SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர்

2021-10-05@ 15:12:30

அம்மன் கோலோச்சும் ஆலயங்கள், அபரிமிதமான சக்திகளையும் பெருமைகளையும் தன்னிடத்தே கொண்டுள்ளன. அவற்றில் கிடாத்தலைமேடு துர்க்காபுரீஸ்வரர் ஆலயமும் ஒன்று. மகிஷாசுரன் பூலோக மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். மக்களை காக்க, துர்க்கை அவனை சம்ஹாரம் செய்தாள். அசுரனின் தலை விழுந்த இடமே கிடாத்தலைமேடு என்றழைக்கப்படுகிறது. மகிஷசிரேபுரம் என்று புராணம் கூறுகிறது.

மகிஷாசுரனை கொன்ற பாவத்திற்கு இத் தலத்தில் உறையும் ஈசனை வணங்கினாள் துர்க்கை. அவளுக்கு பாவ விமோசனம் அளித்து இந்தஆலயத்திலேயே தனிச் சந்நதியில் எழுந்தருள வைத்தார். இவ்வாறு துர்க்கைக்கு அருள்புரிந்ததால் ஈசனுக்கு துர்க்காபுரீஸ்வரர் எனும் திருநாமம் ஏற்பட்டது. இத்தலத்தில் உறையும் அம்பாளின் திருநாமம் காமுகாம்பாள் என்பதாகும்.

சிவபெருமானின் கவனத்தை பார்வதி தேவியின் மேல் திருப்புவதற்காக ‘குறுக்கை' என்னும் தலத்தில் சிவபெருமான் மீதே அம்பெய்தான் மன்மதன். கோபங்கொண்ட சிவன் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினான். இதைக் கண்ட ரதிதேவி மன்மதனை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டிக்கொள்ள, ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே மன்மதன் காட்சிதரும் வரத்தை தந்தார் ஈசன்.

முற்பிறவியில் சிவ அபசாரம் செய்ததால் இந்தப் பிறவியில் அவனுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டதாம். சிவனால் இவ்வாறு உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன், இந்தத் தலத்தில் உறையும் சிவனையும், பார்வதியையும் துதித்தான். அவனுக்காக இரங்கிய பார்வதிதேவி கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் அளித்தாள். இவ்வாறு காமனுக்காக அருளியதால் காமுகாம்பாள் எனும் திருப்பெயர் பெற்றாள் அன்னை.

ரதிதேவிக்கு அனுக்கிரகம் செய்து மன்மதனை உயிர்ப்பித்துக் கொடுத்த இந்த அம்பாளை வெள்ளியன்று தரிசனம் செய்து, 12 நெய்தீபம் ஏற்றினால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள் என்பது நம்பிக்கை. எருமைக்கிடாவான மகிஷனின் தலைமேல் நின்ற கோலத்தில் வடக்கு திசைநோக்கி அருள்புரிகிறாள் துர்க்கை. சிம்ம வாகனத்தில் எண் கரங்களோடும், வரத அபய முத்திரை தாங்கியும், ஐந்து கரங்களில் சக்கரம், பாணம், வில், கத்தி, கேடயம் ஆகியவை தரித்தும், ஓர் இடக்கரத்தை தொடையில் பதித்தும் தரிசனம் தருகிறாள்.

துர்க்கா பரமேஸ்வரனின் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் அருள்கின்றனர். சக்கர பூரண மகாமேருவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த துர்க்கைக்கு நேர் எதிரே சுமார் இருபதடி உயரத்தில் சாமுண்டேஸ்வரி சூல வடிவில் காணப்படுகிறாள். மயிலாடுதுறைக்கு வடமேற்கிலும், திருமணஞ் சேரிக்கு வடக்கிலும் சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது, கிடாத்தலைமேடு.

தொகுப்பு: மகேஸ்வரி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

 • pig-heart-human-11

  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்