SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துர்க்காஷ்டமி நாளின் மகிமை என்ன?

2021-10-05@ 15:11:17

13-10-2021: துர்காஷ்டமி

துர்க்கைக்கும் அஷ்டமிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். சிறையில் இருந்த வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது மகனாக கிருஷ்ணன் அவதரித்த அதே நேரத்தில் நந்தகோபனின் மனைவி யசோதைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இறைவனின் ஆணைப்படி வசுதேவர் யாருக்கும் தெரியாமல் இந்த இரு குழந்தைகளையும் இடம்மாற்றி வைத்து விடுகிறார்.

குழந்தை பிறந்த செய்தியறிந்த கம்சன் சிறைக்கு வந்து வசுதேவரால் இடம் மாற்றி வைக்கப்பட்ட பெண் குழந்தையை வீசியெறிந்து கொல்ல முயற்சிக்கும்போது அவன் கையில் இருந்த குழந்தை உயரே பறந்து துர்க்கையாக காட்சியளித்தாள் என்பதை புராணத்தில் படிக்கிறோம். அப்படியென்றால் கிருஷ்ணன் அவதரித்த அதே அஷ்டமியில்தான் துர்கையும் அவதரித்திருக்கிறாள் என்பது புலனாகிறது.

துர்கை பிறந்தது அஷ்டமி திதியில் என்பதால் அம்பிகைக்கு மிகவும் உகந்த நவராத்திரியில் வருகின்ற அஷ்டமி நாள் துர்க்காஷ்டமி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களும் மிகவும் சக்தி வாய்ந்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. துர்க்காஷ்டமி, மஹாநவமி, விஜயதசமி என்று இந்த நாட்கள் போற்றப்படுகின்றன.

குறிப்பாக துர்க்காஷ்டமி என்றும் மஹாஷ்டமி என்றும் வீராஷ்டமி என்றும் நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படுகின்ற நவராத்திரியின் எட்டாம் நாள் அபரிமிதமான சக்தியைப் பெற்ற நாள் என்பது அனுபவ பூர்வமாக பலரும் அறிந்த உண்மை. வராஹ புராணத்தில், அஞ்ஞான ரூபமான மஹிஷன் என்ற அசுரன் அம்பிகை எனும் ஞானத்தினால் அழிக்கப்படுவதால் துர்க்காதேவி ஞானசக்தி என்று போற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக துர்க்காஷ்டமி நாளன்று விசேஷ யாகங்களைச் செய்து மனநிலை சரியில்லாதவர்களைக் கூட ஒருநிலைப்படுத்தி அவர்களை சரிசெய்த அதிசயங்களும் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மகிஷாசுரனோடு யுத்தம் நடந்த காலத்தில் இந்த துர்க்காஷ்டமி நாளன்று, சண்ட-முண்டர்களையும், ரக்தபீஜன் எனும் அரக்கனையும் அடியோடு நாசம் செய்வதற்காக துர்காதேவியின் நெற்றியிலிருந்து காளிதேவி தோன்றியதாகக் கூறுவார்கள்.

கொல்கத்தா போன்ற நகரங்களில் துர்க்காஷ்டமி நாளன்று மிக விசேஷமாக காளி பூஜை செய்யப்படுவதை இன்றும் காண்கிறோம். அன்றைய தினத்தில் துர்காதேவியின் 64 யோகினிகளும், பிராம்மி, மாஹேஸ்வரி,மஹாலக்ஷ்மி வைஷ்ணவி, வாராஹி, நரசிம்ஹி, இந்த்ராணி, சாமுண்டா ஆகிய அஷ்ட சக்திகளும் ஒன்றாக இணைந்து செயல்படுவதாக அம்பிகையின் உபாஸகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் துர்காதேவியின் மற்ற வடிவங்களான சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காலராத்ரீ, மஹாகௌரி, சித்திதாத்ரி ஆகிய நவதுர்க்கைகளும் ஒன்றாக இணைந்து துர்க்காஷ்டமி நாளன்று நமக்கு அருள்புரிவதாக ஐதீகம். இவர்களில் குறிப்பாக சித்திதாத்ரி தேவி அஷ்டமாசித்திகள் எனப்படும் அணிமா, மஹிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகம்யா, ஈஸித்வம் வஷித்வா ஆகியவற்றை தன்னிடத்தே கொண்டவள்.

சிவபெருமான் மஹாசக்தியைப் பிரார்த்தித்து இந்த அஷ்டமாசித்திகளை அடைந்ததாக தேவிபுராணம் கூறுகிறது. மஹிஷாசுரமர்த்தினி, துர்க்கமன் என்ற அசுரனை அழித்ததால் துர்க்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள். சர்வ துக்கங்களையும் போக்கிடும் இந்த துர்க்கா தேவியானவள், அவளது உபாஸகர்களால் சூலினி துர்க்கா, வனதுர்க்கா, சாந்தி துர்கா, ஜாதவேதோ துர்க்கா, தீப துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, ஆசுரீ துர்க்கா என்று விதவிதமான மந்திரங்களால் பலவிதமாகப் போற்றப்படுகிறாள்.

துர்க்கா பூஜையில் ஈடுபட்டவர்களுக்கு கடன், சோகம், பிசாசு ஆகியவற்றால் பீடை உண்டாகாது என்றும், துர்க்கையின் பெயரை உச்சரிப்பதனாலேயே மனிதன், புத்திர பௌத்திர விருத்தியையும், சுபிட்சத்தையும், தன விருத்தியையும் பெற்று மிகுந்த பாக்கியசாலி ஆகிறான். சர்ப்பங்கள், ராட்சர்கள், பூதங்கள், சத்ருக்கள், ரோகங்கள் இவை யாவும் துர்க்கா பக்தனைப் பார்த்த மாத்திரத்திலேயே திசைதோறும் ஓடுகின்றன என்றும் தேவீ பாகவதத்தில் வியாஸ பகவான் கூறுவதே இதற்கு ஆதாரம். மேலும், துர்க்கா எனும் சப்தத்திலேயே தகாரம், உகாரம், ரேபம், சுகாரம், ஆகாரம் என்ற ஐந்து வர்ணங்கள் உள்ளன.

இவற்றில் தகாரமானது அசுரர்களின் அழிவையும், உகாரம் விக்ன நாசனத்தையும், ரேபம் ரோக நிவாரணத்தையும், சுகாரம் பாபம் தொலைவதையும், ஆகாரம் பயம், சத்ரு இவர்களின் அழிவையும் குறிக்கும். துர்க்கையின் பெயரை உச்சரிப்பவன் மேற்சொன்ன பலன்களை அடைவான் என்பது நிதர்சனமான உண்மை.

ஆக, சத்ரு (எதிரி), ரோகம் (வியாதி), ருணம் (கடன்), ஆவி போன்ற அமானுஷ்ய சக்திகளால் உண்டான தொல்லைகள், சித்தப் பிரமை, பில்லி, சூனியம், ஏவல், பரம்பரையில் ஏற்பட்ட சாபங்கள், நாகதோஷம், புத்திர தோஷம் இன்ன பிற குறைகளாலும் அவதிப்படுபவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் வருகின்ற சர்வசக்தி படைத்த இந்த துர்க்காஷ்டமி நாளன்று விரதம் இருந்து தங்கள் சக்திக்கு இயன்ற அளவில் துர்கைக்கு பூஜை செய்து வழிபட சர்வ தோஷங்களும் விலகி வாழ்வினில் வளம் பெறுவார்கள் என்பதே இந்த நாளின் மகத்துவமாகும்.

தொகுப்பு: கிருஷ்ணஜா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்