SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எது விதி? எது மதி?

2021-10-05@ 15:08:48

இதம் சொல்லும் ஜோதிட அனுபவங்கள் - 10

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

சென்ற பகுதியில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து இருந்தேன். மேஷ லக்னம். சப்தம ஸ்தானமான களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சனி. பொதுவாக இந்த இரண்டு கிரகங்களை மட்டும் வைத்து பலன் சொல்வது இல்லை. என்றாலும் ஒரு உதாரணத்திற்கும், வேறு சில விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும் கொடுத்திருந்தேன்.

நான் சொல்லப் போகும் செய்திக்கு உதாரணமாக, இப்போதைக்கு இது மட்டும் போதும் என்பதாலும், இது பொது விதிகளில் வருவதாலும் கொடுத்திருக்கிறேன்.
ஒரு முழு ஜாதகத்தை வைத்து தேவைப்பட்டால் பிறகு பார்ப்போம்.

ஜோதிடம் என்பது அறிவியல்

அதற்கு முன்னால் ஜோதிடம் என்பது ஒருவகை அறிவியல் என்பதை உணர வேண்டும். இல்லாவிட்டால் இத்தனைக் காலம் இந்த சாஸ்திரம் நிற்காது. இப்போது உடம்பில் இருதயம் இருக்கிறது. அதை இசிஜி மற்றும் சில நவீன கருவிகளில் பார்க்கலாம். அதனுடைய இயக்கத்தை நிர்ணயம் செய்யலாம். அதற்கென்றே உள்ள படிப்புக்கும்  அறிவியலுக்கும் இருதய இயல் (கார்டியாலஜி) என்று பெயர். அதைப் போலவே நுரையீரலியல், சிறுநீரக இயல், கண்ணியல், பல்லியல், முக அமைப்பு சீர் இயல், நரம்பியல், ரத்தவியல் என்று பல விஷயங்கள் மருத்துவத்தில் உண்டு.

உளவியல்

பார்க்கக்கூடிய உறுப்புகளுக்கு விஞ்ஞானம் இருப்பது போலவே, பார்க்க இயலாத மனதுக்கும் படிப்பு இருக்கிறது. உளவியல் (Psychology).

மாயை என்று ஒருத்தி தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி,          
தூய நல் அறிவன் தன்னைத் தோற்றம்
இன்றாக்கி வைத்தான்           
தாயொடு தந்தை, மக்கள் தாரம், என்று
இவர் பால் வைத்த                        
நேயமும் அவன் தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய்!


இதன் பொருள் இதுதான். மாயை என்னும் ஒருத்தியிடம் மனம் என்னும் மகன் தோன்றினான். பரிசுத்தமான ஞானம் என்பவனை வெளிப்படாமல் ஆக்கி வைத்தான். தாய், தந்தை, மக்கள், மனைவி ஆகியோர் மீதான பாசமும் அந்த மனம் என்பவன் எண்ணத்தாலேதான் நிகழ்ந்தது! மனம் என்பது ஒரு அற்புதமான விஷயம். திருமங்கையாழ்வார் மனதின் இயல்பை மிக அழகாக பாடுகின்றார். அது “ஒரு இடத்தில் நிற்காது அலைபாயும்” என்கிறார்.

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையி னெரிநின் றுண்ணும்
கொள்ளிமே லெறும்பு போலக் குழையுமா லென்ற னுள்ளம்,
தெள்ளியீர், தேவர்க் கெல்லாம் தேவரா யுலகம் கொண்ட
ஒள்ளியீர், உம்மை யல்லால் எழுமையும் துணையி லோமே.


மனம் - எப்படிக் கையாள்வது?

சரி, மனம் என்பது எங்கே இருக்கிறது? ஒருவன் கால் எலும்பு உடைந்தால் கால் நொண்டி நடப்பான். வயிறு வலித்தால் வயிறு பிடித்துக்கொண்டு நடப்பான். ஆனால், மனம் சரியாக இல்லாவிட்டால், அவன் எப்படி வேண்டுமானாலும் நடப்பான். இப்படித்தான் நடப்பான் என்பதை எளிதில் சொல்லிவிட முடியாது.
அடுத்து இன்னொரு விஷயம். மனம் என்பது வேறு. அறிவு என்பது வேறு. ஆனால், இரண்டும் கண்ணுக்குத் தெரியாது. ஆயினும் இதனை கையாண்டு மக்களுக்கு தகுந்த ஆலோசனைகள் சொல்கிறார்கள்.

