SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விதியைப் புரிந்து கொண்டால் மதியோடு வாழலாம்

2021-10-04@ 17:12:58

இதம் சொல்லும் ஜோதிட அனுபவங்கள் - 9

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

1975ஆம் ஆண்டு. ஒரு பிரமாதமான திரைப் படம் வந்தது. சிவாஜி கணேசனின் 150வது திரைப் படம், அவன்தான் மனிதன். அதில் உள்ள பாடல்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கும். கவியரசு கண்ணதாசனின் தத்துவ முத்துக்கள், திரைப்படப் பாடல்களில் வாரி இறைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு சரணம்

விதியின் ரதங்களிலே நாம்
விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா- சிறு
மனமும் கலங்குதடா;
கொடுக்க எதுவுமில்லை
என் குழப்பம் முடிந்ததடா;
கணக்கை முடித்து விட்டேன்
ஒரு கவலை முடிந்ததடா;
மனிதன் நினைப்பதுண்டு,
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு,
பாவம் மனிதனென்று


இதில் விதி என்பது ஒருவருக்கு அமைந்த பிறப்புச் சூழல்கள். வேத ஜோதிடத்தில் அவருடைய உதய லக்னம், பிறந்த விண்மீன் அடிப்படையிலான ராசி, மற்ற கிரகங்கள் நின்ற நிலை,- இவைகள்தான் ஜாதகமாக இருக்கின்றன.

விதி என்பது என்ன?

9 கிரகங்கள், 12 ராசிகள், இணையும் பொழுது (9x12)108 வழிகள் பிறக்கின்றன. இதிலுள்ள இணைவுகள் மாறுகின்றபோது, ஜாதகங்களின் அமைப்பும் பலன்களும் மாறுகின்றன. இந்த அமைப்பைத்தான் “விதி” என்கிறோம். இந்த அமைப்பை மாற்ற முடியாது. இது தலைவிதி. (Fate)

நாம் தீர்மானம் செய்ய முடியாதது விதி

ஒரு குழந்தை பெரிய கோடீஸ்வரன் வீட்டில் பிறக்கிறது. இன்னொரு குழந்தை அன்றாடம் கூலி வேலை செய்யும் ஒரு குடிசைவாசியின் வீட்டில் பிறக்கிறது. குழந்தை தன்னுடைய விருப்பப்படி குடிசையிலோ, கோடீஸ்வரன் வீட்டையோ தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியவில்லை.  முடியவும் முடியாது. இது விதி. டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னது போல, இது ஒருவன் பிறக்கும் போது கொடுக்கப்பட்ட 12 அட்டைகள். (சீட்டு கட்டு அட்டைகள்) இந்த கார்டுகளை வைத்துக்கொண்டுதான் ஆயுள்வரை நாம் விளையாட வேண்டும். இப்படித்தான் விளையாட வேண்டும் என்பதற்கும் விதிகள் இருக்கின்றன.

அதற்கு சாத்திரங்கள் என்று பெயர். அல்லது சட்டங்கள் என்று பெயர். இதில் உலகியல் அறிவு பெற்று உன்னத வாழ்வு வாழ (material life) சில கலைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.  தத்துவ தரிசனம் செய்து ஆன்ம உயர்வு பெற (spiritual life) சில சாஸ்திரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. நாம் பிறந்த சூழலை, நம் பெற்றோர்களை, நமது நிதி வசதிகளை தந்தது முதல் விதி. அது நமது பிறப்பை தீர்மானித்து அனுப்பி விட்டது. தனி விதி. தலைவிதி . தனி மனிதர்களுக்கானது.

கொடுக்கப்பட்ட வாழ்க்கை

இதன்படி தான் ஒவ்வொருவரும் வாழ்ந்தாக வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.இதையும் கவியரசு கண்ணதாசன் ஒரு கவிதையில் சொல்லுவார்.

