதுர்த்தமம் பஞ்சமம் ஸ்கந்தமாத்ரேணி ஷஷ்டமம் காத்யாயனீம் சப்தமம் காலராற்றிச்ச அஷ்டமம் கௌரிநிம் நவமம் சித்திதாத்ரீச நவதுர்கா பிரதிடதம்” என்பது நவதுர்க்கா தியான ஸ்லோகம் ஆகும்
வட இந்தியாவில் இந்த ஒன்பது வடிவங்களுக்கும்நவராத்திரி நாட்களில் பூஜை செய்வர். இந்த ஒன்பது  நாட்களும் அன்னையை முறையாக பூஜை செய்தால் அவள் அனைத்து நலன்களும் அள்ளித்  தருவாள் என்பது ஐதீகம்.

29. பத்துவிதமான சக்திகள்

சிவசக்தி  தத்துவத்தில் சிவன் என்பது ஆற்றலின் இருப்பிடத்தையும், சக்தி என்பது அந்த  ஆற்றலின் வெளிப்பாட்டையும் குறிக்கக்கூடியது. பிரகாஸா  என்று சக்தி  ஒளியையும், விமரஸா  என்று அதன் பிரதிபலிப்பை   சிவமும் காட்டுவதாகச் சொல்லுகின்றார்கள். தேவியின் உருவ வேறுபாடுகளை  தசமஹாவித்யா என்று வர்ணிக்கிறார்கள்.  தசமஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஒரு மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவதை
அறியும் நுட்பமே  தசமஹாவித்யா.அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.

1. மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்துக் கேடுகளையும் தனதாக்கி  நன்மையை பிறருக்கு அருள்பவள்.

2. புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியைக் காப்பாற்றும் நாயகி. மனதில்  ஏற்படும் எண்ணங்களுக்குக் காரணமானவள். அழகும், சுந்தரவதனமும்  நிறைந்தவள்.

3. பகுளாமுகி: பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால்
தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள்.

4.  திரிபுரசுந்தரி: பதினாறு வயது கன்னிகையின் உருவைக்கொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம், என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்குபவள். சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம்  இவளுடையது.

5. தாரா: நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹாசக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.

6.  கமலாத்மிகா: தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா  சக்தியாக திகழ்பவள். அழகும், செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே  
லக்ஷ்மியாக வணங்குகிறோம். வெள்ளை யானை சூழ வலம் வரும் நாயகி கமலாத்மிகா.

7.  காளி: கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வண வேதத்தை குறிப்பவள்.  மயானத்தில் உறைபவள்.  வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள்.  அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.

8.  சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்து வரும்  ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது.  ஆண் - பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.

9. தூமாவதி: கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிற  ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும் கொண்டவள். கையில் புகை கக்கும்  பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.

10.  திரிபுரபைரவி: பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாகக் காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய  போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட  வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

30. கன்னிவாழை வெட்டு எல்லாக்  காலத்திலும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இந்த நவராத்திரிப்  பெருவிழா  மிக விரிவாக கொண்டாடப்படுகிறது. தீமையை அழித்து நன்மையைப்  பெறுதலே நவராத்திரியின் அடிப்படையான கருத்து. தீமை என்பது வெளியிலே இருக்கக் கூடிய தீமை மட்டுமல்ல; நமக்குள் இருக்கும் தீமையையும் ஒழிக்க வேண்டும்.  அந்தத் தீமையை ஒழிப்பதற்கு சக்தி ஆகிய தெய்வ அருள் வேண்டும்.

அதைப் பெறுகின்ற வழிபாடுதான் நவராத்திரி வழிபாடு. ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்க முடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர்.

இதுவே நாளடைவில் கன்னி வாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில். இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம். இன்னும் பலப் பல உண்டு. அவைகளில் சில சுவையான செய்திகள் மட்டுமே முப்பது முத்துக்களாக  கோர்த்து படைத்திருக்கிறோம்.

 நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • BIPIN RAWAT

  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

 • BlackBox_Helicopter_Coonoor

  குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

 • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

  வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

 • Vaikunda Ekadasi

  பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

 • burundi-fire-8

  புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்