காரணம் ஒரு “அறிவியல்”, “உளவியல்” என்று சொல்கிறோம். அதைப் போலவேதான் அண்டவெளியின் ஆதார சக்திகளும் துணை சக்திகளும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வை எப்படி நகர்த்துகின்றன என்பதை ஆராய்ந்து சொல்லும் அறிவியல்தான் ஜோதிடம். மனம் செய்யும் செயல்களை உளவியல் நிபுணர் பரிசீலித்து சரி செய்ய முயற்சிப்பது போலவே, கோள்களின் செயல்களை, ஜாதகக் கட்டம் மூலம் பரிசோதித்து, சரி செய்ய ஜோதிடர்  முயற்சிக்கிறார்.

தனித்தன்மை வாய்ந்தவர்கள்

இரண்டாவது மிக முக்கியமான விஷயம். இந்த உலகத்தில் தோராயமாக 800 கோடி பேர் இருக்கிறார்கள் என்றால், 800 கோடி பேர்களும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். இது மிகமிக நுட்பமான விஷயம். எல்லோருக்குமே இரண்டு கண்கள். இரண்டு கால்கள். மனிதன் என்ற பொது அமைப்பு. இருப்பினும், ஒரே மாதிரி இருக்கும் மனிதர்கள், ஒரே மாதிரியானவர்கள் அல்ல. வெவ்வேறு நேரத்தில் பிறந்து, வெவ்வேறு விதமாக வாழ்ந்து, வெவ்வேறு நேரத்தில் இறப்பவர்கள். இந்த நொடி, பத்தாயிரம் பேர் பிறக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், எல்லோர் பிறந்த நேரமும் ஒரே வினாடியில் நிகழ்ந்தது என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், எல்லோருடைய இறப்பும் ஒரே தேதியில், ஒரே நிமிடத்தில் நிகழாது.

அதைப் போலவே, இந்த வினாடி 10,000 பேர் இறக்கிறார்கள் எனில்,( அவர்கள் பிறந்த நேரமும் தேதியும் நிமிடமும் வெவ்வேறாகத்தான் இருக்கும். (சுனாமியிலும் பூகம்பத்திலும் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற பேரழிவுகளிலும், குவியலாகி இறந்தார்கள்). ஆனால், எல்லோரும் மனிதர்கள். எல்லோருக்கும் 12 கட்டங்கள். ஒன்பது கிரகங்கள். 27 நட்சத்திரங்கள். 108 பாதசாரங்கள். எனவே, பொதுமையில் வேற்றுமையும், வேற்றுமையில் பொதுமையும் உண்டு.

வேற்றுமையில் பொதுமை ஜோதிடர் கண்டுபிடித்து விடலாம். பொதுமையில் உள்ள வேற்றுமை கண்டுபிடிக்க முடியாது. (தெய்வ அருள் இருந்தாலன்றி). நாம் பெரும்பாலும் பொதுமைகளின் அடிப்படையில் தான் ஜோதிட விதிகளைப் படித்து கணக்குப் போட்டு, ஓரளவு ஊகித்து, ஓரளவு அனுபவப்பட்டு, ஓரளவு பலன் சொல்ல முயற்சிக்கிறோம்.

எப்படி ஜோதிடம் சொல்கிறார்கள்?

கண்ணுக்குப் புலப்படாத மனதை, செயல்களின் மூலம்தான் ஊகித்து அறிய முடியும். கிரகங்களையும் அதன் இயக்க வேறுபாடுகளையும் செயல்கள் மற்றும் பலன்களின் மூலம் தான் அறிய முடியும். நிருபர் ஒருவர் மனநோய் மருத்துவ மனைக்கு நேர்காணல் செய்யப் போனார். டாக்டர் அறையில் ஒருவர் மிக அருமையாக பேட்டி தந்தார். பேட்டி முடிந்து, வெளியே வந்த போது ஒருவர் சொன்னார்.

“வாருங்கள் பேசலாம். சற்று தாமதமாகி விட்டது”. நிருபர் சொன்னார் “பேட்டி எடுத்து விட்டேனே” “யாரிடம்? நான் இப்போதுதானே வருகிறேன்” உள்ளே உள்ள ஒரு மன நோயாளியே, நல்ல மூடில், பேட்டி தந்திருக்கிறார். இது தென்கச்சி ஸ்வாமிநாதன் சொன்னது.கிரகங்கள், எப்படிப்பட்ட ஜோதிடருக்கும், இப்படிக் போக்கு காட்டும்.