அவரவர்க்கு வைத்த சோறு அளவெடுத்து வைத்தது
இவை இவற்றில் வாழும் என்று இறைவன்
சொல்லிவிட்டது
நவ நவங்களான ஜோதி நாளும் நாளும்
தோன்றலாம்
அவை முடிந்த பின்னர் உந்தன் ஆட்டமென்ன தோழனே


யானையின் சோற்றை எறும்பு தின்ன முடியாது. எறும்பின் உணவு யானைக்குப் போதாது. சிங்கத்தின் உணவு வேறு. பல்லிக்கு வேறு உணவு. மனிதனுக்கு வேறு உணவு. இதுவும் விதி. மாறி உணவு சாப்பிடுகிறபொழுது மனக் குழப்பங்களும் உடல் குழப்பங்களும் வருகின்றன. இதை கீதை அற்புதமாக விளக்குகின்றது. நீங்கள் ஒரு விஷயத்தை உணர்ந்து பாருங்கள். அற்புதமான வான மண்டலத்தில், பூமியைப் படைத்து, அதில் நம்மையும் மற்ற ஜீவராசிகளையும் அனுப்பி வைத்திருக்கிறான் இறைவன்.

அதில் நாம் வாழ்வதற்கு உரிய காற்று, தண்ணீர், உணவையும் முன் கூட்டியே படைத்து விட்டுத்தான் நம்மையும் படைத்தான். இவைகள் ஈஸ்வர சங்கல்பத்தால் அமைந்தன என்று சாத்திரம் பேசுவதால், இதுவும் விதியாக (இறைவன் வகுத்த  நிர்வாக சட்டம் அல்லது இறைவன் திருவாணை) அமைந்துள்ளது. பிறந்த நேரம், ஊர், பெற்றோர்கள், எல்லாம் விதி.அமைந்த வீடு, வாசல், உறவு, சுற்றம், செல்வம் எல்லாம் விதி. எத்தனை ஆண்டு காலம் இவ்வுலகில் வாழவேண்டும் என்பது விதி.

எப்படி வாழ வேண்டும் என்பதற்கும் விதி

திருடக் கூடாது. பொய் சொல்லக் கூடாது. அடுத்தவன் வாழ்வைக்  கெடுக்கக் கூடாது. பெண்களை இழிவு படுத்தக்கூடாது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பஞ்சமா பாதகங்கள் செய்யக்கூடாது, என ஏராளமான விதிகள். ஒரு மனிதன் அமைதியோடு வாழ சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விதிகள் நீதி சாஸ்திரங்கள், அரசியல் சாத்திரங்களாக அல்லது சட்டங்களாக அரசு அவ்வப்பொழுது தரும் விதிகளாக இருக்கின்றன. இந்த விதிகளை மீறுகின்ற பொழுது விபரீதம் நிகழ்கின்றது.

சங்கடங்கள் வருகிறது. இந்த விதிகள் எல்லோருக்கும் பொதுவானது. காற்றிலே பிராணவாயுவை வைத்திருக்கிறான். அது பொது. உங்களிடம் கேட்காமல் உங்கள் மூக்கு அதை உறிஞ்சுகிறது. கரியமில வாயுவை வெளியே விடுகின்றது. இவைகளெல்லாம் நம்மை மீறி தன்னிச்சையாகவே நடக்கின்றன. தனிவிதியாக ஒரு மனிதனின் பிறப்பு அமைகிறது. மற்ற விஷயங்கள் அமைகின்றன.

தனி விதிகளும் பொது விதிகளும்

ஆனால் பொது விதிகள் (General) என்று எல்லோருக்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. அதை இறைவன் சமமாகவே கொடுத்திருக்கிறான். தனிமனித விதியை வித்தியாசப்படுத்திக் கொடுத்த இறைவன், சில பொதுவிதிகளை, கோடீஸ்வரன் முதற்கொண்டு பிச்சைக்காரன் வரைக்கும், சமமாக ஏன் கொடுத்து இருக்கிறான் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், சில சூட்சுமங்கள் தெரியும். உதாரணமாக 24 மணி நேரம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதானே! வாரத்தின் ஏழு நாட்கள் எல்லோருக்கும் பொதுவானது தானே! ஒரு மணிக்கு 60 நிமிடம், ஒரு நிமிடத்திற்கு 60 வினாடிகள் அனைவருக்கும் பொதுவானதுதானே! இவைகள் அத்தனையும் விதிப்படிதான் இயங்குகின்றன.

அவைகள் எதுவும் தன் போக்கை மாற்றிக்கொள்ள முடியாது. இந்த விதிகளை அனுசரித்து வாழும் வரை மனிதனுக்கு சிக்கல் இல்லை. எல்லா சிக்கல்களும் விதி மீறல்களில் ஈடுபடும் பொழுதுதான் வருகிறது. சரி இப்பொழுது ஒரு முடிவுக்கு வருவோம். பிறந்த அமைப்பு விதிதான் பிறந்த ஜாதக நிலை (horoscope) என்று பார்த்தோம்.

விதியும் மதியும்

அவை இப்படித்தான் வாழவேண்டும் என்று கொடுக்கப்பட்ட அமைப்புகள்.

இரண்டாவது விதி சட்ட சாஸ்திர விதிகள்

ஆனால், இதற்குள் என்னவகையான ஆட்டம் ஆடுகிறோம், எப்படி ஆடுகிறோம் என்பது மதி. “விதி விதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே? இது மனிதர்களுக்கு மட்டுமா? பூனைக்கும் யானைக்கும் இது இருக்கிறதா?” நான் அவருக்குச் சொன்னேன்.“ஏன் இல்லை? எல்லோருக்கும் இருக்கிறது. நீங்கள் விலங்குகளின் வாழ்க்கையிலிருந்து,  உங்களுக்கு கண்ணில் ஏற்படுகின்ற எதன் வாழ்க்கை வேண்டுமானாலும் பாருங்கள். நுட்பமாக பார்க்கின்ற போது இந்த விதியின் சூட்சுமங்களை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.”நான் வெகுநாட்களுக்கு முன், என் வீட்டுக்கு அருகில், காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது, ஒரு சில பன்றிக்குட்டிகளைப் பார்த்தேன்.

அதில் எல்லாப் பன்றிகளும் காலை வேளையில் ‘‘கர் குர்” என்று சத்தம் செய்து கொண்டு போய்க்கொண்டிருக்கும். அதில் என் கவனத்தை கவர்ந்தது ஒரே ஒரு பன்றிக்குட்டி.அது மற்ற பன்றிகளைப் போல நடக்காமல், காலை இழுத்துக் கொண்டு மெதுவாக நடந்தது. நான் கவனித்த போது மனிதர்களுக்கு வருகின்ற யானைக்கால் வியாதி போல், அதற்கு கால் வீங்கி இருந்தது. அது அடிபட்ட காயமோ, வேறு ஏதோ, எனக்குத் தெரிய வில்லை. ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல், அது மற்ற பன்றிகளோடு சேர்ந்து நடந்து கொண்டிருந்தது.

ஒரு விஷயத்தை நன்கு யோசிக்க வேண்டும்

காட்டு யானையின் வாழ்க்கைக்கும் கோயில் யானையின் வாழ்க்கைக்கும் எத்தனை வித்தியா சம்? ஆனால், ஒரு வேறுபாடு. இந்த விலங்குகளும் மற்ற உயிரினங்களும் இந்தப் பன்றிக் குட்டிகளைப் போல விதிப்படி வாழ்ந்து விடுகின்றன.

விதிப்படி வாழ்வதும், மதிப்படி வாழ்வதும்

காலில் வீக்கம் கண்டு, அமைதியோடு மற்ற பன்றிகளுடன் நடந்து செல்லும் அந்தக் குட்டிப்பன்றி, தன் கால் வீக்கத்துக்கு பரிகாரம் தேடவில்லை. வைத்தியம் பார்த்துக் கொள்ளவில்லை. ஆனால், மனிதனுக்கு இதேபோன்றதொரு கால் வீக்கம் வந்தால், அவன் “விதியே” என்று வாழ்வதில்லை. தன்னால் முடிந்த அளவு, அதிலிருந்து விடுதலை பெற முயற்சிப்பான். வைத்தியம் பார்த்துக் கொள்வான். இங்கே மதி இப்படித்தான் வேலையைச் செய்யும் என்பதும் விதியில் அடங்கியது தான். விதுரன் திருதராஷ்டிரனிடம் ஒருமுறை சொல்லுகின்றான்.‘‘பேசாமல் பஞ்ச பாண்டவர்களுக்கு பாகம் கொடுத்துவிட்டு பங்காளிகளுடன் சமாதானமாகப் போய் விடு.