தப்பு என்று நினைக்கும்  கிரகங்கள் சரியாகவும், சரி என்று நினைக்கும் கிரகங்கள் விதி மாறியும் வேலை செய்யும் என்பதையும்  எதிர்பார்த்தால் தான் ஜோதிடம் புரியும். இந்தக் கருத்தை உள் வாங்கினால்தான் 7ல் உள்ள சனியும், செவ்வாயும் இல்லற வாழ்வை கெடுக்குமா என்று ஒரு முடிவுக்கு வர முடியும்.

7ல் உள்ள சனியும், செவ்வாயும் கெடுக்குமா? எப்படிச் சமாளிப்பது?

என்னைப் பொறுத்தவரை கெடுக்காவிட்டால் பரவாயில்லை. கெடுத்தால் என்ன செய்வது என்பதற்கும் தீர்வோடு நுழைந்தால், வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும். எங்கள் வீட்டில் நான்கைந்து பசு மாடுகள் இருந்தன. அதில் ஒரு புது மாடு சேர்ந்தது. மற்ற மாடுகளைவிட நன்றாகப் பால் கறக்கும். ஆனால், மற்ற மாடுகளை, கால்களைக் கட்டாமல் கறந்து விட முடியும். ஆனால், இந்த மாடு கிட்ட வந்தால் உதைக்கும். உதைத்த உதையில், ஒரு முறை மொத்தப் பாலும் கொட்டிவிட்டது.

இப்போது இரண்டு தீர்வு உண்டு

ஒன்று, மாட்டை விற்று விடுவது. இல்லை, சமாளித்துப் பால் கறப்பது. இரண்டாவது முடிவு தான் என் அம்மா எடுத்தார். விற்றால் நஷ்டமாகும். அது தாங்காது.
அதற்குப்பதில் சமாளித்து விட முயற்சி செய்தார். மாட்டை நன்கு  கவனித்தார். தடவிக் கொடுத்தார். அக்கறையாக தீனி வைத்தார். அதற்கு “லட்சுமி” என்று பெயர் வைத்து, ‘‘லட்சுமி எப்படி இருக்கே?” என்று விசாரித்தார். அடுத்த நாள் மாடு சுபாவம் தெரிந்து, தாஜா செய்து, கால் கட்டி கறந்தார். இரண்டு மாதத்தில் பழகிவிட்டது. இதில் கூட இரண்டு விதம் உண்டு.

ஒன்று மாடு நமக்கு பழகிவிடும். இல்லை மாட்டின் சுபாவத்திற்கு நாம் பழகிவிடுவோம். ஆனால், இந்த முரட்டு மாடுதான் அதிகம் பால் கறக்கும்.
இது தான் 7ல் உள்ள செவ்வாய், சனியைக் கையாள வேண்டிய முறை. இந்த விதியை இதமாகப் புரிந்துகொண்டு மேலே கொடுக்கப்பட்ட அந்த ஏழாம் பாவம் கெட்டுப்போன மேஷ லக்ன ஜாதகத்தை எப்படி கையாளலாம் என்பதை யோசித்துப் பாருங்கள். விடை தனியாக தெரியும்.

மனைவி அல்லது கணவன் அமைவது...

இன்னும் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஒன்பதாம் பாவம் அப்பா. சூரியன் அப்பா கிரகம். நாலாம் பாவம் அம்மா. சந்திரன் அம்மா கிரகம். உங்கள் ஜாதகத்தின் லக்கினத்தை நிர்ணயம் செய்வது ஒன்பதாம் பாவமும் நான்காம் பாவமும். அதுதான் முதலில் சூட்சுமமாகி இயங்குகிறது. உங்கள் ஜாதகம் தோன்றுவதற்கு முன்னாலேயே இணைந்து செயல்பட்டதால்தான் உங்கள் ஜாதக கட்டம் பிறந்திருக்கிறது.

இந்த நாலாம் பாவம் உயிர் காரகத்தையும், ஒன்பதாம் பாவ உயிர் காரகத்தையும் நமது புத்திசாலித்தனத்தால் கட்டுப்படுத்தத் தெரிந்திருந்தால், நாம் நமது பிறந்த நேரத்தை, நமக்கு ஏற்றவாறு வகுத்துக் கொண்டு இருப்போம். ஆனால், அப்படி செய்யும் சக்தி நமக்கு இல்லை.இதைத்தான் கவியரசு கண்ணதாசன்
பாடினார் தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் வந்து பிறந்து விட்டோம், வெறும் பந்தம் வளர்த்து விட்டோம் மனது துடிக்கின்றது, மயக்கம் வருகின்றது அழுது லாபம் என்ன? அவன் ஆட்சி நடக்கின்றது.