ஏன் சண்டை போட வேண்டும்? அதனால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. உன் பிள்ளைகளோடு நீ அமைதியாக வாழும் வாழ்க்கையை ஏன் கெடுத்துக் கொள்கிறாய்?” திருதராஷ்டிரன் தன் குமாரர்களைக்  கூப்பிட்டுச் சொல்லுகின்றான். ஆனால், துரியோதனன் கேட்கவில்லை. பாரதி இந்த இடத்தில் அற்புதமாகப் பாடுவார். விதியின் வேகத்தைக் காட்டும் பாட்டு இது.

விதி! விதி! விதி! மகனே! - இனி
வேறெது சொல்லுவன் அட மகனே!
கதியுறுங் கால னன்றோ - இந்தக்
கயமக னெனநினைச் சார்ந்து விட்டான்?
கொதியுறு முளம் வேண்டா - நின்றன்
கொள்கையின் படிஅவர் தமை அழைப்பேன்;
வதியுறு மனை செல்வாய் - என்று
விழியுங்கண் ணீரொடு விடை கொடுத்தான்.


இங்கே விதியை வெல்லும் வேகத்தை, திருதராஷ்டிரன் மதிக்கு கூட்டிக் கொள்ளவில்லை. “ஏதோ, எங்கோ நடந்த கதை மகாபாரதம்; கற்பக்னை கதை; அதை இங்கே பேசுவதால் எந்த பயனும் இல்லை” என்று சொல்லிக் கொள்ளும்சிலரை பார்த்திருக்கிறோம்.ராமாயணம் மகாபாரதம் போல ஒரு நுட்பமான உளவியல் சாஸ்திரத்தை இன்னும் நூறாயிரம் ஆண்டுகளிலும் ஒருவர் எழுத முடியாது.விதி வலுத்த காரணம், மதி மயங்கிய திருதராஷ்டிரன், உறுதிபடச் சொல்லவில்லை. அவன் தர்மத்தை அழுத்தமாக பேசி, குமாரர்களை சரிப்படுத்தி, கண்டிக்காமல், ஒப்புக்கு நீதி, நியாயம் சொன்னதால் நடந்த விபரீதம்தான் மகாபாரதப் போர்.

இப்படிப்பட்ட விதிகள் ஜாதகத்திலும் உண்டு. அது அமைப்பு. அதை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு ஜாதகத்தில் ஏழில் உள்ள செவ்வாயையோ, சனியையோ எட்டாம் இடத்திற்கோ, 6-ஆம் இடத்திற்கோ நம்மால் நகர்த்தி விட முடியாது. அது நிற்கும் இடத்தை பொருத்து, அதனுடைய பலனைத்  தரத்தான் செய்யும். ஆனால், அதனை எதிர் கொள்வதுதான் வாழ்க்கை. அதற்கு ஏதேனும் வழி ஜாதக கட்டங்கள் சொல்கிறதா என்று பாருங்கள். அது தப்பிக்கும் வழியையும் காட்டிவிடும்.

ஒரு உதாரணத்திற்குச் சொல்லுகின்றேன். ஜாதகம் நீங்கள் செல்ல வேண்டிய பாதையை காட்டிவிட்டது. பாதை சரியில்லை. வழி முழுக்க முட்கள். புதர்கள். சிறு பள்ளங்கள். ஆனால், நீங்கள் பயணம் செய்துதான் ஆக வேண்டும்; வேறு வழியில்லை. இப்பொழுது சுதந்திரமான அறிவு வந்து விடுகிறது. அது மதி. ஒரு கத்தி, மண்வெட்டி எடுத்து சரசரவென்று முட்புதர்களை அகற்றி விடுகிறீர்கள். பயணம் செய்கிறீர்கள். இப்பொழுது வழி கிடைத்துவிட்டது. இப்பொழுது விதிப்படி முட் புதர்கள் வழியாகத்தான் நீங்கள் சென்றாக வேண்டும். அதை நீங்கள் உங்கள் மதியால் (அறிவும் உழைப்பும்) உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு அந்த வழியை கடந்துவிட்டீர்கள். இப்பொழுது நீங்கள் விதியை மீறவில்லை. அது போட்ட பாதையில்தான் உங்கள் பயணம் நடந்திருக்கிறது. ஆனால், அதனை மதியால் நீங்கள் சாதகமாக்கிக் கொண்டீர்கள் அல்லவா?இதுதான் ஜாதகங்களைப் பயன்படுத்த வேண்டிய வழி. நீங்கள் உங்கள் மதியை பயன்படுத்தாமல் அதே வழியில் போயிருந்தால், புதரில் மறைந்திருந்த ஒரு பாம்பு கூட, உங்களை கடித்திருக்கும். ஆனால், நீங்கள் ஆர்ப்பாட்டமாக கத்தியால் மண் வெட்டியால் சுத்தம் செய்ய ஆரம்பித்தவுடன், அந்தப் பாம்பு வேறு இடத்திற்குச் சென்று விட்டது. அது உங்களை அச்சுறுத்தியதோடு நின்றுவிட்டது. இந்த மதியின் ஆற்றலை தன்னுடைய சுய பலத்தோடும், துணை பலத்தோடும் பலப்படுத்திக் கொண்டவர்கள் ஜாதகங்களில் எந்த திசையைப்பற்றியும் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. மதியின் ஆற்றலை புரிந்து கொள்ளாமல், அல்லது அதை வளர்த்துக் கொள்ள முயலாமல், சோம்பேறித்தனப்பட்டு, அந்த சோம் பேறித்தனத்தின் காரணத்தையும் விதியின் தலைமீது வைத்து விட்டு, ஓய்ந்து கிடப்பவர்களை, தெய்வம்கூட காப்பாற்றி விடுவதில்லை.

உதாரணத்திற்கு ஒரு ஜாதகம் பார்ப்போம்

மேஷ லக்னம். துலா ராசியில் சனி செவ்வாய் இணைவு. ஜோதிடர் சொன்னார்.

1. ஏழில் செவ்வாய் இருப்பதால் தோஷம். அதோடு சனி உச்சமாக இங்கே இருக்கிறது. அது செவ்வாயோடு இணைந்தது தோஷம்.
2. சனி 3 ம் பார்வையாக 9-ஆம் இடத்தையும் பார்ப்பது தோஷம்.
3. சனியும் செவ்வாயும் இணைந்து களத்திரத்தில் இருப்பதால் தார தோஷம். மனைவியுடன் சண்டை, பிரிவு எல்லாம் உண்டு. செவ்வாய் அஷ்டமாபதி அவர் 7ல் இருப்பது தோஷம்.  
4. சனி மேஷ லக்னத்திற்கு பதினோராவது அதிபதியாக இருப்பதால் பாதகாதிபதி ஆகிறார். பாதகாதிபதி உச்சம் பெறக் கூடாது. அவர் துலாத்தில் உச்சம் பெற்று இருக்கிறார். அவர் பத்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும்பார்ப்பதால் சுகம் கெடும்.
5. செவ்வாய், சனியோடு இணைந்து பாப பலம் ஏறி, குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்ப குதூகலம் கெடும். இவையெல்லாம் ஜோதிட விதிகள். இப்படித்தான் நடக்கும்.  சரி, இதற்கு தீர்வுகள் இல்லையா? சரி என்று வாழ்ந்து விட்டுப் போய் விட வேண்டியது தானா? தீர்வுகள் இருக்கிறது என்றால் என்ன தீர்வு? வாருங்கள் விடை காண முயல்வோம்.

(இதம் சொல்வோம்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்