இது முதல் விதி. அடுத்து சகோதர காரகத்துவம். மாற்ற முடியாது. இப்படி 12 பாவங்களின் ஒவ்வொரு பாகத்திலும் உயிர் காரகத்துவங்கள் மாமா, அத்தை என்று பரவிக் கிடக்கின்றன. இந்த உயிர் காரகத்துவங்களை மாற்றவே முடியாது. ஜட காரகத்துவங்களை (வீடு ,கார்) ஓரளவு மாற்றிக் கொள்ள முடியும்.ஏழாம் பாவத்தில் உள்ள உயிர் காரகத்துவம்தான் மனைவி. அதையும் மாற்ற முடியாது.

அப்பா அம்மாவை, எப்படி அவர்கள் இருந்தாலும் எப்படி ஏற்றுக் கொள்ளுகின்றோமோ, அப்படியே மனைவி என்பவளையும் ஏற்றுக் கொண்டே  ஆகவேண்டும் என்பது நுட்பமான விதி. ஆனால், இதை மாற்ற முடியும் என்று நினைத்து, ஜாதகக் கட்டம் போட்டு, பெண் தேடி, பொருத்தம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

விழிமேல் வழி வைத்து காத்திருக்கும் துணை

நமக்கு உரிய பெண் யார் என்பதைத் தேடுவதுதான் ஏழாம் பாவமே, தவிர நமக்கு விருப்பமான பெண்ணை தேடுவது ஏழாம் பாவம் அல்ல. வெட்டி விட்ட நீர், அங்கு இங்கு நெளிந்து, கடைசியில் குழியில் விழுவதைப் போல, பத்து பொருத்தம் பார்த்து, 18 ஜோதிரரிடம் சொல்லி, நீங்கள் செயல்பட்டாலும், விதி உங்களை மெதுவாக ஆசைகாட்டி அலைகழித்து, நீங்கள் விழவேண்டிய குழியில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கும்.

இதை ஒருவர் நன்கு புரிந்து விட்டால், ஒன்று பொருத்தம் பார்க்க மாட்டீர்கள். இல்லை பொருத்தம் பார்த்த ஜோசியரை குறை சொல்ல மாட்டீர்கள். அவர் சொல்லா விட்டாலும் அதே குழிதான். குழி என்பது ஜாதகத்தில் இருக்கிறது. நீங்களே விழுந்தாலும், யாராவது தள்ளி விட்டாலும், விழுந்தது விழுந்ததுதான்.

தீர்வு என்ன?

இந்த இடத்தில் நான் என்ன சொல்லுகின்றேன் என்றால், எதற்கும் ஒரு கயிறு வைத்துக் கொள். விழாவிட்டால் அதிர்ஷ்டம்.‘‘விழுந்தால் எழுந்து வர முயற்சி செய்” என்கிறோம். இதற்கான தீர்வையும் கவியரசு சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்? பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாபம் முடிந்தால் வென்று கொள்ஜாதகத்தின் பலனை டக்கு டக்கு என்று சொல்பவன் அல்ல நான். அது வேறு விஷயம். இங்கே சொல்ல வந்த விஷயம் வேறு.

ஏழாம் வீட்டில் செவ்வாய், சனி. எங்கே பெண் தேடினாலும் இப்படித்தான் கிடைக்கும் என்ற மனைவியை சுட்டிக் காட்டுகிறது. இல்லறத்தை நல்லறமாக நடத்த, நமக்கு அமைந்த அந்த ஏழாம் நிலையை நாம் எப்படிக் கையாள்வது என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும்.அதற்கு வெறும் ஜாதகப் பலன்கள் போதாது. அது ஊருக்கு செல்லும் கைகாட்டி போல. “நீ என்ன செய்தாலும் இப்படித்தான்... போ” என்பது ஜாதகத் தகவல். “நீ இப்படி இப்படி செய்தால் நிவர்த்தி ஆனாலும் ஆகும்” - இது வழிகாட்டுதல்.

தீர்வு காணுதல். “ஆனாலும் ஆகும்” என்ற வார்த்தை முக்கியம். ஏழாம் வீட்டு செவ்வாய், சனி பள்ளம் என்ற விஷயத்தைக் காட்டுகிறது. அதில் விழாமல் தப்பிக்க முடியாது. அது விதி. விழுந்தாலும் சமாளித்துக் கொள்வது மதி.  “விதி இதுதான். முடிந்தால் மதியால் வென்று கொள்” என்பதற்குத்தான் இறைவன் மதியையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறான்.

(இதம் சொல்வோம்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Avanyapuram

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

 • Jallikkattu

  ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

 • Bogi_Festival_People_Celebrate

  போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

 • simla-snow-11

  உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

 • pig-heart-human-11

  உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்